திருமண மண்டபம் மின்பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மண்டப வெளிவாசலில் இரு குலைதள்ளிய வாழைமரங்கள் கட்டப்பட்டிருந்தன. வெளி வாசலின் இடதுபக்கம் ஒரு டிஜிட்டல் பேனர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதில்-
‘ஒரு 2கே குழந்தை ஒரு காதல் மகாராணியிடம் சிறைப்படும் தருணம் இது’ -என குறிப்பிடப்பட்டிருந்தது. பேனரில் மணமகன் மணமகள் ஒளிப்படங்கள் பெரிதாகவும் மணமகனின் நண்பர்களின் ஒளிப்படங்கள் சிறுசிறு சதுரங்களாயும் காட்சியளித்தன.
மண்டபத்துக்குள் வாண்டுகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன, இருதரப்பு உறவினர்களும் காலை டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
மணமகன் ஆத்மாஜீவ்வின் நண்பர்கள் பத்து பேர் ஒன்றாய் குழுமினர். “என்னங்கடா… மணமகளை பாத்து பேச வேண்டியதை பேசிடலாமா?”
“மணமகள் பயந்து போயிருவாளா?”
“பயந்தா காரியம் ஆவாது. வாங்கடா…” அனைவரும் மணமகளின் அறைக்கு திமுதிமுவென ஓடினர்.
முகூர்த்த நேரத்துக்கு மூன்று மணி நேரம் அவகாசம் இருந்தது.
மணமகள் மகிழ்மதி ஆளுயர கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றி நின்று அவளின் தோழிகள். மணமகளுக்கு ஒப்பனை செய்துவிட ப்யூட்டி பார்லரிலிருந்து ஒரு பெண் வந்திருந்தாள்.
உள்ளே நுழைந்தவர்கள் “வணக்கம் ஆருயிர் நண்பனின் வருங்கால மனைவியே..” எனக்கூறி ஜப்பானிய முறையில் வணங்கினர்.
“வணக்கம்… என்ன காலை டிபன்ல அயிட்டங்கள் திருப்தியா இல்லையா?”
“காலை டிபன் பிரமாதம். குறை சொல்ல ஏதுமில்லை!”
“பின்ன?”
“உங்களிடம் சில விஷயங்களை பேசி நாமிருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும்!”
“மணமகளுக்கும் மணமகனின் நண்பர்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமா? எனக்கு புரியவில்லை!”
“சில நிமிடங்கள் பொறுங்கள். எல்லாம் விலாவாரியாக விளங்கும்!”
வந்திருந்த நண்பர்கள் தங்களின் பெயர்களைக் கூறி சுயஅறிமுகம் செய்து கொண்டனர். நண்பர்களில் ஒருவன் இரண்டு பச்சை நிறபிரதிகளை எடுத்தான்.
“சகோதரி! நாங்கள் இருபது ரூபா பத்திரம் எடுத்திட்டு வந்திருக்கிறோம். பத்திரத்தில் இருபது ஷரத்துகள் குறிப்பிட்டு இருக்கிறோம். நீங்கள் அவற்றை படித்து கையெழுத்திட வேண்டும். நாங்களும் கையெழுத்திடுவோம். ஆளுக்கொரு பத்திர நகலை வைத்துக் கொள்ள வேண்டியதுதான்!”
“நான் இந்த பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்தால்?” மணமகள் வினவினாள்.
“கல்யாணத்தை நிறுத்தி விடுவோம் என்றெல்லாம் பயமுறுத்த மாட்டோம். திருமணத்தை முற்றிலும் புறக்கணித்து மண்டபத்திலிருந்து வெளிநடப்பு செய்வோம்… இதன் பின் நீங்கள் எங்கள் முகங்களை ஒரு போதும் பார்க்க முடியாது!”
மணமகனின் நண்பர்களிடமிருந்து பத்திரநகல்களை பிடுங்கினாள் மகிழ்மதி அதில்-
கோவை
10.12.2022
இன்று ஆத்மாஜீவ் (த/பெ வசந்தகுமாரன்) வை திருமணம் செய்து கொள்ளப் போகும் மகிழ்மதி (த/பெ அரச.முருகுபாண்டியன்) க்கும் ஆத்மாஜீவ்வின் நண்பர்களாகிய (நண்பர்களின் பெயர்கள் தந்தை பெயர்களுடன்) எங்களுக்கும் இடையே போடப்படும் ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்தத்திலுள்ள ஷரத்துகளை மணமகள் தவறாது கடைபிடிக்க வேண்டும். மீறினால் ஆத்மாஜீவ்வுடன் ஆன நட்பை நாங்கள் முறித்துக் கொள்வோம்.
1. ஆத்மாஜீவ்வுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை. வாரவிடுமுறை நாட்களிலும் அரசுவிடுமுறை நாட்களிலும் எங்களுடன் தெருக்கிரிக்கெட் விளையாட ஆத்மாஜீவ்வை அனுமதிக்க வேண்டும். ஆத்மாஜீவிடம்தான் இரு கிரிக்கெட் பேட்கள், ஸ்டம்ப் இரு செட்கள், ஆறு பந்துகள் உள்ளன, ஆத்மாஜீவ் முதலிலேயே அவுட் ஆகி விட்டால் ஆட்டம் ஓவர் என கூறி பேட் பந்து ஸ்டம்புகள் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு விடுவான். அப்படி ஒரு அழுகுணி ஆட்டம் ஆடக் கூடாது என்றும் மகிழ்மதி தனது காதல் கணவருக்கு அறிவுறுத்த வேண்டும். கிரிக்கெட் போட்டிகள் அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் பந்தயப் பணத்துடன் நடக்கும். பந்தயப் பணத்தை மறக்காமல் சகோதரி கொடுத்து அனுப்ப வேண்டும்.
2. நாங்கள் குடிநோயாளிகள் அல்ல. மாதம் ஒருமுறை பியர் குடிப்போம். மாதம் மூன்று பியர்கள் குடிக்க ஆத்மாஜீவ்வை அனுமதிக்க வேண்டும்.
3. நாங்கள் ஆத்மாஜீவ்வை தேடி உங்கள் வீட்டுக்கு வந்தால் அவனை வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டு அவன் வீட்டில் இல்லை’ என பொய் சொல்லக் கூடாது.
4. எங்கள் முகத்துக்கு நேர் எங்களை புகழ்ந்து தள்ளிவிட்டு எங்களை முதுகுக்கு பின் நீங்கள் கழுவிகழுவி ஊற்றக்கூடாது. குணக்கொலை பெரிய பாவம் சகோதரி.
5. வேலைக்கு போன நேரம் தவிர மீதி நேரங்களில் உங்கள் கணவர் பேகிஸ் டவுசரும் கிளுகிளுப்பு வசனங்கள் பொறித்த டிசர்ட்டும் தான் அணிந்திருப்பான். இந்த தேசீய ஆடையை நீங்கள் அங்கீரிக்க வேண்டும்.
6. பேன் இண்டியா படங்கள் ரிலீஸானால் நாங்கள் அதிகாலை 4.00 ஷோவுக்கு மொத்தமாக போய் கும்மியடிப்போம். இது வாலிபவயது நீங்கள் கண்டுக்கக்கூடாது.
7. முகநூலிலும் இன்ஸ்டாவிலும் நடிகைகளின் அனாட்டமி அளவுகளை போட்டு லிட்டர்கணக்கில் ஜொள்ளுவிடுவோம். உளவறிந்து சண்டை போடக்கூடாது.
8. பள்ளி ஞாபகம் வந்து பல்லிமிட்டாய், சூடமிட்டாய், வாட்ச்மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய் தின்போம். நக்கல் அடிக்கக்கூடாது.
9. வாட்ஸ்அப் டிபியில் உங்கள் படம் வைக்காது எங்கள் குழுவின் படம்தான் உங்கள் கணவன் வைப்பான். பொறாமைப்படக் கூடாது.
10. நாங்கள் ஐம்பது வகையான ஹேர்கட்டிங் செய்து கொள்வோம். டாப்பர் ட்யூட், ஸார்ட் க்ரூ கட், க்யூ வில்லி பேட், ட்வுஸ்லெட் க்ராப், பாக்ஸ் ஹாக் ஐம்பதில் சில வகை ஹேர்கட்கள். உங்கள் கணவர் இவ்வகை ஹேர்கட்களை வைக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும்.
11. ஆத்மாஜீவ் தினம் தலைக்கு எண்ணெய் தடவ மாட்டான். தடவச் சொல்லி வற்புறுத்தக் கூடாது.
12. ஆத்மாஜீவ் ஒரு வித்தியாமான சினிமா கிறுக்கன். மூன்று மாதங்கள் தொடர்ந்து கன்னடப்படங்களாய் பார்ப்பான். மூன்று மாதங்கள் மலையாளப் படங்களாய் மூன்று மாதங்கள் போஜ்பூரி படங்களாய். அவன் எதனை பார்த்தாலும் மகிழ்மதி கம்பெனி கொடுக்க வேண்டும்.
13. ரயில், பஸ், ஏரோபிளான் பயணங்களில் ஜன்னலோர சீட்டு ஆத்மாஜீவ்வுக்கே. மீறினால் உள்நாட்டு போர் வெடிக்கும்.
14. வாட்ச், பனியன் அணிந்து கொள்ள ஆத்மாஜீவ்வுக்கு பிடிக்காது கோயிலுக்கு சாமி கும்பிட வரமாட்டான். வீட்டுக்கு எந்த உறவுமுறை வந்தாலும் ஆன்ட்டி அல்லது அங்கிள் என்றே கூப்பிடுவான். பிரியாணி சாப்பிட பைக்கில் 300கிமீ போவான். சகித்துக் கொள்ள வேண்டும்.
15. ஆத்மாஜீவ்வின் கைபேசியை நீங்கள் தொடக்கூடாது. உங்கள் கைபேசியை ஆத்மாஜீவ் தொடமாட்டான்.
16. நண்பர்கள் நாங்கள் சிறிதும் மானம் வெட்கம் சூடு சொரணை இல்லாமல் ஆத்மாஜீவ்விடம் கடன் கேட்போம். பத்துதடவை கடன் வாங்கினால் எட்டு தடவை திருப்பித் தர மாட்டோம். கடன் தருவதை நீங்கள் தடுக்கக்கூடாது.
18. நண்பர்கள் முக்கியமா, மனைவி முக்கியமா என கேட்டால் ஆத்மாஜீவ் நண்பர்கள் தான் முக்கியம் என்பான். அதனை கேட்டு நீங்கள் கதறி அழக்கூடாது.
மீதி இரு ஷரத்துகளை வாசிக்கும் முன் இடைமறித்தாள் மகிழ்மதி. “என் கணவனின் நண்பர்களே… உங்க ஒப்பந்தத்தில் நான் கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி நீங்கள் கையெழுத்து போட வேண்டிய ஒப்பந்தம் ஒன்றை நான் தயாரித்துள்ளேன்… வாசிக்கிறீர்களா?”
மேஜை இழுப்பறையிலிருந்து ஒரு இருபது ரூபாய் பத்திரத்தை எடுத்தாள் மகிழ்மதி. அதனை தயக்கமாய் வாங்கினான் ஆத்மாஜீவ்வின் நண்பர்களின் ஒருவன்.
அதில்-
மகிழ்மதிக்கும் ஆத்மாஜீவ்வின் நண்பர்களுக்கும் இடையே போடப்படும் ஒப்பந்தம் இது. ஒப்பந்த ஷரத்துகளை முழுமையாக கடைபிடிப்போம் என ஆத்மாஜீவ்வின் நண்பர்களாகிய நாங்கள் வாக்குரைக்கிறோம்.
ஷரத்துகள் கீழே…
1. நண்பனின் மனைவியை ‘சகோதரி’ என பாவிப்பது போல நண்பன் மனைவியின் தோழிகளையும் நீங்கள் மனதார சகோதரிகளாக பாவிக்க வேண்டும். நோ ஜொள்ளு ப்ளீஸ்!
2. நண்பன் ஆத்மாஜீவ்வின் ஜீன்ஸ்களை, டிசர்ட்களை, ஜட்டிகளை இரவல் அணியக் கூடாது.
3. 2கே கிட்ஸ் என்றால் வாலும் கொம்பும் முளைத்த வினோத ஜந்துகளா? சிலேட் பலப்பத்தை தின்னும் எல்கேஜி மனோபாவத்திலிருந்து பால் மாறி நாகரிகமடையுங்கள். உங்கள் நண்பரை நாகரிகமடைய அனுமதியுங்கள்.
4. வாங்கின கடனை திருப்பத் தராமலிருக்க நீங்கள் என்ன கிங்பிஷர் மல்லையாவா அல்லது நீரவ்மோடியா? மூன்று தடவைக்கு மேல் திருப்பி வராத கடன் கிடையாது. ஒத்துழையுங்கள்.
5. தெருக்கிரிக்கெட் விடுமுறை நாட்களில் தினம் மூன்று மணிநேரம் தான் அலவ்டு. மாதம் ஒரு சொட்டு பியர் கூட அனுமதி கிடையாது.
6. என் கணவரை கெட்ட வழிகளில் இழுக்காதவரை என் கணவரின் நண்பர்களாகிய நீங்கள் அனைவரும் என் சகோதரர்களே புரிந்ததா?
7. இன்று என்னிடம் நீங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளீர்கள். நாளை உங்களுக்கு திருமணம் ஆகும்போது உங்கள் மனைவியிடம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவோம்.
8. எங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டால் வாட்ஸ்அப் டிபியில் உங்கள் படங்களை அகற்றிவிட்டு மகன் அல்லது மகள் படம் வைப்பான் ஆத்மாஜீவ். மாற்றத்துக்கு தயாராகுங்கள்.
9. ஆத்மாஜீவ்வின் எல்லாவகை மயக்கதயக்க குழப்பங்களையும் குணப்படுத்தும் மந்திரம் என்னிடம் உள்ளது. ‘நீங்கள் எல்லாம் யார்?’ என உங்களை ஆத்மாஜீவ் கேட்கும் காலம் வெகுவிரைவில். திடுக்கிடலுக்கு காத்திருங்கள்.
10. உறவுகளும் நட்புகளும் பரஸ்பரம் நன்மை விளைவிக்கும் என்றால் தடுக்க நான் யார்?
ஒப்பந்த ஷரத்துகள் தொடர்ந்தன.
“சகோதரர்களே! உங்கள் ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திடுகிறேன். என்னுடைய ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திடுங்கள். நாளை நல்லதே நடக்கும்!”
கையெழுத்துகள் இடப்பட்டன.
ஆளுக்கொரு நகல் எடுத்துக் கொண்டனர்.
வாசலில் காலடி அரவம் கேட்டது. மணமகன் ஆத்மாஜீவ் நின்றிருந்தான். “நீங்களிருவரும் தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளீர்கள். அதிக உரிமை எடுத்துக் கொண்டு மனைவியோ நண்பர்களோ என்னை அணுகக் கூடாது என்பதற்காக நானொரு ஒப்பந்தம் தயாரித்துள்ளேன்.. நண்பர்களும் மகிழ்மதியும் கையெழுத்திடுங்கள்!”
“எப்பா… இந்த விளையாட்டுக்கு நாங்க வரல… ஒழுங்கா தாலிகட்டி சாந்தி முகூர்த்தத்துக்கு தயாராகுடா செல்லம்!” தலைதெறிக்க ஓடினர் ஆத்மாஜீவ்வின் நண்பர்கள்.
Leave a comment
Upload