தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் - 60 கண் பார்வை இல்லாத சுந்தரருக்கு மின்னலாக தோன்றித் தோன்றி அம்மன் வழிகாட்டினாராம் ஆர்.ரங்கராஜ்

20221028091621438.jpg
மூலவர் பிராகாரத்தை வலம் வந்து, அப்படியே நேர அம்மன் சந்நிதிக்கு வரலாம். எதிரில் சிறிய சிங்க வாகனம். "உள்ளே, அருள்மிகு மின்னலொளி அம்மை. மின்னொளி அம்மை என்றும் சொல்லலாம். அம்பாளுக்கு இதென்ன பெயர்?" -- விவரிக்கிறார் சுதா சேஷய்யன்.

"சுவையான காரணம்தான். சுந்தரர் பார்வை கெட்டவராக இங்கு வந்தார். படலம் படர்ந்த அவர் கண்களுக்கு அவ்வப்போது மின்னலாக தோன்றித் தோன்றி அம்மன் வழிகாட்டினாராம். அதனால், மின்னல் ஒளி அம்மன்."

சுந்தரரின் வெண்பாக்க அனுபவத்தைப் பாடுகிற சேக்கிழார், சுந்தரர் தலைமேல் கரம் குவித்ததைச் சொல்கிறார். கோயிலில் உள்ளீரோ எனக் கேட்டதைப் பாடுகிறார். கோல் கொடுத்ததையும் உளோம் போகீர் என்றதையும் குறிப்பிடுகிறார். வெண்பாக்க நாதனைப் பாடி, பிரான் அருள் இங்கு இத்தனை கொலாம் என்று எண்ணி, அங்கிருந்து சுந்தரர் அகன்றார் என்கிறார். ஆனால், கோலால் நந்தி தட்டப்பட்டது. அம்மன் மின்னலாக வழிகாட்டியது ஆகியவற்றை சொல்லவில்லை.

சேக்கிழார் சொல்லாவிட்டால் என்ன, கோயில் அர்ச்சகர் சுவயைாகவும் விரிவாகவுமே சொல்கிறார். சுந்தரர் கோலைத் தட்டியதால் நந்தி கொம்பு உடைய வில்லையாம். கண் கேட்டால் கோல் கொடுக்கிறாரே என்று கோபமான கோபமாம் சுந்தரருக்கு. அதனால், கோலைத் தூக்கி வீசினாராம். பிரான் மீது கோல் பட்டுவிடக்கூடாதே என்று நந்திதேவர் குறுக்கே பாய்ந்து தாங்கிக் கொண்டாராம்: கோபத்தில் அம்பாளிடம் முறையிட்டாராம் சுந்தரர். உடனே அம்பாள், ஜயன் ஆணையை மீறமுடியாதே என்று சொல்லி, இடைப்பட்ட நிலையில் வேண்டுமானால் உனக்கு மின்னனாக அவ்வப்போது தோன்றி வழிகாட்டுகிறேன் என்றாராம்."

"அம்பாளை மின்னலுக்கு நிகராகச் சொல்கிற மரபு உண்டு, ஒரு கணம் தோன்றி வழி காட்டும் 'மின்னல் போல, வேண்டியபோது வழி காட்டி வழி நடத்துவாள் அம்மை என்பதாக ஐதீகம்."

சுந்தரர் வரலாற்றுக்கு முன்னரே, அம்பாளுக்கு கனிமொழி அம்மை என்றும் கனிவாய் குழலி என்றும் பெயர்கள் உண்டு .

20221028091639868.jpg

கண்நோய்கள் தீர இங்கு வழிபட்டால் நலம் பயக்கும், பிரதோஷ வழிபாடு தடைகளை நீக்கி உயர்வு தரும், என்று நம்பப்படுகிறது.

உற்சவர் சிலா திருமேனிகள், பாதுகாப்புக்காகத் திருவேற்காடு கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. பூண்டி வெண்பாக்கக் கோயில், தற்போது திருவேற்காடு ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்தது.

"சுந்தரர் வரலாற்றைச் சொல்கிற சேக்கிழார், வண்டு உலாமலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண்பாக்கம் என்று சட்டுகிறார். மாட - மாளிகைகள் இருந்தனவா, தெரியாது. ஆனால், வண்டு உலாவும் இயற்கை அழகு இப்போதும் இருக்கிறது.

அழகும் அமைதியுமாகப் புதுமைக்குள் நிற்கும் பழைய வெண்பாக்கம் மனமெல்லாம் நிறைகிறது. பிரிய மனம் இல்லாமல் பிரிகிறோம்," என்கிறார் சுதா சேஷய்யன்.


(தொடரும்)