தொடர்கள்
கதை
முடிவில்லாத ஆரம்பம் - ராம்பிரசாத் தேசிகன்

20220817072332724.png

இவ்வளவு நாளா வீட்டு விசேஷம்னா தாமரை இலைத் தண்ணியா, பசு மாதிரி இருந்த பசுபதி சில நாளா எல்லார் கிட்டேயும் வலியப் போய் பேச்சுக் கொடுக்கிறான். ஒவ்வொத்தரையும் கூர்ந்து கவனிக்கறான்.

வாட்ஸ் ஆப் வந்தாலும் வந்தது, முகத்துக்கு நேரே சொல்ல யோசிக்கற பல விஷயங்களை தயங்காம சொல்ல முடியறதால கூடவே பொறந்த அவனோட சங்கோஜம் குறைஞ்ச மாதிரி இருக்கு. மனசுக்குத் தோணறதை எல்லாம் கவிதைன்னு (!?) எழுதறதுலேயும், வர போஸ்டிங்க் எல்லாத்துக்கும் விமர்சனம் எழுதறதுலேயுமே பாதி நாள் வேஸ்டாப் போனாலும்,

சொந்தக்காரனும், சுத்தியிருக்கறவனும் வேறு வழியில்லாம லைக்கும், வாழ்த்துரைகளும் வஞ்சனையில்லாமல் வாரி வழங்க, அவன் மனசுக்குள் மத்தாப்பூ. முன் ஜன்ம பழி தீர்க்க குழுவுல ஒருத்தன் நீ ஏன் கதை எழுதக்கூடாது என உசுப்பி விட அப்போதே சுஜாதா ஆனது போல ஒரு உணர்வு.

சனிக்கிழமை லீவு நாள், பையைத் தூக்கிக் கொண்டு காய்கறி மார்க்கெட் போனான். கண்ணில் காய்கறியெல்லாம் கதையாத் தெரிஞ்சது.

கற்பனைக் குதிரை தறிகெட்டுப் பறக்க, கடை கடையா கலெக்ஷன் பண்ற கந்து வட்டியா, பளீர்னு காய்களுக்கு லைட்போட்டு விக்கற காய்க்காரனா, நெரிசலுக்கு நடுவுல

இறைஞ்சு கிடக்கற குப்பை மேலேயே வண்டி ஓட்டிப் போகிற குப்பை வண்டிக்காரனா அப்படினு மனசுல கதாநாயகன் மாறி மாறி வர, சொத்தையும் சொள்ளையுமா காய் வாங்கிண்டு போய் வீட்டுல திட்டு வாங்கினது தான் மிச்சம்.

அமேசான் கிண்டில்ல இரண்டு கதையை டவுன்லோட் பண்ணி படிச்சான். அடச்சே, என்ன இது ஒரிஜினலா ஒண்ணுமே தோண மாட்டேங்குதே! டீஒவிலே ஒரு சீரியல பார்த்தா போன வருஷம் பார்த்த அதே வில்லி இன்னொரு ரௌடி கிட்ட பணம் கொடுத்து அதே சொந்தக்காரங்க கதையை முடிக்க சதி பண்ணிட்டிருக்கா!!? இதுக்கு எல்லாம் கதையே வேணாம் போல இருக்கே?

பித்துப் பிடிச்ச மாதிரி ஒரு நிமிஷம்

தலையைச் சுத்த, வீட்டு வாசல்ல வந்து உக்கார்ந்தான். பக்கத்துத் தெருவுல இருந்து ஆம்புலன்ஸ் வேன் சைரனோட வேகமாப் போச்சு. சாயந்திரம் வாக்கிங் போற தாத்தாவா இருக்குமோ, இல்லே போன வாரம் கோவிட் வந்த கடைசி வீட்டுப் பாட்டியோ? வயசானவங்க பிள்ளைங்களோட தொந்தரவு தாங்காம ஹோம் போற தீம் வச்சுக் கூட ஒரு கதை பண்ணலாமோனு யோசிக்கறப்போ, நாலு வீடு தள்ளி குடுகுப்பைக்காரன் சத்தம் கேட்டது. 'ஏங்க, சீக்கிரம் கதவை மூடிட்டு உள்ள வாங்க, அவன் வந்து ஏதாவது சொல்லித் தொலைக்கப் போறான்'னு கூக்குரல் வர, ஐயோ ஒரு குடுகுப்பைக்காரன் கதை போகுதேனு மனசுக்குள்ள புலம்பலோட கதவை மூடிட்டு வந்தான்.

வீட்டம்மா 'என்ன, ஏதோ யோசனையாவே இருக்கீங்க? உடம்பு, கிடம்பு சரியில்லையா, இல்ல ஆபீஸ்ல ஏதும் ப்ரச்னையா?'னு கேட்கற அளவுக்கு விட்டத்தில கதையைத் தேடி வெறிச்சுப் பார்த்தும் எட்டுக்கால் பூச்சியைத் தவிர ஒண்ணும் தெரியல!

ஞாயித்துக்கிழமை பீச்சுக்குப் போனா என்னன்னு தோணிச்சு. நிழல்கள் படத்துல சந்திரசேகருக்கு ட்யூன் வந்த மாதிரி அலையைப் பார்த்தா ஏதாவது ஐடியா வருதா பார்க்கலாம், இல்லைனா அங்க இருக்கற சுண்டல் விக்கற பையன், குதிரைக்காரன், இராட்டினம் சுத்தறவன் இப்படி எதையாவது வச்சு ஒரு கதை எழுத முடியாதானு ஒரு நம்பிக்கைதான்.

பக்கத்துத் தெருவுல பரங்கிக்காய்

சாம்பார் பண்ணினாலே மோப்பம் பிடிக்கற பார்யாளுக்கு இதைக் கண்டு பிடிக்க முடியாதா? குழந்தை, குட்டி பரிவாரத்தோட எல்லாரும் பீச்சுக்கு ஆரவாரமா வர ஆயிரம் ரூபாய் செலவோட ஞாயிறும் முடிஞ்சுது.

இப்போ எல்லாம் ஒரு கல்யாணம், கார்த்திகைக்கு வந்தாக்கூட, நாதஸ்வர பார்ட்டியைப் பார்த்துப் பேசறதும், சமையற்காரரோட சிரிச்சுப் பேசறதும், வர்றவங்க கிட்டேயெல்லாம் குசலம் விசாரிக்கறதும் அப்பப்போ கைல ஒரு சின்ன டைரில ஏதோ நோட் பண்ணிக்கறதும், பசுபதி ஒரு மார்க்கமாத் தான் இருக்கான். எங்கிருந்தாவது ஒரு கதையைக் கண்டுபிடிக்க ட்ரை பண்றான். கதை தான் ஒண்ணும் வெளியே வரமாட்டேங்குது.

அவனோட திடீர் கலகலப்பைப் பார்த்து சந்தோஷமா கிட்ட வந்த பங்காளி எல்லாம் இப்போ அவன் வரான்னு தெரிஞ்ச உடனே சிதறி ஓடறதைப் பார்த்தா சிரிப்பை அடக்க முடியல. மனிதாபிமானம் இருந்தா நீங்க கூட நாளைக்கு நம்ம பக்கத்துத் தெரு சீமாச்சு வீட்டு கல்யாணத்துக்கு வரலாம். ஒரு கதாசிரியரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தின புண்ணியம் கிடைக்கும்! காலம்பற டிபன், சாப்பாடு ஃப்ரீ, என்ன? சார், இருங்க, எங்க அவசரமா கிளம்பிட்டீங்க!!?

பசுபதி நாளைக்குத் தான் அங்க வருவான்..