
கேரள மாநிலத்தில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்தது. அவை தெருவில் நடந்து செல்லும், வாகனங்களில் செல்லும் பள்ளி மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரை விரட்டி சென்று கடித்து வந்தன. இதைக் கண்டித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.கே.பிஜூ என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேபிஸ் வைரஸ் தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். தெரு நாய்களுக்கு உணவு கொடுப்பவரே, அவற்றால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவையும் ஏற்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பேக்கல் என்ற கிராமத்தை சேர்ந்த ஒருவர், நாய்க்கடி தொந்தரவில் இருந்து பள்ளி குழந்தைகளை பாதுகாக்க துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், பள்ளிக்கு செல்லவே குழந்தைகள் பயப்படுகின்றனர். அதனால்தான் இந்த 'ஏர் கன்' துப்பாக்கியை ஏந்தியபடி பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்கிறேன். இதை வைத்து சுட்டால், நாய்களின் உயிருக்கு பாதிப்பு இல்லை. அதனால் என்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது!'' என்பது இவரது வாதம்.
எனினும், அவரை 'துப்பாக்கி காட்டி மக்களை பயமுறுத்தியதாக' கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், அக்கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை குறையவில்லை என்கின்றனர் மக்கள்.
அவ்வளவு என் இப்போதெல்லாம் நம்ம ஊரிலேயே நாய் வண்டியை காணவே இல்லை. நாய்களின் பெருக்கமும் அளவுக்கதிகமாகவே இருக்கிறது. வடிவேலு சொல்வதை போல, "இது கோவத்தோடு பாக்கறத பாத்தா , கொத்தோடு பிடிங்கிடும் போல இருக்கே " என்பது நமது அண்டை மாநிலத்தில் நிஜமாகிக் கொண்டு இருக்கிறது, என்பது வேதனையான உண்மை.

Leave a comment
Upload