தாய் உள்ளம் தருகின்ற பாசம்
இணையில்லை அதற்குஒன்றும்,
என்றுதான் தரணியே பேசும்...!
பாசம் மிதமிஞ்சிப் போனால்
விஷம் என்றே மாறிப் போகும்...!
ஊரார் பிள்ளை தன் பிள்ளை...
சொல்வதில் உண்மை இல்லை...!
ஒத்துக் கொள்ள மனதில்லை...!
காரைக்கால் பள்ளி நிகழ்வின்று
காண்பித்தது பொய் அதுவென்று...!
படிப்பில் பிள்ளைகள் போட்டியிடும்...
போட்டியே பொறாமை என்றாகாமல்,
வழிநடத்தல் பெற்றோர் கடமையாகும்..!
பெற்றோரே பேராசை கொண்டதால்
பொறாமையில் முடிந்த நிகழ்விது..!
இரண்டாம் இடத்திலா எனது மகள்..?
எண்ண மறுக்கிறது தாயின் மனம்...
எண்ணித் துணிகிறது மறு கணம்...!
தன் மகள் பெறவேண்டும் முதலிடம்...!
தன் பெருமை நிலைநாட்ட வேண்டும்...!
தடையென இருந்தது ஒரு பிள்ளை...
தகர்த்திட துணிந்தது தாயின் மனம்...!
தான் தவறென்று புரிதல் இருந்தும்,
தாயின் கைகள் எடுத்தது விஷத்தை,
பிஞ்சு உயிரைப் பறித்தது கொடுமை...!
பிள்ளையைப் பிரிந்த தாயின் கதறல்...
பெற்றோர்கள் மனதில் ஏதோ பதறல்...
இன்று நிகழ்ந்த கொடுரத்தின் உச்சம்,
நாளை நமக்கும் வருமோ என அச்சம்...!
நம்ப மறுக்கிறது எல்லோர் மனமும்...!
மரித்துப் போய்விட்டது மனிதநேயம்...!
கண்களை மறைத்தது தாயின் பாசம்...!
கொலையும் செய்தது மகளின் நேசம்...!
பிள்ளைகள் மனநிலை தடுமாறும்
பெற்றோர்கள் வழிநடத்த சீராகும்...!
நடப்பும் இணக்கமும் பிள்ளைகள் வசம்
மலர் வைப்பது பெற்றோர் கைவசம்...!
வியாபாரம் முதலீட்டு செய்வதுபோல்
பிள்ளைகள் கல்விக்கு செலவிட்டு
பெற்றோர்கள் மனநிலையும் மாறியின்று,
மதிப்பெண்ணும் தரவரிசைப் பட்டியலும்
இலாபம் என்று பார்க்கின்ற பரிதாபம்...!
பிள்ளை, பெற்றோர் இருவருக்கும்
மனதின் அழுத்தங்கள் காரணமோ...?
உளவியல் நிபுணர்கள் உதவியுடன்
மனதும் எண்ணமும் தெளிவு பெற
அரசும் நிர்வாகமும் செயல்படட்டும்...!
பாலா
கோவை
Leave a comment
Upload