தொடர்கள்
Other
தமிழாய் நம்முடன் வாழும் அவ்வை நடராஜன் - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20221025201811303.jpeg

தமிழ்திரு அவ்வை நடராஜன் மறைந்தார்

1936 - 2022

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தமிழறிஞர் ஒளவை துரைசாமி- லோகாம்பாள் ஆகியோருக்கு மகனாக 1936-ம் ஆண்டு பிறந்தவர் அவ்வை நடராஜன். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் ஆய்வுகள் மூலம் முனைவர் பட்டம் பெற்றார்.

அவரின் பதவிகள் நம்மை வியக்கவைக்கும்

  • தமிழறிஞர்

  • கவிஞர்

  • ஆசிரியர்

  • இலக்கியவாதி

  • செய்திவாசிப்பாளர்

  • பேச்சாளர்

  • கட்டுரையாளர்

  • பட்டிமன்ற நடுவர்

என அவரின் தமிழ் அவதாரங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். அதே போல் இன்னும் எத்தனை எத்தனை உயர் பதவிகள்,.

  • தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி - தமிழ் விரிவுரையாளர்

  • மதுரை தியாகராசர் கல்லூரி - தமிழ் விரிவுரையாளர்

  • 1975ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர்

  • 1984 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இல்லாமல் அரசுத் துறை செயலராக முதன் முதலில் நியமிக்கப்பட்டவர் அவ்வை நடராசன் என்ற பெருமைக்குரியவர்.

  • 1992 முதல் 1995 தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்

  • 2014 செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர்

  • டெல்லியில் அகில இந்திய வானொலி நிலையம் செய்தி வாசிப்பாளர்

  • 2015-ம் ஆண்டு முதல் சென்னை பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தர்

  • 2009 தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது

  • 2010 இந்திய மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஶ்ரீ விருது

  • இலங்கை, கம்பர் கழகத்தின் “தன்னேரில்லாத தமிழ் மகன் விருது”

  • 2012 இலங்கை, கொழும்புக் கம்பன் கழகம் வழங்கிய கம்பன் புகழ் விருது

  • 2015 தினத்தந்தி நாளிதழ் வழங்கிய சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது.

இந்த அத்தனை பதவிகளும் பொறுப்புகளும் அவருக்கு அளித்தது தமிழ் . தனது தந்தையை போலவே இவரும் தமிழில் புலமை பெற்று தமிழ் காதலனாய், தமிழ் காவலனாய் வளம் வந்தவர்.

அண்ணாவின் மீது பற்று கொண்டவர் ,எம்ஜிஆர், கருணாநிதி,ஜெயலலிதா என மூன்று முதல்வர்களுடன் பணியாற்றியவர்.

திராவிடத்தையும் ஆன்மீகத்தையும் ஒன்றாக பாவித்த மகான். ஆம் மிக சிறந்த ஆன்மீகவாதி. திரு ஜெகத்ரட்சகன் அவர்களின் ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையத்தில் சந்தித்திருக்கிறேன். சைவம் வைணவம் என தமிழை பாகுபாடில்லாமல் ருசித்தவர். ருசி என்றவுடன் ஒரு அனுபவம் நினைவுக்கு வருகிறது. அவ்வை அவர்களை விகடகவிக்காக பேட்டி எடுக்க அவரது இல்லம் சென்றோம். மாபெரும் மனிதரை வெறுங்கையுடன் பார்க்க கூடாது என்பதால் அவருக்கு மிகவும் பிடித்த மோர்குழம்பும்,பருப்பு உசிலியும் சமைத்து எடுத்துச் சென்றோம் நானும் வெங்கட்டும். ரசித்து ருசித்து உண்டபின் சிறது நேரம் சிரம பரிகாரத்திற்கு பின் இரண்டு மணி நேரம் எங்களுடன் உரையாடினார்.

சில தொழில்நுட்ப பிரச்சனையால் அந்த காணொளி சரியில்லாத காரணத்தால் சில அபூர்வ விஷயங்களை எங்களால் அன்று பிரசுரிக்க முடியவில்லை. மிகவும் வருந்தினோம். அவருடைய உரையாடலில் அவர் அதிகம் பேசியது அவரின் தந்தையரை பற்றி தான். அடுத்தது அவரது மூன்று மகன்களை பற்றி. அதிலும் அவரின் அச்சு அசலாக அவரது மகன் அருள் நடராஜன் அவர் வகித்த அதே தமிழ் வளர்ச்சி துறையில் இன்று பணி புரிவது குறித்து மிகவும் மகிழ்ந்தார்.

அவ்வை துரைசாமி நமக்கு அவ்வை நடராஜனை கொடுத்தது போல் அவ்வை நடராஜன் நமக்கு அவ்வை அருளை அருளிச் சென்றிருக்கிறார்.

அவர் நமக்கு விட்டுச்சென்ற படைப்புகள் மூலம் நம்முடன் என்றும் தமிழாய் வாழ்வார். தமிழுக்கு ஏது மறைவு.