தொடர்கள்
தொடர்கள்
தேன்தமிழ் துளிகள் -10-மரியா சிவானந்தம்

20220815192620802.jpg

உங்கள் பாட்டியை நினைவிருக்கிறதா ?

இப்போது ஐம்பதுகளில் இருப்பவரா நீங்கள்? உங்கள் பாட்டியைச் சற்று நேரம் நினைவுக்குள் அழைத்து வாருங்கள். அவர்களின் உடை, அவர் தயாரித்த உணவு, அவர் உடுத்திய சேலைக்கட்டு, அவரது அன்றாட வழக்கங்கள் எல்லாம் உங்கள் கண் முன் நிழலாடுகின்றன இல்லையா? வீட்டின் ஒரு மூலையிலோ, திண்ணையிலோ அமர்ந்துக் கொண்டே, வீட்டின் ஒவ்வொரு அசைவையும், அங்கு வாழும் ஒவ்வொருவரின் மனநிலையும் கணிக்கும் திறன் கொண்ட மூதாட்டி ஒருவரையேனும் உங்கள் வாழ்நாளில் சந்தித்து இருக்க கூடும்.

அந்த மூதாட்டியின் பேச்சும், தோரணையும் அவரது ஆளுமைக்கு மேலும் அழகு சேர்ப்பவை. பாக்கு உரலில் இடித்துக் கொண்டோ , அரிசியில் கல் எடுத்துக் கொண்டோ பேசுகையில், அவர் வாயில் இருந்து சொலவடைகளும் , பழமொழிகளும் சரளமாக வெளி வந்து விழும் .சாதாரணமாக ஒரு உரையாடலை அவருக்கு முடிக்கத் தெரியாது .

'அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் 'என்றோ ஆட தெரியாதவள் அரங்கு கோணல் என்றாளாம்' என்றோ "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்றோ "அரைக்காசை ஆயிரம் பொன்னாக்குகிறவளும் பெண்சாதி, ஆயிரம் பொன்னை அரைக்காசு ஆக்குகிறவளும் பெண்சாதி" என்றோ "கிடக்கிறபடி கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையில் வை" என்றோ "கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே" என்றோ ஒரு பழமொழியை முத்தாய்ப்பாக சொல்லித்தான் தன் உரையாடலை முடித்து வைப்பார். பெரும்பாலும் உரையாடலின் துவக்கமும் ஒரு பழமொழியாகவே இருப்பதும் வழக்கம்தான் .

பழமொழிகள் ஏட்டில் எழுதப்படாத சிற்றிலக்கியங்கள் !

ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த, வாய் வழி வழங்கி வரும் இந்த குட்டி குட்டி சொற்றொடர்கள் ஒரு மொழிக்கு வளமை சேர்ப்பதோடு, வாழ்க்கைத் தத்துவங்களை அழகாக எடுத்துக் கூறுகின்றன. எல்லா மொழிகளிலும் பழமொழிகள் இருந்தாலும், தமிழ் மொழியில் வழங்கி வரும் பழமொழிகள் இம்மண்ணின் கலாச்சாரம், வட்டார வழக்கு, கடவுள் நம்பிக்கை, மனித மனதின் இயல்புகள், பழக்க வழக்கங்கள் என்று பல்வேறு செய்திகளை உள்ளடக்கிக் கொண்டு இருக்கின்றன.

பழமொழிகளை 'பொன்மொழிகள், மேற்கோள்கள், சொலவடைகள்' என்று பல பிரிவுகளிலும் பகுத்தலாம். பழமொழிகளைப் போலவே இன்றும் வாய்மொழி வழியாகவே அடுத்த தலைமுறைகளை அடையும் நாட்டுப்புற பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், கூத்துப்பாடல்கள், வயற்காட்டுப் பாடல்கள், ஒப்பாரி எல்லாம் 'எழுதப்படாத' இலக்கியங்களே. இவை தமிழின் அழகுக்கு அழகு சேர்த்து, வளம் கூட்டுகின்றன.

இனி சில பொருள் நிறைந்த பழமொழிகள் ,எந்நாளும் மாறாத அழகுடன்

  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது
  • பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்
  • ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
  • எருது நோய் காக்கைக்கு தெரியுமா?.
  • கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
  • கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை
  • சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம்
  • நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.

பழமொழிகளின் சிறப்புகளைப் பேசிக் கொண்டே போகலாம் . அதை உணர்ந்தது போல 1500 ஆண்டுகளுக்கு முன்பே "பழமொழி நானூறு" என்னும் பெருமை மிக்க தமிழிலக்கியம் தோன்றி உள்ளது . ஒவ்வொரு வெண்பாவின் இறுதி அடியிலும் ஒவ்வொரு பழமொழி சேர்த்து எழுதப்பட்டுள்ள நூல் . பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இந்நூலினை எழுதியவர் முன்றுறை அரையனார் என்னும் தமிழ்ப்புலவர்.

சிறப்பு பாயிரமும், கடவுள் வாழ்த்தும் சேர்த்து 401 பாடல்கள் கொண்டது பழமொழி நானூறு. திருக்குறளின் அதிகாரங்களை ஒத்த தலைப்புகளில் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. கல்வி, கல்லாதவர், அறிவுடைமை, அவையறிதல், கீழ்மக்கள் இயல்பு, இன்னா செய்யாமை, வெகுளாமை போன்ற 32 தலைப்புகளில் 399 பாடல்கள் அறிவுச் சுடரை ஏந்தி இந்நூலில் அணிவகுக்கின்றன.

இதோ இவ்வாரத்துக்கான பழமொழி பாடல் .

சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்

பெரிய பொருள்கருது வாரே; - விரிபூ

விராஅம் புனலூர! வேண்(டு 'அயிரை விட்டு

வராஅல் வாங்கு பவர்'.

-பழமொழி 15

"இதழ் விரிந்த பூக்கள் பலவும் ஆற்றிலே ஒன்றாகக் கலந்து செல்லும் புதுப்புனல் வளத்தையுடைய ஊரினனே !

சிறிய பொருளினை ஒருவர்க்குக் கொடுத்து உதவி அந்தக் காரியத்தால், பின்னர் அதனால் பெரும் பொருளை அடைய நினைப்பவர்கள் அறம்செய்பவர் அல்லர்.

அவர்கள் அயிரையாகிய சிறுமீனைத் தூண்டிலிலே கோர்த்துவிட்டுப், பெரிய மீனாகிய வராலைப் பிடிக்கின்றவர்களைப் போன்றவரே ஆவர் "இதுவே இப்பாடலின் பொருள்

சின்னமீனைப் போட்டு பெரிய மீனைப் பிடித்தல் 'என்பது பழமொழி . இந்தப் பாடலில் இந்த பழமொழி எடுத்தாளப்பட்டுள்ளது .

சிறிய உதவியை பிறருக்குச் செய்து விட்டு அதற்கு உபகாரமாக பெரிய பலனை அவரிடமிருந்து எதிர்பார்ப்பது அயிரை என்னும் சின்ன மீனைப் போட்டு , வரால் போன்ற பெரிய மீனைப் பிடிப்பது போன்றது .

எளிய பாடல் , உயர்ந்த கருத்து இதுவே பழமொழியின் சிறப்பு

மேலும் ஒரு நல்ல கருத்துள்ள பாடலுடன் சந்திப்போம்

- தொடரும்