தொடர்கள்
கதை
தக்வா. - ஆர்னிகா நாசர்

20220824080604435.jpg

கோவை தெற்கு உக்கடம். பொன்விழா ஜமாஅத் பள்ளிவாசல். பஜ்ரு தொழுகை தொழுது முடித்துவிட்டு ஒரு ஓரமாய் அமர்ந்து இறைவனின் திருநாமங்களை திக்ர் எடுக்க ஆரம்பித்தார் அப்துல் தவாப்.

அப்துல் தவாப்புக்கு வயது 65 பொதுப்பணித்துறையில் கண்காணிப்பு பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரின் மனைவி பெயர் ஆபிதா பேகம், வயது 60 இருமகள்களையும் நன்கு படிக்க வைத்து நல்ல இடங்களில் திருமணமும் செய்து கொடுத்துவிட்டார் அப்துல் தவாப். இரு பேரன்கள் ஒரு பேத்தி. ஓய்வூதியம் மாதம் 82000 வருகிறது.

மணி காலை எட்டு.

காலை சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு தனது அறைக்கு நடந்தார் முகமது அன்ஸாரி பாகவி. வழியில் அமர்ந்திருந்த அப்துல் தவாப்பை பார்த்துவிட்டார் பாகவி.

“அஸ்ஸலாமு அலைக்கும் தவாப் பாய். காலை டிபன் சாப்பிடப் போகல…”

“வஅலைக்கும் ஸலாம் வரவர திக்ர் எடுக்க ஆரம்பித்தால் நேரம் காலம் போவதே தெரியமாட்டேன் என்கிறது இமாம்…”

‘இறைவழிபாடோட உடலையும் பேணுங்கள் தவாப் பாய். காலை டிபன் சாப்பிடுறீங்களோ இல்லையோ பிபிசுகர் மாத்திரை விழுங்கனுமில்ல?”

“திக்ர் எடுக்க எடுக்க பிபிசுகர் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும் இமாம்!”

ஒன்றும் சொல்லாமல் சிரித்தார் பாகவி.

“இமாம்… உங்ககிட்ட ரொம்பநாளா ஒண்ணு கேக்கனும் ஒண்ணு கேக்கனும்னு நினைச்சிட்ருக்கேன்!”

“கேளுங்க!”

“என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் இமாம்?”

“பத்து வருடங்களாக உங்களை பார்க்கிறேன், பஜ்ரு தொழுகையை முதல் வரிசையில் நின்று தொழுகிறீர்கள். பள்ளி இமாம் மோதினார் தவிர பள்ளியில் அதிகம் காணக்கிடைப்பது நீங்கதான். பாங்கு சொன்னவுடன் பள்ளிக்கு வந்து நபில் தொழுகைகளை தொழ ஆரம்பிச்சிருவீங்க. மொத்தத்தில் நீங்க மிக சிறப்பான ஐவேளை தொழுகையாளி…”

அகமகிழ்ந்து போனார் அப்துல்தவாப்.

“உங்க பாராட்டுக்கு நன்றி. இன்னொரு முக்யமான கேள்வி…”

“கேளுங்க பாய்!”

“நம்ம ஜமாஅத்ல தக்வா உள்ள தொழுகையாளி யாருன்னு நினைக்றீங்க இமாம்?”

“தக்வாவை சுருக்கமாக ‘இறையச்சம்’ என சொல்லலாம். தக்வா உள்ள தொகையாளி என யாருக்கும் நான் சான்றிதழ் கொடுக்க முடியாது, அந்த சான்றிதழ் கொடுப்பதற்கான தகுதி என்னிடம் இல்லை!”

“கண்ணெதிரே இருந்தும் வைரக்கலை பார்க்கவில்லை என்கிறீர்களே இமாம்?” காலை மடித்து அப்துல் தவாப் எதிரே அமர்ந்தார் பாகவி.

“பாய்! தக்வா பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பெருமை பேசுகிறீர்கள். தக்வா ஏழு வகைப்படும். ஒன்று- இஸ்லாம் பற்றியும் அல்லாஹ் பற்றியும் நபிகள் நாயகம் பற்றியும் அவநம்பிக்கை தவிர்த்தல்.

இரண்டு- காதில் விழும் அத்தனை தவறான செய்திகளையும் புறக்கணித்தல்.

மூன்று- பிரதான பாவங்களிலிருந்து விலகி நிற்றல்.

நான்கு- சிறுசிறு பாவங்களை செய்யாமல் ஒதுங்கல்.

ஐந்து- சந்தேகமான விஷயங்களை தவிர்த்தல்.

ஆறு- பேராசை, நப்ஸின் விருப்பங்கள், தற்பெருமையை முற்றிலும் விரட்டுதல்.

ஏழு- அல்லாஹ் தவிர மீதி விஷயங்களில் கவனத்தை திருப்பாது இருத்தல்..”

“இந்த ஏழுவகை தக்வாக்களையும் நான் பின்பற்றித்தான் வருகிறேன் இமாம்!”

“தக்வாவை மிக சுருக்கமாக குறிப்பிட வேண்டும் என்றால் தக்வா நிலையடைந்தோர் ‘அல்லாஹ்வின் நண்பர்’ என குறிப்பிடலாம்!”

“ஏன் நான் அல்லாஹ்வின் நண்பனாக இருக்க கூடாதா?”

“தக்வா என்பது அல்லாஹ்வை பெறுவதற்கு தன்னை நியாயவிலைக்கு விற்றல் ஆகும்!’’

“அல்லாஹ்வை பெற என்னை நானே சொற்பவிலைக்கு என்றோ விற்றுவிட்டேன் இமாம்”

“தக்வாவை பற்றி முழுமையாக பார்ப்போம் தவாப் பாய்….”

“சொல்லுங்க!”

“இறையச்சம் என்பது நமது தொழுகையிலும் நோன்பிலும் ஜக்காத்திலும் மட்டும் வெளிப்படுவது அல்ல. தாடிவைப்பதும் பர்தா அணிவதும் இறையச்சம் ஆகாது. இஸ்லாமின் அடிப்படையில் ஒருவர் இருக்கிறாரா என்பது முக்கியமில்லை. ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரது இறையச்சம் தீர்மானிக்கப்படுவதில்லை..”

“பின்ன?”

“எதாவது ஒரு அற்ப காரணத்துக்காக ஒரு நேர தொழுகையை ஒருவர் விடும் போது அவரின் உள்ளத்தில் குற்றஉணர்ச்சி பீரிட வேண்டும். லட்சம் உண்மைகளுக்கு நடுவே ஒருவர் ஒரு பொய்யை கூறும் போது அவர் உள்ளம் நடுங்க வேண்டும். ஒருவர் மனதை ஒருவர் துன்பப்படுத்தி இருந்தால் அந்த ஒருவரின் உள்ளம் வேதனைப்பட வேண்டும். அல்லாஹ் தடுத்த காரியத்தை விரும்பியோ விரும்பாலோ செய்து விட்டால் நாளை அல்லாஹ்வின் முன் நின்று பதில் சொல்ல வேண்டுமே என்கிற பயம் வேண்டும். பெற்றோருக்கு மாறு செய்தால் இரவு தூங்க முடியாது. இரவில் தனிமையில் அல்லாஹ்வின் மீதான அச்சத்தால் கண்ணீர் விடுதல். யார் பார்க்கா விட்டாலும் அந்தரங்கமான வாழ்க்கையில் அல்லாஹ் பார்க்கிறான் என பயந்து பாவம் செய்யாதிருத்தல். உலகம் இறைவிசுவாசிகளுக்கு சிறைச்சாலை என தெரிந்தும் புன்னகையுடன் சந்தோஷத்துடன் வாழ்தல். நற்பண்பு நற்குணம் சகமனிதர்களை நேசிக்கும் சுபாவம் தேவை. ஒவ்வொரு நாளையும் இஸ்லாம் கற்றுத்தந்த ஒழுக்கத்தில் வாழ்வது மொத்தத்தில் இறையச்சம் மிகமிக விலையர்ந்த உணவு பதார்த்தம். அதன் சுவையை கண்டுவிட்டால் வாழ்க்கையில் வேறோரு பண்டமும் ருசிக்காது!”

“இத்தனையையும் நான் செய்து கொண்டுதானே இருக்கிறேன்!”

“எல்லாம் சரி.. உங்களுக்கு மிகவும் பிடித்த நாலு பிறமத சகோதர நண்பர்களின் பெயர்களை கூறுங்கள் பார்ப்பம்!”

தயங்கினார் அப்துல் தவாப். பின் “காபிர்களுடன் நான் ஏன் பழகவேண்டும்?”

“உலகின் நூத்திசில்லரை கோடி முஸ்லிம்களுக்கு மட்டும்தான் அல்லாஹ் இறைவன் என நினைத்தீர்களா? பிரபஞ்சத்தின் பில்லியன் ஜில்லியன் ஜீவராசிகளுக்கும் அவனே கடவுள்.. சகமனிதர்களை வெறுக்கும் உங்களின் இறையச்சம் எப்படி உண்மையானதாக இருக்கும்? இறைவன் இல்லவே இல்லை என்கிற நாத்திகர்களுக்கும் இறைவனே படியளக்கிறான். உங்களுக்கு சொர்க்கம் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் பிறர் அனைவரும் நரகவாசிகள் எனவும் சிந்திப்பது அற்பதனமானது. முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் காபிர் என்கிற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள் பாய்!”

“இனி தேடிப்போய் பிறமத சகோதரர்களுடன் நட்பு பாராட்ட முடியுமா இமாம்?”

“ஏன் தேடிப் போக வேண்டும். தினசரி நீங்கள் அன்றாடவாழ்க்கையில் சந்திக்கும் நூற்றுக்கணக்கான பிறமத சகோதரர்களுடன் ஆத்மார்த்தமாக நட்பு பாராட்டுங்கள். நாம் கடவுளை நண்பனாக்க முயற்சிக்கிறோம். சூபிகளோ கடவுளை காதலனாக்க முயற்சிக்கிறார்கள் பிறமத சகோதரர்களை ஒரே கருப்பையில் வளர்ந்த உடன்பிறப்புகளாக பாவியுங்கள். அவர்களுடன் உங்கள் கடவுள் பொய் எங்கள் கடவுள் உண்மை என தர்க்கம் பண்ணாதீர்கள். அவரவர் மதம் அவரவருக்கு.”

“அவர்களுடன் நட்பாய் பழக முயற்சிக்கிறேன்!”

“நட்பு பாராட்டுவதில் துளியும் செயற்கைதனம் கூடாது. பிறமத சகோதரர்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் உதவிகள் செய்யுங்கள். உங்கள் உணவை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மனிதாபிமானமும் மனித நேயமும் தக்வாவின் இரு ,இறக்கைகள். திருக்குர்ஆனில் நூறுதடவைகள் தக்வா என்கிற வார்த்தைகள் வருகின்றன. தக்வா என்கிற பொருள்படும் வார்த்தைகள் 250 இடங்களில் வருகின்றன. சகமனிதர்களுடன் நட்பையும் உறவையும் முழுமையாக பாராட்டி தினசரி வாழ்க்கையில் தக்வாவை ஆயிரம் தடவைகள் நடைமுறை படுத்துங்கள் நண்பரே!”

“அறிவுரைக்கு நன்றி இமாம்!”

“தக்வா என்பது உங்களுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள அந்தரங்கமான விஷயம். தற்பெருமை பேசி அதனை அம்பலப்படுத்தாதீர்கள். உணவு, ஆடை, காமம், இசை, உரையாடல் மற்றும் நண்பர்கள் விஷயத்தில் தொடர்ந்து நீதமாய் இருப்போம். வாழ்க்கை முள் நிறைந்த பாதை என்பதை அறிந்து முள்களை அகற்றி பாதுகாப்பு பயணம் மேற்கொள்வோம்…”

“ஓவ்!’

“உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே நடந்த தாம்பத்யத்தை பொது சபையில் கூறி பெருமை அடித்துக் கொள்வீர்களா? மாட்டீர்கள் அல்லவா? அனைத்து வகை வழிபாடுகளின் உச்சபட்ச விளைவு ‘தக்வா’ ஆகும். தக்வாவுக்குள் மாம்பழ வண்டாய் இருங்கள் பாய்!”

“சுமார் 28வருடங்களாக இமாம் பணி செய்துவருகிறீர்கள். நீங்கள் தக்வாவில் சிறந்தவர்தானே?”

அர்த்தபுஷ்டியாய் அப்துல் தவாப்பை வெறித்தார் பாகவி.

“தக்வாவில் நான் எந்த தரத்தில் இருக்கிறேன் என்பது எனக்கு தெரியாது. அதனை பற்றி விவாதிக்கவும் விரும்பவில்லை..”

எழுந்து தன்னறைக்கு சென்றார் இமாம். காலை உணவை முடித்து விட்டு வாய் கொப்பாளித்தார். திருக்குர்ஆனை எடுத்து மூன்றுமணி நேரம் தொடர்ந்து ஓதினார்.

அறை முழுக்க தெய்வீகம் சாம்பிராணி புகையாய் கமழ்ந்தது.