தொடர்கள்
Daily Articles
கீரைகளின் அரசன் சக்கரவர்த்திக் கீரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்!! - மீனாசேகர்

20210009164106500.jpeg

நாம் இதுவரை பல விதமான கீரைகளை பற்றி தெரிந்துக் கொண்டோம். அனைத்து விதமான கீரைகளும் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகின்றன.

மேலை நாடுகளில் கூட தினசரி உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்கின்றார்கள். இப்போது அவர்கள் கீரைகளைச் சமைக்காமல் பச்சையாகவே சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். கீரைகளைச் சாப்பிடுவதை தாழ்வாகக் கருதும் நிலை மாற வேண்டும். தினசரி உணவில் கீரைகள் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும்.

கீரைகளில் பொதுவாக நார்சத்து அதிகமாக இருப்பதால், மல சிக்கல் பிரச்னை வரமால் பார்த்து கொள்ளும். செரிமான உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவும்.. நார்சத்து நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம், குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
அந்த வகையில் கீரைகளுக்கெல்லாம் அரசன் என அழைக்கப்படும் சக்கரவர்த்திக் கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும், எண்ணற்ற மருத்துவ குணங்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்.
வாத்தின் காலை போன்ற அமைப்பை கொண்டது சக்கரவர்த்திக் கீரை.
இந்த கீரைக்கு பருப்பு கீரை, கண்ணாடிக் கீரை, சக்கோலி, சில்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது வயல் வரப்புகளில் தானாக வளரக்கூடியது.

தமிழகத்தில் சில பகுதிகளில் இதைப் பயிரிடவும் செய்கின்றனர். சக்கரவர்த்திக் கீரை செங்குத்தாக சுமார் மூன்றடி உயரம் வரை வளரும். இது பசுமை கலந்த செந்நிறத் தண்டுகளையும், கருஞ்சிவப்பு நிறத் தழைகளையும் உடையது. இக்கீரையை நெய் விட்டு வதக்கிப் பருப்புடன் சேர்த்து உண்ணலாம். பருப்பும் தேங்காய்த் துருவலும் சேர்த்துப் பொரியலும் செய்யலாம். இதனைக் குழம்பாக வைத்தும் உண்ணலாம். இந்தக் கீரையுடன் புளி, மிளகாய் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சூப் தயாரித்தும் பருகலாம். சக்கரவர்த்திக் கீரை நாவிற்குச் சுவையூட்டி பசியைத் தூண்ட வல்லது.
இக்கீரையைக் கடைந்து சாதத்ததுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, உடலின் வெப்பந்தணிந்து உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், பசியைத் தூண்டும்.

சக்கரவர்த்திக் கீரையின் அற்புதங்கள்:

சக்கரவர்த்திக் கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த கீரையில் வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன. நார்சத்து மிகுந்த இக்கீரை சரிவிகித உணவாகிறது. தாது விருத்திக்கு இந்த சக்கரவர்த்தி கீரை பெரிதும் உதவுகிறது.

சக்கரவர்த்திக் கீரையின் மருத்துவ குணங்கள்:

ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் இரத்த சோகையை குணப்படுத்த சக்கரவர்த்திக் கீரையை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால் ஒரு சில மாதங்களில் ஹீமோகுளோபின் அளவு உயரும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு இருந்தாலும் இந்த கீரை சரி செய்ய உதவும்.

சக்கரவர்த்திக் கீரையை தொடர்ந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தியைப் பெருக்கும். சோர்வை அகற்றும். தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு வரக்கூடும்.

சக்கரவர்த்திக் கீரையானது புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கின்றது.

சக்கரவர்த்திக் கீரையை தொடர்ந்து உணவோடு எடுத்து கொண்டால் சிறுநீரக கற்களை கரைக்கும், சிறுநீர் தொற்றுக்களை போக்கும், சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும். மேலும் சிறுநீரை சரியாக வெளியேற்றும்.

சக்கரவர்த்திக் கீரை எலும்புகளை பலமடைய செய்யும் சக்தி வாய்ந்தது.
சக்கரவர்த்திக் கீரை மலச்சிக்கல் பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் வயிற்று புண் ஏற்படாமல் இருக்க செய்யும்.

சக்கரவர்த்திக் கீரை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை சாப்பிடுவதால், குடலில் உருவாகும் கொக்கிப் புழு, நாக்குப் பூச்சி போன்றவைகள் அழிந்து விடும்.

சக்கரவர்த்திக் கீரையின் இலையை அரைத்து உடம்பின் மேல் பத்து போடுவதால் வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மறையும். தவிர சிராய்ப்பு காயங்களை ஆற்றும்.

சக்கரவர்த்திக் கீரையை சிறிது விளக்கெண்ணெய் உடன் சேர்த்து வதக்கி இளஞ்சூட்டுடன் மூட்டுவலி உள்ள இடத்தில் கட்டி வைத்தால் வலி குறையும். தொடர்ந்து வலி இருக்கும் இடத்தில், ஒத்தடம் கொடுத்தால் வலி மறையும்.

சக்கரவர்த்திக் கீரை செடியை வீட்டிலும் வளர்க்கலாம்:

இதனை வீட்டின் தோட்டத்தில் வளர்க்கலாம். பூந்தொட்டியில் கூட வளர்க்கலாம். இதனை பதியன் போட்டால் வளரும். விதை மூலமும் வளரும். ஒரு முறை வைத்த செடி பல மாதங்களுக்கு பலன் தரும். நாம் வீட்டில் வளர்ந்த கீரையை மட்டும் தேவையான பொழுது புதிதாக பறித்து சமைத்து சாப்பிடலாம்.

அடுத்தவாரம் சுகம் நல்கும் சுக்கான் கீரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்!!