
சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார் தேவார மூவருள் இரண்டாமவர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்தவர்.
இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தம்முடைய அயராத உழவாரப் பணியால் உழவாரத் தொண்டர் எனப் போற்றப்படுகின்றார். சமண நூல்களைக் கற்று அச்சமயத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கியதால் சமணர்கள் அவரை தருமசேனர் என்று பெயரிட்டு அழைத்தனர்.
தேவாரப்பதிகத்தைப் பாடினபடியால், நீ இனி நாவுக்கரசு என்ற பெயருடன் உலகில் நிலைத்திருப்பாய்” என்று சிவனார் அசரீரி வாக்கு அருளினார். இவரை, திருஞானசம்பந்த நாயனார் ‘அப்பர்’ (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், இவர் தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால், இவரை தாண்டக வேந்தர் என்றும் அழைக்கின்றனர்.
திருநாவுக்கரசு நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் “திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றுகின்றார்.
திருவாமூர் திருத்தலத்தில் அவதரித்த திருநாவுக்கரசு நாயனார்:
கி.பி. ஏழாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் திருமுனைப்பாடி (நடுநாடு) நாட்டிலே திருவாமூரில் (திருவாமூர் தற்போது கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது) சைவ வேளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினியார் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாக அவதரித்தார்.
இவருடைய இயற்பெயர் மருள்நீக்கியார். இளமையில் பெற்றோரை இழந்த இவரைத் தமக்கை திலகவதியார் வளர்த்து வந்தார். இளமையில் நேரிட்ட இழப்புக்கள் காரணமாகச் சமண சமயத்தால் ஈர்க்கப்பட்டு, சமண நூல்களைக் கற்று அச்சமயத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். சமண சமயத்தில் இருந்தபோது இவர் தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.
தருமசேனர் நாவுக்கரசரானார்:
திருவாமூரிலே இருந்த திலகவதியார் சிவபெருமானிடத்திலே சிவத்தொண்டு செய்ய விரும்பியும், தனது தம்பி சமணத்தில் சேர்ந்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தி மீண்டும் சைவ சமயத்திற்குத் திரும்பவும், கெடிலநதிக்கு வடகரையில் இருக்கின்ற திருவதிகை வீரட்டானம் ஸ்தலத்தில் இருக்கும் சிவபெருமானைத் தினந்தோறும் வணங்கி வேண்டி வந்தார்.
ஒருமுறை தருமசேனருக்கு கடுமையான சூலைநோய்(வயிற்று வலி) ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், தனது தமக்கையார் திலகவதியிடம் முறையிட்டார். தம்பியாரின் நிலை கண்டு வருந்திய திலகவதியார், அவருக்குத் திருநீறளித்து வீரட்டேசப் பெருமானைத் தரிசித்து வரப் பணித்தார். திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் சிவபெருமான் மேல் "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்னுந் தேவாரத் திருப்பதிகத்தைப் பாடியருளினார். உடனே சூலைநோய் நீங்கிற்று. அந்த பாடலின் இனிமையில் கரைந்த சிவபெருமான், “இன்று முதல் நீ “நாவுக்கரசர்” என்று அழைக்கப்படுவாய்” என்று அசரீரியாக அருளினார். இதன் பின்னர் இவர் திருநாவுக்கரசர் என அழைக்கப்படலானார். இதனால் தருமசேனரான மருணீக்கியார் சைவத்துக்கு மீண்டார். அது முதல் திருநாவுக்கரச நாயனார் சைவத் தொண்டு செய்யலானார்.
உழவாரப் பணியின் தலைவராகத் திருநாவுக்கரச நாயனார்:
பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களைத் தூய்மை செய்யும் பணியையும் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். திருக்கோயில்களின் சுவற்றில் வளரும் சிறு தாவரத்தை நீக்கி, கல்லினை ஒதுக்கி, புல்லினைச் செதுக்கி உழவாரத் தொண்டு செய்து வந்தார். இது மெய்யாகிய உடலால் செய்த தொண்டு. எனவே அவரை உழவாரப் படையாளி எனப் போற்றுவர்.உழவாரம் என்பது புல், சிறுசெடிகள் உள்ளிட்டவைகளைச் செதுக்கப் பயன்படும் கருவி. உழவாரப் பணியை தலையாயப் பணியாகக் கொண்டு அவர் செய்த காரணத்தினால் அவருடைய திருவுருவ ஓவியங்கள், படிமங்கள் ஆகியவற்றில் அவருடைய திருக்கரத்தில் உழவாரத்தை ஏந்தி இருப்பதைக் காணலாம். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணி செய்து முன்னோடியாக இருந்தமையால், “உழவாரத் தொண்டர்” என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர்.
பல்லவ மன்னனும் சைவ சமயத்தைத் தழுவினான்:
சமண சமயத்தை நீங்கி மீண்டும் தருமசேனர் சைவராக மாறி நாவரசர் என வழங்கப்படுவதைக் கேட்டு சமண சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அரசனான மகேந்திர பல்லவனாலே திருநாவுக்கரசு நாயனாரின் செயலை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை எப்படியாவது மீண்டும் சமண மதத்திற்கு மாற்ற வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அவனது எண்ணம் பலிக்கவில்லை இதனால் மிகுந்த கோவம் கொண்ட அரசன், திருநாவுக்கரசு நாயனாரைக் கொல்ல துணிந்தான். ஏழு நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்தான். ஆனாலும் அவருக்கு எந்த தீங்கும் நேராது அவர் உயிர் பெற்றார். அடுத்ததாக நஞ்சு கலந்த பாற்சோற்றை அவருக்குக் கொடுத்தான். அந்த நஞ்சு அவரை ஒன்றும் செய்யவில்லை. அடுத்ததாக யானையை விட்டு மிதிக்கும்படி ஆணையிட்டான், ஆனால் அந்த யானை அவரை வணங்கிச் சென்றது. இதனால் வேறு வழி இன்றி திருநாவுக்கரசு நாயனாரை ஒரு கல்லில் கட்டி கடலில் வீசும்படி அரசன் ஆணையிட்டான். கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே - என்று வீரம் பொங்கப் பாடினார் திருநாவுக்கரசு நாயனார். இதனால் கட்டிய கல் பூவாக மாறி கடலில் மிதந்துவந்தது. திருநாவுக்கரசு நாயனாரும் கரை வந்து சேர்ந்தார்.

சிவபெருமானின் அருளைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனம் மாறி இறுதியில் பல்லவ மன்னனும் சைவ சமயத்தைத் தழுவினான்.
திருஞானசம்பந்த நாயனாரால் அப்பர் என அழைக்கப்பட்டார்:
சிவபெருமான் உறையும் திருத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று உழவாரப் பணி செய்து திருப்பதிகங்களால் இறைவனைப் போற்றி வழிபட்டு வந்த திருநாவுக்கரசு நாயனார் பெண்ணாகடத்தில் சூலக் குறியும் ரிஷபக் குறியும் பெற்று, தில்லையைச் சென்று நடராஜ பெருமானைத் தரிசித்து மகிழ்ந்தார். பின்பு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய மகிமையை அடியார்கள் சொல்லக் கேள்வியுற்று, சீர்காழிக்குச் சென்று திருஞானசம்பந்த நாயனாரை நேரில் கண்டு மகிழ்ந்தார். திருநாவுக்கரசு நாயனாரின் பெருமை அறிந்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அவர் வருவதை அறிந்து அவரை எதிர்கொண்டழைத்து ‘’அப்பரே வாருங்கள் ‘’ என்றார். அதுமுதல் அப்பரடிகள் என அழைக்கப்பட்டார். பின்னர் இருவரும் திருமறைக்காடு சென்று வேதத்தால் பூட்டப்பட்ட ஆலய மணிக்கதவை தமிழ் பண்ணிசைப்பாடி திறக்கவும் மீண்டும் மூடவும் செய்தனர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருமடத்தில் பலநாள் தங்கி இருந்தார். சில நாட்களுக்குப்பின் சோழநாட்டுத்தலங்களை வழிபட விரும்பி திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரிடம் விடைபெற்று பலதலங்கள் வழியாக திருச்சக்திமுற்றம் வந்தடைந்தார்.
திருநாவுக்கரசு நாயனாரின் திருத்தொண்டும், அற்புதமும்:
திருச்சக்திமுற்றம் சேர்ந்ததும் திருவடி தீட்சை செய்தருளுமாறு ஈசனைத் துதித்து வேண்டினார் அவரின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட ஈசன் திருநல்லூர் என்ற தலத்தில் திருநாவுக்கரசு நாயனார் தலை மேல் தமது திருவடியை வைத்து அருள் புரிந்தார். பின்னர் திங்களூரில் திருநாவுக்கரசு நாயனாரின் பெயரால் தொண்டுகள் பல செய்து வரும் அப்பூதி அடிகள் நாயனாரைச் சந்தித்து, திருவமுது செய்ய அவரது வீட்டிற்குச் சென்ற போது அரவத்தால் மாண்ட அப்பூதி அடிகள் நாயனாரின் மூத்த மகனை திருப்பதிகம் பாடி உயிர் மீண்டெழச் செய்து அற்புதம் படைத்தார்.
திங்களூரை விட்டுப் புறப்பட்ட திருநாவுக்கரசு நாயனார் திருப்புகலூரை அடைந்த போது அங்கு வந்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைக் மீண்டும் சந்தித்து, இருவரும் திரு வீழிமிழலை சென்றடைந்தனர். அப்போது அங்கு நிலவிய பஞ்சக் கொடுமை ஒழியும் வரை இருவரும் இறைவன் திருவருளால் பெற்ற படிக்காசுகளை ஆதாரமாகக் கொண்டு அன்னதானப் பணிபுரிந்தனர்.அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு திருமறைக்காட்டிற்குச் சென்று வேதங்களால் பலகாலம் அடைக்கப்பட்டிருந்த கதவினைத் திறக்கவும் மூடவும் பாடியருளினர்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாண்டிமாதேவியின் அழைப்பை ஏற்று மதுரையை நோக்கிப் புறப்பட்டவுடன், திருநாவுக்கரசு நாயனார் பெருமான் சோழ நாட்டுத் தலங்களைத் தொடர்ந்து தரிசித்துத் திருத்தொண்டு செய்து வந்தார். சமணர்களால் மறைக்கப்பட்டிருந்த பழையாறை வடதளி ஆலயத்தை மீண்டும் திறந்து தரிசிக்காமல் செல்வதில்லை என்று உண்ணா நோன்பு மேற்கொள்ளவே, இறைவரருளால் அதனை அறிந்த அரசன் அக்கோயிலை மீண்டும் திறப்பித்தார்.
பல ஸ்தலங்களைத் தரிசனம் செய்தபின் திருப்பைஞ்ஞீலியை அடைந்த திருநாவுக்கரசு நாயனாருக்குப் பசி மேலிட்டபோது, சிவபெருமான் அவருக்குக் கட்டமுது தந்தருளினார்.
ஸ்தல யாத்திரையைத் தொடர்ந்து மேற்கொண்ட திருநாவுக்கரசு நாயனார், காளத்தியில் காளத்தியப்பரையும், கண்ணப்ப நாயனாரையும் தரிசித்துவிட்டு கயிலை யாத்திரை மேற்கொண்டார். உடல் தளர்ந்த நிலையிலும் உறுதி தளராத அவரை சிவபெருமான் அங்கு ஓர் தடாகத்தில் மூழ்கப் பணித்துத் திருவையாற்றில் திருக்குளத்தில் எழச் செய்து சிவனார் உமையம்மையோடு திருக்கோயிலைக் காட்சியைத் திருநாவுக்கரசு நாயனாருக்குக் காட்டியருளினார்.
ஜோதியில் கலந்து இறையடியை எய்தினார்:
தமது 81வது வயதில் திருப்புகலூரை அடைந்த திருநாவுக்கரசு நாயனார் அங்கேயே தங்கித் உழவாரப் பணியைச் செய்தார். அங்கு நின்ற தாண்டவம், வாழ்த்துத் திருத்தாண்டகம், திருநேரிசை, தனித்திருநேரிசை, ஆரூயிர் திருவிருத்தம், தசபுராணத்தடைவு, பாவநாசத் திருப்பதிகம், அறைகூவும் திருப்பதிகம் முதலிய பாமாலைகளைப் பாடினார்.
உழவாரப்பணி செய்து கொண்டிருந்தபோது பொன்னும் மணியும் இறையருளால் சுத்தம் செய்ய வேண்டிய இடத்தில் சிதறிக் கிடந்தது. அவற்றைப் பொருட்படுத்தாது குப்பையாக எண்ணி ஒதுக்கித் தள்ளினார். திருப்புகலூர் இறைவன் தன்னை திருவடியில் இருத்திக் கொள்வான் என முன்னுணர்வு காரணமாக, ‘புண்ணியத்தின் வடிவமாக விளங்கும் பெருமானே, உன் திருவடிக்கு வர நான் விரும்பினேன். எனப் பதிகம் பாடினார், கருவறையில் ஜோதி எழ அதிற் கலந்து இறையடியை எய்தினார்.
திருநாவுக்கரசு நாயனாரின் இசை ஞானம்:
திருநாவுக்கரசு நாயனார் 49,000 தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். இவற்றில் சில பதிகங்கள், தாள அமைப்பினைச் சேர்ந்தது. தாள அமைப்புடன் பாடப்பட்டவற்றைப் பண்ணாங்கப் பாடல்கள் என்றும், தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும் சொல்லப்படுகின்றது. திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை திருநாவுக்கரசு நாயனார் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள். இவரின் பாடல்கள் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை.
நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசு நாயனாரின் இசைத்திறன் தெரிய வருகின்றது.
கொல்லி
காந்தாரம்
பியந்தைக்காந்தாரம்
சாதாரி
காந்தார பஞ்சமம்
பழந்தக்கராகம்
பழம் பஞ்சுரம்
இந்தளம்
சீகாமரம்
குறிஞ்சி
திருநாவுக்கரசு நாயனார் பாடிய பாடல்களில் மேற்கண்ட பத்து பண்கள் காணப்படுகின்றன.
குருபூஜை நாள்:

இறைவழிபாட்டில் திருத்தொண்டையே முதன்மையாகக் கொண்டு திகழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரின் குருபூஜை சித்திரை மாத சதயம் நட்சத்திரத்தன்று அவர் அவதாரம் செய்த ஸ்தலமான கடலூர் மாவட்டம் திருவாமூர்(பண்ருட்டியிலிருந்து மேற்றிசையில் 8 கி. மீ.ல் கெடில நதியில் வடகரையில் இக்கோயில் உள்ளது) அ/மி. பசுபதீசுவரர் திருக்கோயிலிலும்,
முக்தியடைந்த ஸ்தலமும் ஆன நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூர்(மயிலாடுதுறை - பேரளம் இரயில் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்திற்குக் கிழக்கே 6-கி. மீ. தூரத்தில் உள்ளது. நாகையிலிருந்தும், சன்னாநல்லூரிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது) அ/மி. அக்னீபுரீசுவரர் திருக்கோயிலிலும்
சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. பசுபதீசுவரர் திருக்கோயில் மூலவர் சந்நிதிக்கு எதிர்புறத்தில் திருநாவுக்கரசு பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். அக்னீபுரீசுவரர் திருக்கோயில்
மூலவர் சந்நிதியின் வலது புறத்தில் திருநாவுக்கரசர் சந்நிதி அமைந்துள்ளது. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
"திருச்சிற்றம்பலம்"
அடுத்த பதிவில் சுந்தரமூர்த்தி நாயனார்…!!

Leave a comment
Upload