தொடர்கள்
தொடர்கள்
ஜெர்மன் டயரி - சைல் - கார்த்திக் ராம்

20220825150014621.jpeg

இந்த வாரம் சைல் போயிருந்தேன், ஆனா தனியா தான் போனேன். குளிர் 3 டிகிரிக்கு கீழ போய்ட்டதுனால வீட்ல எல்லாரும் போயா நீயும் உன் ஹைக்கிங்கும் னு சொல்லி தொரத்திவுட்டாங்க.

இந்த ஊர் பவாரியாவுல இருக்குற கீழ் ப்ராங்கோனியா பகுதியில இருக்கு. சின்ன ஊர் தான், வெறும் 5000 - 6000 பேர் தான் இருக்காங்க. முன்னாடி எழுதின மாதிரி, இதுவும் ஒரு அழகான திராட்சை தோட்டங்கள் சுத்தி இருக்கிற ஊர். மலை மேல முருகன் கோவில் மாதிரி ஒரு அழகான தேவாலயம். நெறைய ஊர்ல நான் பாத்திருக்கேன், பெரிய பெரிய தேவாலயங்களை மலை மேல கட்டியிருக்காங்க. கிறித்தவர்கள் பொதுவா ஒவ்வொரு ஞாயிறும் கண்டிப்பா தேவாலயம் போவாங்க, மலை மேல ஏறி ஒவ்வொரு வாரம் போறதும் அதுவும் குளிர் காலத்துல போகும் போது, உடலையும் மனதையும் ரொம்ப ஆரோக்கியமா வச்சிருக்கு.

முக்கியமா அங்க பாக்க போனது, ஸ்மாக்ட்டன்பெர்க் இடிபாடுகள். உண்மை நிலைய பார்த்த பிறகு, நான் நினைச்சுக்கிட்டேன், டாய் நாலு குட்டிச்சுவரை காட்டி இதை ஒரு கோட்டைங்கிறீங்களே. அப்ப தான், அங்க ஒரு பெரிய போர்டு பார்த்தேன், அந்த கோட்டை இடிபாடுகளுக்கு முன்னாடி எப்படி இருந்திச்சுனு ஒரு வரைபடம். அது ஒரு பெரிய வித்யாசம், அத பார்த்த பிறகு இடிபாடுகளை பார்க்குற கண்ணோட்டம் மாறிடுச்சு.

20220825150039178.jpeg

அது போக ரெண்டு விஷயம்,

1. சின்ன ஊர்தான், ஆனா நடந்து போகும் போது ஒரு பெரிய நிதி துறை கட்டிடம் பார்த்தேன். நண்பர்கிட்ட கேட்டேன், என்னங்க இது நம்ம வரி கட்டறோமே அந்த நிதி துறை கட்டிடமான்னு? அவரு ஆமாங்கண்ணார் (5000 பேர் இருக்குற ஊருக்கே). மேலும் அதப்பத்தி, ஏன் கூட வேல பார்க்கிற ஒருத்தர்கிட்ட கேட்ட போது, அவங்க சொன்னாங்க, வரி வசூலிக்கிற வேல அந்தந்த ஊர்கிட்ட தான் இருக்கு, அதுல இருந்து ஒரு பகுதியைத்தான் மத்திய அரசுக்கு அனுப்பறாங்க. செம ஐடியா இல்ல? அப்ப தான் புரிஞ்சது, ஏன் என்னோட கம்பெனி தலைமையகம் இருக்கிற ஊர் இவ்வளோ செழிப்பா இருக்குன்னு.அதனால தான் முக்கால் வாசிக்கும் மேல் ஜெர்மன் கம்பெனிகள், ஒரு சின்ன கிராமத்துல இருக்கு, என்ன தான் நிறுவனர்கள் அந்த ஊர்ல பொறந்ததுனால அந்த கம்பெனி அங்க இருந்தாலும், அந்த ஊர் நிர்வாகம், அந்த கம்பெனியை அந்த ஊருக்குள்ளேயே வைக்கறதுக்கு என்னென்ன தேவையோ அத எல்லாத்தையும் செஞ்சி கொடுக்கறாங்க. என்னோட ஊர் வடமலைப்பட்டி என்ன தான் பெரிய பாரிஸ் ரேஞ்சுக்கு இல்லாட்டியும், ஜெர்மனி முறைப்படி வசூல் செஞ்சிருந்தா, ஒரு வேளை செழிப்பா இருந்திருக்குமோ? சந்தேகம் தான்

20220825150104808.jpeg

2. திராட்சை தோட்டத்து வழியா நாங்க கூட்டமா நடந்து போகும் போது, எதிர்ல ஒரு வண்டி வந்திச்சு. டிரைவர் வண்டிய நிறுத்தி- தோட்டக்காரர் போல - மேல உக்காந்து சரக்கடிச்ச கூட்டம் நீங்கதானா ன்னு கேட்டார். கூட வந்த ஐதராபாத் நண்பர் சொன்னார், இல்லங்க நாங்க இப்ப தான் இந்த பக்கமே வறோமுன்னு. அப்ப அந்த ஊர்காரர் சொன்னார், உங்க முகத்தை பார்த்த உடனே தெரிஞ்சுது நீங்க இல்லனு, இருந்தாலும் கேட்டேன்னு. ரொம்ப கொழுப்பையா உமக்குன்னு நெனைச்சுக்கிட்டோம். நல்லா யோசிச்சப்ப, ஒரு வேல எனக்கு ஒரு ஆப்பிள் தோட்டம் இருந்து இந்த மாறி ஒரு மலையேற்ற கூட்டம் அது வழியா போயிருந்தா, நானும் அவங்கள பயமுறுத்த அப்படி ஒரு கேள்வி கேட்டிருப்பேனோ?

சரி, பொன்னியின் செல்வன் எந்த தேட்டர்ல ஓடுதுன்னு தேடணும். மீண்டும் அடுத்த வாரம் வேறு ஒரு சுவாரசிய செய்தியோடு.