மதியம் மணி இரண்டு. ராமசாமி மகனை பஸ்ஸில ஏத்தி விட்டுட்டு அங்கிருந்த நிழற்குடையில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் சிறிது உட்கார்ந்தார். இப்போது கிளம்பினால் தான் பையன் இரவுச் சாப்பாட்டுக்கு திருச்சி போய்ச் சேர முடியும். சரியான வெயில், நிழற்குடை பேருக்குத் தான்என்றாலும், வீட்டுக்குச் செல்லும் வழியில் நிழல் ஒன்றும் இல்லை, பஸ் ஸ்டாப்பில் இருந்து வெயிலில் பொடி நடையாக நாலு ஃபர்லாங் நடக்கணும் என்பதால் சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டார். எண்ணங்கள் பின் நோக்கி உருண்டோடின.
பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால பையனைக் கல்லூரியில சேர்க்கறதுக்காக திருச்சி போயிட்டு வந்தது இப்ப மாதிரி இருக்கு. படிச்சு முடிச்சுபையன் அங்கேயே வேலையிலேயும் சேர்ந்து, கல்யாணம் முடிஞ்சு அங்கேயே செட்டில் ஆயிட்டான். இப்போ வருஷம் இரண்டு தடவை ஊருக்குவந்துட்டு போகிறான். அப்போ ஒத்தை மாட்டு வண்டியில ட்ரங்க் பெட்டியோட அவனைக் கூட்டிட்டு போயி பஸ்ல ஏத்திவிட்டது இன்னும் தெளிவாஞாபகத்துல இருக்கு.
பஸ் ஸ்டாப்பில் இருந்து கிராமத்துக்குள் செல்ல மாட்டு வண்டியும் சைக்கிளும் போகிற அகலத்துக்கு மண்ரோடு இருந்தது. ரோட்டைஅணைச்சாப் போல அடர்த்தியான மரங்கள். நடப்பதே ஒரு சுகம். இருபுறமும் தானாக வளர்ந்து மண்டிய காட்டுச் செடிகள். தாண்டி வந்தால்வழியில தண்ணீர் நிரம்பிய குட்டை. அருகிலே ஒரு சிறு அம்மன் கோயில். வெளியிலே மண் குதிரைகள். அதைக் கடந்து செல்ல, தபால் நிலையம், பக்கத்துல பஞ்சாயத்து ஆபீஸ், எதிர்த்தாற் போல ஒரு ஆரம்பப் பள்ளி. ஒன்றிரண்டு பலசரக்கு, பெட்டிக்கடைகள். திரும்பினால் விவசாயிகள்குடியிருப்பு. இரண்டு தெரு தள்ளி பெருமாள் கோயிலுடன் அக்ரஹாரம்.
சிறிய அமைதியான கிராமம். கோயில், திருவிழா, பள்ளிக்கூடம், விவசாயம், தோட்டவேலை, வீட்டு வேலை, சிறு வியாபாரங்கள் இவை தான்வேலை வாய்ப்பு முகாந்திரங்கள். தெரு பூராவும் அதிகாலையில வாசல் தெளிச்சு போட்ட கோலங்கள், இரைதேடும் பறவைகளின் இசை கலந்தஅழைப்புகள், நீர்க்குட்டையில இருந்து ஈரம் கலந்த மண்வாசனை, குளித்துக் கும்பிடப் போகும் ஓரிருவர், உழவுக்கு மாடு ஓட்டிப் போகும் விவசாயி, தயிர் வியாபாரம் செய்யும் மூதாட்டி என அவர் கண் முன்னே காலை நேரக் கிராமத்துக் காட்சி விரிந்தது. ஒன்பது மணி வாக்கில தோள்ல பையோடவிளையாடிட்டே ஸ்கூலுக்கு போகிற பசங்க. மத்தியானம் முச்சூடும் சத்தோ சத்துனு இருக்கும். சாயந்திரமானா கோவில் மணிச்சத்தம், ஒருசுண்டல் பிரசாதம், இயற்கையான காத்துனு ஊருக்கே ஒரு கிராமத்து வாசனை இருந்தது. யாரும் பெரிசா சம்பாதிச்சு கோட்டையைக் கட்டலை, பட்டினியும் கிடக்கலை. யாரும் மற்றவருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து பொறாமைப்படலை. அவரவர் ஏதோ கிடைத்ததை வைத்துக் கொண்டுகுடும்பம் நடத்த வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.
எப்போ இந்த கட்சிப் பதவிங்களுக்கும் பணத்துக்கும் ஆசை கூடிச்சோ, சினிமாவெல்லாம் பார்த்து பட்டண மோகம் பெருகிச்சோ, கிராமத்துக்கதையே தடம் புரண்டு மாறிப் போச்சு. அரசியல்வாதிகளுக்கு ஊர்ல இருக்கிற நூறு ஓட்டு மேல ஒரு கண். சாலையோர மரங்களை வெட்டிச்சாய்ச்சுட்டு, ஊர்பூரா தார் ரோடு போட ஊரே சூடாகிப் போச்சு. ஊருக்குள்ள இருந்த கிண்ணத்தை மூடிட்டு நாலு தண்ணி பைப்பை வச்சானுங்க.அதையெல்லாம் ஒரு விழா வச்சு திறக்க ஒரு நாள் மைக்செட்டும், கட்சிக் கொடியும், சாயந்திரம் பாட்டுக் கச்சேரியுமா களேபரமா இருந்தது. வந்தவர்களுக்கு காலி மனைகளும்,புறம்போக்கு நிலங்களும் கண்ணை உறுத்த திடீர் மழையில் முளைச்ச காளான் போல படபடனு பார்க்கறஇடமெல்லாம் சின்னதும் பெரிசுமா கான்கிரீட் வீடுகள் வந்துடுச்சு. நீர்க்குட்டை இப்போ காய்ஞ்சு, குப்பைக் கிடங்காயிடுச்சு. கவர்மெண்ட்-லஎல்லாருக்கும் இலவசமாக டீவி கொடுக்க, பின்னாலேயே கேபிள் வயரை தோரணமாக் கட்டி எல்லார் வீட்டுக்குள்ளேயும் இருபத்து நாலு மணிநேரமும் சினிமாவையும் சீரியலையும் புகுத்திட்டானுங்க. உலகம் சுருங்கி தொலைக்காட்சி வழியா வீட்டுக்குள்ள நுழைஞ்சது. சின்னத்திரைலவெளி உலகத்தைப் பார்த்த இளவயசுப் பசங்களுக்கு புதுப்புதுக் கனவுகள். தற்போதைய நிதர்சனத்தை விட நாளையக் கனவைத் தேடி ஓடறகூட்டம் அதிகமாகப் போச்சு.
ஊரே மாறிப் போச்சு. பக்கத்து டவுண்ல வேலை பார்க்கறவங்க வாடகை கம்மினு இங்க வந்து சேர, ஜனக்கூட்டம் அதிகமாக, பள்ளிக்கூடம்பெரிசாகி காலைலேயும் மத்தியானமும் ஒரே ஷேர் ஆட்டோ போக்குவரத்து, ஒரு ஸ்கூல் வேன் வேறே. சிலபேர் மோட்டார் பைக் வச்சுருக்க ஒருத்தர்கார் வாங்கி வாடகைக்கு விட ஆரம்பிச்சார். சாயந்திரமானா எல்லார் வீட்டுக்குள்ளேயும் சீரியல்ல ஒப்பாரிச் சத்தம், இல்லைனா ஏதோ பாட்டுங்கறபேர்ல அர்த்தமில்லாத ஓசை.
உதவி பண்றதாச் சொல்லி அரசாங்கம் நூறு நாள் வேலைத் திட்டம் கொண்டு வந்து, கூடவே ஒரு டாஸ்மாக் கடையும் திறந்து வச்சது. ஒருவேலையும் உருப்படியா நடக்கலை. ஒரு பயலும் விவசாய வேலைக்கும் போக இஷ்டப்படலை. நூறுநாள் வேலைல சுலபமாகக் கிடைக்கறபணத்தை டாஸ்மாக்கில் கெட்டுப் போக்கிட்டு சுருண்டு கிடக்கான். கஷ்டப்பட்டு வேலை செய்ய யாருக்கும் இப்போ இஷ்டம் இருக்கற மாதிரித்தெரியலை. என்னத்தைச் சொல்ல !! பஸ் ஸ்டாப்ல புதுசா வந்த இரண்டு டீக்கடைலேயும் வியாபாரம் அமோகம். டீயும் மசால்வடையும்சாப்பிட்டுட்டு, ஓசிப் பேப்பர் பார்த்துட்டு சும்மா வம்பு பேசற கூட்டம் தான் அதிகமாப் போச்சு. வேலை இல்லாம இருக்கற மனசு சும்மா இருக்குமா? அரசியல்ல ஆதாயம் தேடறவன் சாதி மதம்னு கிளப்பி விட ஊரே தாறுமாறாப் பிரிஞ்சு கிடக்கு.
பொதிமாடு சுமக்கிற மாதிரி மக்களை திணிச்சுட்டு வந்த அடுத்த பஸ் புழுதியை அள்ளித் தெளித்து அவர் சிந்தனைகளைக் கலைக்க, மெதுவாஎழுந்திருந்தார். மாற்றங்களினால நிறைய வீட்டு வசதிகள், பள்ளிக்கூடங்கள், புதுப் புது வேலைகள், போக்குவரத்து எல்லாம் கூடிப்போய்வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தம் கிடைச்ச மாதிரி தெரிஞ்சாலும் உள்ளூர எதையோ இழந்துட்டோம்-ங்கற உணர்வு அவர் மனசை உறுத்திச்சு. இளவயசுல தானும் நம் கிராமம் பட்டணம் மாதிரி ரோடும் கடையுமா கலகலப்பா ஆகாதானு ஏங்கியது நினைவுக்கு வந்தது. வந்த மாற்றம்சரியில்லையா, வயசானதுனால வரும் விரக்தியா, தெரியல?! குறுகிய தார் ரோட்டில் பஞ்சாயத்துக் குப்பை வண்டி ‘நம்ம ஊரு செம ஜோரு’னு பாடிக்கிட்டு குப்பைமேட்டைத் தாண்டிப் போச்சு. அவரை சைக்கிளில் கடந்த ரெண்டு இளவயசுப் பசங்க 'டேய், கடைசி விவசாயி படம்பாத்தியாடா, சூப்பரா இருக்கு'-னு பேசிக்கொண்டு போக, தன் சுயரூபத்தை இழந்து கொண்டிருக்கும் கிராமத்தை நோக்கி தளர்நடையாகநடந்தார்.
தொடர்கள்
கதை
Leave a comment
Upload