
மதுராந்தகம் அருகே சூனாம்பேடு, ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு மகன் இருக்கிறான். கடந்த 19-ம் தேதி புஷ்பாவிற்கு இரண்டாவது பிரசவத்திற்கு டாக்டர்கள் பிரசவ தேதி குறித்துள்ளனர். அன்று மதியம் மருத்துவமனையில் புஷ்பாவை பிரசவத்துக்கு உறவினர்கள் சேர்த்துள்ளனர்.
அன்றைய தினம் ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு டாக்டர்கூட பணியில் இல்லை. 3 நர்ஸ்கள் மட்டுமே டியூட்டி பார்த்தனர். மேலும், புஷ்பாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டை சரிவர பார்க்காத 3 நர்ஸ்களும், பிரசவத்தில் பிரச்னை ஏற்படலாம் என உறவினர்கள் பயமுறுத்திய போதிலும், புஷ்பாவுக்கு இங்கேயே சுகப்பிரசவம் பார்த்துவிடலாம் என அவரது பெற்றோரிடம் நர்ஸ்கள் நம்பிக்கை அளித்தனர். பின்னர் மாலை 6 மணியளவில் புஷ்பாவுக்கு 3 நர்ஸ்களே பிரசவம் பார்த்துள்ளனர்.
அப்போது புஷ்பாவின் வயிற்றிலிருந்து தலைகீழாக கால்கள் மட்டுமே வந்ததை பார்த்து நர்ஸ்கள் பயந்துவிட்டனர். இதுகுறித்து டாக்டர் ஒருவருக்கு போன் செய்து உடனடியாக வரும்படி கேட்டனர். அதற்கு அவர், தனது செல்போன் வீடியோ கால் (காணொலி காட்சி) மூலம் பிரசவம் பார்க்கும்படி 3 நர்ஸ்களிடம் கூறியுள்ளார். அதன்படி, புஷ்பாவுக்கு 3 நர்ஸ்களும் காணொலி காட்சி பிரசவம் பார்த்துள்ளனர்.
பின்னர் நர்ஸ்கள் மட்டும் எவ்வளவோ முயற்சித்தும், புஷ்பாவின் வயிற்றிலிருந்து குழந்தையின் தலை மட்டும் வெளியே வரவில்லை. இதனால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு 3 நர்ஸ்களும் அனுப்பி வைத்தனர். எனினும், நடுவழியில் புஷ்பாவின் வயிற்றில் தலை சிக்கியிருந்த குழந்தை இறந்துவிட்டதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமான புஷ்பாவின் உறவினரும் கிராம மக்களும் ஒன்றுதிரண்டு, கடந்த 20-ம் தேதி காலை ஆரம்ப சுகாதார மையத்துக்கு எதிரே சூனாம்பேடு-மதுராந்தகம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களின் அலட்சியப் போக்கால் குழந்தை இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், கடந்த 21-ம் தேதி குழந்தை இறப்புக்கு காரணமான ஒரு டாக்டர் மற்றும் நர்ஸ் ஒருவரை இடமாற்றம் செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மகப்பேறு மருத்துவர்கள் கூறுகையில், ‘‘இது, அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்களின் அலட்சியப் போக்கே காரணம். டாக்டர் ஓய்வில் இருந்தாலும எமர்ஜென்சி எனும்போது நோயாளியை காப்பாற்ற ஓடிவர வேண்டும் என்பது நியதி. அதை விடுத்து, அவர் காணொலி காட்சி மூலம் விளக்க, 3 நர்ஸ்கள் பிரசவம் பார்த்திருப்பது மிகக் கொடூரம்.
இவர்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது? இந்த டாக்டர் இல்லை என்றால், அருகிலுள்ள வேறொரு தனியார் டாக்டரையாவது நர்ஸ்கள் தொடர்பு கொண்டிருக்கலாமே? இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி, அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
இது என்ன சினிமாவா வீடியோவில் பிரசவம் பார்க்க ?? அடாவடித்தனம். அதே சமயம் இது சுகப்பிரசவமாகியிருந்தால் இதுவே பாராட்டப்பட்டிருக்கும் என்பதும் உண்மை.
இரு ஒரு புறமிருக்க....
மருத்துவராவது பணம் சம்பாதிக்க அல்ல. அது வேறு ஒரு வாழ்க்கை. மருத்துவராவதற்கு நல்ல படிப்பு மட்டுமல்ல ஏராள மனோதிடம் வேண்டும். அந்த வாழ்க்கை 24 மணி நேரமும் உங்கள் கவனம் தேவைப்படும் விஷயம். அந்த மனம் இல்லையென்றால் நீட்டாவது சீட்டாவது. மருத்துவம் படிப்பது வேஸ்ட் என்பதை மருத்துவம் படிக்க விழையும் மாணவர்களும், குறிப்பாக பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a comment
Upload