தொடர்கள்
பொது
ச்சும்மா அதிருதுல்ல.. - தில்லைக்கரசி சம்பத்

20210008161854817.jpeg

எஸ்தர்: ஏய் ஸ்ருதி..!!? இன்னைக்கு வீக்எண்ட் நைட் ஸ்டே ரம்யா வீட்லன்னு சொல்லி, நாங்க எல்லாம் 6 மணிக்கு டாண்ன்னு வந்துட்டோம். இந்தம்மா இப்பதான் ஆடி அசைஞ்சு 8 மணிக்கு வராங்க..

ஸ்ருதி: அடி போடி.. இவ ஒருத்தி.. நான் சீக்கிரம் கிளம்பி தான் வந்துக்கிட்டு இருந்தேன்.. வழியில ஒரு ஸ்கூல் பொண்ணு.. 12, 13 வயசு தான் இருக்கும். ஒரு மூணு விடலை பசங்க வம்பு பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நான் டூவீலரை நிறுத்திட்டு என்னம்மான்னு கேட்டா.. அக்கா நான் ட்யூஷன் போயிட்டு வரப்ப, தினமும் இவங்க என் பின்னாடி வந்து தொந்தரவு கொடுக்குறாங்கன்னு அழுதுக்கிட்டே என் கையை பிடிச்சிக்கிட்டா.. பாவம் அவ.. உடம்பெல்லாம் வெடவெடன்னு பயத்துல நடுங்குது.. எனக்கு வந்துதே கோபம்.. பிடிச்சு நல்லா செருப்பால நாலு சாத்து சாத்துனேன்.. எல்லாரும் ஓடிட்டானுங்க. அப்புறம் அந்த பொண்ணை அவங்க வீட்ல ட்ராப் பண்ணிட்டு. காவலன் ஆப்பை அவ மொபைல்ல டவுன்லோட் பண்ணிட்டு, அவங்க அம்மாகிட்ட ஒரு பெப்பர் ஸ்ப்ரே வாங்கி உடனே கொடுங்கன்னு சொல்லி தைரியமா இருக்கனும்ன்னு அந்த பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணிட்டு வந்தேன். அதான் லேட்டு..

எஸ்தர்: உன் செருப்பு பிஞ்சி போச்சா?

ஸ்ருதி (உதட்டை பிதுக்கிய படி): ஆமாம்டி..

எஸ்தர்: ஹப்பாடி இப்பதான் என் காது குளிர்ந்தது..
(எல்லாரும் சிரிக்கிறார்கள்)

ஹாசினி: நேத்து தான் இந்திய பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பது எப்படி என்ற கேள்விக்கு, கமல் ஒரு பதில் சொல்லி இருக்கிற வீடியோவை பார்த்தேன்....

“உங்கள் மனசு சுத்தமாக இருக்கும் பட்சத்தில் கிட்ட யாரும் வரமாட்டாங்க”ன்னு சொல்லி இருக்கார்.

எஸ்தர்: யாருக்கு மனசு சுத்தமா இருக்கனுமாம்?

ஹாசினி: பெண்களுக்கு தான்..

“ஓ... !” என்றபடி கவுண்டமணி போல் முகத்தை வைத்து புருவத்தை தூக்கினாள் எஸ்தர்...

ஹாசினி: இதையும் கேளு...

ரோட் ஸைட் ரோமியோக்கள், சுத்த மனசு இருக்கிற நல்ல பெண்ணை கிண்டல் பண்ணா... கூட இருக்கிறவன் “டேய் விடுடா..! நல்ல பொண்ணுடா..!”ன்னு சிபாரிசு பண்ணுவாங்களாம்..

எஸ்தர்: அடேங்கப்பா..!! எங்க..!! மேல சொல்லு..!

ஹாசினி: திரும்பி நின்னு தூன்னு துப்புவது.., உதட்டை சுழிக்கிறது இதெல்லாம் பசங்களுக்கு சிக்னலாம்.. அதாவது அவனுங்க தொந்தரவு தாங்காம பொண்ணுங்க கல்ல எடுத்து எறிய பார்த்தா என்ன அர்த்தம்ன்னு நாம நினைப்போம்? நீ சொல்லு எஸ்தர்..!

எஸ்தர்: ரோட்ல நாய் நம்மள குரைச்சிக்கிட்டே துரத்தினா கல்லெடுத்து அடிச்சா ஓடிடும்ல.. அது போல இந்த தொந்தரவு பண்ற நாய்களோட அட்டகாசத்தை தாங்க முடியாம கல்லால அடிக்கிறோம்ன்னு அர்த்தம்..

ஹாசினி: ஹீஹீ... அது இல்லையாம்.. அதுவும் பசங்களுக்கு நாம கொடுக்குற சிக்னலாம்.. அதனால அவங்க வந்து கையை பிடிப்பானுங்களாம்...

எஸ்தர்: அடங்ஙொக்கமக்கா..!! இன்னாடி இது அக்குருமமா கீது..???!!! மேல கைய வச்சா தலைய ச்சும்மா வெட்டி கீசனும்ன்னு பாகுபலி பட்த்துல சொல்லிக்கீறாங்களே.. ( சிரிப்பு)

ரம்யா: ரைட்டு... ஏன்னா அமைதியா போகிற பெண்கள்ன்னு தெரிஞ்சா பின்னாடியே வந்து ரொம்ப தொல்லை கொடுப்பாங்க...

ஸ்ருதி: ஆமாம் நமக்கு தான் அனுபவம் இருக்கே..! அதுவும் ரோட் ஸைட் ரோமியோன்னா யாரு? படிக்காத வேலை வெட்டிக்கு போகாத ரவுடி பசங்க, குடிகாரனுங்க, மோசமான நடத்தை உள்ள வக்கிரம் பிடித்த நடுத்தர வயதான ஆம்பளைங்க. இவங்க வெறும் கிண்டல் மட்டுமா பண்ணுவாங்க...? விசில் அடிப்பது, ஆபாசமா பேசுறது, சைகை காட்டுவது, எங்கே போனாலும் பின்னாடி வந்து டார்ச்சர் கொடுக்குறது, பின்னாடி வந்து தட்டிட்டு ஓடுவது, flashingன்னு சொல்லப்படுற தங்கள் ஆடையை அவிழ்க்கும் செயல், பெண்கள் மேல் ஆபாசமாக கையை வைக்கும் செயல்ன்னு நிறையா இருக்கே!

ஹாசினி: எங்கம்மா சொல்லி இருக்காங்க... 20 வருஷம் முன்னாடி சென்னையில் சரிகாஷான்னு ஒரு கல்லூரி மாணவியை இதே போல ஈவ் டீஸிங்ல பசங்க ஆட்டோவுல துரத்திட்டு வந்தப்ப, அந்த பெண்ணை பின்புறம் தட்டி அந்த பசங்களும் அந்த பொண்ணு மேலயே விழுந்ததால் கீழ விழுந்து ஸ்பாட்லேயே அந்த பொண்ணு செத்து போச்சு. இப்படிப்பட்ட கொடூர செயலுக்கு ஈவ் டீஸிங்ன்னு ஏதோ சாதாரண பெயர் வச்சி இருக்காங்க...

ரம்யா: உண்மை...

இது பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை.. இந்தியாவில் சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல... எல்லா ஊர்களிலும் மிக மோசமான நிலைமை தான். பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், வணிக வளாகம், திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் இதை சிறுமிகள், பெண்கள் எதிர்கொள்றாங்க. சமயங்களில் எல்லைமீறியும் போகும்.. இது ஒரு கடுமையான குற்றம்..
தினமும் நடக்குற சாதாரண விஷயம் தானே என்று ஆண்கள் நினைக்கலாம். ஆனால் அச்சுறுத்தல், மிரட்டல்களால் கடுமையான‌ மன உளைச்சல்களுக்கு ஆளாகி, சமயத்தில் மன அழுத்தம் வந்து சில சமயங்களில் தற்கொலை வரை நீள்கிறது.

அத்தோடு நில்லாமல் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பெண்ணை குறிவைத்து செய்யப்படும் ஈவ் டீசிங், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலையில் கூட முடிகிறது..

ஹாசினி: இந்த ஈவ்டீசிங்கை எப்படி எதிர்கொள்வது?

ரம்யா: கமல் சொல்ற மாதிரி இந்தக் கும்பல கண்டுக்காத மாதிரி போயிடுறது நல்லதுதான். ஆனா வம்பு பண்ணிதான் ஆவோம்ன்னு தீர்மானிச்சு தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துட்டே இருந்தா, நாம எப்பவும் போல கடந்து போய்விட முடியாது. அவங்களை தைரியமா எதிர்த்து நின்னு கேள்வி கேட்கனும், அங்க இருக்கிற மக்கள்கிட்ட காப்பாத்த உதவி கேக்கனும்... எல்லை மீறி போக ஆரம்பிச்சா, போலீசை கூப்பிடனும். ஆனா இதை எல்லாம் சூழ்நிலை நமக்கு சாதகமா இருந்தா மட்டுமே செய்யனும்.. ஆள் அரவம் இல்லாத இருட்டுன்னா பெப்பர் ஸ்ப்ரேயால அவங்க முகத்தில் அடிச்சிட்டு அங்கிருந்து வேகமா ஓடுறது தான் நாம தப்பிக்க ஒரே வழி.

இந்த பிரச்சினை இந்தியாவுல முதன்முதல்லா 1970 வாக்குல தான் அதிகமா வெளியில தெரிய ஆரம்பிச்சது..

எஸ்தர்: அது என்ன..? குறிப்பா இந்த வருஷம்?

ரம்யா: அது ஏன்னா... அந்த காலக்கட்டத்துல தான் அதிகமாக பெண்கள் படிப்புக்காக, வேலைக்காக வீட்டு ஆண்களின் துணையின்றி வெளியே பொது சமுதாயத்தில் நுழைய ஆரம்பித்தார்கள்.

எஸ்தர்: ம்ம்.. இப்ப புரியுது.. இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான ஒரு செயல்ன்னு, அதாவது ஆண் துணையின்றி வெளியே வரும் பெண்களை வேண்டுமென்றே சீண்டுவது..

ரம்யா: இதுல ஆணாதிக்க புத்தியும் (male chauvinism) கலந்திருக்கலாம். இவ்வளவு காலமும் வீட்டுல அடங்கி இருந்த பெண்களுக்கு இவ்வளவு துணிச்சலா? அப்ப இதையும் எதிர்கொள்ளுங்கன்னு ஒரு மறைமுகமான எதிர்ப்பு..

ஸ்ருதி: அதாவது ஆம்பளைன்னா அப்படி தான் இருப்பான். பொட்டை கழுதைங்களே இவ்வளவு திமிர் பிடிச்சு, தடித்தனமா வெளியே வந்தா... அப்படி தான் கையை பிடிச்சு இழுப்பான்னு அந்த வீட்டுல இருக்கிறவங்களே சொன்ன காலம் அது.

ரம்யா: இதை கடுமையான குற்றமாக நினைக்காமல்
“lackadaisical attitudes”ன்னு சொல்றது போல, இந்திய அரசும் அதை கடுமையான சட்டங்கள் கொண்டு ஒடுக்காமல் அரை மனதோடு இதை குற்ற செயல்களில் சேர்ப்பதா, இல்லை இது ஆண்களின் சாதாரண இயல்புகளாக கருதலாமா என்றே தடுமாறி, அசட்டையாக இருந்திருக்கிறது. ஆனால் பாலியல் துன்புறுத்தல் செயல்கள் அதிகரிக்க அதிகரிக்க... பிற்பாடு சுதாரித்து கொண்ட அரசு, சட்டங்களை கடுமையாக மாற்ற ஆரம்பித்தார்கள். நீ சொன்னியே சரிகாஷா... அவங்க இறப்பிற்குப் பின் தமிழக அரசு ஈவ் டீஸிங் குறித்த சட்டத்தை கடுமையாக்கினார்கள்.

எஸ்தர்: இதுக்கெல்லாம் முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்திய சினிமாக்களையும் சொல்லலாம்.

எப்ப பாரு கதாநாயகியை கதாநாயகன் பல விதத்துல வெறுப்பேத்துவாரு... தொந்தரவு கொடுத்து, ஹீரோ ஹீரோயினை வலுக்கட்டாயமா முத்தம் கொடுத்தோன, முதல்ல ஹீரோயின் அழுவா... அப்புறம் அவளுக்கு ஹீரோ மேல் லவ் வந்துவிடும். என்ன பைத்தியக்காரத்தனமான concept.. ச்சே..

ஸ்ருதி: இதுப்போல படங்களை பார்த்து, பல விடலைங்க பொண்ணுங்கள மட்டுமில்ல 6 வது படிக்கிற பெண் குழந்தைகளை கூட பின்னாடியே வந்து டார்ச்சர் பண்ணுவானுங்க.. அந்தக் குழந்தை மனசுக்குள்ள எவ்வளவு பயந்து நடுங்கும்..? ஒழுங்கா படிக்க முடியுமா? இதனால் சில பேருக்கு மன அழுத்தம் கூட உண்டாகி படிப்பை கைவிடுற அளவுக்கு போகுதுன்னு மனநல மருத்துவர்கள் சொல்றாங்க.

ரம்யா: இந்த குற்றங்களுக்கு 3 மாதங்களிலிருந்து, 5 வருடம் வரை இபிகோ 292 பிரிவின் படி சிறை தண்டனை வாங்கி கொடுக்கலாம். இந்த தண்டனைகள் குறித்து எல்லா பெண்களுக்கும் தெரிய வைக்கனும். இப்ப ஆசிட் வீச்சு குற்றங்களுக்கு 10 வருடங்கள் குறையாம சிறை தண்டனை கொடுக்குறாங்க..

ஸ்ருதி: என்னை கேட்டா ஆசிட் வீச்சு பண்ற கொடூரன்களுக்கு மரண தண்டனை கொடுக்கனும்ன்னு சொல்வேன்.. ஒரு பெண்ணோட‌ கண்களை, முகத்தை, வாழ்க்கையை சிதைக்கிறவனுக்கு வெறும் 10 வருஷ தண்டனை என்பதை கொஞ்சம் கூட ஏத்துக்க முடியாது. இதுல இந்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரனும்.

Agree என்றனர் மற்ற மூவரும்...

ரம்யா: நாடு முழுவதும் அங்கங்க பெண்கள், சமூக சேவகர்கள் குழுக்கள் அமைத்து அரசோடு இணைந்து இந்தப் பிரச்சினையை தங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வராங்க.

“குங்ஃபூ கன்னியாஸ்திரிகள்” (Kung Fu Nuns) அமைப்பு தெரியுமா உங்களுக்கு?

ஹாசினி: ஹை.. கேட்கவே நல்லா இருக்குப்பா.. அது என்ன?

ரம்யா: லடாக் / இமயமலை பகுதிகளை சேர்ந்த சிற்றூர்களில் இளம்பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அவர்களுக்கு குங்ஃபூ தற்காப்பு கலையை 2017லிருந்து கற்று தருகிறார்கள் இந்த கன்னியாஸ்திரிகள்.

ஸ்ருதி: “எவ்வளவு நல்ல விஷயம்ல..

இது நாடு முழுவதும், ஒவ்வொரு அரசு பள்ளி, கல்லூரிகளில் பெண் குழந்தைகளுக்கு கட்டாயமாக போதிக்க வேண்டும். நாலு பேர் நம்மகிட்ட வம்பு பண்ண வந்தாலும், தன்னம்பிக்கையுடன் கராத்தே, குங்ஃபூ கத்துக்கிட்ட சிறுமிகள், பெண்கள் பெப்பர் ஸ்ப்ரே அல்லது மிளகாய்த்தூளை அவனுங்க மூஞ்சியில விட்டெறிஞ்சு ரெண்டு சாத்து சாத்துனாவே முக்கால்வாசி ரோட் ஸைட் ரோமியோக்களை தலைதெறிக்க ஓட விடலாம்” என்று ஸ்ருதி உணர்வு பூர்வமாக சொல்லிக் கொண்டிருக்க...

அந்தச் சமயத்தில் டிவியில்... “அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பரைத் தேங்கா..
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா..” என டிவியில் கமல், குஷ்புவை துரத்துவதை பார்த்த எஸ்தர் “ம்க்கும்” என உதட்டை சுழிக்க... மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து பெருமூச்செறிய புன்னகைத்துக் கொண்டனர்.