தொடர்கள்
தொடர்கள்
குறுந்தொகை துளிகள் - 2 - மரியா சிவானந்தம்

பருகப் பருக புளித்ததேன்?

20210007192622709.jpg

காதலே அழகானது. காதலுக்கு அழகு சேர்ப்பது ஊடல்.
ஊடல் இல்லாத காதல் சாரமற்று போகும்.
அது காதலின் ஓர் அளவீடு.

இன்று நாம் படிக்க இருக்கும் குறுந்தொகை பாடல் மருதத் திணைக்குரிய பாடல், வயலும் வயல் பகுதிகளும் கொண்ட மருத நிலத்திற்கு. உரிய ஒழுக்கம் ‘ஊடலும் ஊடல் நிமித்தமும்’.

தன்னைப் பிரிந்து சென்ற காதலன், மீண்டும் திரும்பி வந்த போது காதலி ஊடல் கொள்வது இயல்பானதே. போரின் பொருட்டோ, வணிகத்தின் பொருட்டோ செல்லும் காதலனை, காதலி அவ்வளவு சீக்கிரம் வழி அனுப்பி வைக்க மாட்டாள்... ‘செல்லாமை இன்றேல் எனக்குரை’ என்று வம்படியாய் வழி மறித்து நிற்பாள்.

நீண்ட பிரிவுக்குப் பின் திரும்பி வந்தாலோ, மீண்டும் அவ்வளவு விரைவில் பேசி விடவும் மாட்டாள். அப்போது இந்த தோழிப் பெண்கள் உதவிக்கு வருவார்கள். இருவருக்கும் இடையில் பாலமாக இருந்து இணைத்து விடுவார்கள்.

இந்த பாடலில், காதலன் பரதத்தையர் வீட்டுக்குச் சென்று தங்கி இருந்து விட்டு திரும்பி வந்துள்ளான். காதலி அவனிடம் பேச மறுக்க, தோழி “உன்னை ஏன் வீட்டில் சேர்க்க வேண்டும்? கணிகையர் வீட்டுக்குச் சென்ற நீ அப்படியே திரும்பி போ” என்று கோபத்துடன் கண்டிக்கிறாள் தோழி. “இனி நீ அவ்வாறு செல்வதானால், எங்களை பிறந்த வீட்டில் விட்டுச் செல்” என்று கட்டளை இடுகிறாள்.

தோழி தலைவனை நோக்கி, “நீண்ட நேரம் நீரில் விளையாடினால் சிவக்காத கண்கள் சிவந்து விடும். தொடர்ந்து அருந்தி வந்தால் தேன் கூட புளித்து விடும்... குளிர்ச்சி மிக்க பொய்கை உள்ள என் தந்தையின் ஊரில், தெருவெல்லாம் பாம்புகள் நெளிவது போல, ஊரெங்கும் “அலர்” என்னும் பழிச்சொல் கொண்டு ஊரார் எங்களை நடுங்க வைத்தனர்... நீ அந்த நேரத்தில் எங்கள் பயத்தைப் போக்கி துன்பத்தை நீக்கினாய். அத்தகைய அன்பு கொண்ட நீ, பிரிந்து சென்று துன்பம் தருவாய் எனில், இந்த வீடு உன்னை எப்படி ஏற்றுக் கொள்ளும்? மீண்டும் நீ இப்படி பிரிந்து செல்லும் எண்ணம் இருந்தால், எங்களை எம் பிறந்த வீட்டில் விட்டு விடு” என்கிறாள்.

தோழியின் கோபம் நியாயமானது தானே. பழகப் பழக பாலும் புளிக்கும் என்பது பழமொழி, பருகப் பருக தேனும் புளிக்கும் என்பது குறுந்தொகை மொழி.

காதலன், காதலியைப் பற்றி ஊரார் பேசும் வதந்தியை ‘அலர்’ என்று தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடுவதுண்டு. அந்த பழிச்சொல், பாம்பு போல ஊரின் தெருக்களில் ஊர்ந்தது என்று குறிப்பிடுவது நல்ல உவமை நயம்.

கயத்தூர் கிழார் எழுதிய அப்பாடல் இதுதான்...

நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனை யாயின் எம் இல்லுய்த்துக் கொடுமோ
அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க்
கடும்பாம்பு வழங்குந் தெருவில்

நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே.

(குறுந்தொகை -354) -கயத்தூர் கிழார்

(தொடரும்...)