தொடர்கள்
கவிதை
சூழும் சாதியெனும் இருட்டு...!! - கோவை பாலா

20220824073037715.jpg

பள்ளிச் சிறுவனின் கேள்வி ஒன்று...

கள்ளி முள்ளாய் தைத்தது இன்று...!

சங்கரன்கோவிலில் எழுந்தது கேள்வி ...

சங்கடத்தில் நெஞ்சில் எரிந்தது வேள்வி...!

பள்ளிச் சிறுவர்கள் பழக்கம் போலும்,

கடையில் நிற்கிறார் இனிப்பு வேண்டி...

இனிப்புக் கடைக்காரர் மறுக்கின்றார்,

இனிப்பு இனியில்லை உங்களுக்கென...!

புதிதாய் மறுப்பு இன்று வந்ததென்று

புரியாது சிறுவர்கள் ஏன் என்றார்..?

பஞ்சாயத்தில் எடுத்த நிலைப்பாடு...!

இனிப்புக்கு வந்தது கட்டுப்பாடு...!

கடைக்காரர் விளக்கம் விளங்காது,

"கட்டுப்பாடா"...! அப்படி என்றால்...?

பச்சிளம் பிள்ளைகள் கேட்கிறது...!

நச்சென்று முள்ளாய் குத்துகிறது...!

பெற்றோர்களிடம் சொல்லுங்கள்...

பொருள் இல்லை உங்கள் சாதிக்கு...!

வஞ்சகமாய் செய்தி அனுப்பும்,

வியாபாரியின் நோக்கம் என்ன...?

பிஞ்சு உள்ளங்களில் சாதி எனும்

நஞ்சு விதையை விதைக்கிறாரா ?

சாதியெனும் சிந்தனையே வக்கிரம்...!

ஓதி அதை வளர்ப்பது அக்கிரமம்...!

அடிமை விலங்கை உடைத்தெறிந்து

ஆண்டுகள் எழுபத்து ஐந்தானாலும்,

நாட்டாமை தீர்ப்பின்றும் நிகழ்கிறது...!

அடிமையின் அவலம் தொடர்கிறது...!

சாதி இரண்டொழிய வேறில்லை

ஔவை மூதாட்டி சொன்னது யாது?

கொடுத்து மகிழ்வர் உயர்ந்த சாதி...!

கொடுக்க மறுப்பவர் இழிந்த சாதி...!

அத்தனையும் இன்று உருமாறி....

சமூகமும் சாதியும் சார்ந்தே வந்தது...

உயர்வு தாழ்வு பிரிவினை தந்தது...!

அடிப்படையில் மாறாத இந்நிலை,

மாறவிடாது அரசியல் சூழ்நிலை...!

சமூகநீதி சமத்துவம் என்றெல்லாம்

சாயம் பூசுகின்ற வார்த்தைகளால்

மாயம் செய்தின்று மக்களைத் தான்

மடையர்கள் ஆக்கும் தலைவர்கள்...!

நாட்டுக்கு நன்மையை மறந்து,

ஓட்டுக்கு நடக்கின்ற அரசாங்கம்,

சாதிபட்டியல் பார்த்து கொடுக்கும்

பதவியும் பட்டமும் மக்களின்

கண்களை மூடியே மறைக்கும்...!

யாரும் உண்மைக்கு உழைக்கவில்லை..!

மக்கள் உயர்வை நினைக்கவில்லை...!

வெட்கித் தலை குனிய மனமுமில்லை...!

எத்தனை காலம் சூழும் சாதிஇருட்டு...?

விடிவுதான் வருமோ இதன் பொருட்டு...??

பாலா

கோவை