தொடர்கள்
Daily Articles
ராக தேவதைகள்... - 21 - மாயவரத்தான் சந்திரசேகரன்

திலங்

2021001210580735.jpeg

கேட்டவுடன் மனதுக்குள் ஒரு உற்சாகம், நேர்மறை எண்ணம் தோன்றி அன்று முழுவதும் எதிர்படுகிறவர்கள் அனைவரும் இனியவர்களாக தெரிவார்கள். அதாவது பூந்தோட்டங்களில் குபீர் என்று பீறிட்டு வரும் நீருற்றை பார்க்கும் போது ஏற்படும் மனக்கிளர்ச்சி. இந்துஸ்தானியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அற்புதமான ராகம் திலங். கர்நாடக சங்கீதத்தில் மெயின் கீர்த்தனைகள் இதில் அதிகம் இல்லை என்றாலும் தனியாவர்த்தனத்திற்கு பிறகு பாடப்படும் கற்கண்டு துக்கடாக்கள் அதிகம். எழுந்து காபி பொடி வாங்கிக் கொண்டு பொடி நடையாக வீடு கிளம்பலாமா என்று ‘எக்ஸ்க்யூஸ்மீ’ சொல்ல வரும் ரசிகர் அழகான திலங் ஆரம்பிப்பதை கேட்டு தன் எண்ணத்தை சற்று தள்ளிப் போடும் சக்தி இதற்கு உண்டு - பாடுபவர் ஜீவனோடு பாடினால்!

ஹாரிஸ் ஜெயராஜ்

சினிமாவில் ஜி. ராமநாதன் காலத்திலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் வரை அவ்வப்போது இந்த ராகப் பாடல்கள் நிறைய வந்துள்ளன. ‘சியாமளா சியாமளா ஜீவப்ரியே’ என்று எம்.கே. தியாகராஜபாகவதர் எடுத்த எடுப்பிலேயே மேல் ஸ்தாயியில் ஆரம்பிப்பார். 1952-ம் ஆண்டு வெளிவந்த ‘சியாமளா’ படத்தில் இசைமேதை ஜி. ராமநாதனின் பிரமாதம். எஸ்.ஜி. கிட்டப்பா, பி.யு. சின்னப்பா என்று பாகவதரோடு கர்நாடக சங்கீதத்தை அள்ளித் தந்தவர்களை ஒப்பிடும்போது அனாயாசமாக மேலே போய்வரும் பிற்கால வித்வான்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதனாலேயே அவர்கள் அந்த ஜாம்பவான்களின் பாடல்களை கூட பெரும்பாலும் தொடுவதில்லை. சித் ஸ்ரீராம், சூர்ய பிரகாஷ் போன்ற ஒரு சிலர் ஓரிரண்டு பாடல்களை பாடுகிறார்கள். பெரும்பாலானவர்கள் அந்த பக்கம் போவதில்லை. கொஞ்சம் மேலே போனாலே வயிற்று கடுப்பு வந்தது போல் திணறுகிறார்களே!

20210010223106545.jpeg

டி.கே.பகவதி

சிதம்பரம் ஜெயராமனின் அதிரும் குரல் ‘இன்று போய் நாளை வா’வை எப்படி மறக்க முடியும்? இந்த ராகத்தின் முத்திரை பாடல்! ‘சம்பூர்ண ராமாயணத்தில்’ ராவணனாக வரும் டி.கே. பகவதி வீணை வாசித்துக் கொண்டே வேதனையில் பாடும் போது அந்த சோகத்தை அப்படியே கொட்டியிருப்பார் கே.வி. மகாதேவன். ஓர் மகிழ்ச்சி ராகத்தை இதற்கு பயன்படுத்தி, அதுவும் இவ்வளவு பொருத்தமாக அமைந்தது எப்படி என்று ஆச்சரியமே மிகுகிறது. திருமணத்தின்போது தாலி கட்டியவுடன் ‘ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே’ என சோக முகாரியை சந்தோஷமாக இசைக்கவில்லையா..? மேதைகளால் எதுவும் முடியும்! முகாரி கருணை ரசத்திற்கு தான். சோகத்திற்கு என்பது எப்படியோ நடைமுறையில் வந்து விட்டது என சொல்பவர்களும் உண்டு.

‘என்திசை வென்றேனே - அங்கு இன்னிசை பொழிந்துணை கண்டேனே... என்று சி.எஸ். ஜெயராமன் பாடும்போது இப்போதும் உடம்பு சிலிர்க்கும்! ராவணன் கரகரப்ரியா ராகம் வாசிப்பதில் வல்லவன் என்றும் அப்படித்தான் சிவனை ஈர்த்தான் என்றும் கூறப்படுவதுண்டு.

பி்.சுசிலா

‘அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்’ - பி. சுசிலா ‘பஞ்சவர்ணக்கிளி’யில் பாடும் அட்டகாச மெலடி இன்னொரு திகட்டாத திலங்! விஸ்வநாதன் ராமமூர்த்தி இப்பாடலில் சுசீலாவை ஒரு தேர்ந்த கர்நாடக இசைப் பாடகி போல பாட வைத்திருப்பார்கள். முதல் சரணத்தின் கடைசியில் ‘பெண்மையை வாழ வைத்தான்’ என்று முடித்துவிட்டு மீண்டும் பல்லவிக்கு வரும்போது ஒரு நீண்ட சங்கதி போடுவார். அது அவ்வளவு சுலபமாக பலருக்கு வராத அசாத்திய சங்கதி. பாட்டின் கூடவே பயணிக்கும் தபேலாவை ரசிக்க ஞானமுள்ள காது வேண்டும்!

“நான் ஒரு குழந்தை, நீயும் நானுமா, நாளாம் நாளாம் திரு நாளாம், இது உந்தன் வீட்டு கிளிதான், அபிநய சுந்தரி ஆடுகின்றாள்..” உள்பட பல பாடல்களை ராமமூர்த்தியுடனும், பிற்காலத்தில் தனியாகவும் எம்.எஸ்.வி. இந்த ராகத்தில் அமைத்துள்ளார். அவை சற்று ஜனரஞ்சகப்படுத்தப்பட்டவை. ‘அபிநய சுந்தரி’யில் சீர்காழி சிவ சிதம்பரம் அமர்க்களப் படுத்தியிருப்பார்!

இளையராஜா காலத்தில் அவ்வளவு சுத்தமான திலங்கை கேட்க முடியவில்லை. அந்த ராகத்தை தன் பாணியில் அந்நிய ஸ்வரங்களோடு அழகு படுத்தியிருப்பார். ‘சிந்து பைரவி’யில் ‘மனதில் உறுதி வேண்டும்’ பாடலை ஜேசுதாஸின் குரலில் கேட்கும்போது வேறு ஒரு ரம்மியமான உணர்வைத் தரும்! ‘காற்றினிலே வரும் கீத’த்தில் வரும் ‘சித்திர செவ்வானம்’ கூட மற்றொரு ராஜா பிராண்ட் மென்மை கீதம்! ‘இன்னும் என்ன செய்யப் போகிறாய்.. அன்பே’ என்று கமலும், குஷ்புவும் படு கிளுகிளுப்பாக பாடும் இளைய ராஜாவின் டூயட் கூட இந்த ராகமே. எஸ்.பி.பி.யும், ஜானகியும் திலங்கை கொஞ்சும்போது காதலை வெறுப்பவர்களுக்கு கூட ரொமான்ஸ் வரும்! இத்தனைக்கும் ‘சிங்காரவேலன்’ என்ற சாதாரண மசாலா படத்திற்கு ராஜா அவ்வளவு மெனக்கிட்டிருப்பார்! ‘டிசம்பர் பூ’க்களில் ‘இந்த வெண்ணிலா எங்கு வந்தது’ என்று ஜானகி பாடுவதும் இந்த ராகத்தின் ராஜாவின் மற்றொரு வண்ணம்!

டி.ராஜேந்தர்

‘வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்’ என்று ரயில் பயணங்களில் ஒரு விறுவிறுப்பான பாடலை அமைத்திருப்பார் டி. ராஜேந்தர். ஜெயச்சந்திரன் பாடலில் திலங் சாயல் நிறைய இருக்கும். டி.ஆர். அதை உணர்ந்தே செய்தாரா ட்யூன் அப்படி அமைந்து விட்டதா என அவருக்கே வெளிச்சம். பல சினிமா இசையமைப்பாளர்களுக்கு ‘ஸ்கேல்’ தான் தெரியும். தாடிக்காரருக்கு ராக ஞானத்தை விட ‘ரிதம்’ ஆர்வம் தான் அதிகம்! ‘என்னை தின்னாதே’ என்று ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்தில் சங்கர் மகாதேவனும், அனுராதா ஸ்ரீராமும் மேற்கத்திய ஸ்டைலில் ஒரு பாடலை பாடியிருப்பார்கள். பரத்வாஜின் இன்னொரு அறியப்படாத முகம்! நயன்தாரா உல்லாசமாகப் பாடும் ‘என் அன்பே நாளும் நீ யின்றி நான் இல்லை..’ பாடலில் சாதனா சர்க்கம் ராகத்தின் குஷியை குரலில் அழகாக கொண்டு வந்திருப்பார். ஹாரிஸ் ஜெயராஜின் அழகான படைப்பு. ஜி.வி. பிரகாஷ், விஜய் அண்டனி உள்பட இன்னும் சிலர் இந்த ராகத்தில் கைவரிசை காட்டியுள்ளனர். ஆனால் அவற்றில் பெருசாக ஒன்றுமில்லை.

கர்நாடக சங்கீதத்தில் பல திலங் பாடல்கள் நெஞ்சை வருடுபவை. பாபநாசம் சிவனின் ‘ஸ்ரீ கணேச சரணம்’ பிரபலமானது. ஓ.எஸ். அருண் ‘பிரபோ கணபதே’ என்றொரு பாடலை தனது கச்சேரிகளில் தொடர்ந்து பாடுவார். கேட்க ஆனந்தமாக இருக்கும். சீர்காழி கோவிந்தராஜனின் ‘கண்ணபுரம் செல்வேன், கவலையெல்லாம் மறப்பேன்’ பாடல் போன தலைமுறைக்கு ரொம்ப பிரசித்தம். திலங்கில் துவங்கி ராக மாலிகையாக விரியும். நாகப்பட்டினம் பக்கமுள்ள திருக்கண்ணபுரத்தை தான் சொல்கிறார். செளரிராஜ பெருமாள் எழுந்தருளியுள்ள புண்ணிய ஸ்தலம்! 108 திவ்ய தேசங்களில் ஒன்று. லால்குடி ஜெயராமன் கூட திலங்கில் ஒரு தில்லானா அமைத்துள்ளார்.

‘ராமகிருஷ்ணர் வீட்டுக்கு வருகிறார். கதவைத் திறங்கள்’ என்றொரு புரந்தரதாசரின் அருமையான நாமாவை கேட்டுப் பாருங்கள்! ‘ராமகிருஷ்ணரு மனேகே பந்தரு பாகிலே தெரயிரே’ என்ற இந்தப் பாடலை சஞ்சை சுப்ரமணியம் திலங்கில் பாடி அண்மையில் கேட்டேன். பாவபூர்வம். பக்திபூர்வம்! அப்புறம் மறந்து விட்டேனே.. ‘சாந்தி நிலவ வேண்டும்’! சேது மாதவ ராவ் என்பவர் இயற்றிய இப்பாடல் இந்த ராகத்தின் மற்றொரு ‘சிக்னேச்சர்’ பாடல் எனலாம். மகாத்மா காந்தி இறந்தபோது டி.கே. பட்டம்மாள் பாடியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதை எம்.எஸ். நிறைய பாடியுள்ளார். இன்றைய பாடகிகள் பலர் பாடியிருந்தாலும், கிரிஜா ராமசுவாமி மனமுருகி பாடுவதை கேட்கும் போது ‘ஓஹோ’வென்றிருக்கும். ‘காந்தி மகாத்மா கட்டளை அதுவே..’ என்று மேல் ஸ்தாயியில் கிரிஜா நிற்கும்போது மெய் சிலிர்க்கும், இந்த பெண்மணி சென்னை, இசைக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர். சங்கீதம், பரதம், மற்றும் ஹரிகதை ஆகிய மூன்று மேடைகளிலும் ஜமாய்ப்பவர். பரிசுத்தமான சங்கீதம். மற்றவர்களுக்கு அக்டோபர் 2-ம் தேதி மட்டுமே ‘காந்தி’ நினைவுக்கு வரும்போது, கிரிஜா தொடர்ந்து கச்சேரிகளில் பாடுவது விசேஷமானது.

- இன்னும் பெருகும்