தொடர்கள்
கற்பனை
மிஸ்டர் ரீல்...! - ஜாசன்


மாஸ்டர் பட ஹீரோ விஜய்யை மிஸ்டர் ரீல் பார்க்கப் போனபோது... “தமிழில் எனக்குப் பிடிக்காத பெயர் சந்திரசேகர். நீங்க உங்க பெயரை மாத்திக்கிட்டு வாங்க, நம்ம கதை ஆலோசனை செய்வோம்” என்று சொல்லி யாரையோ விரட்டி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் “சார், நான் வேணும்னா என் பெயரை பழனிச்சாமின்னு மாத்திக்கவா” என்று கேட்க... அதற்கு நடிகர் விஜய்.. “பழனிச்சாமி, சூப்பர் பெயர். மாத்திட்டு வாங்க... உடனே ஷூட்டிங் போயிடலாம்” என்று சொன்னார்.

“அதுதான் கட்சி உங்க பெயரில் ஆரம்பிக்க மாட்டேன்னு உங்க டாடி சொல்லிட்டாரே... அப்புறம் ஏன் அவர் மேல் கோபப்படாறிங்க” என்று மிஸ்டர் ரீல் ஆரம்பித்தார்.

“கட்சி ஆரம்பிப்பது எல்லாம் இப்போது பிரச்சனை அல்ல... அவர் இப்போ சமையல் பண்றேன் என்று கிச்சனை நார அடிக்கிறார். நேற்று பரங்கிக்காய் தோசை என்று முழு பரங்கிக்காய் மேல் தோசை மாவை ஊற்றி, அது வேகலைன்னு யூட்யூபில் சர்ச் பண்ணிக்கொண்டு இருந்தார்... இப்படி அவர் பண்ணும் அழிச்சாட்டியம் கொஞ்சம் நஞ்சமல்ல... கொத்தவரங்காய் காப்பி என்று என்னிடம் கொடுத்து, உடம்புக்கு நல்லது.. வெயிட் போடாது, தொப்பை வராது என்றெல்லாம் சொல்லி சாப்பிடச் சொன்னார். ஒருவாய் சாப்பிட்டதும்.. வாந்தி, மயக்கம் என்று மல்டி ஹாஸ்பிடல்ஸ் போகிற அளவுக்கு ஆகிவிட்டது. எங்க வீட்டு சமையல்காரரை வேலையை விட்டே அனுப்பிவிட்டார். ஹோட்டல் சாப்பாடு எனக்கு பிடிக்கவில்லை” என்று விஜய் புலம்ப... அவர் நிலைமை பரிதாபம் போல்தான் இருந்தது.

“உங்கப்பாவுக்கு என்னதான் பிரச்சனை?”

“அவர் டைரக்ட் பண்ற படத்தில் நான் நடிக்கணுமாம், கதையும் அவருடையதுதான்!”

“நல்ல டைரக்டர் தானே, அப்புறம் என்ன பிரச்சனை?”

“அவர் சொன்ன கதை தான் பிரச்சனை”

“அப்படியென்ன பிரச்னைக்குரிய கதை?”

“படத்தோட டைட்டில் சொல்கிறேன் கேளுங்கள்.. “ராமர் மசூதி... இப்ப சொல்லுங்க இந்த மாதிரி படத்துல நான் எப்படி நடிக்க முடியும்?”

“இது ஏதோ உங்களை வெச்சு செய்யறா மாதிரி தோணுது!”

“பேரை அறிவிச்சா முதல்ல ஷூட்டிங் போக முடியுமா? இதை சொன்னா.. ‘ நம்ம நாடு மதசார்பற்ற நாடு’ னு டயலாக் பேசுறார்.. என்னத்தை சொல்ல!” என்று தலையில் கையை வைத்துக் கொண்டார் விஜய்.

“சரி, கட்சி ஆரம்பித்தது பற்றி ” என்று மிஸ்டர் ரீல் இழுக்க...

“அதெல்லாம் நாங்க ரெண்டு பேரும் பேசி வச்சு செஞ்சது தான்... படம் ரிலீஸ் இல்லை.. ஜனங்க எங்களை மறந்துட்டா என்ன ஆகும்.. அதுதான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம். பத்து நாளைக்கு நாங்க தானே பேசும் பொருளா இருந்தோம். அதான்”

“நீங்க ரொம்ப விவரமான ஆள்தான்” என்று மி.ரீல் சொல்ல... அதற்கு விஜய், சிரித்தபடியே.. “என்ன ரொம்ப புகழாதீங்க அண்ணா.. கூச்சமா இருக்கு” என்றார்.

“ உங்க கூச்சமான புன்னகையே ஒரு தனி அழகுதான். அதிருக்கட்டும். முதல்வரை சந்தித்து பேசினிங்களே! அது பத்தி சொல்லுங்க”

விஜய் இன்னும் குஷியாகி விட்டார். “முதல்வர் என் ரசிகராம். மாஸ்டர் படத்துக்கு 100% பார்வையாளர்கள் அனுமதி கேட்டேன்.. உடனே உத்தரவு போடுறேன் என்று ஆர்வமாக சொன்னார். என் கூட செல்பி எல்லாம் எடுத்துக் கொண்டார். ரஜினிதான் வாய்ஸ் தரமாட்டேன்னு சொல்கிறார்... நீங்களாவது எங்களுக்கு வாய்ஸ் தரக்கூடாதா என்று கேட்டார்.. அதற்கு நான், ‘இல்லீங்கண்ணா..நான் இப்பதான் டான்சில்ஸ் ஆப்பரேஷன் செய்திருக்கிறேன், வாய்ஸ் சரியாக வராது’ என்றேன். ‘அப்ப சரி, வேண்டாம்’ என்றார் பெருந்தன்மையாக. இப்படிப்பட்ட ஒரு அப்பாவி நமக்கு முதல்வராய் கிடைத்தது, நாம பண்ணிய புண்ணியம் தான்” என்ற விஜய் கன்னத்தில் தப்பு போட்டுக்கொண்டார்.

“ ஆனால் முதல்வர் உத்தரவை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவு போட்டு விட்டதே”

“இந்தப் பள்ளிக்கூடம் எல்லாம் காலவரையின்றி மூடியது மாதிரி இந்த கோர்ட்டை எல்லாம் மூடணும்... இந்த வசனம் என்னோட அடுத்த படத்தில் நிச்சயம்” என்றவர் திடீரென தன் பார்வையை சட்டென நேர்க்கோட்டில் கொண்டு வந்து அங்கே இல்லாத ஆடியன்ஸைப் பார்த்து பேசத்துவங்க.. ‘நான் வர்ட்டா’ என மிஸ்டர் ரீல் அங்கிருந்து எஸ்கேப்!

அடுத்து மி.ரீல் லேண்ட் ஆன இடம் எடப்பாடியார் இல்லம்!

“அச்சா மேடம்.. அச்சா மேடம்.. தன்யவார் மேடம்” என்று யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார் முதல்வர். ஆசுவாசமாக அவர் போனை வைத்ததும், மிஸ்டர் ரீல் “உங்களுக்கு ஹிந்தி தெரியுமா” என்று கேட்க... அதற்கு எடப்பாடியார்... “தோடா தோடா மாலும்” என்று சொன்னார்.

“இந்த மேடம் யாரு? ”

“ஹோம் மினிஸ்டர்”

“எந்த மாநில ஹோம் மினிஸ்டர்?”

“ அட..சென்ட்ரல் ஹோம் மினிஸ்டர்ப்பா”

“என்ன குழப்பறிங்க முதல்வரே?!. அமித்ஷா தானே நம்ம ஹோம் மினிஸ்டர். அவரைப் போய் மேடம் என்று சொல்கிறீர்கள், உங்க இந்தி தப்பு”

அதற்கு எடப்பாடியார் சிரித்தபடியே.. “ ஹி..ஹி...என் இந்தி சரிதான். அமித்ஷாவின் ஹோம் மினிஸ்டர் திருமதி அமித்ஷா தானே... அவங்ககிட்ட தான் நான் இப்ப பேசினேன்”

“படா முதல்வர் ஹை! ஹோம் மினிஸ்டரோட ஹோம் மினிஸ்டர்கிட்ட என்ன பேசினீங்க”

“ அது வேற ஒண்ணுமில்ல மி.ரீல்... பொங்கலும் அதுவுமா அமித்ஷா சென்னை வரதா இருந்தாரு.. நல்ல நாளும் அதுவுமா டென்ஷன் எதுக்குன்னு மேடம் கிட்ட பேசினேன்... ‘நம்ப சாப் போனவாட்டி சென்னைக்கு வந்தபோது, தங்கின ஹோட்டல்ல 116 பேருக்கு இப்போ கொரானா.. இது தவிர டெங்கு வேர புதுசா வந்திருக்கு.. இப்ப எதுக்கு அவர் வரணும், மழை வேறயாச்சே’ ன்னு சொன்னேன். உடனே மேடம் ‘அவர் பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மன்ட் வீக். நான் போக கூடாதுன்னு சொல்லிடுறேன். என்ன அவரு எதிர்த்து எல்லாம் பேச மாட்டார், பயப்படுவார்’னு சொன்னாங்க. அதன்படியே அமித்ஷா சென்னை விஜயம் ரத்து. நானும் இந்த பொங்கலுக்கு நிம்மதியா சர்க்கரை பொங்கல் சாப்பிடலாம், அதுதான்!”

“ அது சரி..ஹோம் மினிஸ்டரோட ஹோம் மினிஸ்டரை எப்படி உங்கள் தொடர்பு எல்லையில் கொண்டு வந்தீர்கள்?”

“அது வேற ஒன்னும் இல்ல... போனமுறை அமித்ஷா வந்தபோது, மேடத்துக்கு என்னோட சின்ன அன்பளிப்புனு சொல்லி ஒரு 15 பட்டுப் புடவை கொடுத்து அனுப்பினேன். அதையெல்லாம் வாங்கிப் பார்த்துவிட்டு, ‘இதுவரை என் கிட்ட இல்லாத டிசைன், கலர் புடவையா பார்த்து அனுப்பி இருக்கீங்க, ரொம்ப சுக்ரியா’னு அவங்களே போன் பண்ணி சொன்னாங்க...அப்ப நான் என்னோட செல்பேசி நம்பரை கொடுத்து, ‘ஒன்னும் பிரச்சனை இல்லை. நீங்க வேற ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூட கேளுங்க’ ன்னு சொன்னேன். ஒரு நாள் அவங்க வீட்டுக்காரர், ஒரே சளி இருமல்னு அவஸ்தைப் படுறார்ன்னு போன் பண்ணாங்க. நானும் உடனே வேலுமணி, தங்கமணி இருவரையும் அழைச்சு தூதுவளைக் கீரை, தூதுவளை பொடி இரண்டையும் எடுத்துக் கொண்டு அவர் வீட்டுக்கே சென்று, தூதுவளைக் கீரையை நன்கு வதக்கிக் கொடுத்து கிட்ட இருந்து அமித்ஷாவை பாத்துக்கச் சொன்னேன். அவங்களும் இரண்டு நாள் கிட்ட இருந்து தூதுவளை பவுடரையும், சாப்பிட வைத்தார்கள். அதுக்குப் பிறகு அவரேட இருமல், சளி நின்னு போய்டுச்சு. அதுக்கும் மேடம் ஒரு சுக்ரியா சொல்லி எனக்கு போன் பண்ணாங்க”

“அப்போ இந்த தொகுதி பிரச்சனை ஆட்சியில் பங்கு இதெல்லாம்...” என்று மிஸ்டர் ரீல் இழுக்க... “அதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. அதனாலதான் நான் ஷோக்கா தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிட்டேன். எதுவாக இருந்தாலும் என்னுடைய சுக்ரியா ஹோம் மினிஸ்டர் பாத்துப்பாங்க” என்றார் குஷியாக.

மி.ரீல் வாயடைத்துப் போனார்.