தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் --  பாகம் 52. - ஆர்.ரங்கராஜ்

2022082407590167.jpeg

திருவாலங்காட்டில் பெருங்கற்கால முதல் மக்கள் வாழ்ந்திருப்பதற்குச் சான்றுகள் உள்ளன:
திருவாலங்காட்டில் சிவன் ஆடிய இடம் 'இரத்தின அம்பலம்'

"சிவபெருமான் ஆடிய தாண்டவம் ஐந்து முக்கிய தலங்களில் நிகழ்ந்ததாக நம்பிக்கை. சிவன் கோயில்களில் முதலிடம் வகிக்கும் சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆடிய இடம் பொன்னம்பலம் என்றும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிய இடம் வெள்ளி அம்பலம் என்றும், திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் ஆடிய இடம் தாமிர அம்பலம் என்றும், திருக்குற்றாலத்தில் ஆடிய இடம் சித்திர அம்பலம் என்றும், திருவாலங்காட்டில் ஆடிய இடம் இரத்தின அம்பலம் என்றும் கூறப்படும். திருவாலங்காட்டில்தான் முதன் முதலில் ஆடியதாக ஒரு கூற்று உண்டு. இங்குதான் காளியோடாடி காளியின் செருக்கை அடக்கியதாக நம்பப்படுகிறது", என்று தெரிவிக்கிறார் தொல்லியல் துறை மேனாள் இயக்குநர் திரு நடன காசிநாதன்.

இறைவன் இத்தலத்தில் ஆடிய தாண்டவம் 'ஊர்த்துவ தாண்டவம்' என்று அழைக்கப்பெறும் இச்செயலை

"கொடிய வெஞ்சினக் காளி யிக் குவலய முழுவதும்
முடிவுசெய்வ னென்றெழுந்தநான் முளரியோன் முதலோர்
அடைய அஞ்சலும் அவள் செருக்கழிவுற அழியாக்
கடவுளாடலால் வென்றதோர் வடவனம் கண்டார்"
என்று கச்சியப்ப சிவாசாரியார் தம் கந்தபுராணத்தில் பாடியுள்ளார்.

காரைக்காலம்மையார் இத்தலத்து ஆடல்வல்லானிடம்,

"இறவாத அன்புவேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி
அறவா நீ ஆடும்போது உன் அடியின்கீழ் இருக்கவென்றார்"

என்று வேண்டிக்கொண்டபோது "அதற்கு இறைவன் அருள்பாலித்ததால் இறைவனின் திருவடியின் கீழ் இத்தலத்தில் காரைக்காலம்மையார் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில், திருவாலங்காட்டு தாண்டவரூ தாண்டவமுர்த்தி காட்சி தருகிறார். இத்தலத்தில் காரைக்காலம்மையார் தம் தலையால் வலம் வந்திருக்கிறார்", என்று கூறுகிறார் திரு காசிநாதன்.

கல்கல்வெட்டுகளில் இவ்வூர் "ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மேன்மலை மணவிற்கோட்டம் பழையனூர் நாட்டுத் திருவாலங்காடு” என்று கூறப்பெற்றிருக்கிறது.

இக்கோயிலில் 30-க்கும் மேற்பட்ட செப்புப்பட்டயங்கள் உள்ளன. இவ்வூரில் கிடைத்த முதலாம் இராசேந்திர சோழனின் செப்பேடு முக்கியத்துவம் பெற்றது.

"இவ்வூரில் பெருங்கற்கால முதல் மக்கள் வாழ்ந்திருப்பதற்குச் சான்றுகள் உள்ளன. இவ்வூர்க் கல்வெட்டு ஒன்று வத்தராசன் எழுதிய ஒரு பாரதத்தைக் குறிப்பிடுகிறது. இதன் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டாகும்", என்று தெரிவிக்கிறார் திரு நடன காசிநாதன்.

இவ்வூர் நடராஜர் செப்புத் திருமேனி பற்றி ஹேவல் என்ற வெளிநாட்டறிஞர் 1911இல் எழுதி உலகத்தாருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இவ்வூரில் இருந்த முதலாம் இராசேந்திரனின் காலத்துச் செப்புப் பட்டயம் உட்பட 31 செப்புப் பட்டையங்களையும் மற்றும் நடராஜர் செப்புத திருமேனி உள்ளிட்ட சில செப்புத திருமேனிகளையும் முதன் முதலில் கண்டறிந்தவர் புகழ்பெற்ற கல்வெட்டு நிபுணர் கே.வி.சுப்பிரமணிய அய்யர் ஆவார்.

(தொடரும்)