
ஆள் பார்க்க உயரமாத் தான் இருப்பார். பருமனல்ல உடல். நெற்றியில் திருவெண்ணீறு. வயசு 64. இதாங்க நாரயணன் முத்தைய்யா. சென்னையில் வசிக்கும் இவரைக் கடந்த ஆறு வருஷங்களாக நன்றாகத்தெரியும். காரைக்குடி இவரது பூர்வீகம். எளிமையான ஈரம் கொண்ட பேச்சு. அப்பிடி இப்பிடி எல்லாம் பாத்ததும் கெடையாதே. அப்ப இது எப்பிடி ன்னு அவருக்கும் இந்த தலைப்புக்கும் சம்பந்தம் என்று நான் சப்பு கட்டை கட்டுவேன் என்று பார்க்கிறீர்களா?
நான் சொன்னது அம்புட்டும் நூத்துக்கு நூறு உண்மைங்க.
ஆங்…. அவரை எங்கள் நண்பர்கள் வட்டத்துல புலி நாராயணன்னு செல்லமா பயமில்லமா கூப்பிடுவோம்.
பின்ன என்னங்க! ஆறு வருஷத்துக்கு முன்ன, அன்னிக்கி அவர் வீட்டுல நடந்த ஐய்யப்ப பஜனைக்கு போயிருந்தோம். ஹாலில் பூஜை அலங்காரங்களெல்லாம் ஜோராக இருந்தன.
பூஜைக்கு இன்னும் சிறிது நேரம் இருக்கையில் வந்திருந்த என் போன்ற அய்யப்ப பக்தர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அந்த அறையின் சுவற்றில் தத்தித் தத்திக் குதித்து ஒடுவது போன்ற ஒரு புலியின் பெரிய போட்டோ ஒன்று பார்த்தோம். இவ்வளோ பெரிய படமா இருக்கே? "Wild life படம் னா புடிக்குமோ? படம் நல்லா இருக்கு. தத்ரூபமா இருக்கு. எந்த கடையில வாங்கினீங்கன்னு", அவரை கேக்க கேக்க ..
இது நான் எடுத்த போட்டோங்க என்றார். சமீபத்ல குஜராத்திலிருக்கும் கிர் வனப்பகுதியில் எடுத்தது. வாயடைத்துப் போனோம். கேள்விகள் நின்றன. படத்தை வந்திருந்த நாற்பது ஜோடி கண்களும் உற்று நோக்கின. ஆச்சர்யத்தில் அமிழ்ந்தன. அவ்வளவ்வ்வ்வ்வ் கிட்டத்தில் வைத்து ஏதோ போட்டோ ஸ்டுடியோவில் தலை வாரி பகுடர் போட்டு ,” இங்கப் பாரு…நேரா பாரு …அங்கிளப் பாருன்னு கவனம் ஈர்த்து எடுத்த போட்டோ மாறீ இருந்ததுங்க அது.
இன்ஸ்டன்ட் ஆக அந்த க்ஷணம் முதல் புலி நாராயணன் ஆனார்.
வன் புலி வாஹனனே என்றவாரே அனைவரும் பூஜையில் கலந்துகொண்டோம்.
போன மாசம் சென்னையில் அவரைப் பார்க்க நேரிட்டது. அப்போது தான் கென்யா மசாய் மாரா சஃபாரியிலிருந்து வந்து இறங்கியிருப்பதாக சொன்னார்.
இதுதான் முதல் அயல் நாட்டு வனப் பகுதியில் படமெடுக்கச் சென்றது என்றார். கடந்த எட்டு வருடங்களாக நிழற் படம் எடுத்து வருகிறாராம். இந்தியாவின் அனைத்து வனப்பகுதி சரணாலயங்களுக்கு சென்று வந்திருக்கிறார்.
அவரிடம் இருந்த ஆயுதம், ஐ மீன், காமிரா Canon 100/400 with telephoto lens தாங்க.
தனது பயணத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். அவர் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தவாரே கேட்க ஆரம்பித்தோம்.
வன விலங்குகளையும் பறவைகளையும் பிடித்து அடைத்து வைக்கும் பழக்கம் எனக்குண்டு. ஆனால் கூண்டில் அல்ல. காமிராவில்.
2016 முதல் வன விலங்குகளை படமெடுக்கும் பொருட்டு கானகங்களில் அலைந்து திரிந்து பல நாட்களை தொலைத்திருக்கிறேன். களைத்துப் போன பின் ஒரு புலியைப் பார்த்து படமெடுத்தால் வலியும் சோர்வும் பறந்துவிடும்.
[அவருக்கு வைக்கப்பட்ட அடை மொழி சரிதான் என்ற என்னோட மைண்ட் வாய்ஸ் உங்களுக்கு கேட்டு அது சரிதான் என்று உங்களுக்கும் பட்டிருக்குமே. குடுங்க ஒரு hi five.]
புலிகள் உலகில் சில நாடுகளின் மட்டுமே உள்ளன. நம் நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகம்.அவற்றை காண்பதும்எளிதே.
சிங்கங்கள் நம் நாட்டில் குஜராத்தில் கிர் வனப் பகுதியில் மட்டுமே உண்டு. Big Five என்று சொல்லக்கூடிய சிங்கம், சிறுத்தை, யானை, காட்டெருமை, காண்டாமிருகம் ஆகியவற்றை ஒரு சேரப் பார்க்க ஆஃப்ரிக்காவிற்குத்தான் செல்ல வேண்டும்.
இந்த நோக்கில் தான் நான் சென்னை ஒளிப்படக்குழு நண்பர்களுடன் கென்யாவின் தலைநகர் நைரோபி சென்று அங்கிருந்து மசைமாரா என்ற வனப்பகுதிக்கு சென்றோம்.
மசைமாராஆஃப்ரிக்கவின் புகழ் பெற்ற சாவன்னா புல்வெளியைக் சேர்ந்த பகுதியாகும்.பறந்து விரிந்த புல்வெளி பகுதி என்பதால் நம் கண்களுக்கு விலங்குகள் எளிதாகத் தென் படுகின்றன.
நம் நாட்டில் கானகங்களில் மரங்கள் நிறைந்து அடர்த்தியாக உள்ளதால் மிருகங்கள் அதனுள் சென்று மறைந்து கொள்கின்றன.
நாங்கள் நைரோபியிலிருந்து மசைமாராவிற்கு ஒரு சிறிய விமானம் மூலம் பயணித்தோம். அது வனத்தின் நடுப்பகுதியில் தரை இறங்கியது. அங்கிருந்து ஜீப்களில் ஏறி உடனேயே காட்டு பகுதிக்கு சென்று விட்டோம்.
முதலில் ஒரு வரி குதிரையையும் ஒட்டகக் சிவிங்கியையும் பார்த்து ரசித்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்த வேளையில் எங்கள் ஜீப் ஓட்டுனர்-கம்-வழி காட்டியுமான பென் திடீரென ஜீப்பை வேகமாகச் செலுத்தத் தொடங்கினார்.
நிலைமை என்ன என்று சுதாரிப்பதற்குள் சீட்டா என்ற இரண்டு சிறுத்தைப் புலிகள் ஒரு ஆஃப்ரிக்க மாட்டுக் கூட்டத்தை வளைத்துப் பிடிக்க எத்தனித்துக் கொண்டு இருந்தன என்று தெரிந்தது. இதைக் காண்பிப்பதற்காகவே ஜீப்பை மிகவும் வேகமாக செலுத்தியிருக்கிறார்.

இரண்டு சிறுத்தைகளும் ஒரு மாட்டை வேட்டையாடியதைக் கண்டோம். சிலிர்ப்பாகத்தான் இருந்தது. இதுவே கானகத்தின் நியதி.
அலையும் சிங்கங்களைக் காண விடியற் காலயில் பொழுது புலரும் வேளைக்குச் செல்ல வேண்டும். மற்ற நேரங்களின், இரவு முழுவதும் இரைக்காக அலைந்து களைத்து உறங்குகின்றன.

காலைப் பொழுதில் சிங்கங்கள் தங்கள் குட்டிகளுடன் செல்வதைப் பார்ப்பது மிக அருமை. ஆனால் போதிய வெளிச்சமின்மையால் போட்டோ எடுப்பது கடினமாயிற்று.
அதிகாலைப்பொழுதில் ஒட்டகச் சிவிங்கி காட்டெருமைகள் போன்ற விலங்குகள் சூரியோதயம் ஆகும் சமயத்தில் தொடு வானத்தில் நடந்து செல்வது கண் கொள்ளாக் காட்சியாகும்.

நீர் நிலைகளில் முதலைகளும் நீர் யானைகளும் இருந்தன கண்டு மகிழ்ந்தோம். வித விதமான பறவைகள் அகலக் காதுகள் கொண்ட ப்ரம்மாண்ட ஆஃப்ரிக்க யானைகள் நிறைய இருந்தன.

சென்னை டு ஷார்ஜா சென்று அங்கிருந்து நைரோபிக்கு வேரோரு விமானம் மூலம் சென்றோம். மசைமாரா காட்டுப் பகுதியில் Loarian camp, நாங்கள் தங்கிய இடம். சிறப்பான ஏற்பாடுகள், இரண்டு பேருக்கு ஒரு கூடாரம் என்ற கணக்கில் முகாம் அமைக்கப் பட்டிருந்தது. கூடாரத்தில் குளியலறை, கழிவறை சுடு தண்ணீர் வசதி என ஹோட்டல் ரூம்களைப் போல சிறப்பாக இருந்தன.. ருசிகரமான வட இந்திய உணவு கிடைத்தன. இந்த பிரயாணத்திற்கு மொத்தம் செலவு தலைக்கு ரூ. 2.25 லட்சம் ஆயிற்று என்று முடித்தார்.
அவரிடம் மேலும் அறிந்தவை இதோ கீழே.
பொதுவாக மிருக காட்சி சாலைகளில் உள்ள மிருகங்கள் தான் மனிதர்களை தாக்கும். ஆனால் வனத்தில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு மனிதர்களை மிகவும் அருகாமையில் பார்த்து பார்த்து பழக்கப்பட்டதால் அவைகள் சதாரணமாகவே மனிதர்களைத் தாக்குவதில்லை. ஏனெனில், அவைகள் மனிதர்களைக் கண்டு பயம் கொள்வதில்லை. வனத்திலுள்ள மிருகங்கள் நன்றாக புஷ்டியாகவே இருக்கின்றன.
புலிகள் தான் இருக்கும் காட்டு மிருகங்களிலேயே மிகவும் மூர்க்கமானது. இந்தியாவிலிருக்கும் வன விலங்கு வனாந்திர சரணாலயங்கள் நன்றாகவே பராமரிக்கப்பட்டு வருகின்றன.
வன விலங்குகளை போட்டோ எடுப்பதில் எந்த ஒரு பயமும் இல்லை. பெரும்பாலும் நாமெல்லம் ஜீப்பிலேயே இருப்பதாலும், அந்த சரணாலயங்களின் ரூல்களைப் பின்பற்றுவதாலேயும் பயப்படத் தேவையில்லை.
இனி, தொடர்ந்து அவரது புகைப்படங்கள் பேசும்.















Leave a comment
Upload