தொடர்கள்
தொடர்கள்
தேன் தமிழ்  துளிகள் - 11 - மரியா சிவானந்தம்

20220827191446802.jpg

இவ்வுலக வாழ்க்கையில் மாறாத ஒரே நித்திய உண்மை வாழ்வின் நிலையாமை. இளமை, புகழ், அறிவு, செல்வம், கல்வி என்று நாம் ஈட்டியவை அனைத்தும் நம்மை விட்டு ஒரு நாள் அகலும். இந்த உலக வாழ்க்கையில் இருந்தும் நாம் நீக்கப்படும் நாளும் வரும். முடிவிலி என்று எதுவும் இல்லை. முடிவில்லாத மனிதன் என்று யாரும் இல்லை .

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. (குறள் 336)

நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமை கொண்டது இந்த உலகு என்று வள்ளுவரே கூறி இருக்கிறார். எதுவுமே இவ்வாழ்க்கையில் நிலைத்திருக்க கூடியது இல்லை, இந்த வாழ்க்கை உட்பட .

வேதங்களும் , சமயங்களும் , ஆன்மிக குருக்களும் அன்று முதல் இன்று வரை உபதேசிப்பது இந்த நிலையாமையை பற்றியே. இதை உணர்ந்துக் கொள்ளும் பொது நம் உள்ளுணர்வில் உதிப்பதே ஞானம் !

இந்த நிலையாமையை பாடாத கவிஞர் இல்லை, பேசாத இலக்கியம் இல்லை .தமிழ் இலக்கியத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நிலையாமை பற்றி பாடும் நூல் "முதுமொழிக்காஞ்சி". இந்த நூல் நூறு பாடல் வரிகளைக் கொண்ட சிறிய , அருமையான நூல். சங்கம் மருவிய காலமான கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல் இது . மதுரை கூடலூர் கிழார் என்னும் தமிழ்ப்புலவரின் சிந்தனையில் 'நிலையாமை' குறித்து உதித்த வாழ்வியல் கருத்துக்களே இந்நூல்.

காஞ்சி என்னும் சொல்லுக்கு 'நிலையாமை' என்ற பொருள் உண்டு. முதுமொழி என்பது பழமொழியையும் குறிக்கும், மூத்தவரின் அறிவுரை என்பதையும் குறிக்கும். முதுமொழிக்காஞ்சி என்னும் சொல்லுக்கு நிலையாமை குறித்த பழமொழிகளின் தொகுப்பு என்றோ மூத்தவர்களின் அறிவுரை என்றோ பொருள் கொள்ளலாம்.

காஞ்சி என்னும் சொல்லுக்கு பெண்கள் இடையில் அணியும் மணியால் கோர்க்கப்பட்ட அணிகலன் என்றொரு பொருளும் உண்டு. அறமொழிகள் என்னும் மணிகளால் அமைக்கப்பட்ட மாலை என்றும் பொருள் கொள்ளலாம். பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் என்னும் அமைப்பைக் கொண்ட நூல் இது.

இந்நூலில் "சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து" என்னும் பத்து பாடல்கள் அடங்கியது முதுமொழிக் காஞ்சி. ஒவ்வொரு பாடலும் பத்து வரிகளும் முதல் வரி "ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்" என்று துவங்குவதும் தனிச் சிறப்பு

இந்த வாரத்துக்கான முதுமொழி காஞ்சியின் "சிறந்த பத்து" என்னும் தலைப்பில் இயற்றப்பட்ட பாடல்


1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை
4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை
5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை
6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று
7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
9. செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று
10. முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று

எளிமையான, வலிமையான வரிகளில் இப்பாடல் சொல்லும் பொருள் இதுவே :

  1. கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ள மக்களுக்கு அனைவருக்கும், கல்வியைக் காட்டிலும் நல்லொழுக்கம் சிறந்ததாகும்.
  2. ஒருவரிடம் கொண்ட அன்பைக் காட்டிலும், நம் உயரிய பண்பைக் கண்டு மதிக்கும் முறையில் அவர் அஞ்சி இருக்கும்படி நடந்து கொள்ளுதல் சிறந்தது.
  3. கல்வியில் பெரிய மேதையாய் வல்லமை பெற்று இருப்பதைக் காட்டிலும், கற்ற கல்வியை மறவாமல் அதன்படி ஒழுகுதல் சிறந்தது.
  4. வளமான செல்வம் கொண்டு வாழ்வதை விட,நேர்மையான , முறை தவறாத வாழ்வு சிறந்தது.
  5. நோயோடு கூடிய இளமையை விட, நோயில்லாத முதுமை நல்லது.
  6. எல்லாச் செல்வ நலன்களைக் காட்டிலும், நாணமும் மானமும் உடைய வாழ்க்கை சிறந்தது.
  7. உயர் குலத்தோர் என்னும் பெருமையினும், கற்பும் கல்வியும் உடையவர் என்னும் பெருமை சிறந்தது.
  8. ஒருவர் தாம் கற்ற கல்வியை விட கற்றவர்களைப் போற்றி வழிபடுதல் சிறந்தது.
  9. பகைவரை தண்டித்தலை விட அவரினும் தம்மை உயர்ந்தவராக்கிக் வாழ்ந்து காட்டுதல் சிறந்தது.
  10. முதலில் ஆடம்பரமாக வாழ்ந்து வளம் குன்றிப் போவதிலும் , பின்னாளில் நிலைமை குறையாமல், நிறையுடன் வாழ்தல் சிறந்தது.

மேலும் ஒரு பொருள் நிறைந்த பாடலுடன் அடுத்த வாரம் சந்திப்போம் ..

-தொடரும்