தொடர்கள்
மருத்துவம்
கொரோனாவால் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் நம் இதயம்-சென்னை ஆய்வு சொல்வது என்ன?-தில்லைக்கரசிசம்பத்

20251112170805820.jpeg

முகக்கவசம், முடக்கம், இறப்பு, அச்சம் என உலக மக்களை பயமுறுத்திய கொரோனா காலம், ஏதோ கனவில் நடந்தது போல் இப்போது தோன்றுகிறது.

நாம் மறந்துபோன அந்த வைரஸ், நம் உடலுக்குள் இன்னும் சில தடங்களை விட்டுச்சென்றிருக்கலாம் என்று சென்னை மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நெருங்கிய குடும்பத்தின் 22 வயது ஆரோக்கியமான இளைஞனுக்கு மாரடைப்பு வந்து ஆன்ஜியோப்ளாஸ்ட் செய்து இதயத்தில் ஸ்டண்ட் வைக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!

ஆனால் அது தான் உண்மை.

இக்காலக்கட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் கூட மாரடைப்பால் இறக்கிறார்கள் என்பதை செய்திகளில் படிக்கிறோம்.

சமீபத்தில் ஓமந்தூரார் அரசு பன்மை நிபுணத்துவ மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு பெரிய ஆய்வு செய்தனர்.

2017 முதல் 2023 வரை கோவிட் பாதித்த சுமார் இருபதாயிரம் பேர்களுக்கு எடுத்த 19,720 ஆஞ்சியோ பரிசோதனைகளின் முடிவுகளை கண்ட மருத்தவர்கள் அதிர்ச்சிடைந்தனர்.

அவர்களில் பலருக்கு ரத்த நாளங்கள் வீக்கமாக இருந்தது.

இதய நோய் என்றால் உடனே ரத்தநாளம் அடைப்பு என்றே நமக்கு தோன்றும்.

ஆனால் சிலருக்கு இதயத்திற்கு செல்லும் நாளங்கள் அதிகமாக வீங்கியும் இருக்கும். இதுவும் அபாயகரமானது.

இதற்குப் பெயர் Coronary Artery Ectasia (CAE).

அதாவது இதய ரத்த நாளங்கள் இயல்பை விட 1.5 மடங்கு வரை பெரியதாக ஆகிவிடும்.

இதனால் ரத்தம் ஓடும் வேகம் மாறிவிடும்.

சில இடங்களில் ரத்தம் நின்றுவிடும். அதனால் உறைவு ஏற்படும்.

அது பின்னர் மாரடைப்பை உண்டாக்கும்.

அதனால் தான் மருத்துவர்கள் இதை லேசாக எடுத்துக்கொள்ள கூடாது என்று சொல்கிறார்கள்.

மனிதர்களுக்கு இந்த ரத்தநாளங்கள் வீக்கம் பிரச்சனை கொரோனாவுக்கு முன் 12% இருந்தது.

கொரோனா வந்த பிறகு இப்பிரச்சனையால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 62 சதவீதமாக அதாவது 4 மடங்காக உயர்ந்திருக்கிறது.

இந்த ஆய்வில் வெளிப்பட்ட மிகப் பெரிய எச்சரிக்கை இதுதான்.

அதிர்ச்சியான செய்தியாக, இது 30–40 வயது இளைஞர்களிலும் இருமடங்கு உயர்ந்திருக்கிறது.

கொரோனாவுக்கு முன்பு 7% இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர் என்றால் இப்போது 14% பாதிக்கப்பட்டருக்கிறார்கள்.

இதில் இன்னும் கவலைக்கிடமான விஷயம் என்ன தெரியுமா?

பாதிக்கப்பட்ட 30–40 வயது இளைஞர்களுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் என எந்த இணை நோய்களும் இல்லாத ஆரோக்கியமானவர்கள்.

எந்த இணை நோயும் இல்லாத இளம் வயதினரிடையே இப்படி ரத்த நாளம் வீக்கம் பிரச்சனை இருமடங்கு உயர்வு காணப்படுவது மருத்துவர்களையே குழப்பியுள்ளது.

கொரோனா வைரஸால் ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா ?

அல்லது இன்றைய வாழ்க்கை முறையால் ஏற்படும் பிரச்சனைகளா? என்பது இன்னும் ஆய்வில் தான் உள்ளது.

ஏதோ ஒரு மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது என்பது தெளிவு.

20251112170632239.jpeg

வீக்கம் மட்டுமில்லாமல் இரத்த நாளங்களின் வயது நம் வயதைவிட முதிர்வாக மாறுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளார்கள்.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 2,390 பேர்களை 2020-2022 வரை நடந்த ஆராய்ச்சிகளின் முடிவில் இதை கண்டறிந்தனர்.

கோவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களின் ரத்த நாளங்களின் வயது நம் இயல்பான வயதை விட சுமார் ஐந்து ஆண்டுகள் கூடுதலாக முதுமையாகிறது.

அதாவது 40 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவராக இருந்திருந்தால், அவரின் ரத்தநாளங்கள் 45 வயதுடையவருக்கு இருப்பது போல மாறுகிறது.

குறிப்பாகப் கொரோனா தொற்றுக்கு ஆளான பெண்களிடம் இந்த விளைவுஅதிகமாகக் காணப்படுகிறது.

கோவிட்-19 தான் இவற்றிற்கு முழு காரணமா என்பதை பற்றி அறிவியல் இன்னும் ஆராய்ந்து வருகிறது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த பல ஆய்வுகள் சொல்வது , கொரோனா வைரஸ் ரத்தநாளங்களை பாதிக்கும். இதனால் அழற்சி, ரத்த உறைவு, ரத்த ஓட்ட மாற்றம் எல்லாம் ஏற்படலாம்.

இதன் விளைவாக இதய பிரச்சனைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

மருத்துவர்கள் கூறுவது “100% கோவிட் வைரஸ் தான் காரணம் என்று சொல்ல முடியவில்லை… ஆனா கோவிட் வந்த பிறகு இதயம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.”

“இது இளைஞர்களுக்கான எச்சரிக்கை மணி” என கூறும் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை வலியுறுத்துகிறார்கள்

“புகைபிடிப்பதை முழுமையாக நிறுத்துங்கள்,சர்க்கரை & ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள், நடைபயிற்சி, உடற்பயிற்சி தினசரி செய்யுங்கள், மனஅழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருங்கள், அத்துடன் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை அவசியம்”

முக்கியமாக 30–50 வயது உள்ளவர்கள் இந்த பரிசோதனையை செய்வது மிகவும் அவசியம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கொரோனா காலம் முடிந்திருக்கலாம். ஆனால் அந்த வைரஸ் நம் உள்ளுறுப்புகளில் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் நம்மை விட்டு போகவில்லை.

ஓமந்தூரார் மருத்துவர்களின் ஆய்வு அதையே வெளிப்படுத்துகிறது.

இதய நலனைக் காக்க வேண்டிய காலம் இது., குறிப்பாக இளைஞர்களுக்கு.

இன்று எடுக்கும் முன்னெச்சரிக்கை நாளை நம் இதயத்தை காப்பாற்றும்.