பாலஸ்தீனம்-இஸ்ரேல் நாட்டின் எல்லை அருகே சுமார் ஒரு கிமீ தூரத்தில் உள்ள புரேஜ் அகதிகள் முகாமில் வசிப்பவர் சல்மான் அல்-நபாஹின். இந்த அகதிகள் முகாம் அருகே விவசாய நிலங்களில் மரங்களை நட்டு சல்மான் வளர்த்து வருகிறார். சமீபகாலமாக, குறிப்பிட்ட ஒரு இடத்தில் அவர் வைத்த மரங்கள் வேர் விடாமல் இருப்பதற்கான காரணத்தை கண்டறிய சல்மான் முயற்சித்தார். பின்னர் அங்கு ஆலிவ் மரத்தை நடுவதற்கு சல்மான் முயற்சித்தார்.
அதற்காக தனது மகனை பள்ளம் வெட்டும்படி சல்மான் சொல்லியிருக்கிறார். பள்ளம் தோண்டும் போது, அவரது மகனுக்கு 'டங்..டங்' என வித்தியாசமான சத்தம் கேட்டது. இதை கவனமாக கேட்ட சல்மான், அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்தார். அந்தப் பள்ளத்துக்குள், மிக நீண்ட பரப்பளவில் பழங்கால ஓவியங்களும் தத்ரூபமாக வரையப்பட்ட மொசைக் தரை இருப்பதை பார்த்து சல்மானுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
பின்னர், அந்த பழங்கால ஓவிய மொசைக் தரையை வீடியோ காட்சிகளாக பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அதன் விவரங்களை சல்மான் சேகரிக்க முயற்சித்தார். அப்போதுதான், அது 'பைசாந்திய காலத்து மொசைக் தரைகள்' என சல்மானுக்கு தெரியவந்தது. இந்த மொசைக் தரையில், பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் தத்ரூபமாக பொறிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சல்மானிடம் கேட்டபோது, "நான் இந்த பழங்கால ஓவிய மொசைக் தரை பற்றி இணையத்தில் தேடினேன். அது பைசாந்திய காலத்தைச் சேர்ந்த மொசைக் என்பதை அறிந்தோம். இது, புதையலைவிட மேலானது. எனக்கு மட்டும் அல்லது ஒவ்வொரு பாலஸ்தீன குடிமகனுக்கும் இது சொந்தமானது!" என்றார்.
'பைசாந்திய காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை, அப்போது வாழ்ந்த விலங்குகள் மற்றும் பறவைகளை பற்றி அறிய இந்த மொசைக் தளம் உதவும்!' என்று பாலஸ்தீனிய சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மேலும், 'இப்பகுதியில் தொல்லியல் கண்டுபிடிப்புகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மேலும், பல்வேறு ரகசியங்கள் மற்றும் பழங்கால நாகரீகங்கள் குறித்து அறிய நாங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்!' என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Leave a comment
Upload