
அந்நாட்களில் வீதிகள் ஒலி மிகுந்தவையாகவே இருந்தன ..
"மனோகரா ,பொறுத்தது போதும் பொங்கி எழு "என்று கண்ணாம்பா குமுறிக் கொண்டிருக்க ,
" வரி ,வட்டி ,கிஸ்தி ..யாரைக் கேட்கிறாய் வட்டி ? எதற்கு கொடுக்க வேண்டும் கிஸ்தி ? என்று வீரபாண்டியன் கட்டபொம்மன் குரலில் சிவாஜி உறுமிக் கொண்டு இருப்பார் .
தொலைக்காட்சியின் ஆதிக்கம் தொடங்கும் முன்பு ,கிராமங்களில், திருவிழா ,தேர் , மணவிழா எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலி பெருக்கியின் தன்னாட்சி செலுத்தியது . காலை முதல் இரவு வெகு நேரம் தாண்டிய பின்பும் ஒலிபெருக்கிகள் முழங்கிக் கொண்டே இருக்கும்.
இனிமையான திரைப்பாடல்களும் , வலிமையான வசனங்களும் சினிமாவில் கோலோச்சிய காலம் அது . புகழ் பெற்ற படங்களின் வசனங்களை ‘சவுண்ட் சர்வீஸ்’காரர் போட்டு விடுவார் . பாடல்களும், உரையாடல்களும் நம் செவி வழி புகுந்து நினைவில் நிற்கும் .
மனோகரா , வீரபாண்டிய கட்டபொம்மன் ,திருவிளையாடல் ,சரஸ்வதி சபதம் போன்ற ரெக்கார்டுகளைப் போலவே ஒரு வசன ரெக்கார்ட் எண்பதுகளின் துவக்கத்தில் நம் தெருக்களில் முழங்கியது .அது "விதி" 'திரைப்படம் . சுஜாதாவும் ,ஜெய்சங்கரும் கோர்ட்டில் மோதிக் கொள்ளும் வசனங்களுக்காகவே ஓடிய படம் அது. புகழ் பெற்ற அந்த வசனங்களை எழுதியவர் பழம் பெரும் திரை வசன கர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் . சமீபத்தில் மறைந்த அவரது உங்களுடன் நினைவலைகளை பகிர்ந்துக் கொள்கிறோம்
தமிழ் மணக்கும் திருவாரூர் மண்ணில் தோன்றி புகழ் வளர்த்தவர் இருவர் , ஒருவர் நெஞ்சுக்கு நீதி சொல்லி குறளோவியம் தீட்டி தமிழன்னைக்குச் செம்மொழி சிறப்பினை அளித்த டாக்டர் கலைஞர், மற்றவர் திரைத்தமிழைச் செம்மைப் படுத்தி , தமிழின் பெருமைக்கு பெருமை சேர்த்த நம் "பாசமலர்' ஆரூர்தாஸ் . ஆம் பாசமலர் திரைப்படம் ஆரூர்தாஸை புகழேணியில் ஏற்றி வைத்த படம் .
யேசுதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்டவர். 1931 ஆம் ஆண்டு பிறந்து 91 ஆண்டுகள் வாழ்ந்தவர். இவர் தந்தை சந்தியாகு ,தாய் ஆரோக்கியமேரி. கரந்தையில் தமிழ்ப்புலவர் பெற்ற இந்த தமிழ்க்கடல் . மிக இள வயதில் ஆரூர்தாஸ் என்ற பெயருடன் சினிமாவில் நுழைந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் திரைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
ஆயிரம் படங்கள் அவற்றுள் நிறைய படங்கள் வெள்ளிவிழா படங்கள், நூறு நாட்கள் ஓடிய படங்கள் .சின்னப்பா தேவரின் "வாழவைத்த தெய்வம் ' இவர் வசனம் எழுதி முதலாக வெளி வந்த படம், எனினும் நிறைய மொழி மாற்று படங்களுக்கு வசன உதவி செய்துள்ளார் .தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளராக இருந்தவர் சின்னப்பா தேவரின் அறிமுகத்தால் வசனகர்த்தா ஆனார்,
பாசமலர் படத்துக்கு வசனம் எழுத ஜெமினியும் , சாவித்திரியும் ஆரூர்தாஸை சிவாஜியிடம் அறிமுகம் செய்து வைத்தனர் .மிகவும் இளைஞனாக இருக்கும் ஆரூர்தாஸின் மேல் சிவாஜிக்கு நம்பிக்கை வரவில்லை . அதை அறிந்த ஆரூர்தாஸ் 'உருவு கண்டு எள்ளாமை வேண்டும் 'என்று குறளையும் “மடல் பெரிது, தாழை மகிழினிது கந்தம்' என்னும் மூதுரை பாடலையும் எடுத்துக் காட்டி பேச , சிவாஜி பெரிதும் வியந்து ."இவனிடம் என்னவோ இருக்குடா ,ஒரு பாசமலர் இல்லை, பத்து பாசமலர்களை எழுதுவான்டா " என்று மனம் நிறைந்து பேசினார். அதன் பின் தொய்வே இல்லாத திரைவாழ்க்கை ஆரூரருக்கு அமைந்தது .
அவரே ஒருமுறை அளித்த நேர்க்காணலில் கூறியது போல
"1959-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு அன்றைய சினிமா வானின் மிகச் சிறந்த இரு துருவங்களாகத் திகழ்ந்த, என்றைக்கும் ஈடு இணையற்ற `மக்கள் திலகம்', `நடிகர் திலகம்' இருவரையும் ஒரே சமயத்தில் என் முதுகில் சுமந்துகொண்டு முதல் குதிரையாக ஓடி, அன்னையின் அருளால் வெற்றிமேல் வெற்றி பெற்றேன்" என்பது போல அவர் . திரைப் பயணம் வெற்றி பயணமாகவே அமைந்தது .
பாசமலர் மட்டுமன்றி , பார்த்தால் பசி தீரும் ,பார் மகளே பார் , புதிய பறவை, தெய்வமகன் என்று பல படங்கள் இன்றும் ஆரூர்தாஸின் புகழைச் சொல்லிக் கொண்டே இருக்கும் . தாய் சொல்லைத் தட்டாதே, வேட்டைக்காரன் போன்ற படங்கள் எம்ஜிஆருக்காக எழுதிய படங்கள். பின்னர் ஜெயசங்கர் , ரவிச்சந்திரன், முத்துராமன் , கமல், ரஜினி என்று தொடர்ந்து எல்லா கதாநாயகர்களுக்காகவும் இவரது பேனா ஓய்வின்றி இயங்கியது . ஆரூர் தாஸ்.உதவி இயக்குனராக ,பாடலாசிரியராக சில படங்கள் பணியாற்றி உள்ளார்
தொடர்ந்த உழைப்பு இவருக்கு விருதுகளைக் குவித்தது .தன் திருவாரூர் பள்ளியின் சீனியரான 'கலைஞர் ' முதல்வராக இருந்த போது அவர் கரத்தால் கலைமாமணி விருது பெற்றவர் ஆரூர்தாஸ் ‘அறிஞர் அண்ணா விருது', கலை வித்தகர் பட்டத்துடன் கூடிய ஐந்து சவரன் பொற்பதக்கப் பரிசு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 80-வது பிறந்த நாளில் ‘சிவாஜி விருது'டன் கூடிய 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு' எனப் பல பரிசுகளும் விருதுகளும் பெற்று கௌரவிக்கப்பட்டார்
அண்ணா , கலைஞர் ,இளங்கோவன் போன்ற தமிழ் வித்தகர்கள் தன் எழுத்துக்களால் மாயாஜாலம் செய்த தமிழ்த்திரையில் அவர்களைத் தொடர்ந்து தன் வசனங்களால் பெரும் ,புகழும் பெற்றவர். பாசமலரில் சிவாஜி பேசும் வசனம் ஆரூர்தாஸின் தமிழின் பெருமைக்கு எடுத்துக்காட்டு
"பொது நலம்... எது பொதுநலம்? பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா? புற்றுக்கு அருகே நின்று மகுடி ஊதுவது, நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா? காட்டிலே குழி பறிப்பது யானை ஓய்வு எடுப்பதற்கா? கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா? அல்ல... இதெல்லாம் `பிறர் துன்பத்தில் இன்பம் காண வேண்டும்' என்ற பேய் வெறி! அந்த வெறிதான் உனக்கும்"
இறவாப்புகழ் கொண்ட படங்கள் இவர் பெயரை என்றும் சொல்லிக் கொண்டே இருக்கும் , தமிழ்த் திரை உலகம் இருக்கும் வரை, தமிழ் மொழி வாழும் வரை

Leave a comment
Upload