தொடர்கள்
பொது
மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது! - மாலா ஸ்ரீ

20220823231159639.jpg

பிரதமர் மோடி பாராட்டிய சமஸ்கிருத பண்டிட் சிறுவன்!

கோவா மாநிலத்தின் குஷாவதி ஆற்றங்கரையில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமம் ரிவோனா. வரலாற்றில் இதன் நிஜப்பெயர் 'ரிஷிவானா'! இங்குள்ள காட்டில் புத்தகத் துறவிகளின் குகையில் ஏராளமான ரிஷிகள் வசிக்கின்றனர். கடந்த சில நாட்களாக ரிவோனா கிராமத்தைச் பற்றி கோவா மக்கள் மட்டுமல்லாமல், இந்தியாவே பேசியது. பேசவைத்தது ஒரு சிறுவன்.

20220823231316227.jpg

கடந்த புதன்கிழமையன்று ரிவோனா கிராமத்தில் வசிக்கும் 16 வயது சமஸ்கிருத பண்டிட் சிறுவனை டெலிபோனில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து பாராட்டினார். அந்த சிறுவனின் பெயர் பிரியவ்ரத் பாட்டீல். இவர் சமீபத்தில் நடைபெற்ற மிகவும் கடினமான சம்ஸ்கிருத தேர்வு எழுதி, நாட்டிலேயே தலைசிறந்த பண்டிதர்களில் ஒருவராக மாறியதுதான்!

இதுகுறித்து பண்டிட் சிறுவன் பிரியவ்ரத் பாட்டீலின் தாயார் சொன்னது "மிகச் சிறந்த சமஸ்கிருத பண்டிட்களின் குடும்பம் எங்களுடையது. எங்கள் வீட்டின் பெயர்கூட 'ரிஷி ஆசிரமம்'தான்! " தனது மகனிடம் அந்த தாய் கொங்கணி, மராத்தி மொழியுடன் சமஸ்கிருதத்தையும் சரளமாக பேசுகிறார்.

20220823231347306.jpg

பிரியவ்ரத்தின் தந்தை மகாமகோபாத்யாய தேவ்தத் பாட்டீல்-தாய் ஆகிய இருவரும் அக்கிராமத்தில் சமஸ்கிருத குருகுலம் நடத்தி வருகின்றனர். இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குருகுல முறையில் தங்கியிருந்து சமஸ்கிருதம் கற்று வருகின்றனர். தந்தை ஊரில் இல்லாத நேரத்தில் பிரியவ்ரத் பாடம் நடத்துகிறார்.

இந்நிலையில், கோவாவில் மிக கடினமான சமஸ்கிருத தேர்வு எழுதி பிரியவ்ரத் பாட்டீல் பண்டிட் பட்டம் பெற்றிருந்தது அம்மாநில மக்களில் ஒருவருக்குக் கூட தெரியாது. ஆனால், புதுடெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் முதன்முறையாக தெரியவந்து, பிரதமர் மோடி தொலைபேசியில் பண்டிட் பட்டம் பெற்ற சிறுவனை பாராட்டிய தகவல் வெளியான பிறகுதான் இவ்வுலகுக்கே தெரியவந்தது.

ரிவோனா கிராமத்தில் உள்ள பிரியவ்ரத் பெற்றோரின் சின்னஞ்சிறிய சமஸ்கிருத பள்ளி, தற்போது உலகிலேயே தலைசிறந்த சமஸ்கிருத ஆராய்ச்சி மையமாக மாறிவிட்டது.

"இந்த சமஸ்கிருத குருகுலப் பள்ளியில் ஆசிரியர் தேவ்தத் பாட்டீலின் முன்பு, தங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் மாணவர்கள் சமஸ்கிருத பாடங்களை படிக்கின்றனர். ஓய்வு நேரங்களில் சமூகசேவை, அடிப்படை வாழ்க்கை நடைமுறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர். பாரம்பரிய முறைப்படி சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது விளையாட்டு அல்ல… இங்கு புத்தகங்களோ, வகுப்பறைகளோ கிடையாது.

ஆசிரியர் பாடம் சம்பந்தமாக கேள்வி கேட்கும்போது, மாணவர்கள் சமஸ்கிருத பாடங்களை முழுமையாக மனனம் செய்து, வரிக்கு வரி, பகுதி பகுதியாக, பக்கம் பக்கமாக பாடல்களாக ஒப்பிக்க வேண்டும். அதன் அர்த்தங்களையும் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் 7-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் சிறுவர்களும், 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் சிறுமிகளும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

கல்வி கட்டணம் உள்பட வேறெந்த கட்டுப்பாடுகளும் கிடையாது! இந்த சமஸ்கிருத குருகுலப் பள்ளி பொதுமக்களின் சமூகசேவை அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6 வருட காலத்துக்கு வியாக்ரன், மீமாம்சா மற்றும் நியாயா என்ற 3 தலைப்புகளில் சமஸ்கிருத பாடங்கள் நடத்தப்படுகின்றன. அதாவது, இலக்கண பிழையின்றி சமஸ்கிருத பாடங்களை ராகத்துடன் பாடல்களாக ஒப்புவித்தலே இதன் சாராம்சம்.

அரசு நிதியுதவி பெறாத இந்த சின்னஞ்சிறு சமஸ்கிருத குருகுலப் பள்ளியில் நீங்கள் பட்டதாரி பட்டம் பெற்றால், அதை வேறெந்த பல்கலைக்கழகங்களும் அங்கீகரிக்கத் தேவையில்லை. நீங்கள் நேரடியாக பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதத் துறை தலைவராக பொறுப்பேற்கலாம் என்கின்றனர் கல்வி நிபுணர்கள்.

இது வேத பாடசாலை அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். இங்கு வேத மந்திரங்கள், சாஸ்திரம் மற்றும் உபநிஷத் பாடங்கள் நடத்தப்படுவதில்லை. இங்கு பேராசிரியர் தகுதிக்கான சமஸ்கிருத பாடங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன. இதை அறிந்து கொள்வதன் முலம், அனைத்து இந்துக்களும் கடவுளை பற்றியும் வேதங்களை பாதுகாப்பதிலும் சிறப்பாக திகழ்வார்கள்.