
இதுகாறும் வந்த இஸங்களின் நீட்சியாக வருவது தான் பின்நவீனத்துவம் என்கிற போஸ்ட் மாடனிசம். துவக்கத்தில் மாடனிஸமானது, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்காகவே ஒழுங்குவயப்படுத்துதல் அல்லது நிறுவனமயமாக்கப்படுதல் நடப்பதாக அறிவித்தது. அப்படி ஆரம்பித்த ஒழுங்கானது கல்வி, காவல்துறை, நீதிமன்றங்கள், விவசாயம், வேலை வாய்ப்பு, அரசியல் என்று அந்தந்த அமைப்புகளை நிறுவனமயமாக மாற்றியமைக்க ஆரம்பித்ததும், அவை ஒவ்வொன்றும் அதிகார மையங்களாக படிப்படியாக தங்களை உருமாற்றிக்கொள்ள ஆரம்பித்தன. அறியாமைகளாலும், துவக்ககால நம்பிக்கைகளாலும், அரசர் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் உண்டானது தான் மரபார்ந்த சமூகம். அறிவியலின் உதவியோடு அதை களைய முனைந்த மார்டனிசம், அறிவியலை பயன்படுத்தி தங்களை நிறுவனமயமாக்கி, அதிகார மையங்களாக உருவெடுத்து, அதுவும் முதலாளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான வேலைகளை தன்னையறியாமல் செய்ய ஆரம்பித்து விட்டன. முதலாளித்துவம் அறிவியலை சிறைப்படுத்தி தங்களுக்கான ஏவலாளாக மாற்றியமைத்துக்கொண்டது. சமூக மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி குறித்த கேள்விகள் அப்படியே இருந்தன.
அத்தனை அமைப்புகளும் நிறுவனமயமாக்கப்பட்டு, அதிகாரங்களை குவிக்க ஆரம்பித்ததன் விளைவாகவே கல்விச்சாலைகள் என்பது மாணவமாணவியர்களுக்கு அச்சமூட்டுவதாக ஆகிப்போனது. அங்கே சனநாயகம் மறையத்துவங்கியது. இரண்டு பக்கத்திற்குமான ஆரோக்கியமான உரையாடல் நிராகரிக்கப்பட்டு, நிர்வாகம் சொல்வதை கேட்கிற மடந்தைகளாக படிக்கிறவர்களை உணர வைத்தார்கள். உண்மையில் அர்த்தமுள்ள வாழ்வியல் கல்வி பாடத்திட்டத்தில் உள்ளதா? அதிகாரத்தின் துதிபாடும் விசயங்கள் பாடத்திட்டத்தில் உள்ளதா? ஜனநாயகத்தை துறை வாரியாக ஒழுங்குபடுத்துவது குறித்துப் பேசிய நவீனத்துவம் அதன் மேற்பரப்பிலேயே முதலாளித்துவத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு தேங்கிப்போக ஆரம்பித்தது. நவீன உடையோடு, காலில் கருப்பு கயிறை நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு சில பெண்கள் அணிந்து கொள்கிறார்களே அது கூட ஒரு வகையில் இதற்கான உதாரணம் தான்.
இப்படியாக மாடனிசத்தில் மாற்றங்கள் அகவயத்திற்கு செல்லாமல், புறவயத்திலேயே தேங்கிப்போய்விடுகின்றன. அதனால் தான், சிறைச்சாலை திருத்துவதற்கான இடமாக இல்லாமல் தண்டிப்பதற்கான, அச்சமூட்டுவதற்கான இடமாக மாறிப்போயிருக்கிறது. விவசாயம் பூச்சுக்கொல்லி தெளிப்பான்கள், வீங்கிய காய்கறிகளை விளைவிக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் என்று பெருவணிகத்தை குறிவைத்து நகர்கிறதில் மண்வளமும், மனிதவளமும் மலடாக்கப்பட்டு வருகிறது.
உயிர் காக்கும் பணியான மருத்துவ பணியை வணிகமயமாக்கி வைத்திருக்கின்றன. ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுக்கிற பத்திரிகைகள், ஊடகங்கள் சூசகமாகவும் தேவைப்பட்டால் வெளிப்படையாகவுமே தாக்கப்படுகின்றன. பணத்திற்காக அவையும் அதிகாரவர்க்கத்திற்கு வால்பிடிக்கின்றன. உண்மைக்கும் மக்களுக்குமான இடைவெளி அதிகரித்து, போலித்தனத்தின் பிடியில் கொஞ்சங்கொஞ்சமாக மக்கள் சிக்கிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
இதனால் மக்களிடம் மனநோய்மைக்கான அறிகுறிகள் அதிகரித்துக்கொண்டே செல்ல, அதிகார மையங்கள் மனநல காப்பகத்தின் எண்ணிக்கையையும் அதற்கேற்ப அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
எதுவும் சுதந்திரமாக செயல்பட இங்கே உள்ள அதிகார மையங்கள் அனுமதிப்பதில்லை. எந்த தனிப்பட்ட அந்தரங்க விசயங்களையும் அது அனுமதிப்பதில்லை. அனைவரின் அந்தரங்கத்தை அது சதா ரகசிய கேமரா கண்களோடு பின்தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
ஆணாதிக்க சமூகம், குடும்ப அமைப்பை கூட சிறுசிறு அதிகார மையங்களுக்கு கீழே கொண்டுவந்து விடுகிறது. அதிகாரம் வகுக்கிற பாதையிலேயே மக்கள் பயணிக்க வேண்டும் என்று பழக்கியும் வைத்திருக்கிறது. கேள்விகள் முளையிலேயே கிள்ளியெறியப்படுகிறது. மக்களின் விருப்பங்கள், அபிலாசைகள் அனைத்தும் கனவுலகிற்குள் அழுத்தி வைக்கப்படுகின்றன அல்லது கண்டுகொள்ளப்படாமல் புறந்தள்ளப்படுகின்றன. மக்களின் உணர்வுகளை, உரிமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்காமல் அவற்றை அதிகார மையங்களே தீர்மானிக்கத் துவங்கிவிட்டன. அதனால் தங்களின் ஆதங்கங்களிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க ஆண்கள் டாஸ்மாக் நோக்கியும், பெண்கள் கோயில்கள் நோக்கியும் மடைமாற்றிவிடப் பட்டிருக்கிறார்கள். அதுவே அவர்களின் புளுக்கங்களை தற்காலிகமாக வெளிப்படுத்திக்கொள்ள வாய்த்திருக்கிற வடிகால்.
அதிகார மையங்களோடு சமரசம் பண்ணிக்கொண்டு தான் தனி மனிதர்கள் இங்கே இருந்தாக வேண்டும் என்கிற பிம்பத்தை சராசரி மனிதர்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் அது ஆணி அடித்து பதிய வைத்திருக்கிறது. அதனால் ஒவ்வொரு தனிமனிதரும் அதிகார மையங்களின் கண்காணிப்பிற்கு உள்ளாகிறார்கள். முன்பெல்லாம் அவரவருக்கான அந்தரங்கம் ஒன்றிருந்தது, இன்று அதிகாரத்தின் பார்வைக்கு அத்தனையும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. தனிமனிதர்களின் ஒவ்வொரு அசைவையும் அதிகார மையம் கண்காணிக்கிற வகையில் அறிவியல் திசை திருப்பப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. சாலை, அலுவலகம், திரையரங்கு, கழிவறை எல்லா இடங்களிலும் காட்சிப்பூர்வமாக நாம் ஒவ்வொருவரும் ரகசிய படப்பிடிப்பு கருவிகளால் கண்காணிக்கப்படுகிறோம். ஆதார் அட்டை மூலம் கிட்டத்தட்ட தனிநபர்களின் அத்தனை தரவுகளையும் அதிகார மையங்கள் தங்களின் நேரடிப்பார்வைக்கு கீழாக கொண்டு வந்திருக்கின்றன.
அதுகாறும் மார்டனிசம் வலியுறுத்தி வந்திருக்கிற மேற்கூறிய ஒழுங்கு, இங்கே கட்டுடைக்கப்பட்டு பின்நவீனத்துவ சித்தாந்தம், எல்லையற்ற சுதந்திரத்தை கலை இலக்கியவெளிக்கு வழங்க ஆரம்பிக்கிறது. ஒற்றை உண்மையாக பார்க்கப்பட்டு வந்ததில் உள்ள, உண்மையின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
பின்நவீனத்துவ ஓவியங்கள். அவை நேரடித்தன்மையற்று, குறியீடுகளின், படிமங்களின் கூறுகளோடு வெளிப்படத் துவங்கின. இதன் நீட்சியாக கலை இலக்கியங்களில் மாடர்னிசம் உண்டாக்கிய ஒழுங்கை பின்நவீனத்துவம் கேள்விக்கு உட்படுத்துகிறது. வடிவம், கரு, கருத்தியல் அனைத்திலும் கட்டுடைப்பை அனுமதிக்கிறது. எல்லையற்ற சுதந்திரவெளியில் உணர்வுகளின் யதார்த்தத்தை எழுத்துகளிலும், வண்ணங்களிலும், காட்சிகளிலும் சிருட்டிக்க சொல்கிறது. அதை ஒழுங்கின்மை என்று சொல்ல முடியாது. பாரம்பரிய பார்வையிலிருந்து விலகி மாறுபட்ட பார்வையோடு பார்க்கிற தரிசனம். புதிய ஒழுங்கு. எல்லையில்லாத சுதந்திரம் கொண்ட ஒழுங்கியலாக அவை தன்னை உளமாற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. முன்பு ஒரு துவக்கம், ஒரு முடிவு என்று மிகையுணர்வு கொண்ட நாடக வடிவில் உருவாக்கப்பட்ட படைப்புகளிலிருந்து, அவை முற்றிலும் புதிய பார்வைகளோடு, பரிட்சார்த்த வகையில் உணர்வுகளின் விசுவரூபத்தை வெளிப்படுத்த துவங்குகின்றன. அது பிரமிப்பை, சிலிர்ப்பை கேள்விக்குட்படுத்தி, மயக்கநிலையிலிருந்து விடுவித்துக்கொண்டே இருக்கிறது.
புதிய அலை இயக்குநரான கோடார்ட் தன்னுடைய திரைப்படத்தில் ஒரு உருக்கமான காட்சி அரங்கேறிக்கொண்டிருக்கும்போது, அவர் அதன் உள்ளே நுழைந்து இதெல்லாம் நடிப்பு தான், நிஜமல்ல என்று உணர்த்திவிட்டுச் செல்வார்.
முன்னும்பின்னுமென எங்கோ ஒரு இடத்தில் துவங்கி எங்கோ ஒரு இடத்தில் நிறைவடைவது அல்லது நிறைவடையாமல் அதன் முடிவை அந்தரத்தில் நிறுத்தி வைத்து வாசிப்பவர்களை, பார்ப்பவர்களை அவரவர் சிந்தனை தளத்திற்கேற்ப தொடர்ந்து புதியபுதிய கோணத்தில் சிந்தனையை நகர்த்திக்கொண்டு செல்வதற்கான இடத்தை பின்நவீனத்துவ கலை இலக்கிய வெளிப்பாடு வழங்குகிறது. அது மிகையதார்த்தவாதத்தின் வழியாக புனிதப்படுத்துதலை புறந்தள்ளுகிறது. அறிவார்ந்து யோசிக்க வைக்கிறது. உணர்ச்சிநிலையை உணர்வுநிலைக்குள் ஊடாட விடுகிறது. விளிம்புநிலை மனிதர்களையும் நாயகநாயகியர்களாக்குகிறது. இருளும், ஒளியும் கலந்து பிறக்கிற விதவிதமான வண்ணங்களின் வாசத்தோடு புதியபுதிய கதாபாத்திரங்களை உருவாக்குகிறது. தணிக்கை இதற்கு அவசியமற்றது. தணிக்கையற்ற வெளியில் உணர்வுகள் இங்கே சுதந்திரமாக உலா வருகின்றன. பிரிவினைகளை மறுதலிக்கிறது. போட்டிகளை நிராகரிக்கிறது. யதார்த்தத்தையும், உண்மையையும் கொண்டாடுகிறது. சிறிய கதாபாத்திரங்களுக்கும் அதற்கான முக்கியத்துவத்தை அளிக்கிறது. இதயத்தில் இருந்து பேசுகிறது. பழமையோடிப்போன கலாச்சார, பண்பாட்டு மரபுகளை கேள்விக்கு உட்படுத்தி ஒவ்வாதவற்றை ஓரத்திற்கு நகர்த்தி விட்டு, உணர்வுகளின் எழுச்சியை கொண்டாடுகிறது.
அசகாயசூரர்கள் அல்லது மீநாயக-நாயகியர்களை அது நாயகர்களாக்குவதில்லை. தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களான கதாபாத்திரங்களை சிருட்டிப்பதில்லை. பாலினச்சமத்துவத்தை அடிகோலுகிறது. உடம்பு சார்ந்த கற்பியலை நிராகரிக்கிறது. முகத்தை கொண்டாடாமல் மனதை பிரதானப்படுத்துகிறது. புறப்புரட்சியையும் அகப்புரட்சியையும் ஒரு சேர ஏற்கிறது. புறப்புரட்சியை தொடர்ந்து அகப்புரட்சி நிகழும் என்று நம்புகிறது. எதையும் பொதுமைப்படுத்தாமல், முன்முடிவுகளுக்கு நகர்த்தாமல் ஒவ்வொன்றையும் அந்தந்த கணத்தின் மனநிலை, சூழல், பின்புலம் என அத்தனையோடும் சேர்த்துப்பார்த்து, ஆய்ந்து பகுத்துப் பார்க்கச் சொல்கிறது.
அதிகாரத்தை தொடர் சங்கிலி முறையில் இல்லாமல் சுழற்சி முறைக்கு நகர்த்துகிறது. பல சாளரங்களை திறக்கிறது. அறிந்து செய்கிற தவறுகளை நோக்கி கராறாக கேள்வி கேட்கிறது. கண்டனத்திற்குள்ளாக்குகிறது. உண்மைக்கு நெருக்கமாக வாழ அனுமதிக்கிறது அல்லது அதை நோக்கி படிப்படியாக நகர்த்த முனைகிறது. இங்கே பிரிவினைகள் அர்த்தமிழக்கின்றன. அறம் கொண்டாடப்படுகிறது.
ஒரு வகையில் பின்நவீனத்துவமானது சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் அவை நேர்த்தியாகவும், முழுமையாகவும், யதார்த்தமாகவும், பம்பாத்தில்லாமலும் உண்மைக்கு நெருக்கமானதாகவும் சிருட்டிக்கப்பட்டிருக்கிறது.
சமூக, அரசியல், பொருளாதாரத்தில் நிகழும் ஒற்றை மையத்தை தகர்க்கிற விதத்திலேயே பின்நவீனத்துவ கலை, இலக்கிய படைப்புகள் படைக்கப்படுகின்றன. மையத்தை கட்டுடைத்தல் அதன் பிரதான அம்சமாகிறது. இதனால் சமூகநீதி முக்கியத்துவம் பெறுகிறது. தட்டையான ஒற்றைப்பார்வையிலிருந்து விடுபட்டு உண்மையின் பன்மைத்துவத்தை, அதன் கூட்டுப்பரிமாணங்களை அலசி ஆய்ந்து அது குறித்த அபிப்பிராயத்திற்கு நிதானமாக நகரச் சொல்லித்தருகிறது.
திரைப்படங்களில் மிகை சோகக்காட்சி வருகிறபோது அந்த நிகழ்விற்காக பச்சாதாபப்படுகிறோம். கதறுகிறோம். வெளியே வந்ததும் அதை மறந்தும் விடுகிறோம். நிஜவாழ்க்கையில் கூட அப்படித்தான். எத்தனையோ கோரச் சம்பவங்களை தினம்தினம் கேள்விப்படுகிறோம். அவற்றை நாடகத்தனமாகவே சராசரி மக்கள் அணுகுகிறார்கள். அப்படித்தான் அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு மணிப்பூர் சம்பவத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு பிரிவைச்சேர்ந்த பழங்குடியினப்பெண்களை சாலையில் ஆதிக்கசக்தி நிர்வாணமாக இழுத்து வந்து, பிற்பாடு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டிருக்டுகிறது. இப்படியாக எத்தனையோ சாதி, மத பேதங்களும் அறியாமைகளும் நிறைந்திருக்கிற நாட்டில், தினந்தினம் அநீதிகள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன. அதை எல்லாம் கேள்விப்படுகிறபோது படபடக்கிறோம். பரிதவிக்கிறோம். உச்சுக்கொட்டுகிறோம். அதிகபட்சம், சமூகவளைதளங்களில் நமது ஆற்றாமைகளை கொட்டுகிறோம். ஒரு சில நாட்களில் அதை அப்படியே விட்டு விட்டு அடுத்தடுத்த பிரச்னைகளுக்கு நகர்ந்து விடுகிறோம். நகர்த்தப்படுகிறோம். தொடர்ந்து இதேமாதிரி ஆதங்கப்பட்டுபட்டு, மனம் கலங்கிவிட்டு, கையறுநிலையில் கடந்துகடந்துகடந்து தான் போய்க்கொண்டிருக்கிறோம். ஒன்றியைந்த உரிமைக்குரலை பின்நவீனத்துவம் வழிமொழிகிறது. எந்தப் பிரச்னையையும் ஆக்கப்பூர்வமான தீர்வை நோக்கி செயலாற்ற உந்துகிறது.

Leave a comment
Upload