"அப்பா, சிங்கம் ஒரு நாளைக்கு எத்தனை கிலோ சாப்பிடும்?"
"ஒரு ஐந்திலிருந்து ஏழு கிலோ சாப்பிடும், கண்ணா"
“புலி?”
“ஒரு எட்டு கிலோ சாப்பிடும்”
“கரடி?”
“அதுவும் கிட்டதட்ட ஏழு, எட்டு”.
“யானை, குதிரை, வரிக்குதிரை...”
" தெரியல. கேட்டு சொல்றேன் இப்போ நீ தூங்கு." தன் மகனின் கேள்விக்கு விடை சொல்லிக் கொண்டே தன் தலையணையை சரி செய்து படுத்துக்கொண்டான் ராஜேஷ்.
"அப்பா இந்த மிருகங்கள் எல்லாம் வயறு ரொம்ப சாப்பிடுமா"?
"சாப்பாடு போடுவாங்களா இருக்கும். நீ ஏன் கவலை படற?"
"பாவமா இருக்கு பா"
"ஏன்டா, சர்க்கஸ்ல என்னல்லாமோ பாத்தயே ஒண்ணுமே ஞாபகம் இல்லையா? திருப்பி திருப்பி மிருகத்தை பத்தியே கேட்டுட்டு இருக்க?"
பதில் சொல்லாமல் திரும்பி படுத்துகொண்டான் கண்ணன்.
கண்ணனுக்கு வயது பத்து இருக்கும். நன்றாக படிப்பான், ஆனால் யாருடனும் பேச மாட்டான், விளையாட செல்லமாட்டான். மிருகங்களின் உலகம் அவனுக்கு மிகவும் பிடிக்கும். டிஸ்கவரி, நாட் ஜியோ என்று பார்ப்பான்.
“இவன் ஏங்க வெளியவே போக மாட்டேங்கறான். இவன் வயசு பசங்க எல்லாம் முச்சூடும்வெளில தான் இருக்காங்க. ஏதாவது தப்பா இருக்குமோ?" முன்பெல்லாம் ராஜேஷ் மனைவி இந்த கேள்வியை அடிக்கடி கேட்பாள். இப்பொழுது அவளுக்கும் பழகி விட்டது.
"நான் வேற ஊர்ல இல்ல. சர்க்கஸுக்கு கூட்டிட்டு போங்க. அவனுக்கு கொஞ்சம் பொழுது போகும்." ரமா சொன்னது சரி என்று தோன்றியதால், கண்ணனை சர்க்கஸுக்கு கூட்டிச்சென்றான் ராஜேஷ். அதன் எதிரொலி தான் இத்தனை கேள்விகளும்.
தூங்கிவிட்டானென்று எண்ணி கண் அயரும் போது, மறுபடியும் எழுந்து உட்கார்ந்து
" அப்பா, நாளைக்கு சும்மா போய் மிருகங்களை மட்டும் பாக்கலாமா?"
" அதுக்கெல்லாம் அனுமதி கிடைக்குமான்னு தெரியலையே. நான் கேட்டு பாக்கிறேன். இப்போ நீ தூங்கு." மகனை தூங்க சொல்லிவிட்டு தானும் கண்களை மூடிக்கொண்டான். மனைவி ரமா அவள் பெற்றோர்களை பார்க்கச் சென்றிருக்கிறாள். அவள் வரும் வரை கண்ணன் முழுக்க முழுக்க இவன் பொறுப்பு. பெரிய தொந்தரவு எதுவும் கொடுக்காத அமைதியான பிள்ளை. வயதுக்கு மீறிய சிந்தனை. மற்ற குழந்தைகள் மாதிரி இவனும் இருந்திருக்கலாமோ? தலையை வேகமாக ஆட்டி சிந்தனையை சரி செய்து கொண்டான்.
"இவன் என் மகன். அவனை புரிந்து கொள்ள முயற்சிப்பேன். யாருடன் ஒப்பிட்டு பேசமாட்டேன்" என்று உறுதிமொழி போல் மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.
சற்று நேரம் தூங்கி இருப்பான். ஏதோ முனகல் சத்தம் அவனை எழுப்பியது. திரும்பி கண்ணனை பார்த்தான். அசந்து தூங்குவது போலத்தான் இருந்தது. ஆனால் வாய் மட்டும் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தது. சற்று அருகில் நெருங்கி என்ன சொல்கிறான் என்று கூர்ந்து கவனித்து கேட்டான்.
"அப்பா. அந்த சிங்கத்தால காட்டுக்கு போகமுடியுமா? போனா வேகமா ஓடுமா? யானையெல்லாம் ரெண்டு காலால நடக்குதே எப்படிப்பா? அடிச்சுருப்பாங்களா?...."
கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.
"கடவுளே! இந்த குழந்தையை நான் எப்படி வளர்க்கப்போகிறேன்." கண்கள் கலங்க மகனை அணைத்துக்கொண்டான்.
காலையில் எழுந்திருக்க கொஞ்சம் நேரமாகிவிட்டது. ஞாயிற்றுக் கிழமை தான். புரண்டு படுத்து பிள்ளையை அணைக்க கையைத்தூக்கினான். படுக்கை காலியாக இருந்தது. வேகமாக எழுந்து வெளியே வந்தான். வரவேற்பறையிலோ, அடுப்படியிலோ, குளியல் அறையிலோ கண்ணன் இல்லை. கொஞ்சம் வேகமாக பால்கனிக்கு வந்தான். அங்கே அவன் கம்பிபோட்ட கதவில் முகத்தை சாய்த்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
"என்ன கண்ணா, தூக்கம் வரலியா"?
" இன்னிக்கு சர்க்கஸ் போறோம் இல்லப்பா?"
இன்னும் அவன் அந்த எண்ணத்திலிருந்து வெளியில் வரவில்லை என்று தெரிந்தது.
" அதுக்கு அவ்ளோ சீக்கிரம் அனுமதி கிடைக்காதுடா"
" ஏன்?"
" சும்மா பாக்க எல்லாம் யாரையும் உள்ள விடமாட்டாங்க. "
"எப்படியாவது போகணும் பா! ப்ளீஸ் !"
கண்ணன் கண்ணில் இருந்த தீர்மானத்தை பார்த்ததும் , "முயற்சி தான் செய்து பார்ப்போமே" என்று தோன்றியது.
"சரி எனக்கு தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். அவரிடம் கேட்கிறேன். அது வரைக்கும் நான் குடுக்கற காப்பிய குடிச்சுட்டு பாடம் படி".
சரி என்று தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றான் கண்ணன்.
தனக்கும் தன் மகனுக்கும் காபியை போட்டு விட்டு தன்னுடைய போன் டைரியை எடுத்து சுகுமாரின் எண்ணை தேடினான். அவன் டைரியில் வரிசையாக எல்லாம் எழுதியிருக்க மாட்டான். அனால் எங்கே எழுதியிருப்பான் என்று சரியாக அவனுக்கு தெரியும். எண்ணை கண்டுபிடித்து தொலைபேசியை எடுத்து எண்களை சுழற்றினான்.
சுகுமார் அவனின் கல்லூரித்தோழன். ஒரு திறமையான மக்கள் தொடர்பு அதிகாரி. எல்லா வட்டத்திலும் அவனுக்கு செல்வாக்கு உண்டு. ஏதேனும் வழி சொல்லுவான். சொன்னான்.
"ஒண்ணுமே பிரச்சனை இல்ல ராஜேஷ். . நீ ஒரு பத்து மணிக்கு கண்ணனை கூட்டிட்டு அங்க வந்துடு. நானும் வரேன். ரெண்டுபேருமே உள்ள போகலாம்."
நன்றி சொல்லிவிட்டு தொலைபேசியை கீழே வைத்தான்.
"ரொம்ப தேங்க்ஸ் அப்பா. நான் கிளம்பிடறேன்."
மகனின் குரல் கேட்டு திரும்பினான்.
"படிக்கலயா கண்ணா?"
"படிச்சுட்டு தான் இருந்தேன். நீங்க பேசினது காதுல விழுந்துச்சுப்பா"
"சரி. குளிச்சுட்டு கிளம்பலாம். போற வழியில ஏதாவது சாப்டுக்கலாம். சரியா?"
கையில் இருந்த புத்தகத்தை பையில் வைத்துவிட்டு வேகமாக கொடியில் இருந்த துணியை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றான் கண்ணன்.
அழைத்து செல்லலாமா? கூண்டில் இருக்கும் மிருகங்கள் கண்ணனை இன்னும் வேதனை படுத்துமா? ஒரே குழப்பமாக இருந்தது ராஜேஷுக்கு.
அவன் சிந்தனையை துலைபேசி மணி கலைத்தது.
"ராஜேஷ், வாங்க வேண்டியவங்ககிட்டயெல்லாம் அனுமதி வாங்கியாச்சு.
சரியா பத்து மணிக்கு வந்து சேரு". குதூகலமாய் பேசினான் சுகுமாரன். அவன் அப்படித்தான். உதவி என்று கேட்டால் எப்படியாவது முடித்து கொடுத்துவிடுவான். அனால் அதை ஒரு பத்து பேரிடமாவது சொல்லுவான்.
ராஜேஷும், கண்ணனும் சரியாக பத்து மணிக்கு சர்க்கஸ் வாசலில் நின்றார்கள். சுகுமார் வர சற்று தாமதமானது. சில நிமிடங்கள் கழித்து ஸ்கூட்டரில் வந்து இறங்கினான்.
"திடீர்ன்னு கார் ஸ்டார்ட் ஆகவே இல்லை. பக்கத்துக்கு வீட்டுல இருந்து வண்டி கடன் வாங்கிட்டு வந்துட்டேன். ரொம்ப நேரம் ஆச்சா வந்து?" கண்ணனை பார்த்து புன்னகைத்துக்கொண்டே கேட்டான்.
"பத்து நிமிஷம் தான் ஆச்சு. போலாமா? ராஜேஷுக்கு இது எல்லாம் சீக்கிரம் முடிந்து விட்டால் போதுமென்று தோன்றியது.
சுகுமார் முன்னே சென்றான். அங்கு இருந்த காவலாளியிடம் ஏதோ பேப்பரை காண்பிக்க அவன் உடனே கதவை திறந்து விட்டான்.
அதற்குள் எப்படி இதெல்லாம் இவனால் செய்ய முடிந்தது? ஆச்சர்யமாக இருந்தது ராஜேஷுக்கு.
"எல்லாத்துக்கும் ஆள் இருக்கு. வழியும் இருக்கு. என்ன சில இடத்துல கெஞ்சனும், சில இடத்துல குழையணும். ஆனா வேலை ஆயிடும். இங்க பாரு நமக்கு ராஜ மரியாதை தான்."
தன்னால் இப்படி நடந்து கொள்ள முடியுமா என்று ராஜேஷ் யோசித்தான். மகனுக்காகவே என்றாலும் முடியாது என்று தான் தோன்றியது. நன்றியுடன் சுகுமாரை பார்த்தான்.
நேராக மேனேஜரிடம் சென்றார்கள். அவருக்கு அதற்குள் செய்தி வந்துவிட, தயாராக நின்றார்.
"உங்களுக்கு என்ன பாக்கணும்?"
"கண்ணா அங்க போலாமா? எல்லாரும் பிராக்டிஸ் பண்ணிட்ருப்பாங்க. பக்கத்துல இருந்து பாக்கலாம். சர்க்கஸ் கோமாளி அங்கதான் இருப்பாரு. அவரையும் பாக்கலாமா?" கண்ணனிடம் கேட்டான் சுகுமார்.
கண்ணன் தன் தந்தையைப் பார்த்தான்.
" சுகுமார் அவனுக்கு சிங்கம், புலி தான் பாக்கணுமாம்."
மேனேஜர் கொஞ்சம் தயங்கினார். பின்னர்,
"சரி சார் வாங்க. ஆனா போட்டோ எல்லாம் எடுக்க கூடாது, அஞ்சு நிமிஷம் பாத்துட்டு வந்துடனும்"
கூண்டுகளை நோக்கி நடந்தனர்.
அருகே செல்ல செல்ல மிருகங்களுக்கே உண்டான நாற்றம் வீசத்துடங்கியது.
கண்ணன் கையை ராஜேஷ் பிடித்துக்கொண்டான்.
முதல் கூட்டில் ஒரு குரங்கு இருந்தது. மனிதர்களை பார்த்தவுடன் பர பர வென்று மேலும் கீழும் கீச் கீச்சென்று கத்திக்கொண்டே குதித்தது.
அதைப்பார்த்துக்கொண்டே அடுத்த கூட்டிற்கு அருகே செல்ல அதில் ஒரு புலி அங்கேயும், இங்கேயும் நடந்து கொண்டிருந்தது. நின்று அதனை கவனித்தான் கண்ணன்.
"அப்பா, இது ரொம்ப ஒல்லியா இருக்கே. நான் டிஸ்கவரி ல பாக்கறதெல்லாம் இப்படி இருக்காதே?
மேனேஜர், "அதெல்லாம் இல்லபா. அடைபட்டு இருக்கற மிருகங்கள் எல்லாமே இப்படி தான் இருக்கும்."
"ஏன் பின்ன அடைச்சு போட்டிறுகீங்க மாமா?"
எளிமையான கேள்வி. எந்தவிதத்திலும் தார்மீக திருப்தி தராத ஒரு பதில் தான் கிடைக்கும்.
மேனேஜர் பதில் சொல்ல முயற்சிக்கவே இல்லை.
சுகுமார் கண்ணனை திரும்பி பார்த்தான்.
ராஜேஷ் கண்ணனின் கையை சற்று இறுக்கமாக பற்றிக்கொண்டிருந்தான். சுகுமார் மெதுவாகராஜேஷை நெருங்கி கண்ணனின் கையை விடுவித்தான்.
"கண்ணா, கூட வா பாத்துகிட்டே நடக்கலாம்"
கண்ணன் யார் கையையும் பிடித்துக்கொள்ளாமல் கூடவே நடக்க ஆரம்பித்தான். சிங்கம் இருக்கும் கூண்டுக்கு அருகில் வந்தவுடன் நின்றான். சிங்கம் படுத்துக்கொண்டிருந்தது. மனிதர்களை பொருட்படுத்தவே இல்லை. கண்ணன் சற்று தொலைவில் இருந்த ஒரு கல்லின் மேல் சென்று அமர்ந்து கொண்டான். அவன் கண்கள் அத்தனை கூண்டுகளையும் மாறி மாறி பாத்துகொண்டே இருந்தன.
மேனேஜர் ராஜேஷை பார்த்து,
"சார், போகலாமா? ரொம்ப நேரம் ஆச்சு."
ராஜேஷ் கண்ணனிடம், "கண்ணா, எழுந்திரு வா. போகலாம்." என்றான்.
" அந்த சிங்கம் எழுந்திருக்காதா?" சிங்கத்தை பார்த்தபடியே கேட்டான்.
"அதுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை.", மேனேஜர் மெதுவாக கூறினார்.
" என்ன சார் ஆச்சு, டாக்டர் கூப்பிட்டிங்களா? " சுகுமார் சற்று கடினமாக கேட்டவுடன், மேனேஜர் பதில் எதுவும் கூறாமல் கண்ணன் அருகே போய் அமர்ந்தார். இரு கைகளாலேயும் முகத்தை அழுத்தி துடைத்து கொண்டார். பின்னர் ஏதோ தீர்மானம் செய்தது போல்,
"சார், என் பெரு செந்தாமரை. நான் கிட்ட தட்ட முப்பது வருஷமா இங்க வேலை பாக்கறேன். சினிமா எல்லாம் வந்ததுக்கப்பறம் உங்களுக்கே சர்க்கஸின் நிலைமை தெரியும். நாங்க ஒரு ஐம்பது பேரு இருக்கோம். வர பணத்துல மனுஷங்களும் கால் வயிறு, மிருகங்களும் கால் வயிறு. இதுல எங்க மருந்து மாத்திரை எல்லாம். ஏதோ இருக்கறத கொடுத்துட்டு இருக்கோம். இது இப்படியே போனா என்ன ஆகும்னு தெரியல சார்." பட பட வென்று பேசி முடித்தார்.
கண்ணன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
"அப்பா, நான் சொன்னேன் இல்ல! பசிதான்பா அவங்களுக்கெல்லாம்," கூண்டுகளை நோக்கி கை காட்டினான்.
"நன்றி செந்தாமரை. நாங்க கிளம்பறோம்." சுகுமார், கண்ணனை கைபிடித்து கூட்டிக்கொண்டு வாசல் நோக்கி நடந்தான். ராஜேஷ் தன்சட்டை பையிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து, செந்தாமரை கையில் திணித்துவிட்டு சுகுமாரை வேகமாய் பின் தொடர்ந்தான்.
அவர்கள் வெளியில் வந்ததும் சுகுமார் ராஜேஷிடம், "இன்னிக்கு ரொம்ப முக்கியமான நாள் ராஜேஷ். இந்த கொடுமையெல்லாம் பாத்துட்டும் சும்மா இருக்கறது ரொம்ப தப்பு. ஏதாவது இன்னிக்கே பண்ணனும்."
"மாமா, மிருகங்களை எல்லாம் காப்பாத்தி திருப்பி காட்டிலேயே கொண்டு போய் விட்டுடலாமா?"
"இல்லடா இதை மொதல்ல யாரு கிட்ட சொல்லணுமோ அவங்க கிட்ட சொல்லணும். எது சரியான முடிவோ அவங்க எடுப்பாங்க."
" யாருகிட்ட சொல்ல போற? என்ன சொல்ல போற?" ராஜேஷ் பதறி போனான்.
"நம்மள நம்பி அவர் உள்ள விட்டாரு. ஏதாவது செஞ்சு அவரோட வேலைக்கு உலை வெய்ச்சுடாதே."
" ராஜேஷ், நீ அந்த விலங்கெல்லாம் நல்லா பாத்தியா? ஒவ்வொன்னுக்கும் கையிலயோ, கால்லயோ அடி பட்டு இருக்கு. உடம்ப பாத்தாலே தெரியல வேணுமளவுக்கு சாப்பாடு போடறதில்லைன்னு. இப்படியே விடக்கூடாது. ஏதாவது செய்யணும்." நீ கண்ணனை கூட்டிகிட்டு வீட்டுக்கு போ. நான் நாளைக்கு பேசறேன்."
பதிலுக்கு காத்திராமல் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
கண்ணன் சுகுமார் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.
"வா கண்ணா போகலாம்."
"இந்த மாமா ஏதாவது பண்ணுவாரா அப்பா?"
"தெரியலையே டா. பாக்கலாம். யாரையும் பாதிக்காமல் ஏதாவது செஞ்சா சரி"
வீடு திரும்பினர். கண்ணன் பெரிதாக எதுவும் பேசவில்லை. ஏதோ படித்தான். கொஞ்ச நேரம் டிவி பார்த்தான். இரவு சாப்பிட்டுவிட்டு படுக்க சென்றுவிட்டான்.
ராஜேஷுக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. ரமா நாளை காலை வந்து விடுவாள். வந்தால் அவளிடம் கண்ணன் ஏதாவது பேசிக்கொண்டிருப்பான். வேலையை முடித்து படுக்க சென்றபோது கண்ணன் நன்றாக தூங்கி கொண்டிருந்தான்.
ஒரு பெருமூச்சுடன் படுத்தவன் சற்று நேரத்திலேயே உறங்கிவிட்டான்.
திங்கள் கிழமை காலை அதற்க்கே உண்டான பர பரப்புடன் துவங்கியது. ரமா விடியற்காலையிலேயே வந்து விட்டாள்.
கண்ணன் பள்ளிக்கு கிளம்பும் முன் ராஜேஷிடம் வந்து,
"அப்பா, சுகுமார் மாமா இன்னிக்கு கூப்பிடுவார் தானே?" என்று கேட்டான்.
"கூப்பிடலாம். நீ எதையும் யோசிக்காமல் ஸ்கூலுக்கு போ!"
ஒருவாரமாக சுகுமாரிடமிருந்து எந்த போனும் வரவில்லை. கண்ணன் தினமும் கேட்பான். ஏதாவது சொல்லி சமாளிப்பான் ராஜேஷ்.
ஒருவாரம் கழித்து ஒருநாள் காலை சுகுமாரிடமிருந்து போன் வந்தது.
"டேய் ராஜேஷ், பேப்பர் பாத்தயா இன்னிக்கு?"
"இல்லையே என்ன விஷயம்?"
"மொதல்ல பேப்பரை பிரிச்சு படி. நான் லைன்ல இருக்கேன்."
தலைப்பு செய்தியாய், "சர்க்கஸில் இனி எந்த மிருகங்களையும் பயன்படுத்தக் கூடாது- வருகிறது புதிய உத்தரவு..!!"
ராஜேஷுக்கு சந்தோஷப்படுவதா இல்லை கவலை படுவதா என்று தெரியவில்லை.
மீண்டும் போன் எடுத்து," என்ன சுகுமார் இப்படி பண்ணிட்ட! அந்த மேனேஜர் நம்மள அவ்ளோ நம்பினாரே"
"உன் பையனுக்கு இருக்கும் தெளிவு கூட உனக்கு இல்லையே ராஜேஷ். ஒவ்வொரு பிரச்னை அணுகுவதற்கும் ஒரு நெறி முறை உண்டு. இரெண்டு பக்கத்திலயும் பாதிக்கப்படுபவர்கள் இருந்தால் இருவர்களின் பாதிப்பையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். நான் மனிதன். ஆளப்பிறந்தவன் என்ற எண்ணத்தை ஒதுக்கி வைத்து பார்த்தால் இந்த விஷயத்தின் தீவிரம் புரியும். எல்லாவற்றையும் நிதானமாக யோசித்து பார். உனக்கே புரியும்."
" சரி சுகுமார், இது எப்படி ஒரு வாரத்தில் சாத்தியமாச்சு?"
" நல்லது பண்ணனும்னு நினைக்கறவங்க நிறைய பேரு இருக்காங்க. இதை பொறுத்தவரைக்கும் ஒரு வனவிலங்கு ஆர்வலர், ஒரு சில அரசு சார்பற்ற அமைப்புகள் கடைசியில் இதன் உணர்வை புரிந்து கொண்ட நம் தலைமை வன உயிரின காப்பாளர்."
ராஜேஷுக்கு இன்னும் கலக்கம் தான். அந்த சர்க்கஸ் என்ன ஆகும்? அதில் வேலை பார்ப்பவர்கள் என்ன ஆவார்கள்? ஆனாலும் ஏதோ கொஞ்சம் புரிந்த மாதிரியும் இருந்தது.
" ராஜேஷ், சில சமயம் ஒரு குழந்தைக்கு உள்ள உணர்வு திறன் நமக்கு இல்லாமல் தான் போகிறது. இன்றைய தலைப்பு செய்திக்கு காரணம் கண்ணன் தான். பத்திரமா பாத்துக்கோ அவனை. நம் எதிர் காலம் அவன்."
போனை வைத்த பின்பும் நெடு நேரம் யோசித்துக் கொண்டிருந்தான் . எத்தனை குழப்பங்கள் இருந்தாலும், இன்று கண்ணன் வந்து கேட்டால், சொல்லுவதற்கு விஷயம் இருப்பதை நினைக்கும் போது மனம் மகிழ்ச்சி அடையத்தான் செய்தது.
Leave a comment
Upload