நான்கு ஏக்கர் விஸ்தீரணத்தில் அந்த வாழை தோட்டம் அமைந்திருந்தது. ஏறக்குறைய எல்லா வாழைகளும் குலை தள்ளியிருந்தன. வாழைகளுக்கிடையே ஊடுபயிராக நிலக்கடலை பயிரிடப்பட்டிருந்தது. வாழைத் தோப்பை தூரப்பார்வையில் பார்க்க பச்சை பசேல் என்று ரம்மியம் காட்டியது.
தோப்பைச் சுற்றி ஆறடி உயர முள் வேலி போடப்பட்டிருந்தது. முள்வேலியின் ஒரு இடத்தில் வேலியை யாரோ வளைத்து ஒரு ஆளோ ஒரு மாடோ புகும் அளவுக்கு வழி ஏற்படுத்தியிருந்தனர்.
காட்டன் பாவாடை ஜாக்கட் அணிந்திருந்தாள் ஜொகரா. வயது பத்து. ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அன்று பள்ளி விடுமுறையாதலால் அத்தா வளர்க்கும் எட்டு ஆடுகளை மேய்க்க வந்திருந்தாள். அத்தா வளர்க்கும் எட்டு ஆடுகளும், கிராமத்து எட்டு வெவ்வேறு முஸ்லிம்கள் குர்பானி கொடுக்க வாங்கிய ஆடுகள். மூன்று மாதம் மேய்த்து வளர்த்து கொழுகொழு ஆக்கி குர்பானிக்கு முந்திய நாள் தர சம்பளம் பேசியிருந்தார் ஜொகராவின் அத்தா பர்கத் அப்துல்லா. பர்கத் ஒரு விவசாய தொழிலாளி.
வேலிக்கு அப்பால் சாதுவாய் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் திடீரென்று வேலி ஓட்டைக்குள் புகுந்தோடின. ஜொகரா கூச்சலிட்டும் கெஞ்சியும் கொஞ்சியும் மிரட்டியும் கேளாமல் வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து மேய ஆரம்பித்தன.
ஜொகராவும் வேலிக்குள் புகுந்தெழுந்தாள். அடம்பிடிக்கும் ஆடுகளை கட்டி கொத்தாய் இழுத்துக் கொண்டு பிரதான வாசலுக்கு வந்தாள்.
“செக்யூரிட்டி பாய்! செக்யூரிட்டிபாய்!”
தூங்கிக் கொண்டிருந்த அமீர்ஜான் எழுந்தான். வாயில் வடியும் ஜொள்ளை துடைத்துக்கொண்டான். “ஏய் சனியனே! உன் ஆடுகளை மேய்க்க என் முதலாளியோட வாழைத்தோட்டம்தானா கிடைச்சது?”
“தவறுதலா நுழைஞ்சிருச்சு. அடிச்சு இழுத்துட்டு போறேன். கதவைத்திறந்து விடுங்க பாய்!”
“நீயும் உன் ஆடுகளும் எவ்ளவு சேதாரம் பண்ணியிருக்கீங்கன்னு பாக்காம நானெப்படி விடுவேன்?” அமீர்ஜான் தோட்டத்துக்குள் ஓடி சேதாரத்தை பார்வையிட்டு வந்தான். அவனது கையில் சவுக்கு குச்சி ஜொகராவையும் ஆடுகளையும் போட்டு விளாச ஆரம்பித்தான்.
“திருட்டுக்கழுதைகளா! இனி திருட்டு மேய்ச்சல் பண்ணுவீங்களா, திருட்டு மேய்ச்சல் பண்ணுவீங்களா?”
“அடிக்காதீங்க பாய் அடிக்காதீங்க பாய் வலிக்குது. தெரியாம நடந்து போச்சு. ஒரே ஒருதடவை மன்னிச்சிருங்க பாய்!”
“அதெப்படி மன்னிக்கிறது? என் முதலாளி பித்ரத்துல் ஹஸன்கிட்ட இழுத்திட்டு போறேன். அவர் மன்னிக்கிரதா தண்டிக்கிறதான்னு முடிவு பண்ணட்டும்!”
“எங்கத்தாவுக்கு தெரிஞ்சா அவர் என்னை தனியா அடிப்பார் பாய். உங்களுக்கு மக இருக்காள்ல.என்னையும் உங்க மகள்ல ஒருத்தியா நினைச்சு மன்னிக்கக்கூடாதா? நான் பாவப்பட்ட ஏழை முஸ்லிம் சிறுமி பாய். அல்லாஹ்வுக்காக என்னை மன்னிச்சு விட்ருங்க பாய்!”
“மகளா? நல்லகதை. வயசுக்கு வந்தவுடனே என்னை கட்டிக்கிரேன்னு சத்தியம் பண்ணிக்கொடு. உன்னை விட்ர்ரேன்!”
ஜொகராவின் முகம் அவமானத்தால் கன்றிச் சிவந்தது. “அதுக்கு வேற ஆளை பாரு பாய்!”
“என்னடி வெட்டிப்போச்சு பேசிக்கிட்டு ஆடுகளோட நடடி முதலாளிகிட்ட!” ஆடுகளின் கூட்டுக் கயிற்றை பிடித்திருக்கும் ஜொகராவை தரதரவென இழுத்தபடி நடந்தான் அமீர்ஜான்.
ட்ராக்டரை ஓட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார் பித்ரத்துல் ஹஸன், வயது 62. அக்கிராமத்தின் பெரும்பணக்கார விவசாயி. அரசாங்கத்தின் மின்சாரத்தை குறுக்கு இணைப்பு போட்டு திருடுவதில் சமர்த்தர்.
ஆடுகளுடன் ஒரு சிறுமியை பார்த்ததும் இறங்கி வந்தார். அமீர்ஜானிடம் “என்னய்யா வாட்ச்மேன் விஷயம்?”
“இந்த ஷைத்தான் கி பச்சா தன்னோட ஆடுகளை நம்ம வாழைத்தோட்டத்ல விட்டு மேய விட்டிருந்தது. கையும் களவுமா பிடிச்சா திமிரா எகத்தாளமா பேசுரா?”
“ஏய் பொட்டச்சிறுக்கி... அவன் சொல்றது உண்மையா?”
“இல்லை பாய்!” நடந்தததை விவரித்தாள் ஜொகரா.
“டேய் தூங்குமூஞ்சி பயலே அமீர்ஜான்! இந்த கழுதையோட அப்பனை குண்டுக்கட்டா தூக்கிட்டு வாடா...”
அமீர்ஜான் கிளம்பிப்போனான். ஜொகரா தலைகுனிந்து நின்றிருந்தாள். இழிவான கெட்டகெட்ட வார்த்தைகளால் ஜொகராவை திட்ட ஆரம்பித்தார் பித்ரத்துல். இடைஇடையே காரி துப்பினார். கீழே கிடந்த சிறுசிறு கற்கள் பொறுக்கி ஜொகரா மீது வீசினார். ஆட்டுப்புழுக்கை ஒரு கூடை எடுத்து வரச் செய்து அவள் தலைமேல் கொட்டினார்.
அமீர்ஜானுடன் பர்கத் அப்துல்லா வந்து சேர்ந்தார். “அஸ்ஸலாமு அலைக்கும் பாய்!”
“பார்ரா திருடன் ஸலாம் சொல்றதை! இவன் திருட்டு மேய்ச்சல் பண்ற எடத்ல சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாம்”
“திருட்டு மேய்ச்சல் ஒரு நாளும் செய்யமாட்டோம் பாய். உழைச்சு திங்கற காசுதான் உடம்போட ஒட்டும்னு எனக்கு தெரியும் பாய். ஆடுகள் அஞ்சறிவு கொண்டவை. பசுமை கண்ட இடம் மேயும். தப்புதான். ஒரே ஒரு தடவை மன்னிச்சிருங்க பாய்!”
“முடியாது!”
“குர்பானி ஆடுகள் பாய். நீங்களும் முஸ்லிம், நானும் முஸ்லிம். ஆடுகளின் எட்டு சொந்தக்காரர்களும் முஸ்லிம். முஸ்லிமுக்கு முஸ்லிம் விட்டுக் கொடுக்கக் கூடாதா பாய்?”
“மணவாடுக்கு மணவாடு மன்னிக்கக்கூடாதான்னு கேக்க வெக்கமாயில்ல இடையக்கார பயலே... ஆடுகள் மேய்ஞ்சதுக்கு அபராதம் கட்டிட்டு போ!”
“அபராதம் எவ்ளவு பாய்?”
“ஆடுகள் மேய்ஞ்சதில 60000 பெறுமானமுள்ள வாழைகள் நாசமாகியுள்ளன. எட்டு ஆடுகளின் விலை முப்பத்திரெண்டாயிரம் இருக்கும். வாழை நாசத்துக்கு அபராதமா எட்டு ஆடுகளையும் குடுத்திட்டு ஓடிப் போயிரு!”
முதன்முறையாக குனிந்திருந்த் பர்கத் அப்துல்லா நிமிர்ந்தார். முகத்தில் ஏளனம் பூத்தது. “பாய் நீங்க திருடனா, நாங்க திருடனா? அய்நூறு அரநூறு நஷ்டத்துக்கு 48000 ரூபாய் மதிப்புள்ள ஆடுகளை முழுங்க பாக்றீங்களே...”
“என்னடா எகத்தாளமா... வெட்டி புதைச்சிருவேன்!”
“இந்த மிரட்டலை எல்லாம் வேற யார்க்கிட்டயாவது வச்சுக்கங்க. நீங்களும் நானும் கிராமத்து பள்ளிவாசலுக்கு கட்டுப்பட்டவர்கள். ஆகவே நம் வழக்கை பள்ளிவாசல் இமாம் முத்தவல்லி விசாரித்து தீர்ப்பை சொல்லட்டும். தீர்ப்பு எதுவானாலும் ஏற்றுக் கொள்ள நான் தயார்!”
“இமாமுக்கும் முத்தவல்லிக்கும் கொம்பா முளைச்சிருக்கு. அவங்க தீர்ப்பை எனக்கு சாதகமாத்தான் சொல்லுவாங்க!”
“முத்தவல்லிக்கு போன் பண்ணுகிறேன்... அவர் வரும்வரை நீங்க ஒரு வார்த்தை பேசக்கூடாது!”
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
நடந்ததை அவரவர் கோணத்தில் கூறக்கேட்டுக் கொண்டார் முத்தவல்லி. பின் கைக்கடிகாரத்தை பார்த்து. “மணி ராத்திரி ஏழே முக்கால் ஆகுது. நாளைகாலை பத்துமணிக்கு பள்ளிவாசலில் விசாரிப்பம். ஆடுகள் பள்ளிவாசல் கொட்டடியில் இருக்கட்டும் பர்கத் பாய் உங்க மகளை கூட்டிட்டு வீட்டுக்கு போங்க!”
தந்தையும் மகளும் நடந்து போயினர்.
“முத்தவல்லி!”
“சொல்லுங்க பாய்!”
“எனக்கு எதிரா தீர்ப்பு சொன்ன- உன்னையும் உன் பள்ளிவாசலையும் நிர்மூலம் பண்ணிடுவேன்”
“நன்றி!” முத்தவல்லி கிளம்பிப்போனவுடன் அமீர்ஜானை அழைத்தார் பித்ரத்துல் ஹஸன். “டேய்... நாளைக்கு விடியறதுக்குள்ள நம்ம வாழைத்தோட்டத்ல ஒருபகுதி மேய்ச்சலால் நாசமான மாதிரி சேதப்படுத்து. சூரிய வெளிச்சம் வந்தவுடன் வாழைத்தோப்பு நாசத்தை பலகோணங்களில் புகைப்படம் எடு. எட்டு ஆடுகளும் என் இரும்புக்கரங்களிலிருந்து தப்பவே கூடாது!” பற்களை நறநறவெனக்கடித்து தரையை காலால் பேய்தனமாக உதைத்தார் பித்ரத்துல் ஹஸன்.
பள்ளிவாசல். முத்தவல்லி இமாம் மோதினார் மற்றும் மஹல்லா மக்கள் கூடியிருந்தனர். அவர்களின் எதிரே பித்ரத்துல் ஹஸனும் பர்கத் அப்துல்லாவும் நின்றிருந்தனர்.
இருவரும் நடந்ததை கூறினர்.
வாழைத்தோட்ட சேதார புகைப்படங்களை நீட்டினார் ஹஸன்.
“தப்பு யார் மேல இருந்தாலும் சரி அல்லாஹ்வுக்காக நடந்தததை மன்னியுங்க பாய். எட்டு ஆடுகளும் குர்பானி குடுக்க எங்களால் நேர்ந்தவை!” ஆட்டுக்கு சொந்தக்காரர்கள் இறைஞ்சினர்.
“உங்களை குர்பானி குடுக்க வேணாமின்னா சொல்றேன்? ஒரு மாட்டை வாங்கி எட்டுப்பேரும் கூட்டுக் குர்பானி குடுத்துட்டுப் போங்க!”
யோசித்துக் கொண்டிருந்த இமாம் சூரியனித்தார். “பித்ரத்துல் ஹஸன் பாய்! ஆடுகள் உங்க தோட்டத்துக்குள்ள மேய்ஞ்சப்ப டயம் என்ன இருக்கும்?”
“காவலாளி அமீர்ஜானை கேளுங்க துல்லியமா சொல்லுவான்!”
“சொல்லுப்பா... என்ன டயம் இருக்கும்?”
“அது வந்து... அது வந்து...”
“உன் முதலாளி மூஞ்சிலயா டயம் ஒட்டியிருக்கு? நேரா பாத்து சொல்லு!”
“ஆடுகள் மேய்ஞ்சது நேத்து ராத்திரி மணி ஏழுமணிக்கு!”
“ஆடுகள் மேய்ஞ்ததை புகைப்படமா எடுத்திருக்கீங்களே... அது ராத்திரி ப்ளாஷ் வைச்சு எடுக்கப்பட்டதா, செட்டப் பண்ணி பகலில் எடுக்கப்பட்டதா?”
“ராத்திரிதான்!”
“பொய் சொல்ற. போட்டோ அதிகாலை ஏழுமணிக்கு எடுக்கப் பட்டிருக்கு. (புகைப்படத்தை சுட்டி) சூரியவெளிச்சம் எந்த திசைல இருக்குன்னு பாரு!”
“திசை எல்லாம் எனக்கு தெரியாது. ஆடுகள் மேஞ்சது உண்மை. வாழைத்தோட்டம் சேதப்பட்டது உண்மை!”
“வாழைத்தோட்டத்திற்குள் ஆடுகள் புகுந்து மேஞ்சது நேத்து மாலை ஆறுமணிக்கு பகல். நபிமொழி ஒண்ணு சொல்றேன் கேளுங்க. பகலில் பொருளுக்குரியவர் மீது அதனை (தோட்டத்தினை) காப்பது கடமையாகும். அன்றி இரவில் கால்நடைக்குரியவை மீது அவற்றைக் (கால்நடைகளை) காப்பது கடமையாகும். இதற்கு என்ன பொருள் தெரியுமா? பகலில் தோட்டத்தை தோட்டக்காரன் கால்நடைகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இரவில் கால்நடைகள் தோட்டத்திற்குள் புகுந்து மேய்ந்தால் அதற்கான நஷ்டத்தையும் தண்டனையையும் கால்நடை உரிமையாளன் அல்லது மேய்ப்பவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு ஆடுகள் பட்டப்பகலில் மேய்ந்துள்ளதால் கால்நடை மேய்ப்பாளன் குற்றவாளி ஆகமாட்டான்!”
“ஆடுகள் மாலை ஆறுமணிக்குதான் மேய்ந்தன என்பதற்கு என்ன சாட்சி?”
முத்தவல்லியின் பத்துவயது மகனும் இமாமின் பத்து வயது மகனும் முன்வந்தனர். “நாங்களே நடந்ததற்கு சாட்சி. மாலை ஐந்துமணியிலிருந்து ஆறுபத்துவரை பித்ரத்துல் ஹஸன்பாய் தோட்டத்திற்கு அருகில் அமர்ந்து படிப்பது எங்கள் வழக்கம். நேற்றும் படித்தோம். ஆறுமணிக்கு ஜொகராவின் ஆடுகள் தோட்டத்திற்குள் புகுந்தன. ஜொகரா மிக சிரமப்பட்டு ஆடுகளை ஓட்டிவர பார்த்தாள் முடியவில்லை. வாட்ச்மேன் அமீர்ஜானிடம் சொல்ல ஓடினோம். அவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். எழுப்பினோம். எழுந்தவர் எங்கள விரட்டிவிட்டு ஜொகராவையும் ஆட்டையும் கைப்பற்றிக் கொண்டார்!” இதனையொட்டி ஜொகராவை அமீர்ஜானும் பித்ரத்துல் ஹஸனும் கொடுமைபடுத்தியதையும் கூறினர்.
“பொய்!”
“அல்லாஹ் மீது சத்தியமாக நாங்கள் சொல்வதெல்லாம் உண்மை!”
“இரு சாட்சியங்களை வைத்து ஆடுகள் பித்ரத்துல் ‘ஹஸன் தோட்டத்திற்குள் இரவில் திருட்டுத்தனமாக புகுந்து மேயவில்லை என தீர்ப்பு கூறுகிறேன். ஆகவே ஆடுகளை விடுவித்து ஜொகராவிடமும் அவரது தந்தையார் பர்கத் அப்துல்லாவிடமும் ஒப்படைக்கிறேன். ஆடுகள் இரவில்கூட அடுத்தவர் தோட்டத்தில் மேயாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஜொகரா!” உன்னை அமீர்ஜான் சவுக்கு குச்சியால் எத்தனை முறை அடித்தார்?”
“பத்துமுறை!”
“இந்தா சவுக்கு குச்சி. அமீர்ஜானை பத்துமுறை அடி!”
அடித்தாள்.
“பித்ரத்துல் ஹஸன் உன்மீது எத்தனை தடவை கல் வீசினார்? ஆட்டுப்புழுக்கை எத்தனை கூடை கொட்டினார்? அத்தனை தடவை அவரை அடித்து ஆட்டு புழுக்கையை கொட்டு!” அடித்தாள்... கொட்டினாள்.
“அநியாயக்கார பணக்கார முஸ்லிமுகளுக்கு எந்த நேர்மையான ஜமாஅத்தும் அடிவருடியாக இருக்காது. இனி அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கப் பாருங்கள். தோற்றுவிட்டோம் என நினைத்து பழிவாங்க துணியாதீர்கள்!”
பித்ரத்துல் ஹஸன் தலைகுனிந்து நடந்தார்.
பள்ளிவாசலில் இமாமின் மகனும் முத்தவல்லி மகனும் சிறப்பு தொழுகை தொழுது பிரார்த்தனை செய்தனர். “இறைவனே! ஒரு கெட்டவனை வீழ்த்த குர்பானிப் பொருள் உன்னை சேர பார்க்காததை பார்த்ததாக கூறினோம் எங்களை மன்னி!”
‘தந்திரக்காரனுக்கு தந்திரக்காரனாய் சூழ்ச்சிக்காரனுக்கு சூழ்ச்சிக்காரனாய் இருப்பது தவறில்லை குழந்தைகளே!” வானவர்கள் முணுமுணுத்தனர்.
Leave a comment
Upload