தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் -  பாகம் 52: - ஆர்.ரங்கராஜ்

2022901082530963.jpg

திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆடிய ஊர்த்துவ தாண்டவம் குறித்துக், கர்ணப்பரம்பரை கதை ஒன்று கூறப்படுகிறது. "அதாவது, இத்தலத்தில் வைத்து ஈசனுக்கும் சக்தியின் வடிவமான காளிக்கும் இடையே போட்டி நடனம் ஏற்பட்டது. இப்போட்டிக்குத் திருமால், பிரம்மா, இந்திரன் ஆகியோர் நடுவர்களாய் இருந்தனர். ஈசனும், காளியும் நடனமாடியது ஒரே மாதிரியாக இருந்ததால் அவர்களால் தீர்ப்பு சொல்ல முடியாமல் தவித்தனர். அப்போது ஈசன் அவர்களிடம், மயிலாப்பூரில் இருக்கும் திருவள்ளுவரிடம் போய்க் கேட்டுத் தீர்ப்பளியுங்கள் என்று கூறினார்", தெரிவிக்கிறார் ஆராய்ச்சியாளர் சிவ.அ. விஜய் பெரியசுவாமி.

"அதனைத் தொடர்ந்து திருமால், பிரம்மன், இந்திரன் ஆகிய மூவரும் மயிலாப்பூர் வந்து திருவள்ளுவரிடம் அவர்களின் நடனம் குறித்துக் கேட்டனர். அப்போது தமது ஞான திருஷ்டியால் ஈசனின் திருநடனத்தைக் கண்ட திருவள்ளுவர், ஈசன் தமது நடனத்தின்போது அவரது காதில் இருந்த குண்டலம் கழன்று கீழே விழுந்தது, அதை அவர் தம் நடனத்தின்போதே தமது காலால் எடுத்துக் காதில் மாட்டினார். அம்மையோ பெண் என்பதால் காலை மேலே தூக்க வெட்கப்பட்டு அத்தகைய வகையில் நடனம் ஆடவில்லை. எனவே சிவனே மிகவும் சிறப்பாக ஆடி உள்ளதால் அவரே போட்டியில் வென்றதாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார்".

அருகில் இருந்து பார்த்த திருமால் முதலானோர் ஈசனின் கால் தலைக்கு மேல் சென்றதை மட்டுமே பார்த்தார்களே ஒழிய, குண்டலம் கழன்றதையும், அதை ஈசன் எடுத்து மாட்டியதையும் அவர்களால் பார்க்க முடியவில்லையே என்று திகைத்தனர். "இதனாலேயே அவர் தெய்வப்புலவர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது."

இத்தலம் வந்து ஈசனை வழிபடும் முன் இத்தலக் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்மனை வழிபட்டு, அதன் பின்பே வடாரண்யேஸ்வரரையும், வண்டார்குழலியையும் தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் வந்து ஈசனை வழிபடத் திருஞானசம்பந்தர் வந்தபோது, காரைக்கால் அம்மையார் தலையினாலே நடந்து வந்த பகுதியாயிற்றே, நம் பாதம் பட கூடாது என்று எண்ணி, அருகில் உள்ள பழையனூர் ஆலயத்தில் தங்கி இருந்தார். "அன்று இரவு ஈசன் அவர் கனவில் தோன்றி, சம்பந்தா என்னைப் பாட மறந்தனையோ? எனக் கேட்க, துஞ்ச வருவாரும்.... எனத் தொடங்கும் தேவாரப் பதிகம் பாடியருளினார் சம்பந்தர்."

ஊர்த்துவ தாண்டவம்

இறைவனுக்கும் காளிக்கும் இடையே நடந்த ஆடல் போட்டியில் ஊர்த்துவ தாண்டவமாடிக் காளியைத் தோல்வியுறச் செய்தார் இறைவன், என்கிறார் திரு மா. சந்திரமூர்த்தி, மேனாள் துணை இயக்குநர், தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு.

இப்போட்டியைப்பற்றி மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார்.

"தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச் சிற்றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடி!
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக்க ஊட்டாங்காண் சாழலோ!"

ஊரிரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்னும் பழமொழியொன்றுண்டு. ஊரு-தொடை; அது, இரண்டாகப் பிரிந்தால் கூத்தாடிக்கு (ஆடுகின்ற இறைவனுக்குக்) கொண்டாட்டம் என்பது பொருள்.

"ககன முகடு நோக்கி
மேலதாக இடத்தாளை எடுத்து வலத்தாள் ஊன்றி விளைக்கும் நட்டம்
சாலுமிது சங்கார தாண்டவமாம் பிறப்பிறப்புத் தவிர்தலாலே"

என்று ஊர்த்துவ தாண்டவத்துக்கு திருவாலங்காட்டுப் புராணம் இலக்கணம் கூறும்.

ஆலங்காட்டில் உள்ள ஆடும் பெருமான் ஆனந்த தாண்டவமாடும் ஆலங்காட்டு அடிகளுக்கு மாறுபட்ட முறையில் வேறுப்பட்ட நிலையில் கால்களை அதிரவீசி ஆடுவார் என்னும் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் செப்புத் திருமேனியை திருவாலங்காட்டில் காணலாம்.

(தொடரும்)