சைவசமயத்தில் போற்றப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதன்மையான சிவனடியாராகப் புகழ்பெற்று வாழ்ந்தவர்தான் சுந்தரமூர்த்தி நாயனார். இவர் சமயக்குரவர் நால்வரில் ஒருவருமானவர். “தேவார மூவர்” என்று சிறப்பிக்கப்படும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோருள் இறைவனைத் தோழமை உணர்வோடு திருப்பாட்டுக்கள் பாடியவர் சுந்தரமூர்த்தி நாயனாராகும். இவர் பாடிய திருப்பாட்டினை, ‘சுந்தரர் தேவாரம்’ என்றும் அழைப்பர்.
“தில்லைவாழ் அந்தணர்தம் அடியாருக்கும் அடியேன்” என, ஆரூரில் தியாகேசர் திருத்தொண்டத் தொகைக்கு அடியெடுத்துக் கொடுக்க சுந்தரமூர்த்தி நாயனார் `திருத்தொண்டத் தொகை' என்ற அற்புத நூலை எழுதி சிவனடியார்களான நாயன்மார்களை உலகறியச் செய்தார். அந்த திருத்தொண்டத்தொகையை மூலமாகக் கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, நாயனாரின் எண்ணிக்கையை அறுபத்து மூவராக மாற்றினார்.
திருத்தொண்டர்களின் பெருமையைச் சொல்லும் திருத்தொண்டத் தொகை இல்லாவிடில் நாயன்மார்களின் பெருமையைச் சொல்லும் பெரியபுராணமே தோன்றியிருக்காது. இவர் தம்பிரான் தோழர்' என ஈசனுக்கே தோழராக இருந்து பேறு பெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார். இவர் கி. பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
திருநாவலூரில் அவதரித்த சுந்தரமூர்த்தி நாயனார்:
தென்தமிழ் நாட்டில் திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராகிய திருநாவலூரில் (விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் பெரிய சாலையில் பரிக்கல் எனும் இடத்தில் இருந்து கிழக்கு பண்ருட்டி செல்லும் பாதையில் திருநாவலூர் உள்ளது) ஆதி சைவ குலத்தில், சடைய நாயனாருக்கும், இசைஞானி நாயனாருக்கும் சுந்தரமூர்த்தி நாயனார் மகனாக திருவவதாரம் செய்தருளினார். பெற்றோர்கள் தவமிருந்து பெற்ற தங்கள் பிள்ளைக்கு நம்பியாரூரார் என்று இறைவனது திருநாமத்தைச் சூட்டி மகிழ்ந்தார்கள். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.
இராஜகுமாரனாய் மாறிய சுந்தரமூர்த்தி நாயனார்:
ஒரு சமயம் மன்னனான நரசிங்கமுனையரைய நாயனார் திருநாவலூர் பெருமானைத் தரிசித்து விட்டு வீதிவலம் வரும் பொழுது வீதியில் சிறு தேர் உருட்டி விளையாடும் சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டார். அக் குழந்தையின் அறிவொளி திகழும் திருமுகப் பொலிவினைக் கண்டு மகிழ்ந்து, அவரை வளர்க்கும் பாக்கியத்தைப் பெற்றோர்களான சடையநாயனாரிடமும் இசைஞானியாரிடமும் வேண்ட, அவர்களும் வேண்டுதலுக்கு இணங்கி நம் மகன் அரண்மனையில் வளரவேண்டும் என்பது திருநாவலூர் பெருமானின் விருப்பம் போல என்று அவருடன் தங்கள் மகனை முழு மனதோடு தத்துக் கொடுத்து, அனுப்பி வைத்தார்கள்.
மன்னன் நரசிங்கமுனையரைய நாயனார் சிறுவனான நம்பியாரூராரை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இராஜகுமாரனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். நம்பியாரூரரும் பல கலைகளில் தேர்ச்சி பெற்று திருவெண்ணெய் நல்லூரில் வளர்ந்து வந்தார்.
சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட் கொள்ளல்:
இராஜகுமாரனான சுந்தரமூர்த்தி நாயனார் திருமணப்பருவத்தை அடைந்ததும் மன்னன் நரசிங்கமுனையரைய நாயனார் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை அவருக்குத் திருமண ஏற்பாடுகள் செய்தார். மணநாளன்று முதிய அந்தணர் உருவில் அங்கு வந்த சிவபெருமான், “ஆரூரான் என் அடிமை” எனக்கும் அவருக்கும் ஒரு பெரும் வழக்குண்டு. அவ்வழக்குத் தீர்ந்தாலன்றி திருமணம் நடக்கக்கூடாது என்று திருமணத்தைத் தடுத்தார்.
திருமணம் தடைப்பட, சுந்தரமூர்த்தி நாயனாரை அழைத்துக்கொண்டு அவ்வூரிலிருக்கின்ற திருவருட்டுறை என்னும் சிவாலயத்தினுள்ளே போனார். கோயிலுக்குள் நுழைந்த முதிய அந்தணர் திடீரென மறைந்தார்.
சிவபெருமானே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், பித்தா பிறை சூடி.... என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார்.
“சக மார்க்கம்”
சுந்தரர் தமது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்த இந்நிகழ்ச்சியினைத் தொடர்ந்து சிவபெருமானைத் தொழுவதே தமது தொண்டெனக் கருதி, திருத்துறையூர், திருநாவலூர், சிதம்பரம் முதலான பல திருத்தலங்களுக்கும் சென்று பாடல்களின் மூலமாக இறைவனைத் தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். சிவபெருமான் மீது இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. சிவபெருமானைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். நீள நினைந்தடியேன்.... என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான்பெற்ற நெல்லைத் தனது ஊர் கொண்டு சேர்க்க சிவனாரிடம் உதவி கேட்பதைப் பார்க்கலாம். தம் பாடல்களில் சிவனாரைத் தோழமை உணர்வுடன் கடிந்தும் பாடியுள்ளார். இவ்வாறான பாடல்களே “நிந்தாஸ்துதி கீர்த்தனைகள் “ என்ற இசைப் பாடல் வகைப்பாட்டுக்கு ஆதாரமாகத் திகழ்ந்துள்ளன. பல ஸ்தலங்களுக்குச் சென்று பாடல்களைத் ‘திருப்பாட்டு’ என்று அழைக்கின்றனர். திருப்பாட்டினைச் ‘சுந்தரர் தேவாரம்’என்றும் அழைப்பர்.
சிவபெருமான் தம் திருவாயால் “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தவுடன், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த சிவனடியார்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். திருவாரூரில் வாழ் அடியவர்க்கெல்லாம் அசரீரியாக "உமக்குத் தோழரானோம்" என்றுரைத்தபடியால் சுந்தரமூர்த்தி நாயனாரை "தம்பிரான்தோழர்" என்று குறிப்பிடுவதுண்டு.
சுந்தரமூர்த்தி நாயனாரின் மணவாழ்க்கை:
திருவாரூரில் சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியார் என்பவரை மணந்து மகிழ்வோடு வாழ்ந்திருந்தார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டு அவர் மீதும் அன்பு கொண்டு அவரையும் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். பின்னர் தன் ஊழ்வினைக் காரணமாக இரு கண்களின் பார்வையையும் இழந்தார். திருமுல்லைவாயில், திருவெண்பாக்கம் ஆகிய தலங்களில் சென்று இறைவனைத் துதித்துப் பாட அவரது இடது கண் ஒளி பெற்றது. பின் திருவாரூர் சென்று இறைவனைப் பாடும் போது அவரது வலது கண்ணும் ஒளி பெற்றது.
சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்வில் நடந்த அற்புதங்கள்:
சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்வில் பல அற்புதங்கள் நடந்தன. சிவனார் சுந்தரமூர்த்தி நாயனாரின் தோழனாகிச் செய்த திருவிளையாடல்கள் கணக்கிலடங்காது.
சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாசலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
திருக்கண்டியூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் காவிரியாற்றில் வெள்ளம் விலகி வழிவிட்டது.
திருப்புகலூரில் - தலைக்கு அணையாக வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் எல்லாம் இறைவன் அருளால் பொன் கட்டிகளாக பெற்றுக் கொண்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் முதலை விழுங்கிய நான்கு வயது பாலகனை மூன்றாண்டு வளர்ச்சியுடன் ஏழு வயதுக்குரிய பாலகனாக மீட்டு கொடுத்து உபநயனம் செய்வித்தது ஊரும் உலகும் காண இந்த அற்புதம் அவிநாசியில் நிகழ்ந்தது.
திருக்கருகாவூரில் வெயிலின் கொடுமையைத் தணித்தற் பொருட்டு ஒரு குளிர்ந்த பந்தல் உருவானது. சுந்தரருக்கு உணவும் தண்ணீரும் சிவபெருமானே அந்தணர் வடிவம் கொண்டு கொடுத்தது எனச் சுந்தரரின் வரலாற்றில் நிகழ்ந்த அற்புதங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சுந்தரமூர்த்தி நாயனார் `திருத்தொண்டத் தொகை':
சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டாகும். இவர் பாடிய தேவாரங்கள், 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்னும் அற்புத நூலில், 60 நாயன்மார்களைப் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் `திருத்தொண்டத் தொகை' என்ற அற்புத நூலை எழுதி சிவனடியார்களான நாயன்மார்களை உலகறியச் செய்தார். இந்த திருத்தொண்டத்தொகையை மூலமாகக் கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடைய நாயனார், இசைஞானியார் நாயனார் ஆகிய மூவரையும் இணைத்து, நாயனாரின் எண்ணிக்கையை அறுபத்து மூவராக மாற்றினார்.
திருத்தொண்டர்களின் பெருமையைச் சொல்லும் திருத்தொண்டத் தொகை இல்லாவிடில் நாயன்மார்களின் பெருமையைச் சொல்லும் பெரியபுராணமே தோன்றியிருக்காது.
சுந்தரர் தேவாரம்:
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களைச் சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களைத் திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள். இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் முப்பத்து எண்ணாயிரம் என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளது. அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் நூற்றியொரு பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் பதினேழு பண்கள் இடம்பெற்றுள்ளன. தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல் பாடியுள்ளார்.
வெள்ளை யானையில் கயிலை அடைதல்:
சுந்தரமூர்த்தி நாயனார் 18-ஆவது வயதில் திருக்கயிலைக்கு மீளும் நாள் வந்ததாகக் கண்டு திருவஞ்சைக்களத்துக் கோயிலைப் பணிந்து இறைவன் திருவடிகளைப் போற்றி சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அனுப்ப, அதில் ஏறி கயிலை சென்றார். அங்குச் சிவபெருமான் பார்வதி சமேதராக வரவேற்று முக்தியளித்தனர்.
குருபூஜை நாள்:
இறைவனைத் தோழமை உணர்வோடு திருப்பாட்டுக்கள் பாடி திருத்தொண்டாற்றிய சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தன்று அவர் அவதாரம் செய்த ஸ்தலமான
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர்(சென்னை - திருச்சி டிரங்க் ரோடில் விழுப்புரம் தாண்டி உளுந்தூர்பேட்டைக்கு முன்பாக, மடப்பட்டு தாண்டி, பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே இடப்பக்கமாகச் செல்லும் பண்ருட்டி சாலையில் 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்) அ/மி. பக்தஜனேசுவரர் திருக்கோயிலிலும் முக்தியடைந்த ஸ்தலமும் ஆன கேரளா மாநிலம் திருவஞ்சைக்களம்(கொச்சியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சூரிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் கொடுங்கலூர் சென்று, அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் திருவஞ்சைக்களம் சென்றடையலாம்)அ/மி. அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர் திருக்கோயிலிலும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது.
பக்தஜனேசுவரர் கோயிலில் வெளிச்சுற்றில் கோபுரத்தை அடுத்து,மேற்கு முகமாக தனிசந்நிதி அமைந்துள்ளது, சுந்தரமூர்த்தி நாயனார் கையில் தாளத்துடனும்,தலையில் கொண்டை அமைப்புடனும் காணப்படுகின்றார். அருகே பரவை,சங்கிலியார் நிற்கின்றனர். அஞ்சைக்களத்தீஸ்வரர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமானும் சேர்ந்த நிலையில் தனிச்சன்னிதி இருக்கிறது. சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரை அழைத்து வருவதற்காக அனுப்பிய வெள்ளை யானை, சுந்தரரை ஏற்றிக் கொண்டு சென்றதாகச் சொல்லப்படும் மேடை ஒன்று, இங்குள்ள வீதியின் நடுவில் அமைந்திருக்கிறது. இம்மேடையினை ‘யானை வந்த மேடை’ என்று சொல்கின்றனர். ஆண்டுதோறும் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது. கிழக்கு ராஜகோபுர முன்புறத்தில் நுழையும்போது, பக்கக்கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வது போலவும், எதிர் சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரர், சேரமான் உருவங்களும் உள்ளன. (யானை வந்து ஏற்றிச் சென்றதாக ஐதீகம்) இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
“சிவபக்தி உயர்வுக்கு வித்திட்ட அறுபத்துமூன்று நாயன்மார்கள் வரலாறு இந்த வாரத்துடன் இனிதே முடிவுற்றது”
“நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!”
“திருச்சிற்றம்பலம்”
Leave a comment
Upload