தொடர்கள்
கவிதை
திண்ணை- கே.ராஜலட்சுமி.

20210008161623391.jpeg

திண்ணை சொன்ன
தெவிட்டாத கதைகள்
பல நினைவிலுண்டு!..

திண்ணை வைத்த
வீடுகள் வாசல் அருகில்
வைத்த திண்ணை
தந்த வசதிகள் தான்
எத்தனை?!. எத்தனை?!..

அறிவும் அறமும்
பயின்ற மாணவர்க்கு
பள்ளிக் கூடம் அவர்
ஆசிரியர் வீட்டுத்
திண்ணையே !...

குருகுலக் கல்வி
கற்றார்க்கு
குணமும் பணிவும்
தந்து
குன்றின் மேல்
இட்ட விளக்காய்த்
திகழ்ந்த இடம்
திண்ணை!...

வழிப் போக்கனுக்கு
சரணாலயம்,
அவன் இளைப்பாற
பசியாற ஒரு
இலவச சத்திரம்
தான் திண்ணை!...

வெற்றிலை பாக்கு
மணக்கும் திண்ணை
வெட்டிப் பேச்சுக்கும்
இடமளிக்கும் திண்ணை!...

பாட்டி, தாத்தாவின்
ஓய்வறை, அதிலமர்ந்து
அவர் கால் நீட்டி
கதை பேசும்
களம் தான் திண்ணை!...

பெண்ணிற்கு
பாதுகாப்பாய்
ஒரு விளையாட்டுத்
திடல் திண்ணை!..
பெரியோர்க்கோ
பொழுது போக்கு
தளம் தான் திண்ணை!...

காற்றடிக்கும் திண்ணை
ஓய்வெடுக்க சாய்ந்தாலே
உறக்கம் வரும் உண்மை!..

பகை மறக்கும்
திண்ணை
ஒற்றுமையை
பறைசாற்றும்
திண்ணை!...

கதை சொல்லிப் பாட்டிகள்,
அதைக் கேட்க வரும்
பிள்ளைகள், அவரை
மீட்க வரும் அம்மாக்கள்
மெய்மறந்து அமரும்
பூங்காவாய் திண்ணை!...

மழைக்கு ஒதுங்கும்
ஏழைக்கும் இடமளித்து
இலவசமாய் உணவளித்து
அன்னதானக் கூடமாய்
அமைந்தது திண்ணை!..

சங்கீதமும், சாதகமும்
சமையலும்,
சவாலான பேச்சும்
சண்டைகளும்
கண்டதே அந்த திண்ணை!..

தித்திக்கும்
திண்ணைக் கதைகள்
கேட்டு வளர்ந்த நம்
தலைமுறைக்கு
இன்று
நினைவில் மட்டுமே
திண்ணை!...

அடுத்த
தலைமுறைக்கோ
நாம் சொல்லும்
கதைகளில்
மட்டுமே
திண்ணை!..