
செம கடுப்பாக இருந்தது ப்ரியாவிற்கு.. பஸ்ஸில் கூட்டமோ தாங்க முடியாத அளவு.. மே மாதத்தின் காலை வெயில், வேர்வை என நசநசவென்று இருக்க "ச்சே..!" என்று நின்று கொண்டிருந்தாள். எப்போதும் ஸ்டைலாக உடை அணியும் ப்ரியா அன்று கருப்பு ஜீன்ஸும் அதற்கேற்றார் போல் வெள்ளையில் கருப்பு கோடுகள் உள்ள அழகான டாப்ஸும் அணிந்து வந்திருந்தாள்.
காலை அலுவலகம் செல்ல கிண்டியிலிருந்து தேனாம்பேட்டைக்கு பஸ்ஸில் ஏறுவது அவளது அலுவலக பயணத்தில் வழக்கமான ஒன்று தான். இருக்கையில் அமர்ந்து வந்த ஒருவர் சின்னமலையில் இறங்க, ப்ரியா அவசரமாக அந்த இடத்தை பிடித்து "ஹப்பாடா " என்று அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். இனி சிறிது நேரத்திற்கு ஜன்னல் காற்று வாங்கி கொள்ளலாம் என்று முகத்தை ஜன்னலை நோக்கி திருப்பி கொள்ளும் போது அவளது உடலின் மேல் யாரோ உராசுவது போல் தெரிந்தது. யாரென்று பார்த்தால் அழுக்கான பழம்புடவையை அணிந்த ஒரு பெண் , குளித்து 3 நாட்கள் இருப்பது போன்ற தோற்றத்தில், அவளை விட அழுக்கான, மேல் சட்டையை மட்டுமே அணிந்த ஒரு குழந்தையை இடுப்பில் சுமந்தவாறு நின்று கொண்டிருந்தாள்.
"மன்னிச்சிக்கமா..! தெரியாம குழந்தை கால் பட்டிருச்சு" என்று அவள் கூறியதும்
ப்ரியாவுக்கு இன்னும் கடுப்பானது. "மேலே உரசாம நிக்க முடியாதா? தள்ளி நில்லு " என்று சிடுசிடுத்து
" சனியனுங்க எனக்குன்னு இப்படி வந்து அமையுது பாரு.. இதுங்க எல்லாம் எதுக்கு பஸ் ஏறுதுங்க? வெள்ளை டாப்ஸ் அழுக்காகிடும்.. ச்சே..!" என்று முகம் சுழித்துக் கொண்டாள்.
பஸ்ஸின் அடர்ந்த கூட்டம் அந்த பெண்ணை நெருக்கி தள்ள, திரும்பவும் குழந்தையின் காலும், அழுக்கு புடவையும் ப்ரியாவை உரச, அந்த பெண் ப்ரியாவிடம் கண்களாலேயே, தெரியாமல் பட்டுவிட்டது என்று கெஞ்சுவது போல பாவனை புரிந்தாள்.
இதற்கு மேல் பொறுக்க முடியாத ப்ரியா சிறிது தள்ளி நின்று கொண்டு இருந்த,
சுடிதார் போட்ட நவநாகரீகமான பெண்ணை தன் பக்கம் நிற்க சொல்லிவிட்டு அந்த அழுக்கு பெண்ணிடம் "ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாது..? தள்ளி முன்னாடி போய் நில்லு !" என்று அதட்ட அவளும் சற்று முன்னால் நகர்ந்து தள்ளி நின்றாள்.
இந்த களேபரத்தில்
தேனாம்பேட்டை நிறுத்தத்தில் பஸ் நின்றதை ப்ரியா கவனிக்க தவற "ரைட் போகலாம்" என்று நடத்துனர் விசில் அடிக்கும் போதுதான் அதை உணர்ந்து "ஐயோ.. .. நிறுத்துங்க பஸ்ஸை.. நான் இறங்கனும்..!" என்று பதைப்பதைத்தவாறு அவசரமாக சீட்டை விட்டு எழுந்தாள். அப்போது அவள் அமர்ந்திருந்த சீட்டில் உடைந்து நீட்டிக்கொண்டிருந்த சிறிய கம்பி ஒன்று அவள் டாப்ஸில் மாட்ட, பின்பகுதி முழுவதும் படாரென்று கிழிந்தது.
உள்ளாடையுடன் பின்பக்க முதுகு முழுவதும் அப்பட்டமாக தெரிய கூனிக்குறுகி அப்படியே சீட்டில் திரும்பவும் உட்கார்ந்து விட்டாள் . மற்ற பயணிகள் "அடடா..!" என்று உச்சு கொட்ட, சுடிதார் அணிந்த நாகரீகப் பெண்ணை நோக்கி பஸ்ஸில் இருந்த யாரோ ஒருவர் அவசரமாக " அந்த பொண்ணுக்கு உன் துப்பட்டாவ கொடும்மா..!" என கேட்க அதை கண்டு ப்ரியாவும் அவளை "ப்ளீஸ்..!" என கண்ணீரோடு கேட்டாள். அந்த நவநாகரீக பெண்ணோ காதில் எதுவும் கேட்காத மாதிரி, ப்ரியா இறங்கினால் அவளுடைய சீட்டை பிடிக்கலாம் என்று ரெடியாகி நின்றாள்.
மற்ற பெண்களும் எங்கே நம்மிடம் கேட்டுவிடுவாளோ என்று துப்பட்டாக்களையும், புடவைகளையும் இறுக்கி பிடித்து கொண்டு நின்றார்கள் . அப்போது சடாரென்று "தள்ளுமா அந்தாண்ட" என்றபடி வேகமாக அனைவரையும் விலக்கி கொண்டு வந்த அந்த அழுக்கு பெண், தனது புடவையின் முந்தானையை சட்டென்று துண்டு போல கிழித்து சுமித்ராவின் மீது போர்த்தி, "நீ பஸ்ஸ உட்டு தைரியமா இறங்கும்மா..! உன் கூட நானும் துணைக்கு வரேன். நீ எங்க போனுமோ அதுவரை உன்ன கொண்டாந்து விட்டுட்டு போறேன் " என்று ஆதரவாக கூற ,
ப்ரியா மனதிற்குள் " அந்த சுடிதார் பொண்ணு அவ துப்பட்டாவை கொடுத்திருந்தாதான் என்ன?! ஏன் இப்படி இருக்காளுங்க..? எவளுமே நல்லவ கிடையாது... ஐயோ...இதுல கர்மம் இந்த அழுக்கு புடவை சனியன் வேற.. ஆஃபிஸ் கட் அடிச்சிட்டு , இப்ப நேரா வீட்டுக்கு போய் டெட்டால் போட்டு நல்லா ஹாட் வாட்டர்ல 2 தடவை குளிக்கனும் ", கிழிந்த அழுக்கு புடவையின் அந்த துண்டை பட்டும் படாத மாதிரி உடலில் போர்த்திக்கொண்டு முகத்தில் அருவருப்பை சுமந்து கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினாள்.
தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் பிரியாவின் மானத்தைக் காப்பாற்ற கிழித்து கொண்ட அந்த அழுக்கு பெண் உற்சாகத்துடன் " கண்ணு.. வா அக்காவ பத்திரமா விட்டுட்டு வரலாம்" என்று தனது குழந்தையிடம் கூறியபடி தொடர்ந்தாள்.
அழுக்கு, புடவைத் துண்டில் இல்லை என்று பிரியாவுக்கு ஒரு நாள் புரிய வரும்.

Leave a comment
Upload