
கோமல் சுவாமிநாதனின் மகள் தாரிணி கோமல் எழுதி இயக்கியிருக்கும் புது நாடகம் தற்போது மேடைகளில் அரங்கேறி வருகிறது. முதலிலேயே சொல்லி விடுகிறேன். அடுத்த காட்சி எங்கே எப்போது என்று தேடி பிடித்து குறித்துவைத்து மறக்காமல் அடுத்த முறை குடும்பத்துடன் சென்று பார்த்து வாருங்கள்.
உங்களுக்கு மஹாபாரதம் தெரியும், கிருஷ்ணர் தெரியும், தருமர் சூதில் தோற்ற கதை தெரியும், கிருஷ்ணரின் லீலைகள் தெரியும், துரியோதனனின் கொடுங்குணம் தெரியும், சகுனியின் சூழ்ச்சிகள் தெரியும், துச்சாதனன் இழி செயல்கள் தெரியும், திரௌபதியின் கோபம் தெரியும். இவைகள் அனைத்தையும் எப்போதோ படித்திருப்பீர்கள், எப்போதோ டிவியில் பார்த்திருப்பீர்கள்.

திரை படங்களில் சில காட்சிகளை பார்த்திருக்கலாம் . அவைகள் அரைகுறையாக உங்கள் மனதில் எப்போதும் நிழலாடிக் கொண்டிருக்கும்.
இந்த நாடகம் அவை அனைத்தையும் உங்கள் கண் முன்னே உங்கள் அருகில் நிஜமாக கொண்டு வந்து நிறுத்தும்.

இத்தனை காலமாக உயிர்ப்போடு இருந்தாலும், நடிப்பு உலகிற்கு அந்த கலைக்கு ஆணிவேர் நாடகங்கள் தான். இருந்தாலும் சமூகத்தால் இன்னும் பெருமளவில் இந்த காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத, அங்கீகரிக்கப்படாத ஒரு சமூகமாக இருக்கிறது. இந்த கூட்டம் ஒரு இணைபிரியாத, ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத கூட்டம். ஒருவரை ஒருவர் ஆதரித்து அனுசரித்து பாராட்டி மகிழும் கூட்டம். நாடகம் முடிந்த பின் ஒருவர் வந்து நாடகத்தின் இயக்குனர் தாரிணி அவர்களை வெகுவாக பாராட்டினார். அதற்கு அவரின் பதில் இந்த நாடகத்திற்கு நீங்கள் தான் உத்வேகமும் காரணமும் என்றார் [ You are my inspiration and reason for this play ] . இது நாடக உலகில் மட்டுமே சாத்தியம்.


நாடகம் பார்க்க நல்லி செட்டியார், பல முன்னாள் நீதிமான்கள், மருத்துவர் சுதா சேஷய்யன் , தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அவ்வை அருள் நடராஜன் போன்ற பல ரசிகர்கள் வந்திருந்தனர். நாடகத்தின் இறுதியில் நடிகர்களை பாராட்டி பேசிய நல்லி அவர்கள் இது வரை NTRஐ மட்டுமே கிருஷ்ணராக ஏற்றுக்கொண்ட நான் இப்போது இந்த நாடகத்தில் நடித்தவரையும் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். இது போல் அனைவரையும் அருகில் அழைத்து பாராட்டியது பெருமைக்குரியது.

திரைப்படத்தை போல் எப்போ சௌகரியமோ அப்போ படம் பிடித்து , பொறுமையாக எடிட் செய்து, அத்தனை தவறுகளையும் சரி செய்து நமக்கு காட்சி படுத்துகின்றனர். அப்படியும் சில படங்கள், சிலரின் நடிப்புகள் கேவலமாக இருகின்றது.
நாடகம் என்பது ஒரே நேரத்தில் அரங்கேற்றும் ஒரு கூட்டு முயற்சி. அதுவும் நேரலையாக உங்கள் முன் வந்து உங்களை பரவசப்படுத்தும் ஒரு செயல். நாடகத்திற்கு ஏற்ற கதையை தயார் செய்து, வசனம் எழுதி, இசையமைத்து, ஒளி ஒலி அமைப்புகள் திட்டமிட்டு மேடையில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து, கட்சிக்கான அமைப்புகள் சரியாக மாற்றி இப்படி பலர் ஒன்றாக ஒரே செயலை செய்வதின் மூலம் நமக்கு கிடைக்கும் ஒரு அனுபவம். அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் பாராட்டுகள்.

அதனை சரியாக செய்வதில் இருக்கும் டென்ஷனும் த்ரில்லும் தனி அனுபவம்.
நாடகத்தைப் பற்றி விரிவாக கூற இயலாது. அதனை நேரில் பார்த்து மட்டுமே அனுபவிக்க வேண்டும். சில தகவல்களை மட்டுமே உங்களிடம் பகிர விரும்புகிறேன். நாடகத்தின் உயிர் அதன் வசனகர்த்தா கவிஞர் சதிஷ் அவர்கள். அந்த காலமும் இந்த காலமும் கலந்து எக்காலமும் நிலைத்து மக்கள் மனதில் எளிதில் பதியும் வசனங்கள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டும்.
முதல் முறையாக துரியோதனனை ஹீரோவை போன்று ரசிப்பீர்கள்.தனது கொடூர சிரிப்பால் நம்மை பயமுறுத்துவது இவரின் திறமை. திரௌபதி உங்களை வசீகரிப்பாள் . சகுனிக்கு fan club தொடங்க தோன்றும். சில காட்சிகள் துச்சாதனன் உங்களை அசத்துவான் . இப்படி பலர். முன்னமே சொல்வது போல் கிருஷ்ணராக வருபவரின் நடிப்பு நமக்கு பகவான் கிருஷ்ணரின் மேல் இன்னும் ஈர்ப்பை ஏற்படுத்தும். அவரது புருவங்கள் நடிக்கும், உள்ளங்கால்களை உயர்த்தி உபதேச காட்சிக்கு அவர் கொடுக்கும் உயிர் பாராட்டப்பட வேண்டியது.

சில காட்சிகளை குறிப்பிட வேண்டும். நாடகத்தில் ஏதாவது புதுமைகள் புகுத்தியே ஆகவேண்டும். அதுவும் புராண கதைகளில் காட்சியாக்கப்படும்போது பழமை மாறாமல் இருந்தாக வேண்டும். பழமை மாறாமல் புதுமை புகுத்தி நாடகமாக்கிய விதம் அருமை.
LED Backdrop காட்சிகளுக்கு பலம் சேர்த்தன. சுயம்வர காட்சி சகுனியும் துரியோதனனும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி, சூது நடக்கும் காட்சி திரௌபதியின் துகில் உரியும் காட்சி , என பல காட்சிகள் உங்களை பிரமிக்க வைக்கும் நடிகர்களின் நடிப்பினாலும் ,காட்சி அமைப்பினாலும். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

நாடகம் பார்க்க வந்திருந்த திரை உலகின் பொக்கிஷம் திரு சித்ரா லக்ஷ்மன் அவர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். உங்கள் யூடுபே சேனலில் நாடக துறைக்கென ஒரு தனி பிரிவை வைத்து தொடர்ந்து நாடகங்கள் பற்றியும், நடிகர்கள் பற்றியும் அவர்களின் பெட்டிகளும் அரங்கேற்றுங்கள். சபாக்களை தாண்டி இவர்கள் உலகெங்கும் பேசப்பட வேண்டும் என்றேன். அவரும் செய்கிறேன் என்றார்.
ஆம் நாடகங்கள் நாடெங்கும் போற்றப்பட வேண்டும், பேசப்பட வேண்டும், பார்க்கப்பட வேண்டும் .--

Leave a comment
Upload