தொடர்கள்
நொறுக்ஸ்
போலந்து திரும்பும் தேவாலய மணி... - ஜெயஶ்ரீ நந்தினி

20210009000805127.jpg

தெற்கு போலந்து நாட்டின் ஸ்லாவெய்சி என்ற இடத்தில் உள்ள தூய கேத்தரின் கிறிஸ்தவ தேவாலாயத்தின் மணியை கி.பி.1555-ம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜிப் படைகள் கொள்ளையடித்து சென்றுவிட்டது. இந்த ஆலயமணி சுமார் 400 கிலோ எடை கொண்டது.

ஏனெனில், தங்களது படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் செய்வதற்கு, இந்த ஆலயமணியை போல் சுமார் 80 ஆயிரம் தேவாலய மணிகளை ஹிட்லரின் நாஜிப் படையினர் கொள்ளையடித்து உருக்கியதாக, ஜெர்மனியின் மான்ஸ்டர் மறைமாவட்ட நிர்வாகம் கூறுகின்றன.

போலந்து நாட்டின் கிறிஸ்தவ தேவாலயத்தினர் நீண்ட கால தேடலுக்கு பிறகு, சமீபத்தில் அந்த ஆலயமணி ஜெர்மன் நாட்டின் மான்ஸர் நகரில் இருப்பதை பதிவேட்டின் மூலமாக மரியன் பெட்நாரெக் என்ற மதபோதகர் கண்டுபிடித்தார்.

இதையடுத்து ஹேம்பர்க்கில் கத்தோலிக்க கல்லறைத் தோட்டம் ஒன்றில் தேடுகையில், வேறு இரண்டு மணிகளுடன், இந்த ஆலயமணியும் கவனிக்கப்படாமல் போடப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.

முன்னதாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின், உலோகத்துக்காக உருக்கப்படாத பல ஆலயமணிகள் திருப்பி அனுப்பப்பட்டன. ஆனால், போலந்து போன்ற கிழக்கு நாடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1,300 மணிகள் ஹேம்பர்க்கில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் படங்கள் நூரெம்பெர்க் என்ற இடத்தில் உள்ள அரசு ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

‘அந்த மணிகளை திருப்பி அனுப்பக்கூடாது என்று பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதற்குப் பதிலாக, பழைய மேற்கு ஜெர்மனியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அவை இரவலாக அளிக்கப்பட்டது’ என்று மறை மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

இந்த ஆலயமணி விரைவில் போலந்து நாட்டு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஒலிக்கப் போகும் நாளை, அந்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த மணி கடைசியாக தூய கேத்தரின் தேவாலயத்துக்கு திரும்பினாலும், அது சொந்த தேவாலயத்திலேயே இரவலாகத்தான் இருக்கும். அது ‘நிரந்தர இரவல்’ என்று அழைக்கப்படும். ஏனெனில், அதிகாரபூர்வமாக அந்த மணி, தற்போது ஜெர்மனி அரசாங்கத்தின் சொத்து.