தொடர்கள்
கதை
அறுசுவை ஜங்ஷன் - ராம்பிரசாத் தேசிகன்

20220824075442415.jpg

பசுபதிக்கு சின்ன வயசுலயிருந்தே நாக்கு கொஞ்சம் நீளம். அம்மா வகை தொகையாக சமையல் பண்ணிப்போட்டதால நாக்கு வளர்ந்ததா, இல்லைனா ஏதும் சாபமானு தெரியலை! வெளில ஏதும் சாப்பிட்டா குறைஇருந்தா ஒண்ணும் சொல்லாம ஒதுக்கி வச்சுருவான். ஆனா வீட்டில கதை வேற, சாப்பாட்டை வாயில வச்சஉடனே இதுல உப்பு அதிகமாக இருக்கு, இது உப்பிலியப்பன் கோயில் ப்ரஸாதம், பால் தீய்ஞ்சு போச்சு, காய்முத்தலா இருக்கு, இன்னும் கொஞ்சம் முந்திரி போட்டிருக்கலாம் அப்படி இப்படினு நொள்ளை, நொட்டைசொல்லாம சாப்பிட்டதே இல்லை. நல்லா இருந்தா அதைச் சொல்லத் தெரியாது, நக்கீரன் பரம்பரையோஎன்னவோ?!!

சாம்பார் சட்னியோட நம்ம ஊர் இட்லி, பொடி தோசை சாப்பிட்டு பழகின பசுபதிக்கு மும்பை இறக்குமதியானபார்வதி வாழ்க்கைத் துணையாக வந்தது தான் விதியோ? பார்வதி பெயருலதான் 1950 மத்தபடி மாடர்ன்டைப், வேலை பார்த்துக் கொண்டே வீட்டு நிர்வாகம்.

கல்யாணம் நல்லபடியா முடிஞ்சு தனிக்குடித்தனம் வந்தாச்சு. பசுபதி அவசரமா ஆபீஸ் கிளம்பித் தயாராகிடிபன் சாப்பிட வந்தான். கூடவே ரெடியான பார்வதி டேபிள்ல உட்கார்ந்து கெல்லாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தா‌ள். ‘வாங்க, கெல்லாக்ஸும், பாலும் வச்சுருக்கேன், எடுத்துக்குங்க’ என்று சொல்ல,பசுபதியின் முகம் சாக்கோஸ் போலக் கறுத்து மீண்டும் கெல்லாக்ஸ் சிரியல் போல மலர்ந்தது, புது மனைவி ஆச்சே! கிடுகிடுவென அள்ளிப் போட்டுக் கொண்டு டிபன் காரியரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். மீட்டிங்எல்லாம் முடித்து விட்டு சாப்பிட வரும்போது மத்தியானம் 2.30 மணி ஆச்சு. சீட்டுக்கு வந்து டிபன் காரியரைப்பிரிக்க, ஒரு டப்பால ஜாம் தடவிய நாலு ப்ரெட் ஸ்லைஸும், இன்னொரு டப்பால முட்டைக்கோஸ்வெள்ளரிக்காய் சாலட்டும் இவனை முழிச்சுப் பார்த்தது. அகோரப்பசி பொங்கற பால்ல தண்ணி தெளிச்சமாதிரி புஸ்ஸுனு அடங்கிப் போச்சு. இராத்திரி வீட்டுக்குப் போகற போதே நேரமாக, பார்வதியும் அப்போது தான் உள்ளே நுழைஞ்சா. பின்னாலேயே அவள் ஆர்டர் பண்ணின சப்பாத்தியும் குருமாவும் ஸ்விக்கி மூலம் உள்ள வர இரவுச் சாப்பாடு முடிந்தது. பாவம், அவளுக்கும் ஆபீஸ் வேலை நிறைய இருக்கு, என்ன பண்றது?!

அடுத்த இரண்டு மூணு நாளைக்கு சாயந்திரம் சீக்கிரமே வீட்டுக்கு வந்தததுனால ஒரு நாள் ராத்திரி மஷ்ரூம்புலாவ், அடுத்த நாள் வறட்டுச் சப்பாத்தி, தால் தடுக்கன், மறுநாள் ராகி தோசைனு விதவிதமா பார்வதியின்கைப்பாகத்தில் வடநாட்டு சாப்பாட்டை ரசிச்ச பசுபதியின் நாக்கு சீக்கிரமே காரத்துக்கு ஏங்கிப் போச்சு.வாரம் கடந்து ஒரு மாசமாச்சு, மாசம் உருண்டு ஒரு வருஷம் ஓடிப் போச்சு.

இன்னமும் பசுபதிக்கு அந்த புளித்தண்ணி பூரியிலேயும் வறட்டுச் சப்பாத்தியிலேயும் என்ன ருசி இருக்குன்னேபுரியலை. அம்மா வந்து பார்த்துட்டு எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டயேடானு புலம்பற மாதிரி இளைச்சுப்போயிட்டான். ஆனா ஒரு நல்ல நியூஸ், பசுபதி அப்பா ஆகப் போறான்.

பார்வதி பிறந்த வீட்டுக்கு சீராடப் போன நாளெல்லாம் பசுபதிக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஆனாமாப்பிள்ளை கஷ்டப்படக் கூடாதுனு மாமியார் இவங்க வீட்டுக்கே வந்து டேரா போட்டு பானிபூரியும்வடாபாவும் வாரி வழங்க வயிறு திரும்ப சுருங்கிப் போச்சு.

குழந்தை பிறந்த உடனே இனி குடும்பந்தான் முக்கியம்னு முடிவு பண்ணின பார்வதி வேலையை விட்டுட்டா.குழந்தை ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்ச உடனே கவனமெல்லாம் பசுபதி பக்கம் திரும்ப, இளைச்சுப் போன பசுபதியைப் பார்த்து பரிதாபப்பட்டு தானே மதராஸ் சமையலை கத்துக்க முடிவு பண்ணினா!!! முதல்லசந்தோஷப்பட்ட பசுபதி அப்புறம் வறட்டுச் சப்பாத்தியே பரவாயில்லைனு நினைக்கிற மாதிரி ஆகிப்போச்சு. வீட்டுல சமையலறை பரிசோதனைக் கூடமாச்சு. சொல்லணுமா, எலி வேற யாருமில்லை, நம்ம பசுபதி தான்.


ஒருநாள் பார்வதி மாய்ஞ்சு மாய்ஞ்சு கோதுமை மாவை பிசைஞ்சு கிச்சன் சூட்டுல அடுப்படில நின்னுகிட்டேவேர்வையோட பூரி, கிழங்கு போட்டுத் தர, 'இது எதுக்கு தட்டைக்கு மசால் சைட்-டிஷ் பண்ணியிருக்கே'னுதெரியாமக் கேட்டுட்டான். அப்புறமென்ன, அடுத்த ஒரு வாரம் வேகாத வெயில்ல வெளியில் போய் சாப்பிடவேண்டியதாப் போச்சு. (கல்யாணம் முடிஞ்சு அஞ்சு வருஷம் ஆச்சே!)

கெல்லாக்ஸ்ஸுக்கு பை சொல்லிட்டு காலைல டிபன் சாப்பிட உட்கார்ந்தா, முன்னால ஒரு தட்டுல களியும், இன்னொரு டபரால கருகின கடலை உருண்டை மாதிரி வேறேதோ கொண்டு முன்னால வச்சுட்டு பார்வதிஅவன் முகத்தை ஒரு எதிர்பார்ப்போட பார்க்க பசுபதி திருட்டு முழி முழிச்சான். அப்புறம்தான் தெரிஞ்சது அதுவெண்பொங்கலும் வடையும்னு. அதைக் கண்டுபிடிக்கப் பட்டபாடும், மென்னு முழுங்கின வேதனையும்இன்னமும் மறக்கலை. ஆனா பார்வதிக்கோ சமையல் கலைல(!!?) இன்னும் அதீதமான ஈடுபாடு வந்துடுச்சு!

ஒரு கல்யாணத்துல மலையாள டிஷ் தீயல்னு ஒரு டைப்பான வத்தக்குழம்பு மாதிரி ஏதோ பரிமாற, அடுத்த நாள்வீட்டுல வழக்கமா பண்றத விட இன்னும் அதிகமா தீய்ஞ்ச குழம்பு பெருமிதமா தட்டு முன்னால ஸ்பெஷல்டிஷ்ஷா வந்து உக்கார்ந்தது. கண்டிப்பா அடுத்த நாலு நாளைக்கு இதே தீயல்தான்னு தெரிஞ்ச பசுபதி, இல்லாத ஆபீஸ் வேலையைக் காரணமாச் சொல்லி பாண்டிச்சேரி போய் அடுத்த மூணு நாள் சொந்தக் காசுசெலவழிச்சு அங்க ஹோட்டல் கண்றாவியைச் சாப்பிட்டுத் திரும்பினான்.

ஒரு வாரம் மார்க்கெட் போனபோது பார்வதி இரண்டு மூணு மண்சட்டி, பானையெல்லாம் வாங்க, வரப்போறவிபரீதம் அப்போது புரியலை. அடுத்த நாள் சாப்பாடு லேட்டாகி இலைல சாப்பாடு போட்டவுடனே அள்ளிசாப்பிட்டவனுக்கு ஏதோ மண் வாசனை அடிச்சது, கூடவே சாப்பாடும் மண்சோறு மாதிரி இருக்கவே ஒருமடக்கு தண்ணி குடிச்சு உள்ளே தள்ளின பசுபதி முன்னால கரண்டியோட பார்வதி 'என்னங்க, மண் பானைசமையல் ஒரிஜினல் டேஸ்ட்டோட இருக்கா?'னு ஆர்வமா கேட்க, மண்பொம்மை மாதிரி தலையைஆட்டினான்.

ஆரம்பத்துல சௌஜன்யமா வீட்டுக்கு வந்து சாப்பிட்டு சொந்தத்தைக் கொண்டாட வந்த பங்காளி எல்லாம்இப்போ வரும்போதே நாங்க இப்பத்தான் வீட்டுல வயிறு முட்ட சாப்பிட்டு வந்தோம்னு சொல்லிதப்பிச்சுடறாங்க. ஒரு தடவை அவங்க வந்துட்டு போன உடனேயே பசுபதியும் பின்னாலேயே கடைக்குப்போக, பங்காளி குடும்பத்தோட சரவணபவனுக்குள்ளே போறதை பார்த்ததுக்கு அப்புறம் தான் அவனுக்குஉண்மை தெரிஞ்சது.

சரி, நம்ம மாத்திரம் இந்த அன்புத் தொல்லையை அனுபவிக்கறது நியாயமில்லைனு நினைச்சு ஆந்திராவுலஇருந்து வந்திருந்த ஆபீஸ் ப்ரெண்ட் அனகொண்டராவ்-வை வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட அவனும் ஆசையாஓடோடி வந்தான். ஆந்திரவாடுனு கேட்ட உடனே சந்தோஷமான பார்வதி ஒரு திடீர் பெசரெட்டும் கூடவேபச்சை மிளகாய் சட்னியும் கொண்டு தட்டில் சரிக்க, நிறத்தைப் பாத்துட்டு ஏமாந்து போய் அள்ளிப் போட்டுக்கொண்ட அவனோட கண்ல வந்தது ஆனந்தக் கண்ணீரா என்னன்னு தெரியலை. ஆனா ஜருகண்டி சொன்னமாதிரி அவசரமா ஓடினவன் திரும்ப மெட்ராஸ் பக்கமே தலையைக் காண்பிக்கவே இல்லை. அதை உடுங்க, பசுபதியை ஃபேஸ்புக்லயும் வாட்ஸ்ஆப்பிலேயும், இன்ஸ்டாக்ராம்லேயும் ப்ளாக் பண்ணிட்டான்னாபாருங்களேன்.

ஒரு மாதிரி இந்த அன்புத் தொல்லையைத் தாங்கறதுக்கு கஷ்டப்பட்டு பழகினதுக்கு அப்புறம் ஆபத்து புதுசாஹைடெக் உருவெடுத்து யூட்யூப் மூலமாக வரும்னு பசுபதி எதிர்பார்க்கவே இல்லை. சீரியல் பாத்துட்டு இருந்தபார்வதி திடீர்னு சகவாச தோஷத்தில டீவி, மொபைல்ல யூட்யூப்ல வர்ற சமையல் குறிப்பெல்லாம் பார்க்கஆரம்பிச்சது வம்பாப் போச்சு. பழைய சோறு அல்வா, ஊசிப் போன இட்லியை வச்சு பக்கோடா, பீட்ரூட்ஐஸ்கிரீம், வெண்டைக்காய் ஸ்டஃப்ட் பரோட்டா, சேப்பங்கிழங்கு வடா பாவு அப்படி இப்படின்னுகண்டதையும் கலக்கி தூக்கிக் கொட்டற கும்பல் ஒண்ணு கலர் கலரா ட்ரெஸ்ஸை போட்டுட்டு வீடியோவைப்போட, அன்னிக்கு ஆரம்பிச்சது டார்ச்சர் சமையல் வெர்ஷன் 2.0. சாயந்திரம் ஆச்சுன்னா ஜன்னி வந்த மாதிரிபசுபதிக்கு உடம்பெல்லாம் நடுங்குது. அப்பவும் யூட்யூப்ல சொன்ன ஏதோ கத்தாழைக் கஷாயத்தைக் கலந்துகொடுக்க இரண்டு நாளைக்கு சாப்பாட்டை பார்த்தாலே குமட்டல் வர இப்போ அதையும் தாண்டி அடுத்தரவுண்டுக்கு ரெடியாயிட்டான்!

அடுத்த வாரம் மெனு ரெடி. குப்பைமேனிக் கீரை சாலட், சௌசௌ பர்கர், முடக்கித்தான் சட்னி, சேனைக்கிழங்கு ஐஸ்க்ரீம், அதோட சர்ப்ப்ரைஸ் (!!) ஸ்வீட்டும் உண்டு. நேத்து சாயந்திரம் தான் பர்மாபஜார்போய் நைட்ரஜன் டார்ச், பாஸ்தா மேக்கர் இன்னும் ஏதோ கேள்விப்படாத கர்மாந்திரமெல்லாம் வாங்கி 5000 ரூபாயை அழுதுட்டு வந்தான். அதோட சாப்பாட்டு மேலே அடக்கம் பண்ற மாதிரி தூவறதுக்கு, ஏதோகார்னிஷிங்-காமே!!, கூடவே உதிரிப்பூ, அருகம்புல் வாங்க நூறு ரூபாய் உதிரிச் செலவு.

இன்னும் ஒரு படி மேலே போய் அடுத்த மாசத்திலேயிருந்து சமையல் டிப்ஸ் கொடுக்க, தானே ஒரு யூட்யூப்சேனல் ஆரம்பிக்கப் போறதாவும் அதுக்கு ‘அறுசுவை ஜங்ஷன்’னு பேர் வைக்கப் போறதா பார்வதிஉற்சாகமாச் சொல்ல, பதறிப் போன பசுபதி, பார்வதி குறட்டை விட்டதுக்கு அப்புறம் எந்திரிச்சு, ராத்திரியேகையெல்லாம் நடுங்க யூட்யூப் சமையல் வீடியோக்களை நிறுத்தச் சட்டம் போடச்சொல்லி முதல் மந்திரிக்கும், உணவு மந்திரிக்கும், ஒரு அவசர இமெயிலும் தந்தியும் அனுப்பிச்சான். கூடவே பாதிக்கப்பட்டவங்க,பாதிக்கப்படப் போறவங்க சார்பா ஒரு கையெழுத்து பெட்டிஷன் தயார் பண்ணி தானே விதவிதமா ஒருஐநூறு கையெழுத்தைக் கிறுக்கி சுந்தர் பிச்சைக்கு பிரத்யேகமா மெயிலும், தந்தியும் கொடுத்தோட இல்லாம,அடுத்து பிறக்கப் போற பையனுக்கு திருப்பதியில மொட்டை போடறதா வேண்டிக்கிட்டு பொதுமக்களுக்குவரப்போற ஆபத்தை நினைச்சு பயத்தோட தூங்கப் போனபோது ராத்திரி மணி ரெண்டு.