அது ஒரு முன் மதிய நேரம், வெளியில் மென் சாரலாய் மழை பொழிந்துகொண்டிருந்தது. வீட்டிற்குள் சர்க்கரை பொங்கலும், பூம்பருப்பு சுண்டலும்தயாராகும் வாசம் நாசியை நிறைத்துக் கொண்டிருந்தது. நானும் அப்பாவும்எங்களை சுத்தி புத்தங்களை பரப்பியபடி அமர்ந்திருந்தோம். அன்று சரஸ்வதிபூஜை என்பதால் மாடியில் அட்டை பெட்டியில் கட்டி வைத்திருந்தபுத்தகங்களை எல்லாம் தூசி தட்டி எடுத்து படிகளை போல செய்யஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தோம். இந்த புத்தக படிகளின் மீது புத்தம்புது கதர் துண்டை விரித்து அதற்கு மேல் நடுவில் சரஸ்வதியின் போட்டோவும்சுற்றிலும் நிறைய பொம்மைகளையும் வைத்து வழிபடுவது எங்கள் வீட்டில்பழக்கமாகி இருந்தது. அம்மா வேலைக்கு போவதால் நிறைய பொம்மைகள்இருந்த போதும் எங்களால இந்த ஒருநாள் மட்டும்தான் கொலு வைக்கமுடிந்தது. அப்பாவின் எக்கனாமிக்ஸ், வரலாறு, அலுவலக தொடர்பானபுத்தகங்கள் மேலும் சில ஆங்கில கதை புத்தகங்கள் என்று ஒவ்வொன்றையும்அப்பா பெட்டியில் இருந்து எடுத்து கொடுக்க கொடுக்க நான் வாங்கிவெளியில் வைத்தேன்.
ஒரு பெட்டியில் சற்றே அதிக தடிமனாக தெரிந்த புத்தகம் என்னை ஈர்த்தது, அழுக்கடைந்த அந்த அட்டையில் அது என்ன புத்தகம் என்பதை அறிந்துகொள்ள முடியாததால் அதை திறந்து பார்த்த போது அது கல்கியின்"சிவகாமியின் சபதம்" என்று அறிந்தேன். அந்த புதினம் தொடராக வந்தநாட்களில் பத்திரிகையில் இருந்து கத்தரித்து எடுத்து சேர்த்து வைத்துபைண்ட் செய்ய பட்ட பிரதி அது. நான் திறந்து பார்த்த பக்கத்தில்சிவகாமியை நாகநந்தி ஒளிந்திருந்து எட்டி பார்ப்பதை போன்ற சித்திரம்என்னை மிகவும் கவர்ந்தது. இது என்ன கதை என்று கேட்ட போது சரியாகவந்து சேர்ந்த அம்மாவுக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. "இது கல்கிஎழுதின சரித்திர கதைடி அந்த காலத்துல நாங்க எல்லாம் இதை போட்டிபோட்டுக்கிட்டு படிப்போம்" என்று சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவுமற்றும் பொன்னியின் செல்வன் என்று அவர் சேகரித்த எல்லாபுதினங்களையும் வெளியில் எடுத்து வைத்து அவரின் தாவணி நாட்களைமகிழ்வுடன் என்னிடம் பகிரத் தொடங்கினார். அப்பா அந்த புதினங்களின்சாராம்சத்தை மட்டுமல்லாமல் அந்த கதைகளில் வரும் ராஜாக்களை பற்றியநிஜ சரித்திரத்தையும் அவை நிகழ்ந்த காலகட்டத்தையும் எடுத்துச் சொல்லவேநான் அவைகளை உடனடியாக படித்தே ஆக வேண்டும் என்ற மனநிலைக்குதள்ளப் பட்டேன்.
அன்றே படித்துவிடும் ஆவலில் நானிருக்க "இன்னைக்கு சரஸ்வதி பூஜைலாஇன்னைக்கு படிச்சு தான் உண்டாக்க போறியாக்கும்..?" என்று கூறி நான்கையில் வைத்திருந்த சிவகாமியின் சபதத்தை வாங்கி அப்பா படிகளாகஅடுக்கி விட்டார். எங்கள் வீட்டில் இருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு அதுதான் தோதான படியாக இருக்கும். சுற்றிலும் பொன்னியின் செல்வன் ஐந்துபாகங்களாய் அடுக்கினால் விவேகானந்தர், காந்தி மற்றும் மீரா சிலைகளைவைத்து விடலாம். புத்தகம் அடுக்க படும் முன் படித்த முதல் ஒரு பக்கம்மிகுந்த ஆவலை கிளப்பி இருந்தது, இனி மறுநாள் தான் அதை பிரித்து படிக்கமுடியும் என்று ஆவலுடன் காத்திருந்தேன். மறுநாள் காலை ஏடு பிரிப்பதுநடந்த போதும், பாட புத்தகம் மட்டும் தான் கையில் கிடைத்தது, நட்ட நடுவில்அடுக்கப்பட்டதால் சிவகாமியின் சபதத்தில் திருவள்ளுவர் ஜம்மென்றுஅமர்ந்திருந்தார். முதலில் பல்லவர்கள் தான் ஆட்சியில் இருந்தார்கள்பின்னாட்களில் தான் சோழர்கள் தலையெடுத்தார்கள் என்று அப்பா கூறிஇருந்ததால் சிவகாமியின் சபதத்தை தான் முதலில் வாசிக்க நினைத்தேன்.
அப்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் தொடர்ந்து ஒரு வாரம்விடுமுறை இருந்தது. மறுநாள் ஆரம்பித்த என் வாசிப்பு அப்போது நான் ஏழாம்வகுப்பு படித்தாக நினைவு நிறுத்தி நிதானமாய் வாசித்ததை கற்பனை செய்துதொடர்வதே என் பழக்கம் என்பதாலும் கிட்டதட்ட இரண்டு மாதங்கள் வரைதேவைபட்டது. தினமும் வீட்டிற்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டு படிக்கத்தொடங்கினால் எட்டு மணிவரை அது தொடரும் பிறகு அம்மா அலுவலகத்தில்இருந்து வந்து வீட்டு பாடம் செய்ய வேண்டுமே என்று நினைவு படுத்தும் வரைஅதிலேயே மூழ்கி இருப்பேன். நரசிம்ம பல்லவன் சிவகாமியை கைவிட்டு வேறுஒரு பெண்ணை மணந்து கொள்ளும் நொடி எனக்கே அந்த துயரம் நிகழ்ந்ததுபோல அழுது குளித்தேன். அது தான் புத்தகம் வாசித்து முதல் முதலில் நான்அழுத தருணம். பின்பு பார்த்திபன் கனவு விறுவிறுப்பாய் முடிந்து போனதுகதை படித்து சிலநாட்களிலேயே அந்த படத்தை தூர்தர்ஷனில்ஒளிபரப்பினார்கள், ஜெமினி கணேசனும் வைஜெயந்தி மாலாவும் விக்ரமன்-குந்தவை கதாபாத்திரத்திற்கு வெகு ஜோராகவே பொருந்தி இருந்தார்கள்என்ற போதும் கதையின் விறுவிறுப்பிற்கு முக்கிய காரணமாய் இருக்கும்ஜடாமுடி சாமியார் யார் என்பது படத்தில் சிறிது நேரத்திலேயே தெரியும்படிஇருந்தது சுவாரஸ்யத்தை குறைத்தது என்றுதான் கூற வேண்டும். இந்தஇரண்டு நாவல்களும் தந்த ஈர்ப்பில் தான் முழு பரீட்சை விடுமுறைக்காககாத்திருந்து பொன்னியின் செல்வனை தொடங்கினேன்.
முதல் பாகத்தில் வந்தியத்தேவனும் ஆழ்வார்கடியானும் கதையைவிறுவிறுப்பாக்கினார்கள். குந்தவை, நந்தினி, பூங்குழலி என்று ஒவ்வொருபெண்களும் ஒவ்வொரு வகையில் என்னை ஈர்த்தார்கள். அந்த வயதிற்கேஉரிய கண்ணாமூச்சி, பாண்டியாட்டம், தாயம் விளையாட்டு என்று எதுவுமேவேண்டாம் என்று புத்தகத்திலேயே மூழ்கி இருந்தேன். இதனால் என்சேக்காளிகளுக்கு என் மேல் கடும் கோபம் வந்தது, அவற்றை எல்லாம்புறந்தள்ளி விட்டு நான்நாவலில் மூழ்கினேன். அந்த நாட்களில் என்ன சாப்பிட்டேன், எப்படி தூங்கி எழுந்தேன் என்பதெல்லாம் நினைவேஇல்லை, என் நினைவுகள் சோழர் காலத்து வாழ்வுடன் ஐக்கியமாகி நான் பழையறையிலும், தஞ்சையிலும் உலாவி திரிந்தேன் என்று தான் கூற வேண்டும். வந்தியத்தேவன் குந்தவையை கண்டுகாதல் கொள்ளும் போது எனக்குள்ளும் வெட்கம் வந்தது, அதேவந்தியத்தேவன் நந்தினியையும் விட்டுவைக்காமல் பேசி சிரிக்கும் போதுஎனக்கு கோபம் வந்தது (இவனை ஹீரோன்னு நினைச்சா ஒரு பிள்ளையைவிட மாட்டேங்கிறானே...!). அந்த வயதில் ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்தான் இருக்கணும் அது தான் சரி என்று புரிந்துவைத்திருந்தேன். பின்னாட்களில் சாண்டில்யனின் புதினங்களை படித்தபோது ஒருவனுக்கு ஒருத்தியா யாருகிட்ட என்று சவால் விட்டன அந்தகதைகள், இதனாலேயே கல்கி தான் எனக்கு மனதிற்கு பிடித்த ஆசிரியராகஇருந்தார். பதின்மத்தின் இடையில் இருந்த எனக்குள் இந்த புதினங்கள் பலரசாயன மாற்றங்களை கொண்டு வந்தன என்று தான் கூற வேண்டும். அதுவரைவகுப்பில் எந்த பெண்ணை எந்த பையன் பார்க்கிறான் என்ற விவரமெல்லாம்தெரியாமல் தேமே என்று பாடத்தை மட்டும் படித்துவிட்டு வரும் எனக்குஅப்போதிலிருந்து தான் பல பார்வைகளின் அர்த்தங்கள் விளங்கதொடங்கியது.
சம்புவரையர் மாளிகையில் தங்கி இருந்த வந்தியத்தேவன் இரவில் நடக்கும்ரகசிய சந்திப்புகளை கண்டு அதிர்ச்சியடைந்த போது அவனை விட நான்பலமாய் அதிர்ச்சி அடைந்தேன். வந்தியத்தேவன் ரகசிய சுரங்கபாதை வழியாக பயணிக்கும் பகுதிகளை நான் வாசித்துக் கொண்டிருந்தபோது நள்ளிரவு ஒரு மணி. அப்பா தூக்கத்த்திற்கு நடுவில் எழுந்து "இன்னுமாநீ தூங்கலை, தூங்கு" என்று சொல்லி லைட்டை அணைத்து விட்டார். வந்தியத்தேவன் சுரங்க பாதையில் இருந்து வெளியில் வந்திருப்பானாஇல்லையா என்று தெரியாமல் என்னால் தூங்க முடியவில்லை. பூனைபோலமெல்ல எழுந்து போய் பின் பக்கத்து கதவை மெல்ல அடைத்துவிட்டுசமயலறையில் இருக்கும் குண்டு பல்பின் வெளிச்சத்தில் அமர்ந்து விட்டஇடத்தில் இருந்து தொடங்கி வாசித்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு மேல் ஆன நிலையில் அப்பா படுக்கையில் என்னைக்காணாமல் எழுந்து வந்து "அட ராமா, நாளைக்கும் லீவு தானே, காலைலஎழுந்திரிச்சு படியேன்ம்மா" என்று கண்டிப்புடன் சொன்னவுடன் கப்சிப்பென்று அனைத்தையும் மூடி வைத்து விட்டு படுத்துதூங்கிவிட்டேன், கனவிலும் நாவல் தொடர்ந்து வந்தது, நானும்சுரங்கத்திற்குள் இருட்டில் திகிலுடன் நடந்ததுபோன்ற உணர்வை அடைந்தேன்.
என்னுடைய வாசிப்பு வேகம் கூடிவிட்டது, இந்த முறை இருபதுஇருபத்தைந்து நாட்களுக்குள் பொன்னியின் செல்வன் முழுவதையும் வாசித்துமுடித்து விட்டேன். ஆனால் வாசித்த பொழுதுகளில் நான் வேறு ஒரு தனிஉலகத்தில் இருந்தேன். சில நேரம் பூங்குழலியை போல படகு வலித்துக்கொண்டு, சில நேரம் யானையில் சவாரி செய்தபடி, பல நேரம் பல்லக்கில்அமர்ந்தபடி என்று முழுக்க முழுக்க இந்த புதினத்தை ரசித்து வாசித்துதிளைத்தேன் என்று தான் சொல்ல வேண்டும். புதினத்தில் குந்தவைக்கும்வந்தியத்தேவனுக்குமான காதல் விலாவாரியாக சொல்லப் படாமல்இலைமறை காயாய் மட்டுமே சொல்லப்பட்டிருப்பதாய் மிக பெரிய குறைஉண்டெனக்கு, அதே போல அருள்மொழியை நேசிக்கும் பூங்குழலியைதேவையில்லாமல் அமுதனுக்கு கட்டி வைத்ததற்கு பதில் அவளை அப்படியேசுதந்திரமாய் விட்டிருக்கலாம். உண்மையில் ராஜராஜனுக்கு பல மனைவிகள்இருந்த போதும் அவன் தன்னை நேசித்த பூங்குழலியை விட்டுவிட்டுபயந்தாங்கொள்ளி வானதியை நேசித்தது போல கொண்டு வந்திருப்பது அந்தசின்ன வயதிலேயே எனக்கு அபத்தமாகபட்டது. இப்போது ஒருமுறை மீள் வாசிப்பு செய்தால் நான் எப்படி உணர்வேன் என்று எனக்கே தெரியவில்லை. பள்ளி இறுதி வந்த போது கல்கியில் புதியஓவியங்களுடன் மீண்டும் வாராவாரம் வெளிவந்தது பொன்னியின் செல்வன். அந்த ஓவியங்கள் தந்த ஈர்ப்புடன் மீண்டுமொரு முறை வாசிக்க மிகவும்பிடித்தது.
என் வாழ்வில் மனம் சுணங்கி இருந்த நாட்களில் என்னை நானேமீட்டுக்கொள்ள பொன்னியின் செல்வனை தான் மீள் வாசிப்பு செய்தேன். அப்போது எனக்கு பல விஷயங்கள் புதிய பரிணாமத்தில் புரியத்தொடங்கியது. எந்த புத்தகத்தை படித்தாலும் அதை அப்படியே உண்மைஎன்று நம்பி கற்பனை செய்து வாசிப்பது என் பழக்கம், இங்கு என்னை போலபலருண்டு. அவர்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் நிஜ வரலாற்றைபேசும் கதை என்று என்னைப்போலவே அப்பாவியாய் நம்பியவர்கள். நாவலின்மைய முடிச்சான ஆதித்த கரிகாலனின் மரணம் குறித்தும் உடையார் குடிகல்வெட்டு குறித்தும் நிறைய அலசல்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், வாரிசு அரசுரிமைக்காக கரிகாலன் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும்பாண்டிய வீரர்களால் கொல்லப் பட்டிருக்கலாம் என்றும் இரு வேறு விதமாய்கணிக்கிறார்கள்.
கல்கி ஆபத்துதவிகள் என்றும் மறைந்து வாழ்ந்தவர்கள் என்றும் கட்டமைத்த ரவிதாசன், சோம்பன் சாம்பவன், கிரம்ம வித்தன்அனைவரும் "பிரம்மாதிராஜன்" என்று பட்டம் பெற்ற பிராமணர்கள் என்பதுமிக சமீபமாகத் தான் தெரிந்து கொண்டேன். ரவிதாசன் நந்தினியை காணவரும் போது ஆந்தை போல ஒரு சங்கேத மொழியில் அலறுவான் அந்தஅத்தியாயத்தில் ரவிதாசனின் தலையில் ஆந்தை அமர்ந்திருப்பது போலஓவியர் ஒரு ஓவியம் வரைந்திருப்பார்... அந்த படம் ஏதோ ஒரு வகையில்என்னை ஈர்த்தது கணக்கு டியூஷன் போன இடத்திற்கு அந்த படத்தை எடுத்துபோயிருந்தேன், சார் ஒரு பக்கம் சொல்லி கொடுத்து கொண்டிருக்கநான் அதை கவனிக்காமல் பேனாவிலேயே அந்த ரவிதாசனை வரைந்துகொண்டிருந்தேன். அடிக்கடி சந்தேகம் கேட்கும் நான் வெகு நேரமாகஅமைதியாய் அமர்ந்திருப்பதை பார்த்து என் அருகில் வந்த வாத்தியார்... "நீஎன்ன பண்ணிக்கிட்டு இருக்க...?" என்று கடுமையாய் திட்ட வந்தவர்... ஒருநிமிடம் திகைத்து "விளங்கிரும்..பாடம் படிக்கிற இடத்துல படம் வரஞ்சிட்டுஇருக்க" என்று தன் கடுமையை குறைத்து சற்றே மெல்லிய குரலில்சொல்லிவிட்டு போய்விட்டார். பின்பு ஒரு நாள் என் அம்மாவை கோவிலில்கண்ட போது, "உங்க பொண்ணு நல்லா படம் வரையுதா, ஓவிய வகுப்புக்குஅனுப்புங்க" என்று கூறி இருக்கிறார். இதை என் அம்மா என்னிடம் கூறியதில்இருந்து குந்தவை, நந்தினி, ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன், குதிரைகள், ரதம், யானை என்று நிறைய வரைய தொடங்கினேன். ஆனால் என் பிரச்சனைஎன்னவென்றால் என்னால் கற்பனை செய்து வரைய முடியவில்லை யாராவதுவரைந்ததை நகலெடுப்பது போல வரைய முடிந்தது அவ்வளவே. ரெகார்ட்நோட்டில் வரைய இது போதாதா என்று விட்டுவிட்டேன். எனினும் என் ஓவியஆர்வத்தை வளர்த்தெடுத்தது பொன்னியின் செல்வன் என்றால் அதுமிகையில்லை.
நான் அனுபவித்து ரசித்து வாசித்த எந்த ஒரு கதையையுமே திரைப்படமாகபார்க்க எனக்கு ஏனோ விருப்பம் இருந்ததே இல்லை. என் கற்பனையில்எனக்கு பிடித்த கதாபாத்திரங்களுக்கு என்றுமே எந்த நடிகர்கள்முகங்களையும் பொருத்தி நான் பார்த்ததே இல்லை, ஓவியங்கள் தந்தபிம்பமே எனக்கு போதுமானதாய் இருந்தது. முக்கியமாக பொன்னியின்செல்வன் மிக பெரிய புதினம் என்பதால் அதை திரைப்படமாக எடுக்கவாய்ப்புகளே இல்லை என்று தான் நம்பி இருந்தேன். அது திரைப்படமாகவெளியாக போகிறது முக்கியமாக மணிரத்னம் அதை இயக்க போகிறார்என்பது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி.
மணிரத்னத்தின் மௌன ராகம், அக்னி நட்சத்திரம், தளபதி மூன்றையும்எண்ணிக்கையில்லா அளவுக்கு பலமுறை பார்த்திருக்கிறேன். எப்போது அந்தபடங்களை போட்டாலும் இன்றும் விடாமல் பார்ப்பேன், அந்த அளவுக்கு அந்தபடங்களை பிடிக்கும். என்னுடைய ஆதர்ஷ நாயகன் அரவிந்த் சாமியைஅறிமுக படுத்தியதற்காகவே மணிரத்னத்தின் படங்களை விடாமல்பார்த்திருக்கிறேன். எனினும் சாதாரணமாக சத்தமாய் பேசி நடிக்கும் நாயகன்நாயகி கூட அவர் படத்தில் ஹஸ்கி வாய்ஸுக்கு மாறி விடுவது எனக்குள்எப்போதுமே ஒரு அதிருப்தியை ஏற்படுத்தும். முக்கியமாக பொன்னியின்செல்வன் செந்தமிழில் பேசும் கதாபாத்திரங்கள் உலவும் இடமாகஇருப்பதால் அவர் அதை எப்படி காட்டப் போகிறாரோ என்கிற கவலைஎனக்குஅதிகமுண்டு. இருவர் படத்தை இன்று வரை என்னால் முழுமையாக பார்க்க முடிந்ததே இல்லை என்பதையும் பதிவு செய்து விடுகிறேன். நாவலில் இந்தஇடத்தில் இப்படி போர் நடந்தது, அதில் இன்னார் வெற்றி பெற்றார் என்பதுபோன்ற சரித்திர தரவுகளை கல்கி பகிர்ந்திருப்பார் ஆனால் நாவலில் போர்காட்சிகள் கிடையாது. போரே இல்லாத அந்த நாவலில் போர் காட்சிகள்வருவது போன்றட்ரைலர் நான் படித்த நாவலுக்கும் இந்த திரைப்படத்திற்கும் தொடர்பு ஏதும் இருக்கப் போவதில்லை என்று தான் நினைக்க வைக்கிறது. பாகுபலியை போன்ற ஒரு பிரம்மாண்டமான போர் காட்சிகளை எதிர்பார்க்கும் நாவலை படிக்காத ரசிகர்களுக்கு ஒரு வேளை இந்த திரைப்படம் மிகுந்த திருப்தியை தரலாம். நாவலை படித்து விட்டு கதையை சினிமாவில் தேடும் மணி ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இதற்காக மாற்றத்தை விரும்பாத பழமைவாதி என்று யாரும் என்னை புரிந்து கொண்டாலும் எனக்கு அதை பற்றிய கவலை இல்லை. நடிகர்கள் தேர்வுகள் ஓரளவுக்கு பொருந்தி வருவதாய் தான் இருக்கிறது எனினும் த்ரிஷாவை எனக்கு ஜெசியாகத் தான் அதிகம் பிடிக்கும். அவரை குந்தவையாக நினைத்து பார்க்க சற்றே கடினமாகத் தான் இருக்கிறது. ஜெயம் ரவி கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை எப்போதுமே திருப்தியாக செய்பவர் பேராண்மை படத்தில் மிகச் சிறப்பாக செய்திருப்பார். என் மாமா பெண் ஒருத்தி ஜெயம் ரவிக்கு கல்யாணம் ஆன தகவலை கேட்டு நாள் முழுவதும் அழுதாள் இப்போதும் அதைச் சொல்லி அவளை கேலி செய்வோம், அருள்மொழி கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருப்பார் என்று தோன்றுகிறது. இந்த மிகப் பெரிய புதினத்தை திரைப்படமாக எடுக்க நினைத்த எண்ணத்திற்கு முதலில் மணிரத்தினத்திற்கு வாழ்த்துக்கள், நாவலில் பொன்னியின் செல்வன் நம் மனத்தில் வேரூன்றி நின்றதை போல திரைப்படத்திலும் நிற்கிறாரா பார்க்கலாம் !
Leave a comment
Upload