தொடர்கள்
கதை
உலகத்தின் கடைசி மனிதன் -தில்லைக்கரசிசம்பத்

20220823204907691.jpg

இடிந்த வீட்டின் ஒரு அறையில் கதவை பூட்டிக்கொண்டு உடலெல்லாம் நடுங்க அவன் குத்துக்காலிட்டு உட்கார்ந்து இருந்தான்.

அன்று காலையில் தான் இந்த உலகமே அழிந்து போனது. இல்லையில்லை.. உலகம் அழியவில்லை. மனிதர்களையும் சேர்த்து அனைத்து உயிரினங்களும் ஒரு சேர அழிந்து போயினர். ஆளுங்கட்சியை தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஒன்று சேருவது போல் நிலநடுக்கம், சுனாமி, எரிமலைகளின் கூட்டணியில் உயிரினங்களின் கதை ஒரேநாளில் முடிந்து போனது. "ஒரு நாய் அல்லது பூனையாவது உயிரோடு இருந்திருந்தால் துணையாக இருந்திருக்குமே .. அட்லீஸ்ட் ஒரு கரப்பான்பூச்சியாவது அழியாமல் இருந்திருக்கலாம். அடேய் கரப்பு.. பனியுகத்தில் கூட லட்சம் வருடங்கள் உண்ண உணவு இல்லாமல் உயிர் பிழைச்சியாமே.‌. இப்ப மட்டும் எப்படி செத்து போன?!" என்று தருமி போல் மனதுக்குள் அரற்றி கொண்டிருந்தான்‌. தான் மட்டும் எப்படி உயிரோடு இருக்கிறோம் என்று புரியாமல் பூட்டிய அறைக்குள் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தவன் காதில் 'தட் ..தட்.." என்ற சத்தம் விழுந்து கதவை நிமிர்ந்து பார்க்க வைத்தது. பயந்து , யாராக இருக்கும் என்று நினைத்தபடி "யாரு கதவை தட்டுவது?" என்றான். இப்போது "டமால் டமால்" என்று கதவு இடிந்து விழுவது போல பலமான அடிகள் விழ ஆரம்பித்தன.

"ஒரு வேளை கடவுளாக இருக்குமோ!? அதான் மனிதர்கள் எல்லாரும் இறந்து விட்டார்களே..! என்று எண்ணியபடி "கடவுளா கதவை தட்டுவது?"

என்றான்

"கடவுளே தான்டா டோமரு.." என்று ஆக்ஸா ப்ளேடை தகரத்தில் உராசுவதை போல ஒரு குரல் கேட்டது.

" கடவுளே தான்.. அப்படியென்றால் நிச்சயமாக நான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷேஷமான மனிதன்.. சந்தேகமே இல்லை.. அதான் கடவுளே நேராக வந்திருக்காரு.. ஆஹா.. இப்ப நம்மளை இந்த பூமிக்கு தலைவனா ஆக்கப்போறாரா?! இல்ல .. சொர்கத்துக்கு கூட்டி போகப்போறாரா?! எதுவா இருந்தா என்ன? ஏதாவது வரம் கொடுத்தா கூட நல்லா இருக்கும். எனக்கு வேண்டியவங்களையெல்லாம் உயிர் பிழைக்க வச்சு தனி சாம்ராஜ்ஜியமே நடத்த போறேன். பிரதமருக்கு நெருக்கமா இருந்தா இரண்டாவது இடம் தான். நான் கடவுளேக்கே நெருக்கம்.. இனி இந்த உலகத்துக்கு மட்டுமில்ல.. இந்த பிரபஞ்சத்துக்கே நான் நம்பர் ஒன் டா.. " என்றபடி உற்சாகமாக கதவை திறந்தான்.

"ஏண்டா பேமானி..! எவ்வளவு நேரம் கதவ தட்டிக்கினுக்கீறேன்? தொரை ரோசனை பண்ணிக்கினு தான் தொறப்பாராம்! அல்லாத்தையும் அழிச்சு முட்ச்சு வேல சப்ஜாடா முடிஞ்சு போச்சுன்னு வந்தா கஸ்மாலம் நீ மட்டும் என் கண்ணுல மாட்டாம எப்டி தப்பிச்ச? நம்பரு ஒன்னு வேணுமா ஒனக்கு.. அட்ச்சீ.. பொறம்போக்கு.. ஓன் மூஞ்சு மேல என் பீச்சாங்கைய வைக்க..!" என்று கோரமாக இளித்தபடி கடவுள் தன் இடது கையை அவன் முகத்தில் வைக்க அந்த இடத்திலேயே பஸ்பமானான்.

"அப்பாடா.. படா பேஜாராக்கீதுய்யா.. ஒரு உசுர கூட மிச்சம் இல்லாத, அல்லாத்தையும் பஸ்மமாக்குனா தான் பழய யுகத்த முட்ச்சி, புட்ச்சா ஒரு யுகத்த கொண்டு வர முடியும் . நம்ம வேலையில கொறை வச்சோம்.. அவ்வளவுதான்.., கத கந்தலா பூடும் .." என்று சொல்லியபடி இவ்வுலகின் கடைசி மனிதனையும் தீர்த்துக் கட்டிய திருப்தியில், பார்ப்பதற்கு நெல் கொட்டிவைக்கும் பத்தாயம் போல இருந்த ஒரு வாகனத்தில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்து பறக்க ஆரம்பித்தார் இந்த உலகத்தின் கடவுள்.