
ஜெகதீசன் ஓய்வுக்குப் பின், கடந்த ஒன்றரை வருஷமா தினம் காலை நாலு மணிக்கே கண் முழிச்சு விடுவார்.
ஃபில்டர் காபி போட்டுக் குடிப்பார்.
வாட்ஸ் அப்பில் காலையில் ஏதாவது தனக்கு மெசேஜ் வந்திருக்கிறதா என்று கைபேசியில் பார்ப்பார்.
பொதுவாக ஒன்றும் இருக்காது. தன்னைத் தவிர பெரும்பாலும் எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு விதப் பெருமையுடன் எண்ணிக் கொண்டு புன்னகைப்பார்.
ஜெகதீசன் குடும்பம் சிறியது.ஜெகதீசன், விருப்ப ஓய்வு வாங்கின டீச்சர் மனைவி மேனகா, கலிபோர்னியா வேலையில் உள்ள பிள்ளை அபினவ். அவ்வளவுதான்.
ஜெகதீசன் போன வருஷ ஆரம்பத்தில் தனியார் அலுவலகத்திலிருந்து சீஃப் பைனான்ஸ் மேனேஜராக ரிட்டயர் ஆனார்.
நண்பர்கள் சொன்னது ஞாபகம் வந்தது.
" ஜெகதீசா! ரிட்டயர் ஆவது என்பது கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச்ல ரொம்ப நேரம் ஆடும் பேட்ஸ்மேன் இரண்டாவது நியூபால் ஃபேஸ் பண்ணுவது போல. முதல்ல கொஞ்ச நேரம் நீ ரொம்ப ஜாக்கிரதையா ஆடணும்.
அப்புறம் பழகிடும். அடித்து ஆடலாம்."
யோசித்தார்.நாம் இப்போது கொஞ்சம் ஓவரா பேசுறோம்.நிறைய சோஷியல் மீடியாவில் சண்டை போடறோம்.அதை எல்லாம் குறைக்கணும்.
முதல் காரியமாக பேஸ்புக்கை விட்டு விலகினர்.
" மேதாவித்தனமாக எழுதுவதாக எண்ணிக்கொண்டு சர்ச்சை கிளப்பும் விஷயங்களை முகநூலில் போட்டு, அதன் பின் விளைவுகளாக லைக்குகளையும், கமெண்ட்டுகளையும்,எதிரிகளையும் அறுவடை பண்ணவா இதுவரை நாம் அலைந்தோம். அப்பாடா! இப்போதாவது நமக்கு புத்தி வந்ததே!" என்று நினைத்து மகிழ்ந்தார்.
தவிர யார் என்றே தெரியாத
மனிதனின் / மனிதியின் பெயரைப் போட்டு" இவர் உன் பிரண்ட்" என்று சொல்லி "இவர் பிறந்த நாள் வந்தாச்சு வாழ்த்துச் சொல்லு." என்கிற மாதிரி முகநூலில் தமக்கு வரும் கண்ணியமான மிரட்டல்கள் ஜெகதீசனுக்கு என்றுமே பிடிக்காது.
இந்த காரணங்களால் முகநூல் பகிஷ் கரிப்பு அவருக்கு ரொம்ப சந்தோஷம் தரும் விதமாக அமைந்தது.
பொதுவாகவே ரொம்பப் பேசாத ஜெகதீசன் ஓய்வுக்குப் பின் தீவிர மௌனி ஆகிவிட்டார். தன் தேவைகளை மனைவி மேனகாவிடம் கேட்கும் போது கூட" பேஸ்ட், காப்பி,துண்டு,சோப்பு, உப்பு,தண்ணீர், " போல் முடிந்தவரை ஒற்றை வார்த்தைப் பிரயோகத்தில் முடித்துக் கொள்வதால் வார்த்தைச் செலவு ரொம்பவே மிச்சம்.
அதிகமாக யாருக்கும் போன் பண்றது இல்லை. பண்ணினாலும் தந்தி பாஷை தான்.
வாட்ஸ் அப்பில் இருந்த நிறைய குரூப்புகளை குறைத்துக் கொண்டார்.
எலிமெண்டரி ஸ்கூல் குரூப், ஏழாம் கிளாஸ் குரூப், போன்று அனாவசியம் என்று தோன்றிய நிறைய குழுக்களில் இருந்து விலகினார்.
வேறு சில காலனி, கோவில்,உறவினர் சம்பந்தப்பட்ட,..விலகினால் வில்லங்கம் ஏற்பட வாய்ப்புள்ள... குழுக்களில் இருந்து சற்று ஒதுங்கி நின்று" 24 மணியில் மறைந்து போகும் தகவல்கள்" அருளால் நிம்மதி அடைந்தார்.
ஆக, முதல் ஒரு வருஷம் ரொம்ப ஜாலியாக போச்சு. போன் கம்மி.பேஸ்புக் கிடையாது.வாட்ஸப் அபூர்வம். எப்பவாவது யூடியூப் பார்ப்பார்.டிவியில் கொஞ்ச நேரம் சேனல் மாற்றுவார். நெட் ஃபிளிக்ஸ்ம், பிரைமும் இருந்தாலும் ஒரு படம் கூட முழுசாக பார்த்தது இல்லை... அரசியல் சுத்தமாக கிடையாது.
மாசம் ஒரு முறை அமெரிக்காவில் இருக்கும் பையன் அபினவ் வீடியோ காலில் பேசினால் கொஞ்ச நேரம் மேனகாவுக்கு பக்கம் செல்ஃபிக்கு போஸ் கொடுப்பது போல ஒட்டிக்கொண்டு நிற்பார்.வாரம் ஒரு தடவை தெருகோடி பிள்ளையார் கோவிலுக்கு போவார். தவிர ஆங்கில பேப்பர். அவ்வளவுதான்.
இப்படி குறையற்ற வாழ்க்கையாகத்தான் இருந்து வந்தது, மளிகைக் கடையில் அவர் அன்று உப்பு வாங்கப் போன வரை.
உப்பு வாங்க அவசரமாக மேனகா போகச் சொல்ல, வீட்டுக்கு பக்க மளிகைக் கடைக்கு முதல் முறையாக ஜெகதீசன் சென்றபோது தேங்கிய மழைத் தண்ணீர்க் குட்டையில் காலை வைத்து வழுக்கி விழுந்தார். முட்டியில் நல்ல அடி.
கடையில் ஜெகதீசனை உக்கார்த்து வைத்தனர். ஆனால் இவர் யார் என்று யாருக்கும் தெரியவில்லை. லாண்டரி துணியை அயர்ன் செய்யும் பையன், ஜெகதீசன் போட்டிருந்த கட்டம் போட்ட நீல சட்டையை பார்த்து, "மேனகா டீச்சர் வீட்டு சட்டை இது. அவங்க அயர்ன் பண்ண கொடுப்பாங்க." என்று சொல்லி மேனகாவை மளிகைக் கடைக்கு அழைத்து வர,அவள் துணையோடு நொண்டிக்கொண்டு வீட்டுக்கு ஜெகதீசன் போனார்.அப்போது ஒரு உண்மையை உணர்ந்தார்.
"மேனகா அயர்ன் பண்ணக் கொடுத்த உன் சட்டை ஞாபகத்தில் இருக்கும் அளவுக்குக் கூட, உன்னை உன் ஏரியாவிலேயே யாருக்கும் ஞாபகம் இல்லையேப்பா! நீ எவ்வளவு வருஷம் இங்கு வாழ்ந்தாலும் என்ன புண்ணியம்?" என்று மனசு வருத்தப்பட்டது.
இனி வரும் காலத்தில் நாம் கொஞ்சம் "நேரடியாக எல்லார்கிட்டயும் பழகிப் பேசி நம்மளக் கொஞ்சம் பிரபலப் படுத்திக்கணும். இல்லாட்டி நாம காணாமப் போயிடுவோம். "என்று உடனடியாக முடிவு செய்தார்.
மேனகா கிட்ட சொன்னார்.
" கிழிச்சீங்க! உங்களால் சத்தியமாக முடியாது என் மேல பொறாமைப்படாமல் நீங்க,நீங்களாகவே இருங்க.திடீர்னு உங்கள மாத்திக்க முடியாது. " என்றாள் மேனகா.
"அதையும் தான் பார்த்து விடலாமே!இது என் பேட்டை! நாற்பது வருஷமா நான் இருக்கிற இடம்!" என்று சூளுரைத்தார் ஜெகதீசன்.
மறுநாள் காலையில் ஆறு மணியிலிருந்து வாசலில் நின்றார். கார்ப்பரேஷனின் குப்பைப் பாட்டுப் பாடும் மூணு சக்கர எலக்ட்ரிக் வண்டியை ஓட்டி வரும் பணியாளரைப் பார்த்து "என்னப்பா சௌக்கியமா?எப்படி இருக்குது வேலையெல்லாம்?" என்று கேட்டார்.
அவரை ஒரு பிராணியாகக் கூட மதிக்காத பணியாளர் தான் பாட்டுக்கு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார்.
காய்கறிக்காரர், பால் பாக்கெட் போடுறவர், பூக்காரி, இவர்களிடமும் இதே அனுபவம்.
பத்து மணிக்கு பழக்காரர் வண்டி வந்தது. ஓடிச் சென்று "என்னப்பா, என்ன பழம் கொண்டு வந்திருக்க?" என்றார்.
" அதான் நீங்களே பாக்கறீங்களே சார்.?" என்றார் பழக்காரர்.
" கொய்யாப்பழம் நல்ல பழமா எடுப்பா. " என்றார்
"என்ன சார்?வண்டியில் இல்லாத பழமா பார்த்து கேக்குறீங்களே? உள்ள போய் அம்மாவை கூப்பிடுங்க சார். அவங்களுக்கு தான் தெரியும். சீக்கிரம் சார்." என்றான்.
காபி பொடிக் காரர்,மளிகைக்காரர், கார் துடைக்கிறவர், போஸ்ட்மேன், அயர்ன் பையன், மெட்ரோ வாட்டர் பணியாளர், கோவில்பட்டர்,காலனி வாட்ச்மேன், வீட்டு வேலைக்காரி, இவர்கள் யாரையும் ஜெகதீசனின் சாமர்த்தியத்தால் வெல்ல முடியவில்லை.
"இதெல்லாம் நமக்கு சரிப்படாது. திரும்ப மீடியாக்குள்ள போகலாம். அங்க நம்ம லெவல் வேற. மறுபடியும் கெத்து காட்டி பிரபலமாகலாம். " என்று எண்ணினார்.
திரும்ப முக நூல் நிறுவினார். ஏகப்பட்ட புது ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தார். தேடித் தேடிப் போய் நல்ல கமெண்ட்களை வாரி வழங்கினார். எல்லார் எழுதியதையும் லைக் பண்ணினார். ஏகப்பட்ட பேருக்கு பிறந்தநாள் வாழ்த்தினார். வாட்ஸ் அப்பில் எல்லா குரூப்பையும் புதுப்பித்தார், அளவளாவினார் , விசாரித்தார்.
புதுசா ட்விட்டர்( எக்ஸ்) லயும் சேர்ந்து பார்த்தார். ஜெகதீசன் நினைச்ச மாதிரி எந்த ஒரு பெரிய மாற்றமும் தெரியல. ஓஹோ என்று அவரை யாரும் கண்டு கொண்டது போல் தெரியல.
"அரச மரத்தை சுத்தி அடி வயிற்றில் கை வைத்துக் கொள்ளும் கதையா இருக்கே.? நீங்க பாப்புலராக நிறைய உழைக்கணும் அதற்கு நிறைய நாள் ஆகும்." என்றாள் மேனகா.
அடுத்த பல நாட்கள் சென்றன அன்று ஜெகதீசனின் 62 வது பிறந்தநாள். ஒரு சில பிறந்தநாள் வாழ்த்துக்கள் முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் காலையில் வந்தன.
"பரவாயில்லையே! நம்மையும் நாலு பேர் நினைத்துக் கொள்கிறார்களே! என்று மகிழ்ந்தார்.
' யாரும் முன்மொழியாமலே தானாகவே நமக்கு வாழ்த்து யாராவது சொல்லுறாங்களான்னு பார்க்கணுமே.! '
காலை 8 மணிக்கு அமெரிக்கா பையன் அபினவ்க்கு வாட்ஸ் அப் கால் செய்தார். கால் மணி நேரம் பேசிய பிறகும் அபினவ் ஜெகதீசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை..
தாங்க முடியாமல் சொன்னார்." "இன்னைக்கு என்னோட பிறந்த நாள் டா"
"இன்னைக்கு அங்க என்ன தேதி? நவம்பர் 17! ஆமா உன் பர்த் டே இல்லையோ!. ஒரு ஞாபகம் வைத்துக்கொள்ளற தேதியாப் பார்த்து பிறந்திருக்கக் கூடாதா அப்பா? நவம்பர் 17 எல்லாம் நான் எப்படி ஞாபகம் வச்சுப்பேன்? ஒரு விஐபி பிறக்கல. ஒரு முக்கிய நிகழ்வு இல்ல.சரி சரி. ஹாப்பி பர்த்டே!" என்றான்.
" நீங்க நேத்து ராத்திரி சொல்லலைன்னா எனக்கே இன்னிக்கு மறந்து போயிருக்கும். " என்றாள் மேனகா.!
காலை 9 மணிக்கு மேனகாவுடன் பிள்ளையார் கோவிலுக்கு அர்ச்சனை செய்யப் போனார்.அர்ச்சனை எல்லாம் முடித்துவிட்டு கோவிலுக்கு வெளியே வரும்போது அந்த , குட்டை மரச்சக்கர வண்டியில் உட்கார்ந்து பிச்சை எடுக்கும் கால் சரியில்லாத ஆள்,ஜெகதீசனைக் கூப்பிட்டான்.
" சார்!ஹாப்பி பர்த்டே சார்!"
ஜெகதீசனுக்கு ஆச்சரியம் தாங்கல.ஒரே மகிழ்ச்சி.
"இதுதான் கடவுள்அருள்.தெரிய வேண்டிய நிறைய பேருக்கு என் பிறந்தநாள் தெரியாத போது,எப்படி இந்த பிச்சைக்காரனுக்கு அது தெரிந்திருக்கு?"
ஒரு 50 ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு பிச்சைக்காரனிடம் போட்டார்.
பின்னால் கூடவே வந்த மேனகாவை பார்த்த பிச்சைக்காரன்,
" அம்மா தர்ம தேவதை! நீ தாம்மா போன வருஷம் 'இன்னைக்கு தேதியில ஐயா பிறந்தநாள் ' என்று சொல்லி எனக்கு நூறு ரூபா போட சொன்னே. அவரும் போன வருஷம் நூறு ரூபா போட்டாரு மா. ஆனா இந்த வருஷம் தான்...." என்று இழுத்தான்.
அவசரமாக தன் சட்டை பாக்கெட்டில் இருந்து இன்னொரு 50 ரூபாய் எடுத்து பிச்சைக்காரன் கையில் திணித்த ஜெகதீசன்,
"இந்த உலகத்துல யாரையுமே நம்ப முடியல மேனகா. நீ சொல்வது மட்டும் தான் சரி. இனிமே நான் நானாகவே இருக்கப் பார்க்கிறேன்." என்று அவளைத் துளி சோகம் கலந்து பார்த்தார்.
மேனகாவும் புன்னகையுடனும் நிம்மதியுடனும் ஆமோதித்தாள்.

Leave a comment
Upload