தொடர்கள்
ஆன்மீகம்
விறன்மிண்ட நாயனார்-ஆரூர் சுந்தரசேகர்.

விறன்மிண்ட நாயனார்!!


சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் குறிப்பிடத்தக்கவர் விறன்மிண்ட நாயனார். இவர் சிறுவயது முதலே சிவபெருமானின் மீது பக்தியும் பேரன்பும் கொண்டிருந்தார். அதைப்போன்றே சிவனடியார்கள் இடத்தும் பெருமதிப்பும், பக்தியும் வைத்திருந்தார்.
சிவாலயங்கள்‌ பலவற்றிற்குச்‌ சென்று சிவனைத்‌ தொழுவதும்‌, சிவத்தொண்டுகள் செய்வதையுமே தன்‌ வாழ்வின்‌ பெரும்‌ பேறாகக் கருதினார்‌. சிவாலயங்களுக்குப் போகும் போது அங்கு வரும் சிவனடியார்களை முதலில் வணங்கிய பின் சிவபெருமானை வணங்குவார்.
திருத்தொண்டத் தொகையை சுந்தரமூர்த்தி நாயனார் பாடக் காரணமாக இருந்தவர் விறன்மிண்ட நாயனார்.
சிவனடியார்களிடம் மாறாத பக்தி கொண்ட இவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் “விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன்” என்று குறிப்பிடுகிறார்.

செங்குன்றூரில் அவதரித்த விறன்மிண்ட நாயனார்:
நீர்வளம், நிலவளம் போன்ற பெருவளங்களையும் தன்னகத்தே கொண்ட மலைநாடான சேர நாட்டிலேயே சிறந்த பழமையான திருச்செங்குன்றூர் (தற்போது செங்கனூர், கேரளா) என்ற ஊரில் வேளாளர் மரபிலே இறைவனின் திருவருளால் விறன்மிண்ட நாயனார் அவதரித்தார்.
இவர் சிவபெருமான்‌ மீதும்‌ சிவனடியார்கள்‌ மீதும்‌ அளவற்ற பக்தியும்‌ அன்பும்‌ கொண்டிருந்தார்‌. சிவாலயங்கள்‌ பலவற்றிற்குச்‌ சென்று சிவனைத்‌ தொழுவதும்‌, சிவப்‌பணிகள்‌ செய்வதையுமே தன்‌ வாழ்வின்‌ பெரும்‌ பேறாக்‌ கருதினார்‌. அடியார்களை எவரேனும் இழிவு படுத்தினால் அந்த சமயத்தில் விறல்மிண்டரது பக்தி வீரமாக மாறிவிடும். உடனே அவர்களைத் தண்டிப்பார்.
விறல் என்ற சொல்லே வீரம் என்பதுதான் பொருள். விறலும் மிண்டும் திருவருள் நெறியில் இவருக்கு இருந்தமையால் விறன்மிண்டர் எனப் பெயர் பெற்றார். அறநெறி தவறாமல் வாழ்ந்துவந்த விறன்மிண்ட நாயனார் சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து மகிழ்வார். அவ்வாறு வழி படும் போது கோயிலின் வெளிப்புறத்தில் இருக்கும் சிவனடியார்களை வணங்கி, பின்னர் கோயிலுக்குள் சென்று சிவனாரை வணங்குவார். சிவபெருமானையும், சிவனடியார்களை வணங்குவதற்காகவே பல சிவத்தலங்களுக்கு செல்ல விரும்பினார்.

சிவபெருமானையே புறக்கணித்த விறன்மிண்ட நாயனார்:
சேரநாட்டு திருத்தலங்களை வணங்கியபின், சோழநாட்டு திருத்தலங்களை வழிபடும் நோக்கில் சோழநாட்டிற்கு வந்து, ஒவ்வொரு திருத்தலமாக வழிபட்டு வந்த நிலையில்
விறன்மிண்ட நாயனார்‌ ஆரூர் தியாகராஜப்‌ பெருமானை வணங்கத் திருவாரூர் வந்தார்‌. அங்கேயே தங்கி தியாகேசரை வணங்கி வழிபாடுகள் செய்தார்.

விறன்மிண்ட நாயனார்!!


அப்போது ஒருநாள், கோவிலுக்கு முன்புறம் அமைந்திருந்த தேவாசிரிய மண்டபத்தில் குழுமியிருந்த சிவனடியார்களை வணங்கி, அவர்களுடன் அளவளாவிக் கொண்டு இருக்கும் போது. வழக்கம்போல் சுந்தரமூர்த்தி நாயனார் தியாகராஜரை வழிபட வந்தார். தேவாசிரிய மண்டபத்தில் இருந்த சிவனடியார்களை மனதினால் வழிபட்டுவிட்டு ஒதுங்கிச் சென்றார். சுந்தரமூர்த்தி நாயனார் சிவனடியார்களை வணங்காது சிவபெருமானை வணங்கச் செல்வதைக் கண்ட விறன்மிண்ட நாயனார்‌ கோபம் கொண்டு, மண்டபத்தில் குழுமியிருந்த அடியார் கூட்டத்தினை வணங்காது விலகிச் சென்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் உள்ளத் தூய்மையினை உணராமல் "புறகு" என்று கூறினார். அடியார்களை மதியாத அவ்வடியாரை ஆண்ட எம்பெருமானும் புறகு என்று கூறினார். (புறகு என்பது புறமானது எனப் பொருள்). அதாவது சுந்தரமூர்த்தி நாயனாரையும் அவரை தடுத்தாட் கொண்ட சிவபெருமானையும் புறக்கணிப்போம் என்றார்.

திருத்தொண்டத் தொகைக்கு அடியெடுத்துத் தந்த தியாகேசர்:
விறன்மிண்ட நாயனார் சொன்னதைக் கேட்ட சுந்தரமூர்த்தி நாயனார், விறன்மிண்ட நாயனார் அடியார்களிடத்துக் கொண்டுள்ள பக்தி எத்துணைச் சிறப்புடையது என்று எண்ணிப் பெருமையுற்று, கோயிலுக்குள் சென்று தியாகராசப் பெருமானை வணங்கி, “இறைவா, நான் அடியவர்களுக்கு அடியவனாகும் நிலையை எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்தார். “தில்லைவாழ் அந்தணர்தம் அடியாருக்கும் அடியேன்” என, தியாகேசரைத் திருத்தொண்டத் தொகைக்கு அடியெடுத்துத் தந்தார். சுந்தரமூர்த்தி நாயனார் அதனையே முதலடியாகக் கொண்டு திருத்தொண்டர் தொகையைப் பாடி தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியவர்களை வணங்கினார். அதனை உளங்குளிரக் கேட்டு விறன்மிண்ட நாயனார் ஆரூர் தியாகராஜப்‌ பெருமானையும், சுந்தரமூர்த்தி நாயனாரையும் போற்றினார்.
விறன்மிண்ட நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரையும், தியாகராஜரையும் புறக்கணித்ததால் திருத்தொண்டர் தொகையை சுந்தரமூர்த்தி நாயனார் பாடினார். திருத்தொண்டர்களின் பெருமையைச் சொல்லும் திருத்தொண்டத் தொகை இல்லாவிடில் நாயன்மார்களின் பெருமையைச் சொல்லும் பெரியபுராணமே தோன்றியிருக்காது.

விறன்மிண்ட நாயனார்!!

சிவகணங்களுக்குத் தலைமையான கணநாதர் பேறு:
சிவனடியார்களான திருத்தொண்டர்களின் பெருமையை நிலைநாட்டிய விறன்மிண்ட நாயனார் இவ்வுலகில் சைவ நெறி போற்றப்பட பெருந்தொண்டுகள் பல புரிந்தார். சிவபெருமான் அருளால் திருவடி நிழலை அடைந்து, கயிலையில் சிவகணங்களுக்கான தலைமையான கணநாதராய் விளங்கும் பேற்றினைப் பெற்றார்.

குருபூஜை நாள்:
சிவனடியார்களான திருத்தொண்டர்களின் பெருமையை நிலைநாட்டிய விறன்மிண்ட நாயனாரின் குருபூஜை சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று அவர் அவதாரம் செய்த ஸ்தலமான கேரள மாநிலம்,திருச்சூர் மாவட்டம் (குன்றையூர் அல்லது திருச்செங்குன்றூர் இப்போது செங்கன்னூர்) (கொடுங்கோளூருக்கு தெற்கே இரண்டு கி.மீ.திருச்சூரில் இருந்து 40கி.மீ.சென்னை−கொச்சி ரயில் பாதையில் இரிஞாலக்குடா ரயில் நிலையத்தில் இருந்து 8கி.மீ. ஆலுவா ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ.தொலைவில் தலம் அமைந்துள்ளது) ஸ்ரீ பார்வதியம்மை சமேத ஸ்ரீ மஹாதேவர் கோயிலிலும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. விறன்மிண்ட நாயனார் திருவாரூர் மற்றும் வண்டம்பாளைக் கோயில்களில் தனி சந்நிதிகளை கொண்டுள்ளார். இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

"திருச்சிற்றம்பலம்"

அடுத்த பதிவில் திருநாவுக்கரசு நாயனார்…!!