அலங்காரமான தேரில் வந்திறங்கிய கர்ணன் வேகமாக மனைக்குள் நுழைந்தான். அந்த அந்தி வேளையில் விளக்குகளை ஏற்றி மாடத்தில் வைத்து விட்டு திரும்பிய ராதை நீண்ட நாட்களுக்குப் பின் கர்ணனைக் கண்ட மகிழ்வுடனும், அளவில்லா அன்புடனும் அவனை நோக்கி விரைந்தாள். தேரோட்டியின் பத்தினி வளர்த்த தாயானாலும், தாயல்லவா ? ' கர்ணா! என் கண்ணே! உன்னைப் பார்த்து எவ்வளவு காலமாயிற்று!' என்று தாயன்புடன் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் .
கர்ணன் தன் மணிமுடியைக் கழற்றி வைத்து விட்டு தாயின் காலில் விழுந்து வணங்கினான். தன் கண்களில் தளும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே எழுந்தவனைப் பார்த்து , அப்போது அங்கு வந்த அதிரதன் அதிர்ந்தார். கர்ணன் தாயை அணைத்துக் கொள்ள, அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் தன் கைகளால் துடைத்த கர்ணன் ' தாயே அமருங்கள், நான் அனைத்தையும் மறந்து உங்கள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்கிறேன் ' என கூற, அவளும் அமர்ந்து கொண்டாள். அவனின் தலையை கோதிக் கொண்டே ' உனக்கு உண்ண ஏதாவது எடுத்து வரவா?' என்றாள்.
தலையசைத்து மறுத்த கர்ணன் தன் கண்களை மூடினான். அவனது நெஞ்சை உலுக்கும் நிகழ்ச்சி ஏதோ ஒன்று அரண்மனையில் நடந்திருக்கிறது என்று அதிரதனுக்கு தோன்றியது. சற்று நேரம் பொறுத்து கர்ணனைத் தனியே அழைத்தார். ' உன் மனத்தை உலுக்கிய இன்றைய சம்பவம் தான் என்ன? ' என்று வினவ துரியோதனின் ஆத்ம நண்பனான அவன் எப்படி அதை விவரிப்பான்? , இருப்பினும் அவனை அறியாமல் வார்த்தைகள் உடைந்தாற் போல விழுந்தன. அரண்மனை விட்டு சில காலங்களுக்கு நீங்கும் குந்தி மற்றும் பாண்டவர் ஐவருக்கும் புரோச்சன ன் அமைத்த பிரம்மாண்டமான மாளிகையில் ஏதோ ஆபத்து நிகழவிருப்பதை கர்ணனின் பேச்சிலிருந்து புரிந்து கொண்டார் அதிரதன்.
' கர்ணா! நீ துரியோதனனை நீங்கினாலொழிய உன் மனம் அமைதியுறப் போவதில்லை. அவனை நீங்கும் முடிவை நீ எப்போதும் எடுக்க மாட்டாய். அதர்மத்தின் அவதாரம் அவன். தர்மம் பிறழாத மனத்தின ன் நீ! ' தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையில் போராடும் உன் மனம் அமைதியடைய ஒரே ஒரு உபாயம் தான் உள்ளது.' என்றார்.
' சொல்லுங்கள் தந்தையே! ' என்று கர்ணன் ஆர்வமுடன் கேட்க அதிரதன் ' நீ நாளை முதல் தானம் செய்யத் துவங்கு! தானம் என்பது அறம். அந்த அறம் உன்னை தொடர்ந்து வரும். நித்திரையைத் தரும். மகனே! குலத்தை இழித்து உரிமை மறுத்த விளையாட்டரங்கில் உனை அங்க நாட்டு அரசனாக்கிய துரியோதனனுக்காக மற வழியில் பயணிக்க தொடங்கிய உனக்கு இதுவே மன அமைதி வழி தரும். மனதில் உள்ள உன் தர்ம சிந்தனைகளுக்கு நீ கொடுக்கும் உருவமாக தானத்தைக் கொள்! ' என்று சொன்னார்.
' ஆஹா! அற்புதம் தந்தையே! இப்போதே என் மனம் லேசானதாய் உணர்கிறேன், நாளையே நான் தானம் வழங்கத் துவங்குகிறேன்' ' என்று வணங்கி விடை பெற்றான். ' வந்தவனை துரத்துகிறீர்களா?' என்ற ராதையைப் பார்த்து அவருக்கு பச்சாதாபம் மேலோங்கியது. ' இவளது அஞ்ஞானத்திற்கு முடிவே இல்லை' என்று எண்ணியவர், ' அவனுக்கு அரண்மனையில் எண்ணற்ற கடமைகள் காத்திருக்கின்றன ராதை' என்றார்.
அவன் சென்ற அடுத்த நொடியில் அவர் பிதாமகர் பீஷ்மரை சந்தித்து பாண்டவருக்கும், குந்திக்கும் நேரவுள்ள இடரைக் குறித்து சொல்ல, அதை அவர் விதுர ரிடம் தெரிவித்து விட்டு , தானே குதிரையில் ஏறி அவர்கள் சென்றவிடத்துக்கு கிளம்பினார்.'
போர்க்களத்தில் அர்ச்சுனன் அம்பால் வீழ்ந்த ராதேயனுக்கு மனக் கண் முன் மேற்கண்ட காட்சிகள் அனைத்தும் விரிந்தன, தான் பாண்டவரைக் காப்பாற்றியதற்கு பிரதிபலனாக அருச்சுனனும் தன் நண்பன் துரியனிடமிருந்து ஒரு முறை தேரை மறைத்துக் காப்பாற்றியதை நினைவு கூர்ந்தான். தான் இழந்தவற்றை விட உயிர் ஒன்றும் பெரிதல்லவெனவே அவனுக்குத் தோன்றியது. 'பிறப்பால் , வளர்ப்பால், துரியனின் நட்பால், குந்தியின் வரத்தால், இந்திரனின் சாகசத்தால், கிருஷ்ணனின் ஜாலத்தால் இழந்த நான் தானத்தால் பெற்ற தர்மத்தையும் அல்லவா இழந்து வீழ்ந்து விட்டேன்!' என எண்ணிக் கரைந்தான்.
அவனுக்கு தெரிந்து விட்டது, ' இதோ, இன்னும் சிறிது நேரத்தில் தன் இன்னுயிர் பிரியப் போகிறது, இன்னுயிர்? இல்லையில்லை, பிறப்பில் பிறழ்ந்தும், வளர்ப்பில் இகழ்ந்ததவும் ஆயிற்றே இவ்வுயிர் ! உரிமைக்கான போராட்டத்தில் தவறவிட்ட தர்மம் தந்தை அதிரதனின் அறவுரையால் கடைபிடித்த தானம் எல்லாம் அழிந்து விடப் போகிறது ' என்று எண்ணினான். அரச்சுனன் உயிர் காக்க வரம் வாங்கியவள் அதோ தயாராகிக் கொண்டிருக்கிறாள், தன் உயிர் நீங்கும் தருணத்திற்காக, தன்னை மடியில் போட்டுக் கொண்டு ஓலமிடுவாள், தர்மர் முதலான தம்பிகள் அழுவார்கள், ஆ! என் நண்பன் துரியோதனன் , நான் இழைத்த துரோகத்தை மன்னிப்பானா? மாட்டான், ஆனால், அவனும் சில காலம் தான், அவன் அழிவும் இதே இடத்தில் நிகழவிருக்கிறது ' என்று வரிசையாக எண்ணங்கள் தோன்றி மனத்தை அலைக்கழிக்க அம்புகள் துளைத்த உடலின் உபாதையும் சேர்ந்து கொள்ள சோர்ந்தான் கர்ணன்.
சோர்வுறும் போதெல்லாம் கண்ணீர் வழியத் தாங்கும் தன் தாயைத் தேடினான். ' தாயே ! ராதை ! என்று அவன் மனமும் முகமும் ஒருங்கே அவளைத் தேட , தொலைவில் அன்புத் தாய் ராதை போலிருக்கிறது! ஆம் ! அவளே தான் ! தான் வீழ்ந்த செய்தி அறிந்து வந்து விட்டாள் போலிருக்கிறது ' இது போதும், இந்த வேளைக்காக தான் நான் காத்திருக்கிறேன் ' என அரற்றத் துவங்க , குரல் எழும்ப மறுக்கிறது, ' ஐய்யோ! அங்கே என்ன நடக்கிறது? என் தாயை யாரோ தள்ளுகிறார்கள், அவளை என் அருகில் வர அனுமதியுங்கள் ' என்ற கர்ணனின் குரல் அவனுக்கு மட்டுமே கேட்கிறது். அதோ தொலைவில் ராதையின் அன்பான குரல் ,' என் மகனைக் காண வேண்டும்!, என்னை விடுங்கள் ' என்று கெஞ்சும் குரல் கர்ணனின் காதுகளில் விழ, ' அவளை விடுங்கள், நான் இறப்பதற்கு அவள் மடி தான் வேண்டும் , ' என்று உரக்கக் கத்திய குரலிலும் உயிரில்லை.
குந்தியின் மகனாய்ப் பிறந்து அடைந்த துன்பங்கள் அனைத்தையும் துடைத்து தன்னை அரவணைத்துக் காத்த தாய் ராதை வழியனுப்பவே விழைகிறான் கர்ணன். ஆனால் அவளோ அழத விழிகளோடு களம் விட்டு விரட்டப்படுகிறாள். அரச தர்மத்தின் பெயரால் தன்னைப் புறக்கணித்த குந்தியை தன்னையே உலகமாய் எண்ணி வளர்த்த எளிமைத் தாய் ராதையுடன் ஒப்பிடுகிறான் ஒரு கணம். தன்னிடம் வரம் வேண்டாதவள். அவளை நீங்கி அரண்மனைக்கு ஏகும் நாள் தொடங்கி பல நாட்கள் உறக்கம் தொலைத்தவள்.
' குலத்தின் பெயரால் தான் இழந்தவற்றைக் காட்டிலும் அதே குலத்தின் பெயரால் தாயின் உரிமையை இழந்து ஏங்கி களம் நீங்கும் ராதையின் துன்பமன்றோ பெரிது ! ' நான் என்றும் உங்கள் மகன் தான், ' ராதையின் மகன்' தான், தாயே! ' என்ற முனகலுடன், அவள் சென்ற திசை வணங்கினான். ஒரு பெரிய அரக்கனின் கைகளைப் போல் பரந்து விரிந்திருக்கும் மனித குலப் பாகுபாட்டால் மிகும் இத் துன்பம் இந்த யுகத்துடன் முடியுமா ? யுகங்களாய்த் தொடருமா? ' என்ற ஐயமுடன் தன் இறுதி மூச்சை இழுத்து மீளாத் துயிலில் ஆழ்ந்தான் கர்ணன்.
இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
Leave a comment
Upload