தொடர்கள்
அனுபவம்
யானை டாக்டர் -இந்துமதி கணேஷ்

20251113121906752.jpg

என் சிறு வயதிலிருந்தே யானைகள் மேல் தீராத காதலுண்டு.

ஜெயமோகனை அதிகம் வாசித்திராத நிலையில் யானையின் படம் போட்ட "யானை டாக்டர்" என்ற சிறு நூல் என்னை மிகவும் ஈர்த்தது.

வாங்கிய பிறகு தான் இது அறம் என்ற தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதை என்று தெரியும், அறம் தொகுப்பு உண்மையாக வாழ்ந்த மனிதர்களின் கதையை புனைவு கலந்து எழுதிய ஒன்று.

இந்த நூல் முழுக்க டாக்டர் கே என்றும் யானை டாக்டர் என்றும் பிரியமாய் அழைக்கப்படுகிற மருத்துவர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்களை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இவரது காலம் 1929 முதல் 2002 வரை ஆகும்.

ஜெயமோகனின் கதையில் வரும் டாக்டர் கே உண்மையில் எப்படி மருத்துவம் செய்தார் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு கொஞ்சம் வரலாறுக்கு சென்று வரலாம்.

இந்த விலங்கு மருத்துவர் எதனால் யானை டாக்டர் என்று அழைக்கப்பட்டார் என்றால் 50-60 காலகட்டங்களில் அதிகமாக விலங்கு மருத்துவர்கள் கிடையாது.

அப்படியே இருந்தாலும் அவர்கள் சிறு விலங்குகளுக்கு சிகிச்சையளிக்க தயாராக இருந்தார்களே ஒழிய யானைகளுக்கு யாரும் சிகிச்சையளிக்க தயாராக இல்லை.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரயில் பாதைகள் அமைக்க நிறைய மரங்கள் தேவைப்பட்டன, மரங்களை மேலிருந்து எளிதில் கீழ் தள்ளி அனுப்ப முடிந்ததால் தான் டாப் ஸ்லிப் என்ற பெயரே உருவானதாம்.

அந்த மரங்களை காடுகளில் வெட்டி ஓரிடமிருந்து மற்ற இடத்திற்கு ஏற்றி இறக்க யானைகள் வெகுவாக உதவின.

இதனால் ஆங்கிலேயர்கள் யானைகளை பிடித்து பழக்கப்படுத்தினர். பழகிய யானைகள் கடினமாய் வேலை செய்தன.

இதனால் காட்டு யானைகளை குட்டிகளாக இருக்கும் போதே பிடித்து பழக்கி வேலை வாங்கினர். இப்படி தான் முதுமலை, டாப்ஸ்லிப் பகுதிகளில் யானைகள் முகாம் உருவானது.

20251112154606672.jpg

பழக்கப்பட்ட யானைகள் தான் என்ற போதும் அவைகளுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை கவனிக்க மருத்துவர் தேவையாக இருந்தது.

அந்த நேரத்தில் தான் டாக்டர் கே களத்திற்கு வருகிறார்.

மருத்துவர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி 1929 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் பிறந்தார், பள்ளி கல்வியை முடித்து மதராஸில் உள்ள வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் தன் கால்நடை மருத்துவ படிப்பினை முடித்தார்.

1950களில் இருந்து தன் மருத்துவ பணியை தொடங்குகிறார்.

அந்தக் காலகட்டத்தில் காட்டு மிருகங்களுக்கு மயக்க மருந்து பயன்பாடு டாக்டர் கே அவர்களால்தான் தொடங்கப்பட்டது.

அதுவரை ஊதுகுழலால்தான் மயக்க மருந்து செலுத்தப்படும். ஏனெனில், காட்சிச் சாலையில் இருக்கும் விலங்குகளுக்கும், வீட்டு விலங்குகளுக்கும்தான் கால்நடை மருத்துவர்கள் இந்த முறையில் மயக்க மருந்து தருவர்.

காட்டு விலங்குகளுக்கு மயக்க மருந்து தந்து பிடிப்பதோ அல்லது சிகிச்சை அளிப்பதோ யாரும் அறியாத ஒன்று. அதை முதலில் அறிமுகப்படுத்தியது டாக்டர் கே அவர்கள் தான்.

இப்போதுள்ள காலகட்டத்தை வைத்து டாக்டர் கேயின் சேவைகளை நாம் கணிக்க இயலாது. அப்போதெல்லாம் கைபேசிகள் கிடையாது, பெரும்பாலும் டாக்டர் கேவிற்கு வரும் செய்திகள் தந்தி மூலமாக தான் வருமாம்.

அதன் பிறகும் அவருக்கு செயல்பட தனியாக வாகன வசதிகள் கிடையாது. பேருந்து, நடை என்று சென்று தான் தன்னுடைய சேவையை செய்ய வேண்டும்.

இப்படியான சூழலில் கட்டுக்குள் இல்லாமல் இருக்கும் பேருயிர் முன்பு போய் நிற்கவே தைரியம் வேண்டும். அப்போதெல்லாம் மயக்க ஊசிகள் செலுத்த நவீன துப்பாக்கிகளும் கிடையாது,

அந்த வழிமுறையை அறிமுகப்படுத்தியது கூட டாக்டர் கே அவர்கள் தான் என்பது இங்கு குறிப்பிடதக்க ஒன்று. முகாமில் உள்ள பல யானைகளுக்கு பிரசவம் பார்த்து குட்டிகளை பத்திரமாக காப்பாற்றி இருக்கிறார்

. பல காட்டு யானைகளுக்கு வைத்தியம் பார்த்து அவைகளின் காயங்களை ஆற்றி இருக்கிறார் என்றால் அவரின் சேவை எத்தகையதாக இருக்க வேண்டும். ஆடம்பரமில்லாத யதார்த்தவாதியான இவர் பல பழங்குடிகளுடனும் பிரியமாக பழகி இருக்கிறார்.

20251112154743847.jpg

மதுபுட்டிகளால் யானைகளுக்கு ஏற்படும் அபாயம் குறித்து யானை டாக்டர் கதையில் ஜெயமோகன் விரிவாக எழுதி இருப்பார்.

மணல் மூட்டைகள் போல இருக்கும் யானையின் கால்களை இந்த கண்ணாடி புட்டிகள் ஊடுருவி போய் புண்ணாக்கி, அதில் சீழ் வைத்துவிடுமாம்.

இதனால் யானைகள் நடக்க இயலாமல் ஒரே இடத்தில் நின்று தன் உயிரை விட்டுவிடும். இப்படி காயப்பட்ட யானைகள் பலவற்றை டாக்டர் கே காப்பாற்றி இருக்கிறார்.

மனிதன் மகா பெரிய சல்லிப்பயல் என்பது எவ்வ்ளவு உண்மை. இப்படி காயம்பட்ட டாக்டர் கேயால் காப்பாற்றப்பட்ட யானைகள் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து வந்து டாக்டர் கேயை பார்க்க வந்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது.

இரு சம்பவங்கள் மூலம் டாக்டர் கேயின் அர்ப்பணிப்பும், உயிர்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பும் புலப்படும்.

1982ஆம் ஆண்டு திருச்சி அகோபில மடத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்ற கொம்பன் யானை, மதம் கொண்டு தலைமை பாகனான பத்மநாப பணிக்கரை கொன்று விடுகிறது,

அதை கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை. பழத்தில் மயக்க மாத்திரை வைத்து கொடுத்தும் பயனின்றி போனதால் டாக்டர் கே தான் வந்து இந்த யானையை கட்டுப்படுத்த இயலும் என்று திருச்சி வனத்துறை கூறிவிட, டாக்டர் கேவுக்கு செய்தி அனுப்பப்படுகிறது.

யானை இருக்கும் தோப்பை சுற்றி பெரிய கம்புகளால் தடுப்புகள் செய்து மறைக்கிறார்கள்.

ஒரு நாள் கழித்து வந்து சேரும் டாக்டர் கேவின் கால்கள் தண்டவாளத்தில் மாட்டியதால் கால் முறிந்து கட்டு போடப்பட்டிருந்தது.

அந்த நேரத்திலும் மண்டப கூரை மேல் ஏறி நின்று, ஊது குழாய் மூலம் துல்லியமாய் ஊதி யானைக்கு மயக்க ஊசிகளை செலுத்தி யானையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார் டாக்டர் கே, இல்லையேல் அந்த யானை அன்றே கொல்லப்பட்டிருக்கும்.

தனித்து இருக்கும் கோவில் யானைகளின் மன அழுத்தங்களை பற்றி அறிந்து அவைகளை ஒரு புத்துணர்ச்சி முகாமிற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திற்கு வைத்ததே டாக்டர் கே தான்.

இன்றைய காலகட்டத்தில் வருடம் ஒருமுறை நடக்கும் இந்த புத்துணர்ச்சி முகாம்களை கோவில் யானைகள் எவ்வ்ளவு எதிர்பார்க்கின்றன என்பது கண்கூடு.

ஓய்வு பெற்ற பின்னரும் பல காடுகளில் உள்ள காட்டு யானைகளின் காயங்களை ஆற்றி இருக்கிறார்.

மேலும் ஒரு விலங்கு சாகப் போகிறது என்று அறிந்தால் வலியில் அது துடிப்பதை சும்மா பார்த்துக் கொண்டிருப்பதை விட அதை கொன்று விடுவதே நல்ல வழி என்று சொல்வாராம்.

கூடு கொம்பன் என்று அழைக்கப்பட்ட ஒரு யானை காலில் காயத்தால் காட்டில் ஒரே இடத்தில் நின்றிருந்ததாம். அதை பற்றிய செய்திகள் அறிந்த பிறகு இரண்டு கும்கி யானைகளை கூட்டி சென்று அதன் இரு பக்கங்களிலும் நிறுத்தி அதை சமாதான படுத்தி தைரியமாக அதன் கால்களுக்கு இடையே சென்று மருத்துவம் செய்திருக்கிறார்.

முகாமில் உள்ள யானைகள் அனைத்தும் டாக்டர் கேவை கண்டால் மகிழ்ச்சியடையுமாம்.

காட்டு யானைகள் இவரை தம்மில் ஒருவராய் தான் நடத்தும் என்கிறார்கள்.

மேலும் முதுமலை டாப்ஸ்லிப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கும் இவர் மருத்துவம் பார்த்திருக்கிறார்.

அங்குள்ள மக்கள் அவருக்கு பிரியமாய் இட்ட பெயர் தான் ஆனை டாக்டர் என்பது.

டாக்டர் கே மிகவும் எளிமையானவர், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இத்தனை சேவைகள் செய்த டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு எந்த உயரிய விருதும் வழங்கப்படவில்லை, அதை அவர் எதிர்பார்க்கவும் இல்லை

யானைகளுக்கு ரேடியோ காலர் கட்டி யானை மனித மோதலை தடுக்க வழிவகை செய்வது, ஆசிய யானைகளை காக்க உருவாக்கப்பட்ட கழகத்தில் முக்கிய உறுப்பினராக இருந்து யானைகளை பாதுகாப்பது என தன் இறுதி மூச்சிவரை யானைகளுக்காக வாழ்ந்தவர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்

உலகின் ஆக சிறந்த யானை ஆராய்ச்சியாளரான இயன் டக்லஸ் ஹாமில்டன் டாக்டர் கேயை காண முதுமலை வந்த போது, அங்கு இருந்து கும்கி யானைகள் டாக்டர் கே மீது கொண்ட அளவுகடந்த காதலை ரசித்து," நான் உங்களுடனே இருந்துவிட விரும்புகிறேன்" என்று உருகி நின்றிருக்கிறார்.

யானை மருத்துவரின்மியூசியம் டாப்சிலிப்பில் இன்றும் இருக்கிறது.

இது யானை டாக்டருக்கு தமிழக அரசு கொடுத்த மரியாதை. இன்று தமிழக காட்டில் உலாவிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு யானையின் காலடியிலும் டாக்டர் கேயின் சுவடுகள் பதிந்திருக்கும். யானைகள் இருக்குமட்டும் டாக்டர் கேயின் புகழும் வாழும்.