தொடர்கள்
கவர் ஸ்டோரி
முடங்கிய தொழில் நகரம் ! திருப்பூர். ஒரு பரிதாப ரிப்போர்ட். நமது நிருபர்.

20220817104222835.jpg

திருப்பூர்.

கெட்டும் பட்டணம் சேர் என்பதற்கு பதிலாக ஒரு காலத்தில் கெட்டும் திருப்பூர் சேர் என்று சொல்லுமளவிற்கு வாய்ப்புக்கள் நிறைந்த குட்டி நகரம்.

இந்தியாவின் ஏற்றுமதியின் பெருமையில் பெருமளவு பங்கு உள்ள தக்கினியூண்டு நகரம்.

இதே சீனாவில் இப்படி ஒரு நகரம் இருந்தால் உட்கட்டமைப்பில் உலகத் தரத்திற்கு ஈடான விஷயங்கள் நடந்தேறியிருக்கும்.

20220817102257179.jpg

திருப்பூர் இந்தியாவின் துணிமணி ஏற்றுமதியில் 54 சதவிகிதம் பொறுப்பு வகிக்கிறது.

காஜா அடிப்பவரிலிருந்து, சிங்கர் டெய்லர், இஸ்திரி போடுபவர், டைலர், சாயப் பட்டறை நூல் ஆலை, டிரிம்ஸ் என்று சொல்லப்படும் லேபிள் தொழில், பாலிபேக், அட்டைப் பெட்டிகள் என்று இங்கு இல்லாத வியாபாரம் இல்லை.

ஒரு காலத்தில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாமல் டாஸ்மாக் இந்த நகரத்தை தன் கோரப்பிடியில் வைத்திருந்தது. சனிக்கிழமை குடிக்கப் போனால் செவ்வாய்க் கிழமை தான் மீண்டும் வேலைக்கு வருவார்கள். விகடகவியில் கூட இதைப் பற்றிய கவலை ரிப்போர்ட் எழுதியிருந்தோம்.

இப்போது அந்த பிரச்சினை இல்லையம்.அதாவது குடியை நிறுத்தி விட்டார்கள் என்று நினைத்தால் நீங்கள் பால்வாடி இன்னும் தாண்டவில்லை என்று சொல்லலாம். வட இந்திய தொழிலாளர்கள் இருப்பதால் யாரும் நம்மாளு குடிக்கறானா பிடிக்கிறானா என்று கண்டு கொள்வதில்லை.

20220817104301101.png

அவர்கள் எக்கேடு கெட்டு குடித்து தமிழக அரசு கஜானாவை கொஞ்சம் கொஞ்சமாக ரொப்பட்டும். வேலைக்கு அதிகாலை ஆறுமணிக்கே வந்து ஆஜராகும் பீஹாரிகள்,ஒடிஷா, வங்காளம், பகுதி தொழிலாளர்களால் திருப்பூர் நிரம்பி வழிகிறது.

20220817102323756.jpg

இதற்கெல்லாம் தனியாக ஏஜெண்டுகள் இருக்கிறார்கள்.

சமீபத்திய வாட்சப் செய்தி வேறு வகை.


திருப்பூருக்கு வராதீங்க!? - என்று தொடங்கிய வாட்சப் பகிர்வு சுருக்கமாக இப்படி போகிறது.

இது நம்ம திருப்பூர் என்ற உள்ளூர் பத்திரிகையில் வந்த செய்தியாம்.

வேலை எப்படியிருக்கிறது என தொழிலாளியிடம் கேட்டால் சரியா வேலை செய்து ஆறு மாதம் ஆகிறது. போன மாசம் பத்து நாள்தான் வேலை, இந்த மாசம் இன்னும் வேலையே செய்யலை.

உற்பத்தியாளர்களிடம் கேட்டால் நூல் விலை யேற்றத்தால் ஆர்டர் உறுதியாகவில்லை. நாற்பது வருசமாக இப்படி லீவு விட்டதே இல்லை. சில பேரை ஊருக்கு அனுப்பி விட்டோம். இன்னும் சில உற்பத்தியாளர் சாப்பாடு போட்டு ஆட்களை தங்கவைத்துள் ளோம். ஆர்டர் எப்போ வரும் என்று தெரியவில்லை என்று புலம்புகின்றனர்.

டீக்கடைகள் தினமும் 40-50 லிட்டர் பால் தீரும் இப்பொழுதே 10-15 லிட்டர் தீருவதே கஷ்டமாக உள்ளது. கடை வாடகை ஆள் சம்பளம் கொடுத்து கட்டுபடியாகவில்லை. இப்படியே போனால் அடுத்த மாதம் கடையை மூட வேண்டியதுதான் என்கின்றனர் டீக்கடை உரிமையாளர்கள்.

வீடு, நிலம் - விற்க, வாங்க செயல்படும் புரோக்கர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு வருஷமா ‘ஒண்ணுமே இல்லீங்க’ என்கின்றனர். எங்கு பார்த்தாலும் குடோன் காலி, வீடு வாடகைக்கு விடப்படும் என்ற அறிவிப்புகள்.

அடகு கடைகளில் கூட பணம் இல்லை என்று கூறுகின்றனர்.

பெரிய கடைகள், தொழிற்சாலைகள் வியாபாரம் எப்படி என்றால் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, கொரோனா, பஞ்சு, நூல் விலையேற்றம் போன்ற காரணங்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் ஒப்பிட்டால் தற்போது 40 சதம் கூட இல்லை என்கின்றனர். சிலர் இன்னும் மோசம் என்கின்றனர்.

திருப்பூரை சுற்றியுள்ள பல்லடம், சோமனூர், அவிநாசி போன்ற இடங்களில் விசைத்தறிக் கூடங்கள் மூடிக் கிடக்கின்றன. சிலர் தறியை உடைத்து பழைய இரும்புக்கு போட்டு விட்டனர். ஆட்கள் எல்லாம் கட்டிட வேலைக்கும், கிடைக்கிற வேலைக்கும் போய்க்கொண்டிருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டமாய் தொடங்கப்பட்ட சில ஹோட்டல்கள், காபி ஷாப்கள் வாடகை கொடுக்க முடியாமல் ‘ஓடியே’ போய்விட்டனர். மிகப்பெரிய ஜாம்பவான்கள், அவர்களுடைய மார்க்கெட்டை அசைக்கவே முடியாது என்று கூறப்பட்ட சில பிராண்ட் நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன.

பல உற்பத்தியாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.உண்மையில் நிலைமை படுமோசமாக உள்ளது. பீதியை கிளப்புகிறார்களோ என்று எண்ணாதீர்கள்.

எனவே தயவு செய்து யாரும் திருப்பூருக்கு வராதீர்கள்...


இந்த செய்தியின் தீவிரத்தைக் குறித்து திருப்பூர் வியாபாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.

அவர்கள் சொன்ன சாராம்சம் இது தான்.

திருப்பூரின் இன்றைய நிலைக்கு விடியல் அரசோ அல்லது ஒன்றிய அரசோ முற்றிலும் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்ல முடியாது.

இது சர்வதேச சந்தை சார்ந்த பிரச்சினை.

உக்ரைன் போருக்குப் பின், ஆல்ட், லிடில், பெப்கோ போன்ற வர்த்தக நிறுவனங்கள் ஐரோப்பாவில் ஆர்டர்களை பாதிக்குப் பாதி குறைத்து விட்டன.

போதும் போதாதற்கு தற்போதை அமெரிக்க வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஒரு வருடத்தில் நூல் விலை வேறு எக்கச்சக்கமாக போய். ஆர்டர்கள் வருவதே நின்று போய் விட்டது.

இத்தாலிக்கு செய்ய வேண்டிய ஆர்டர்கள் மலைமலையாக குவிந்து வாங்குவோர் இல்லாமல் சில ஏற்றுமதியாளர்களிடம் இருக்கிறது.

பெரிய நிறுவனங்கள் தாக்குப் பிடிக்க முடிந்தவர்கள் இந்த தொழிலில் இன்னமும் கடை திறந்து வைத்திருக்கிறார்கள்.

சிறிய நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை. கடையை மூடிய வண்ணம் இருக்கிறார்கள் என்பது உண்மை தான்.

ஆனால் இது ஏதோ நம்மீது தவறு இருப்பதாக நினைக்க வேண்டாம்.

அமெரிக்க சந்தை சரியானதும், அல்லது ஐரோப்பிய சந்தை சரியானதும் மீண்டும் திருப்பூர் எழும்.

அதுவரை இந்த மந்த நிலையை தாக்குப் பிடிக்க வேண்டியது அவசியம் தான்.

என்ன ஒன்று வங்கிகள் எங்கள் குரல்வளைய நெறிக்காமல் இருக்க, அரசு உதவலாம்.

வெளி மாநில தொழிலாளர்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது. அதுவும் முக்கியம்.

இன்னும் இரண்டு மாதங்களில் அமெரிக்க பொருளாதாரம் சரியானால் கூட திருப்பூரின் ஏற்றுமதி துவங்குவதற்கு அடுத்த வருடம் மார்ச் மாதம் ஆகி விடும். அது வரை கஷ்டம் தான்.

விகடகவியின் கேள்வியாக, சரி இவ்வளவு கஷ்டம் இருக்கும் போது குதூகலமாக பெண்கள் பார், அரைகுறை டான்ஸ் என்று திருப்பூர் பட்டையைக் கிளப்புவது எப்படி என்றதற்கும் பதில் வந்தது.

20220817102454916.jpeg

நீங்க கஷ்டப்படும் தொழிலாளர்களைப் பார்க்கிறீர்கள். அதே சமயத்தில் பணம் சம்பாதித்து விட்டு ஜாலியாக இருக்கும் ஓனர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் திருப்பூர் கலாச்சாரத்தை ஐரோப்பிய கலாச்சாரம் போல மாற்றி விட்டார்கள். பணம் இல்லையென்றால் கூட குதூகலத்திற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மேலும் நீங்கள் சொன்ன அந்த டான்ஸ் மற்றும் பெண்களுக்கு இலவச மதுபானம் போன்ற விஷயங்கள் கடைசி நேரத்தில் கான்சல் செய்யப்பட்டு விட்டது. என்று சிரிக்கிறார்கள்.

திருப்பூர் மட்டுமல்ல துணிமணி ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் பஞ்சாபில் லூதியானாவிலும் இந்த மந்த நிலை தான்.

வங்காளதேசத்தையும், வியட்நாம், இந்தோனேசியா, சீனாவையும் இந்த உலக வர்த்தக நிலை பாதிக்கமால் இல்லை.

இப்போதைக்கு, திருப்பூர் மீண்டும் திமிறி எழும் நாளுக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.