உக்ரைன் நாட்டில் போரின் ஆரம்ப கட்டத்தில், அங்கு இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க சென்றிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நாடு திரும்பினர். நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் மருத்துவ படிப்பு தொடர்பாக வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அங்கு மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘உக்ரைனில் ரஷ்ய போரால் மருத்துவ படிப்பை பாதியில் கைவிட்டு இந்தியா திரும்பிய மாணவர்களுக்க, இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை அளிக்க சட்டத்தில் இடமில்லை. மருத்துவ படிப்பை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ள, வெளிநாட்டில் பயின்ற இந்திய மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில், அவர்கள் வெளிநாடுகளில் தங்களின் மருத்துவ படிப்பை தொடருவதற்கு தடையேதும் இல்லை’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும், மத்திய அரசின் உப்புசப்பற்ற பதிலால், உக்ரைனில் படித்து நாடு திரும்பிய ஆயிரக்கணக்கான எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களின் மருத்துவ கல்விக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு வட்டார அதிகாரிகள் கூறுகையில், ‘‘உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்காக ‘அகாடமிடிக் மொபிலிட்டி’ திட்டத்தின்கீழ், இந்தியா தவிர 29 நாடுகளின் மருத்துவ படிப்பை தொடர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதன்படி அவர்கள் ஆஸ்திரேலியா, செக் குடியரசு, பிரான்ஸ், ஜார்ஜியா, கஜகஸ்தான், லிதுவேனியா, மால்டோவா, ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், உஸ்பெகிஸ்தான், அமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம், எகிப்து, பெலாரஸ், லாட்வியா, கிர்கிஸ்தான், கிரீஸ், ருமேனியா, ஸ்வீடன், இஸ்ரேல், ஈரான், அஜர்பைஜான், பல்கேரியா, ஜெர்மனி, துருக்கி, குரோஷியா, ஹங்கேரி ஆகிய 29 நாடுகளில் மருத்துவப் படிப்பை தொடரலாம். இங்கு படிப்பை முடித்தாலும், அவர்களுக்கு அந்தந்த உக்ரைன் பல்கலைக்கழகத்தினால் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்!’’ என்று தெரிவித்தனர்.
மத்திய அரசு 29 நாடுகளின் பட்டியலை வெளியிட்டாலும், எந்தெந்த கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்கள் படிக்க முடியும் என்ற விவரங்களை தெரிவிக்கவில்லை. மேலும், மேற்கண்ட நாடுகளில் மருத்துவ படிப்புக்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்பதையும் அறிவிப்பில் விளக்கவில்லை. தற்போதைய நிலையில், உக்ரைனில் உள்ள சுமார் 20 கல்வி நிறுவனங்கள் மட்டுமே ஜார்ஜியா போன்ற சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. உக்ரைன் போரில் 3 பல்லைக்கழகங்கள் அழிந்துள்ளன. 600க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகளை கொண்ட இந்தியாவில், வெளிநாட்டில் மருத்துவ படிப்பை மேற்கொண்ட இந்திய மாணவர்களுக்கு இடமின்றி தவித்து வருகின்றனர் எனக் குறிப்பிடத்தக்கது.
இது மத்திய அரசின் தவறா ???
உள்ளூரில் மதிப்பெண்கள் எடுத்து இடம் கிடைக்காத மாணவர்கள் பண பலம் இருப்பவர்கள் வெளிநாடுகளூக்கு சென்று மருத்துவம் படிப்பது அவரவர் விருப்பம் அல்லது திறமை. அப்படி படித்து வந்தாலும் இந்திய மருத்துவ கவுன்சில் வைக்கும் பரீட்சையில் தேற வேண்டும் என்பது தான் விதி. இதை 30 சதவிகிதம் பேர் மட்டுமே தேற முடியும்.
மீதமிருப்பவர்கள் மருத்துவம் படித்துவந்தாலும் கால் காசுக்கு இந்தியாவில் பிரயோஜனமில்லை. என் மகன் / மகள் டாக்டருக்கு படித்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் வாழ்க்கையை இப்படி சுற்றலில் விட்டது பெற்றோர்கள் தான் என்று சொல்லலாம். மருத்துவப் படிப்பு மேல் உள்ள ஆசை.
இதில் சீனாவில் படித்த மாணவர்களின் நிலை பற்றி பெரிய கட்டுரையே எழுதும் அளவிற்கு ஏராள தகவல்கள் இருக்கிறது.
மருத்துவப் படிப்பு என்பது மாணவர்களுக்குள் ஆசை பொங்கி வரவேண்டும். மருத்துவம் என்பது வெறும் படிப்பு அல்ல. அது ஒரு வாழ்க்கை. அதை வாழத் தயாரானவர்கள் மட்டுமே படிக்க வேண்டும்.
பெற்றோர்களின் வற்புறுத்தலால் மட்டுமே படிப்பவர்கள் நிலை கடினம் தான்.
Leave a comment
Upload