தொடர்கள்
தொலைக்காட்சி
நீயும் நானும் -மரியா சிவானந்தம்

20220816184310804.jpg

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும் ஆச்சர்யங்களை, அதிர்ச்சிகளைத் அளிக்கும் நிகழ்ச்சிகளாக சமீப காலங்களில் இருந்து வருகின்றன. குறிப்பாக சில 'டாக் ஷோ'க்கள் பார்க்கும் போது மனித வாழ்க்கையே மாறி விட்டதோ என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒரு இல்லற வாழ்வின் ரகசியங்களை , மக்கள் மன்றத்தில் காட்சி பொருளாக்குவதும், அவர்களின் கோபம் ,அழுகை ,அவமானம் இவற்றை காசாக்குவதும் இந்த நிகழ்ச்சிகளில் வாடிக்கை. 'தலைமுறைகள் மாறும் போது வரையறைகளும் மாறும்' என்பதே அவற்றைப் பார்க்கையில் நம் மனதில் ஓடுகின்றன .

விஜய் டீ.வி யின் நீயா நானா , ஜீ தமிழின் 'தமிழா ,தமிழா 'என்ற இரண்டு டாக் ஷோக்களும் பிரபலமானவை .தொலைக்காட்சி தொடர்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது போலவே இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் நிறைய உண்டு.

'நீயா நானா' நிகழ்ச்சி கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கோபிநாத் ஒருவரே இந்த பதினாறு ஆண்டுகளாக நிகழ்ச்சித் தொகுப்பளராக இருந்து வருகிறார். பல்வேறு தலைப்புகளில் சமூக பிரச்சனைகள், குடும்ப உறவுகள், சமூக அமைப்புகள் பற்றி வெட்டியும். ஒட்டியும் நடக்கும் விவாதங்கள் சுவாரஸ்யமானவை. மாமியார்-மருமகள், நாத்தனார்-அண்ணி, காதலர்- நண்பர்கள் ஆசிரியர்-மாணவர், கிராமத்து சம்பந்தி -நகர சம்பந்தி, அரசு பள்ளி ஆசிரியர்-தனியார் பள்ளி ஆசிரியர் என்று சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் வசிப்போரை அழைத்து உணர்ச்சிகரமாக பேச வைத்து டிஆர்பி யை தக்க வைத்துக் கொள்வதில் நீயா நானா நிகழ்ச்சி முன்னிலை வகிக்கிறது .

பல்வேறு தலைப்புக்கள், பலதரப்பட்ட மனிதர்கள்!

விவசாயிகள், எழுத்தாளர்கள், ஐடி துறையினர், கல்வியாளர்கள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர், வங்கி ஊழியர்கள் என பலதரப்பட்ட மனிதர்கள் அவர் தம் பணி களங்கள், எதிர்நோக்கும் சவால்கள் இவற்றை உளவியல் ரீதியாக அலசி, ஆராய்ந்து நல்ல தீர்வுகளைத் தரும் வெற்றிகரமான தொடராக நீயா நானா நடை போடுகிறது.

கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பப்பட்ட படித்த மனைவி Vs படிக்காத கணவர் பங்கேற்ற நிகழ்ச்சி நான்கு நாட்களாக வைரலாகி, மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இணைய தளங்கள், யூ ட்யூப் சேனல்கள் , வலைப்பூக்கள் எல்லாவற்றிலும் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய விமர்சனங்கள் தாம் .

விஷயம் இதுதான், தூத்துக்குடியைச் சேர்ந்த சீனி ராஜாவும் அவர் மனைவி பாரதியும் மேற்கண்ட 'நீயா நானா' நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றனர். சீனி ராஜா படிக்காதவர், பல தொழில்களை முயற்சித்து தோல்வி அடைந்தவர். அவரது படித்த மனைவி பாரதி தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமக்கிறார். இவரது மகள் பள்ளியில் படிக்கிறாள். நிகழ்ச்சியில் பாரதி தன் கணவரைப் பற்றி இப்படி குறிப்பிடுகிறார் ."என் மகளின் ப்ராகிரஸ் ரிப்போர்ட்டை சின்ன வயதில் என் கணவர் கையெழுத்திடுவார் .இப்போது நான் கையெழுத்து போடுகிறேன். அவர் கையில் கொடுத்தால் ஒரு மணி நேரம் அதையே பார்த்துக் கொண்டு இருப்பார் . A B C D தெரியாது .Social science என்றால் என்னவென்று அவ்ருக்கு புரிய வைக்க முடியாது" என்று எகத்தாளமாக குறிப்பிட்டார் . நீயா நானா அரங்கு மட்டும் அல்ல , பார்த்துக் கொண்டு இருந்த ரசிகர்களும் அதிர்ந்தனர் . பலர் பார்க்க கூடிய ஒரு நிகழ்ச்சியில் ,கணவரை மிகவும் மட்டம் தட்டி பேசிய அப்பெண்ணை மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர் .

20220816184535944.jpg

தொகுப்பாளர் கோபிநாத் சுதாரித்துக் கொண்டு அவர் கணவரைப் பேச விட்டார். சீனி ராஜா "நான் படிக்கவில்லை என்றாலும் என் மகளை நான் படிக்க வைப்பேன்.ஒரு டாக்டராக வேண்டும் என்பது அவள் கனவு. அதை நிறைவேற்ற நான் பாடுபடுவேன் " என்றார். அவரது பக்குவமான பேச்சு அனைவரையும் நெகிழ வைத்தது . தான் தவறாக பேசியதையும் பாரதி உணரவில்லை . இறுதியாய் வழங்கும் பரிசையும் உடனே வழங்கி சீனி ராஜாவை கௌரவித்தார் கோபிநாத்."உங்கள் கணவர் என் கண்களுக்கு ஒரு காவியமாக தெரிகிறார் " என்று மனைவியிடம் கணவரைப் பாராட்டினார் .

நம்மில் பலர் பார்த்திருக்க கூடிய இந்தநீயா நானா பல விமர்சனங்களை இணைய மன்றத்தில் கிளப்பியது .'ஒரு பொது வெளியில் கணவரை இகழ்ந்து பேசியவருக்கு கண்டனங்கள் எழுந்தன.

இது நம் சமூகத்துக்கு புதிது. மனைவியை மட்டம் தட்டிப் பேசும் பட்டிமன்றத்தில் கைத் தட்டியவர்கள், கணவரை ஏளனமாக பேசிய பெண்ணை கன்னாபின்னா என்று வைதனர். பொது அரங்கில் புருஷனை விட்டுக் கொடுத்து பேசுபவர் வீட்டிலும், உறவுகள் மத்தியிலும் இவரை எவ்வளவு மட்டம் தட்டுவார்?" என்று வினா எழுந்தது. இந்த எதிர்விளைவை எதிர்பார்க்காத அப்பெண்மணி கண்ணீர் விட்டார் .

ஒரு சாரார் "பாரதி ஒரு ஊடகத்தில் பேசும் பக்குவம் இல்லாமல் பேசி விட்டார் " என்று அவருக்குப் பரிந்தனர். "ஒரு பொறுப்பற்ற கணவரை பெற்றவரின் எதிர்வினை அது" என்று கணவரை திட்டியவரும் உண்டு ஒரு யூட்யூப் சேனல் விடாமல் அவரது பேட்டிக்காக அவர்கள் வீட்டை மொய்க்க, கணவன் மனைவி இருவருக்கும் தம் மேல் விழுந்த திடீர் வெளிச்சம் பெரும் குழப்பத்தை அளித்தது .

சீனி ராஜா அதே பக்குவத்துடன் ஊடகங்களை எதிர் கொண்டார் . "என் மனைவிதான் என்னையும் , குடும்பத்தையும் பராமரிக்கிறார். அவர் வேலைக்குப் போவதால்தான் சிறுநீரக பிரச்சனை உள்ள என்னையும் காப்பாற்ற முடிகிறது. அவர் தெரியாமல் அப்படி பேசி விட்டார் " என்று விளக்கம் அளித்தார் . பாரதியும் தன் மன உளைச்சலை வெளிப்படுத்தினார். நிகழ்ச்சியின் போதும் சரி, அதற்குப் பின்னரும் சரி இத்தம்பதியரின் மகள் குணாஷினி அற்புதமான பாசத்தையும் ,பக்குவத்தையும் வெளிப்படுத்தினார்

ஒரு சில மணித்துளிகளில் பேசிய வார்த்தைகள்,அவர்கள் வாழும் இல்லற வாழ்க்கையை முழுமையாக படம் பிடித்து காட்டாது . அடுத்த வீட்டு சங்கதிகளை அறிந்துக் கொள்ள ஆர்வம் கொண்டவருக்கு மீடியா தீனி போட்ட வாரமாக இந்த வாரம் அமைந்தது. நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் டிஆர்பி யில் நல்ல இடம் கிடைத்தது .

நீயா நானா ஒரு scripted நிகழ்ச்சி என்று பலர் சொல்கிறார்கள். சென்சேஷனை ஏற்படுத்த இப்படி இப்படி பேச வேண்டும் என்று பங்கு பெறுவோர்களுக்கு முதலில் சொல்லி விடுகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.அது உண்மையில்லை . நானும் ஒருமுறை நீயா நானாவில் பங்கெடுத்தேன். ஆனால் நான்கு மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வரை நடக்கும் படப்பிடிப்பை , எடிட் செய்து ஒரு மணி நேர நிகழ்ச்சியாக எடிட் செய்யும் போதுதான் எல்லா சித்து வேலைகளும் நடப்பதே உண்மை.

நீயா நானா என்று வாழ்வதில்லை வாழ்க்கை .

நீயும் நானும் என்று கை கோர்த்து செல்வதே இயற்கை !

மற்றபடி எதையும் சரி என்றோ , தவறு என்றோ நீதி தீர்ப்பு சொல்ல இங்கு நாம் யார் ?

மக்களின் கோப தாபங்களை , பரிதாப உணர்ச்சியை எழுப்பி வியாபாரமாக்குவதே இவர்களின் இலக்கு .