
நவக்கிரக வழிபாடு என்பது மிகவும் தொன்மையானது, ஆரம்ப காலகட்டத்தில் நவக்கிரகங்களைத் தனித்தனியாக வழிபட்டனர். தஞ்சையை ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் இன்றைய சூரியனார் கோயில் அவருடைய ஆட்சிக் காலத்தில் குலோத்துங்க சோழ மார்த்தாண்ட ஆலயம் என்ற பெயரில் கோயில் அமைக்கப்பட்டது.
இங்குச் சூரியனின் தலைமையில் மற்ற கிரகங்கள் வரிசையாக அமைந்துள்ளன. மேலும் இக்கோயில் நவக்கிரக வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், ஒருங்கிணைப்பையும் காட்டுகிறது.
பல்லவர்கள் மற்றும் சோழர்களின் காலத்தில் உயரமான மேடையின் மீது நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட வழக்கமே தற்போதும் பெரும்பாலான சிவாலயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. பிரசித்தி பெற்ற பெரிய கோயில்களில் வைதீக மற்றும் ஆகம விதிப்படி இரண்டு வடிவங்களில் நவகிரகங்களின் வரிசைகள் அமைக்கப்பட்டது. இன்னும் பிற கோயில்களில் பல்வேறு நிலைகளிலும் நவகிரகங்கள் அமைக்கப்பெற்றுள்ளது.
லிங்க வடிவில் நவகிரகங்கள்:
தஞ்சை பொருவுடையார் கோயிலும் நவக்கிரக சிறப்புப் பெற்றது. இங்குச் சிவனே நவக்கிரக நாயகனாக இருப்பதால், பிற கோவில்களைப் போல் நவக்கிரகங்கள் அவைகளின் உருவில் இல்லாமல், கோயிலின் மேல் புற வட பகுதியில் லிங்க வடிவிலேயே காட்சி தருகின்றன.

தமிழ்நாட்டில் இக்கோயிலில் மட்டுமே கிரகங்கள் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறது.pமக்கள் தங்களின் குறைகளைக் களைய நவக்கிரகங்களுக்குச் செய்ய வேண்டிய பரிகாரங்களை இங்கு நவ லிங்கங்களுக்குச் செய்து வழிபடுகின்றனர். அடுத்து, நவகிரக நாயகர்களை லிங்கத் திருமேனியாக நாம் தரிசிப்பது அஸ்ஸாம் மாநில தலை நகரான கௌஹாத்தியின் தென்பகுதியில் சித்ரசால் மலைத்தொடரின் உச்சியில் அமைந்துள்ள நவகிரக கோயில். இந்தக் கோயிலில் நவகிரகங்கள் ஒன்பது சிவலிங்கங்களாகக் காட்சி தந்து அருள்பாலிக்கின்றனர். மத்தியில் உள்ள சிவலிங்கத்தைச் சூரியனாகவும் மற்றும் எட்டுத் திசைகளில் உள்ள மற்ற கிரகங்களையும் லிங்க வடிவத்திலேயே அமைத்துள்ளார்கள். இந்த ஒன்பது லிங்கங்களும் அந்தந்த கிரகங்களுக்கு உரிய வண்ணத் துணியால் அலங்கரிக்கப்படுகின்றன.
ஒரே கல்லில் அமைந்துள்ள நவகிரகங்கள்:
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சிவன் கோயிலில் நவகிரகங்கள் ஒரே கல்லில் (நாலடி சதுரம்) நடுவில் சூரியன் அமைய ஒன்பது கிரகங்களும் வான சாஸ்திர முறைப்படி அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இந்த கல்லில் தாமரைப்பூ வடிவில் நவக்கிரகங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தாமரை மலர் வடிவ பீடத்தின் நடுவில், ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரிய பகவான் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள பத்து கடையாணிகளும் கந்தருவர்களைக் குறிப்பிடுகின்றன.

சூரியனைச் சுற்றி, மற்ற எட்டு கிரகங்களும் தாமரை மலர் இதழ்கள் போன்ற அமைப்பில் உள்ளன. ஒருபுறம் பன்னிரண்டு பேர் நாதஸ்வர கருவிகளை இசைக்கும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் நவக்கிரகங்களைச் சுற்றி வந்த வழிபட முடியாதபடி வடிவமைத்திருப்பது, வேறு எந்த ஸ்தலத்திலும் நாம் காண முடியாத ஒரு அரிய காட்சி. நவக்கிரகங்கள் இந்த உலகைச் சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களைச் சுற்றமுடியாதபடி மண்டப அமைப்பு உள்ளது.
தம்பதி சமேதராக நவக்கிரக நாயகர்கள்:
நவக்கிரக நாயகர்கள் தம்பதி சமேதராகக் காட்சியளிப்பது மிகவும் அரிது. நவக்கிரகங்கள் தங்களது தேவியருடன் இணைந்து காட்சியளிப்பது ‘ஜோடி நவக்கிரகம்’ என்றும் கூறப்படும். தேவியருடன் இருக்கும் நவக்கிரகங்களை வழிபடுவதால் உடனே திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கை. இத்தகைய நவக்கிரகங்கள் கல்யாண நவக்கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
திருச்சி உறையூர் தான் தோன்றீஸ்வரர் கோயில்: திருச்சி உறையூரில் உள்ள குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலில், நவகிரகங்கள் தம்பதி சமேதராகவும், தங்கள் வாகனங்களுடனும் காட்சியளிப்பது மிகவும் அபூர்வமான அமைப்பு. இது பொதுவாகச் சிவாலயங்களில் காணக்கிடைக்காத தரிசனம், இங்கு நவக்கிரகங்களை வலம் வந்து வழிபடுவது மிகுந்த புண்ணியத்தையும், சந்ததி சிறக்க அருள்வதாகவும் நம்பப்படுகிறது.
கோவை கோனியம்மன் கோயில்: கோனியம்மன் கோயிலில் அம்மனுக்கு வலப்புறத்தில் நவக்கிரக சந்நிதியில், தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு நவக்கிரக நாயகர்கள் தம்பதி சமேதராக வீற்றிருப்பது தனிச்சிறப்பு. இங்கு நவக்கிரகங்களில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வீற்றிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாகாளேஸ்வரர் கோயில்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், மேற்கு ராஜகோபுரத்தின் பின்புறம், பழமையான மாகாளேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கர்ப்ப கிரகத்தில், ராகு, கேது, சிவபெருமானுடன் உள்ள திருக்கோல காட்சியில் அமைந்துள்ளார். இத்தலத்தில் ராகு கேது மனித உருவத்தில் ஈசனை வழிபட்டதாக ஐதீகம். எனவே இத்தலமானது மிகச்சிறந்த இராகு கேது பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில், ஒன்பது நவக்கிரகங்களும் தனித்தனி சந்நிதியாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நவக்கிரக நாயகர்கள் தம்பதி சமேதராய், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருப்பளுவூர் விஸ்வநாதர் கோயில்: விசாலாட்சி அம்மன் சமேத விஸ்வநாதர் கோயிலில் நவகிரகங்கள் தனித்தனி சந்நிதிகளில், தம்பதி சமேதராக அருள்பாலிப்பது சிறப்பு. குறிப்பாக, திருமணத் தடைகள் நீங்க, தேவியருடன் கூடிய கல்யாண நவக்கிரகங்கள் இங்குள்ளதால், திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலமாக இது விளங்குகிறது.
சேலம் ஸ்ரீ கந்தாஸ்ரம்: சேலம் நகரில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கந்தாஸ்ரம கோயிலில், நவக்கிரக நாயகர்கள் அனைவரும் தங்கள் தேவியருடன் (தம்பதி சமேதராய்) தங்கள் வாகனங்களில் எழுந்தருளி இருப்பது ஒரு தனித்துவமான அற்புத அமைப்பு.
கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோயில்: குலசேகரநாயகி சமேத மார்த்தாண்டேஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்கள் தங்கள் தேவியருடன் (தம்பதி சமேதராக) அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். அதனால் இத்தலம், கல்யாண நவக்கிரக தலம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் நவக்கிரகங்கள் தங்கள் தேவியருடன் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. இது திருமண தோஷங்கள் நீங்க உதவும் ஒரு முக்கிய பரிகார தலமாகவும் கருதப்படுகிறது.
திருநறையூர் ராமநாதசுவாமி கோயில்: பர்வதவர்த்தினி தாயார் சமேத ராமநாதசுவாமி கோயிலில் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்கள். குறிப்பாக, சனி பகவான் தன் மனைவிகள் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி, மந்தாதேவியின் இரு மகன்கள் குளிகன், மாந்தியுடன் அருள்பாலிக்கிறார். இது மிகவும் அரிதான அமைப்பாகும், மேலும் தசரத சக்கரவர்த்தி இங்கு வந்து சனி தோஷம் நீங்க வழிபட்டதாகக் கூறப்படுகிறது. இது சந்ததிப் பேறு மற்றும் தோஷ நிவர்த்திக்கு மிகவும் விசேஷமானது.
இரும்பை மாகாளேஸ்வரர் கோயில்: இந்த கோயிலின் சிறப்புகளில் ஒன்று, நவக்கிரகங்கள் அனைத்தும் தங்கள் மனைவியருடன் தனித்தனி சந்நிதிகளில் அமர்ந்துள்ள காட்சி ஆகும். மேலும் சூரியன் தாமரை மலரின் மீது அமர்ந்து உஷா, பிரத்யூஷா தேவியருடன் காட்சியளிக்கிறார். தம்பதியுடன் உள்ள நவக்கிரகங்களை மனதார வழிபட்டு, பிரார்த்தனை செய்யத் தோஷங்கள் விலகும். சந்தோஷம் பெருகும் என்பது ஐதீகம்.

மீண்டும் அடுத்த வாரம் நலம் தரும் நவகிரக நாயகர்களுடன் தொடர்வோம்….

Leave a comment
Upload