
ஜார்கண்ட் மாநிலம், கோடா நகரை சேர்ந்தவர் தனஞ்ஜய்குமார் (26). சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சோனி ஹெம்ப்ராம் (24). தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான 2-ம் ஆண்டு டிப்ளமோ படிக்கிறார். மேலும், அவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெறுவதாக தனஞ்ஜய்குமாருக்கு தெரிய வந்தது. ஊரடங்கினால் பஸ், ரயில் போக்குவரத்து இல்லாத நிலையில், அந்த தேர்வு எழுதுவதற்கு தனது கர்ப்பிணி மனைவியை எப்படி அழைத்துச் செல்வது என கவலைப்பட்டார்.
கோடா நகரில் இருந்து சுமார் 1,100 கிமீ தொலைவில் உள்ள குவாலியர் நகருக்கு பைக்கில் மனைவி சோனியை ஏற்றிக்கொண்டு கிளம்பினார். ஆங்காங்கே பைக்கை நிறுத்தி, கர்ப்பிணி மனைவிக்கு ஓய்வு கொடுத்து, நேற்று (3-ம் தேதி) சோனி ஆசிரியர் தேர்வை எழுத வைத்துள்ளார். இது குறித்து பல்வேறு வலைதளங்களில் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து தனஞ்ஜய்குமார் கூறுகையில், “எங்கள் கோடா நகரிலிருந்து கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு கிளம்பி, கூகுள் வரைபட உதவியுடன் குவாலியர் செல்லும் பாதைகளை கண்டறிந்து 3 நாட்கள் பயணம் செய்தோம். அங்கு ஒரு அறை எடுத்து இருவரும் தங்கினோம். தற்போது எனது மனைவி சோனி தேர்வு எழுதிவிட்டார். இதற்கென கடன் வாங்கிய ₹10 ஆயிரத்தில் மீதி ₹3 ஆயிரம்தான் உள்ளது. நாங்கள் மீண்டும் ஊருக்கு செல்வது எப்படி என தெரியாமல் தவிக்கிறேன். இவ்வளவு தூரம் தேர்வு எழுத உதவிய அந்த கடவுள் யார் மூலமாவது எங்களுக்கு உதவுவார் என நம்புகிறேன்”
இதுபற்றி அறியாத மனைவி சோனி கூறுகையில், ‘எனது ஆசிரியர் கனவை நிறைவேற்ற, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் தனஞ்ஜய்குமாரை கணவராக அடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். அவர்கள் ஊர் திரும்புவதற்கு குவாலியரில் உள்ள பல்வேறு சமூகநல அமைப்புகள் நிதியுதவி அளித்து வழியனுப்பி வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a comment
Upload