தொடர்கள்
தொலைக்காட்சி
சின்னத்திரை- சமூக சீர்கேடு .-மரியா சிவானந்தம்

20220823205025427.jpg

இரண்டு நிகழ்ச்சிகளைப்பற்றி சொல்ல வேண்டும் ...

நேற்று காலை உடல் நலிவாக இருந்த என் சினேகிதியின் அம்மாவைக் நலம் விசாரிக்கச் சென்று இருந்தேன். அம்மாவுக்கு எண்பது வயது. கொஞ்ச காலமாகவே படுக்கையில் தான் இருக்கிறார்கள். முந்திய தினம் அவர்கள் கீழே விழுந்து மயக்கமானதை தோழி கவலையுடன் விவரித்தார். " மயக்கம் தெளிந்த பின் அம்மா கேட்டது தான் ஹைலைட், "ஏண்டி, பாக்கியலட்சுமி முடிச்சிட்டுதா ? இன்னிக்கு கதை என்ன ஆச்சு? " என்றாராம்.

இரண்டாவது சம்பவம் மூன்று மாதங்களுக்கு முன் நடந்தது .

வேலூரில் சன் டி .வி யின் "சன் நட்சத்திர கொண்டாட்டம்” விழா நடத்த இருப்பதாக அந்த தொலைக்காட்சியில் விளம்பரம் வரத் ஆரம்பித்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் என் அம்மாவின் முகத்தில் உற்சாகம் வழியும், ஒரு எதிர்பார்ப்பும் ஏக்கமும் அவர் குரலில் தென்படும். “சுந்தரி, துளசி, கயல், மீரா, பூமிகா, அர்ஜுன், வருண்,ராஜபாண்டி எல்லாருமே வருவாங்களா?" என்று கேட்டுக் கொண்டே இருந்தாங்க . "வருவாங்கமா "என்று சொல்லி வைத்தேன்.

"சரி, இவ்வளவு ஆவலாக இருக்காங்களே, கொண்டாட்டத்துக்கு அனுப்பி வைப்போம் என்று நினைத்துக் கொண்டேன்."

அந்த நாளும் வந்தது .

விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே, என் சகோதர சகோதரிகள் பிள்ளைகள் புடை சூழ அம்மா போனார்கள். ஆனால் அன்று மாலை சரியான மழை வந்து நிகழ்ச்சியே கேன்சல் ஆனது. ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வந்து அதைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தார்கள். வீட்டுக்கு தினமும் பூ கொண்டு வரும் பெண் தன் இரண்டு சின்ன குழந்தைகளுடன் , மதிய சாப்பாடு கட்டிக் கொண்டு மழையில் நனைந்து திரும்பி வந்ததாக சொன்னாங்க.

மேலே சொன்ன இரண்டு சம்பவங்களும் உண்மை சம்பவங்கள்.

20220822183201383.jpg

நம் மக்களின் வாழ்வில் சின்னத்திரையின் தொடர் நாடகங்கள் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதைக் காட்டவே, இந்த இரண்டு சம்பவங்களை சொன்னேன்.

பலவித டாக் ஷோக்கள் , விளையாட்டுகள் , நேரலை நிகழ்ச்சிகள் என நிகழ்சசிகளில் வெரைட்டி கொடுத்த சின்னத்திரை சானல்கள், இப்போது தங்கள் வியாபாரத்துக்கு இந்த நாடகங்களையே முழுமையாக நம்ப ஆரம்பித்து பல ஆண்டுகளாகின்றன. முதலில் வீட்டில் இருக்கும் பெண்களை பார்வையாளர் இலக்காக கொண்டு தொடங்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் இப்போது குடும்பத்தில் மற்றவரும் பார்க்க ஆரம்பித்துள்ளதும் உண்மைதான்.

இந்த "சன் நட்சத்திர கொண்டாட்டம்" ஊர் ஊராக நடத்துகையில் திரளும் கூட்டத்தைப் பார்க்கையில் இந்த என் கருத்து உறுதியாகிறது. திரைப்பட நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்களின் கூட்டம் அளவுக்கு சின்னத்திரை நடிகர்களும் புகழ் பெற்றுள்ளதை இந்த கொண்டாட்டங்களில் காண்கிறோம்.

லட்சக்கணக்கில் மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக இந்த தொடர்கள் இருக்கின்றன. நெட்பிலிக்ஸ், பிரைம் போன்ற ஓடிடி நிகழ்ச்சிகள் இப்போது மக்களை பார்த்தாலும், சாதாரண மக்களின் பொழுதுபோக்குக்கு இந்த சீரியல்களையே பார்க்கிறார்கள். ஞாயிறு அன்று கூட இப்போது சீரியல் ஒளிபரப்பப் படுகின்றன.

குடும்பத்தில் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசுவது குறைந்து விட்டது. சிறியவர்கள் மொபைலில் ஆழ்ந்து விட, மற்றவர்கள் தொலைக்காட்சியில் மூழ்கி விடுகிறார்கள். விருந்தினர் வந்தால் தொலைக்காட்சியை அணைத்து விட்டு பேசும் அடிப்படை நாகரிகமும் மக்கள் தொலைத்து வருகிறார்கள்.

மக்களின் அரிய நேரத்தை காவு வாங்கும் இந்த சீரியல்கள் குடும்பங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் சிந்தனையில் விஷ விதையை விசிறி விட்டு செல்லும் பணியை இந்த தொடர்கள் செய்கின்றன.

எல்லா சீரியல்களிலும் மாமியார் , மருமகள் மோதல்கள் உண்டு. ஆனால் இந்த சீரியல்கள் படம்பிடித்து காட்டும் மாமியார்கள் இரண்டுத் தலைமுறைக்கு முந்திய மாமியார்களாக இருக்கிறார்கள். பிற்போக்குத்தனமான கொள்கைகள் கடைபிடிக்கும் மாமியார்கள் மருமகளைக் கடத்துவதில் இருந்து, கருக்கலைப்பு வரை போகிறார்கள். அடியாள்கள், போலீஸ், வழக்கு இல்லாத தொடரே இல்லை எனலாம். பெண்கள் வில்லத்தனம் கொண்டவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்ற பழமைவாத சித்தாந்தத்தை நிரூபிக்க எத்தனிப்பவதாகவே இந்த பாத்திரங்கள் படைக்கப்படுகின்றன.

நிஜத்தில் இப்போதைய மாமியார்கள் படித்தவர்களாக, மகன் -மருமகள் பேரக்குழந்தைகளின் வாழ்க்கையில் தம்மை இணைத்துக் கொண்டு அவர்களின் மகிழ்ச்சிக்காக விட்டுக் கொடுப்பவர்களாக தம்மை மாற்றிக் கொண்ட சமூக மாற்றத்தை ஏன் தொடர் எழுத்தாளர்கள், இயக்குனர்கள் அறியவில்லை என்பது நமக்குப் புரியவில்லை.

மாமியார் -மருமகள் உறவைச் சிக்கலாக்குவது போலவே , பிற உறவு முறைகளையும் சிக்கலாக்கி காட்டுகிறது சின்னத்திரை. அதனால் நம் உறவுகளையே நாம் சந்தேக கண் கொண்டு பார்க்கும் நிலைமைக்கு ஆளாகிறோம் . திருமணம் ஆன பெண்ணை காதலிக்கும் முன்னாள் காதலனும் , திருமணம் ஆன ஆணை தொடர்ந்து காதலித்து, அவரை திருமணத்துக்கு தூண்டும் பெண்ணும் சீரியல்களில் சாதாரணம். இவர்களுக்கு துணை நிற்பது ஒரு பெண் என்பது இன்னொரு கொடுமை.

"கிட்டாதாயின் வெட்டென மற " என்று அங்கு சொல்ல யாரும் இல்லை. ஒரு தொடரில் ஒரு திருமணமானவரின் முறைப் பெண், அவரது படத்தை முன்வைத்து தனக்குத்தானே தாலி கட்டிக் கொள்ளும் முயற்சி இந்த வாரம் ஒரு தொடரில் பார்த்தேன். திருமணம் கடந்த உறவுகளை நியாயப்படுத்துவது இயல்பாக இருப்பதைப் பார்க்கையில் 'பகீர் ' என்று இருக்கிறது .

ஆணாதிக்க மனோபாவத்தை வளர்க்கத் துடிக்கும் தொடர்கள், பெண்களை நசுக்கி, அவர்களின் ஆளுமையை கேலிக்குள்ளாக்குகின்றன. முற்றிலும் எதிர்மறையான கருத்துக்களை சமூகத்தில் பரவ விடும் பணியை இந்த தொடர்கள் செவ்வனே செய்கின்றன.

இவர்கள் கூறும் இறை நம்பிக்கை என்பது பரிகார பூஜைகள், நம்ப இயலாத நேர்ச்சிகள். இந்த சடங்கு சம்பிரதாயங்கள் சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டவையா என்ற கேள்வி எழுகிறது . அன்பே உருவான கடவுளை, பலி கேட்கும், பழி வாங்கும் கடவுளாக சித்தரிக்கிறார்கள் .

பெண்கள் எங்கோ போய் விட்டார்கள். அவர்கள் இப்போது நிற்கும் உயரமே வேறு. கல்வி, பதவி, சுய சம்பாத்தியம் என்று தன் காலில் தலை நிமிர்ந்து நிற்கும் பெண்களை இன்னும் சதிகார கூட்டமாகவே இந்த தொடர்கள் காட்டுகின்றன. குடும்ப உறவுகளைச் சிதைத்துக் காட்டி, குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன இத்தொடர்கள். நம் ஊரில் பெருகி வரும் விவாகரத்துக்களே இதற்கு சான்று .

கணவன் - மனைவி படுக்கையறை காட்சிகள் சினிமாவே தோற்றுப் போகும் அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் . இவை வீட்டில் பெரியவர்களுடன் , குழந்தைகளுடன் சேர்ந்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றன. சின்னத்திரைக்கு சென்சார் வைக்க வேண்டும் என்ற மக்கள் குரல் இப்போது நசிந்து விட்டது .

"There is some soul of goodness in things evil, would men observingly distill it out"

என்கிறார் சேக்ஸ்பியர். நாமும் பூதக்கண்ணாடி வைத்து தொலைக்காட்சி தொடர்களால் நன்மை ஏதும் தென்படுகிறதா என்று ஆராய்ந்தால், இவற்றைப் பார்க்கும் பெண்கள் முன்பொரு காலத்தில் வாரப் பத்திரிக்கைகளில் வரும் தொடர் கதைகளை ஆர்வமாக படித்தவர்களாக இருக்கிறார்கள். இத்தகையோரின் பொழுதுபோக்காக சீரியல்கள் இருக்கின்றன. இப்போது வாரப் பத்திரிக்கைகளில் தொடர்கதைகள் குறைந்து விட்டது ஒரு புறம் இருக்க, வாரப் பத்திரிக்கைகளே இப்போது குறைந்து விட்டன. அவற்றை வாங்கி வாசிப்பதும் குறைந்து விட்டது .

சில தொடர்களில் குடும்ப உறவுகளை முறையாய் வளர்த்துக் கொண்டே , தம் இலக்கை நோக்கி பயணிக்கும் லட்சிய பெண்களை காட்டுகிறார்கள். அதிகமாக உணர்ச்சி வசப்படும் பெண்களாக இவர்கள் இருந்தாலும், நேர்மறையாக பேசப்படும் வசனங்கள் இத்தொடர்களை உயர்த்தி பிடிக்கின்றன. மேலும் இத்தொடர்களில் நடிப்பவர்கள், தயாரிப்பாளர்கள் , தொழிற்நுட்ப கலைஞர்கள் என ஆயிரமாயிரம் பேரின் வாழ்க்கை இத்தொடர்களால் நகர்கிறது .

"உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் , டி .வி யை அணைத்து விட்டுப் போங்க ,பார்ப்பவர்கள் பார்க்கட்டும் " என்று ஒரு குரல் கேட்கிறது .சின்னத்திரை என்னும் சக்தி வாய்ந்த ஊடகம் தமிழர் வாழ்வில் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாகி விட்டது. "என் இலையில் நான் விரும்புவதை ,என் நலத்துக்கு ஏற்றதை பரிமாறுங்கள் " என்றுதான் நான் கேட்கிறேன். எதையோ பரிமாறி விட்டு உண்ண கட்டயப்படுத்தும் உங்கள் அதிகாரப் போக்கை நான் வெறுக்கிறேன்.

கதைகள் ,நாடகங்கள் காலத்தின் கண்ணாடிகள். இன்றைய நாடகத் உண்மை சமூகத்தை பிரதிபலிக்கிறதா ? சமூக அநீதிகளை களைய முன்வருகிறதா? நாம் விரும்பும் சமூக மாற்றத்தை உங்கள் தொடர்கள் ஏற்படுத்துமா?

சின்னதிரை நாடகங்கள் சமுக சீர்கேட்டை வளர்ப்பதில் முன்னனியில் உள்ளது என்றே சொல்லவேண்டும்.