தொடர்கள்
தொடர்கள்
ஜெர்மன் டயரி - நூரம்பெர்க் கார்த்திக் ராம்

20220817062834953.jpeg

வணக்கம் அன்பர்களே, இந்த வாரம் நுரெம்பெர்கில் (Nuremberg) இருந்து!

என்ன கார்த்தி, இந்த வாரம் உள்ளூரேவா என்றால்.... ரொம்ப தொலை போவதற்கு நேரம் இல்லை, இருந்தாலும், ஒரு சப்ப ஊரா இல்லாம ஒரு தில்லாலங்கடி ஊர்தான் இந்த நூரம்பெர்க். இந்த ஊர் பவேரியாவில் இருக்கு, இந்த மாநிலத்துல ம்யூனிச்க்கு அடுத்த படியா இதுதான் பெரிய ஊர் (பிராங்க்பார்ட் ஏர்போர்ட்ல இருந்து சுமார் 250 கிமீ).

சுமார் 5 லட்சத்துக்கு மேல இந்த ஊரோட மக்கள் தொகை. அரண்மனைகள், பழங்கால மதில்சுவறுகள், ஊரின் நடுவில் ஓடும் ஆறு என்று பல அழகான விஷயங்கள் இருந்தாலும், இந்த ஊருக்கு ஒரு இருண்ட வரலாறு இருக்கு.

20220817063004464.jpg

1) உலகத்தையே உலுக்கிய ஹிட்லர் முதன் முதலில் இங்க தான் நாஜி ராலி தொடங்கினார். பாருங்க ஆஸ்திரியாவில் பொறந்து எங்க வந்து என்ன வேல பண்ணிருக்கார்.

20220817063113763.jpg

2) எல்லாம் முடிஞ்ச பொறகு உலக புகழ் பெற்ற நூரெம்பெர்க் ட்ரயல் கூட இங்க தான் நடந்தது.

இந்த ஊர்ல இருக்கிற டாக்குமென்டேசன் சென்ட்ரம் போனீங்கன்னா முழு வரலாறும் அவளோ அருமையா தெரிஞ்சிக்க முடியும். இன்னும் சொல்ல போனா, ராலி கிரௌன்ட்க்கு மேல நின்னு கூட்டம் நடந்த இடத்தை பார்த்து அனுபவிக்க முடியும். நான் அந்த இரும்பு மேடைல ஏறி கீழ பார்த்தப்ப முதுகெலும்புல ஒரு மின்சாரம் பாஞ்சிச்சு பாருங்க, ஒரு குலுக்கு குலுக்கிருச்சு. என்ன தான் இரண்டாம் உலக போர்ல தான் யூத மக்களுக்கு எதிரான அட்டூழியம் உலகலவுல தெரிய வந்தாலும், அதென்னமோ ஏதோ ஒரு பரம பகை இருந்திருக்கு போல. 13ம் நூற்றாண்டுலேயே காரணமே இல்லாம பல யூதர்கள் கொல்லபட்ருக்காங்க, அதுக்கப்பறம் பல முறை. கோவில்ல குப்பை இருந்தா அவங்க குத்தம், ஊருக்குள்ள நோய் பரவுனா அவங்க குத்தமின்னு போட்டு நொங்கெடுத்துருக்காங்க. ஒரு எடுத்துக்காட்டுக்கு, 1298ல் ஊருக்குள்ள ஏதோ ஒரு நோய் பரவுச்சுன்னு சொல்லி சுமார் 700 பேரை எரிச்சு கொன்னுருக்காங்க. இன்னிக்கி உலகத்துல பாக்கிற கேக்கிற விஷயங்கள் புதுசு ஒன்னும் இல்ல, எல்லாமே இந்த மாறி தான்- மத வெறி இன வெறி. பல நூறு பல ஆயிரம் வருசமா மனுஷன் மாறவே இல்லை.

2022081706314074.jpeg

சரி கொஞ்சம் நல்ல விஷயம் பத்தி பேசுவோம். இந்த ஊர் சில விஷயங்களில் உலக புகழ் பெற்றது. இந்த ஊரோட இஞ்சி ரொட்டிக்கு ஈடு இணை கிடையாது. அதுவும் குளிர் காலத்துல சூடான காபி கூட ஒரு இஞ்சி ரொட்டி கையில, சொகமுன்னா சொகம்.

20220817063204584.jpeg

(இந்தா அந்த இஞ்சி ரொட்டி...)

ரெண்டாவது, என்ன தான் அரசியல்வாதிங்க செஞ்ச அட்டூழியத்துல இங்கிலாந்துகாரனும் அமெரிக்காரனும் சேர்ந்து ஒவ்வொரு ஊரையும் தரை மட்டமாக்கினாலும், பொது மக்கள் எல்லாரும் ஒன்னு சேர்ந்து திரும்ப சேதங்களை சீரமைச்சு திரும்ப கட்டியிருக்காங்க. மூணாவது, 2010ல் எடுத்த ஆய்வுப்படி, சுமார் 40% பேர் வெளிநாட்டில் இருந்தோ அல்லது வெளிநாட்டு தொடர்புடையங்களோ இந்த ஊர்ல வாழ்ந்திருக்காங்க (இப்பவும்). நான்காவது, இந்த ஊரோட கிருஸ்துமஸ் சந்தை உலக புகழ் பெற்றது. இதை பாக்கறதுக்காகவே வெளி நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருசமும் வராங்க. இப்படி நான் சொல்லிக்கிட்டே போகலாம். வரலாற்றில் ஒரு இருண்ட காரணத்துக்காக நினைக்கப்பட்ட ஊர் இன்னிக்கு பல நல்ல காரணத்துக்காக நினைக்க படுது.

20220817063259483.jpeg

வாழ்க்கையில நாமளும் நல்ல விஷயத்தை லிஸ்ட் போட்டு எண்ணிகிட்டே போனோமுன்னா நமக்கு தென்படறது எல்லாமே நல்ல விஷயமா தெரியும்.

மீண்டும் அடுத்த வாரம்.......