தொடர்கள்
கதை
நம்புவதே நடக்கும்! - முனைவர் என். பத்ரி

20251113062832983.jpeg

சாம்பசிவ ஐயர் அன்று காலையிலேயே பரபரப்புடன் எழுந்தார். குளித்துவிட்டு கோவிலுக்கு புறப்பட்ட அவர்,போகும் வழியில் எல்லாம் கடவுளிடம் ஏராளமான பிரார்த்தனைகளை செய்தார்.

அவருக்கு இரண்டு பெண்கள். பெரியவள் உமா. 35 வயதில் திருமணம் ஆகவில்லை. அவளுக்கு ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷம்தான் இதற்குக் காரணம்.

அடுத்தவள் லதா.அவளுக்கு 30 வயதாகிறது. அவளைத்தான் என்று பெண் பார்க்க சங்கர் வருகிறான்.அவனும் அப்பா,அம்மா இல்லாத பையன்.’இந்த இடம் முடிந்துவிட்டால் தேவலை’என்று ஏக்கப் பெரு மூச்சு விட்டுக் கொண்டே கோவிலை சுற்றி வந்தார் ஐயர் .

கோவிலிருந்து வீட்டுக்கு திரும்பி வர மணி 10 ஆகிவிட்டது. ’ஒரு காபி கூட குடிக்காமல் ஏன் இப்படி காலையிலேயே கோயிலுக்கு கிளம்பிட்டேள் ?’செல்லமாக கோபித்துக் கொண்டாள் உமா.சாம்பசிவ ஐயர் வழக்கம் போல் மெளனம் காத்தார். ஐயரின் மனைவி கமலா மறைந்து போன பிறகு, இந்த 10 வருடங்களாக உமா தான் அவளை அம்மாவாக பார்த்துக் கொள்கிறாள்.

மணி 11 இருக்கும். தன்னுடைய டூவீலரில் சங்கரும் அவன் நண்பன் சரவணனும் வந்தார்கள். வந்தவர்கள் ஐயர் காலில் விழுந்து வணங்கினார்கள்.’உடன் பெண்கள் யாரும் வரவில்லையே’ என்ற கவலை எல்லோருக்கும் இருந்தது.ஆனால் என்னசெயவது.சங்கருக்கு பெற்றோர்கள் இல்லை.சரவணன் ஓர் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவன்.நன்கு படித்து இருவருமே நல்ல வேலையில் இருப்பவர்கள்.

பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. லதாவுக்கும் சங்கரை மிகவும் பிடித்து விட்டது.லதா கொடுத்த காபியை ஒரு சொட்டு விடாமல் குடித்தான் சங்கர் வழக்கம் போல் மொட்டை மாடிக்கு சென்றார்கள். லதாவும் சங்கரும் மனம் விட்டு பேசினார்கள்.அதில் உமாவின் கல்யாணம் பற்றியும் பேச்சு வந்தது. நிலைமையை புரிந்து கொண்ட சங்கரின் மனம் விரைந்து செயல்பட்டது.

அந்த குடும்பத்திற்காக உமா செய்துள்ள தியாகம் அவனின் மனதினை வெகுவாகக் கவர்ந்தது. 40 வயதை எட்டும் தன் நண்பன் சரவணனிடம் உமாவைப் பற்றி பேசினான்.அவனும் பச்சைக் கொடி காட்டிவிட்டான்.

அடுத்து ஐயரிடம் போனார்கள். சரவணனைப் பற்றி அவரிடம் சொன்ன சங்கர் ,உமாவுக்கும் சரவணனை பிடித்திருப்பதாகச் சொன்னான்.மனப்பொருத்தம் தான் எல்லாப் பொருத்தத்தை விடவும் மிகவும் முக்கியம் என்று ஒரு பெரிய மனிதன் போல் அவரிடம் பேசினான்.ஐயருக்கும் இது சரியானாதாகவே ஏனோ தோன்றியது.

சற்று யோசித்த ஐயர் ’அம்பாளிடம் சீட்டுப் போட்டாவது பார்த்து விடலாமே?’என்றார். ’நீங்கள் சொல்வது சரிதான் ’என்று சொன்ன சரவணன், உமா கொண்டு வந்த தாளை இரண்டு சிறு சீட்டுகளாக எழுதி அம்பாள் படத்திற்கு முன்னால் குலுக்கிப் போட்டான்.ஐயரேத்தான் ஒரு சீட்டை எடுத்தார்.அம்பாளின் ஒப்புதல் கிடைத்து விட்ட ஆனந்தம் அவரது முகத்தில் தெரிந்தது.விரைவில் அது மற்றவர்களின் முகங்களுக்கும் பரவியது.

அடுத்த வெள்ளிக்கிழமை உமா சரவணன், சங்கர் லதா திருமணங்கள் உள்ளூர் கோவிலில் மிக எளிமையாக நடைபெற்றன.

அன்று இரவு உமாதான் பேச்சை தொடங்கினாள்.’அது எப்படிங்க நீங்க விரும்பின மாதிரியே என்னை கல்யாணம் பண்ணிக்கீட்டீங்க?’என்று கேட்டவளை சிரித்துக் கொண்டே பார்த்த சரவணன் தன் பாக்கெட்டில் இருந்த ‘ஆம்’ என்ற இரண்டாவது சீட்டை அவள் பார்க்காத போது தன் வாயில் போட்டு அசைப் போட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பொறுத்தவரை நாம் திடமாக நம்புவதுதான் நடக்கும்.

தன் இரண்டு பெண்களின் திருமணத்தையும் நன்கு முடித்துவிட்ட மகிழ்ச்சியில் ஐயர் அவருடைய அறையில் இன்றுதான் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய அறையில் இதைப் பார்த்து மகிழ்ந்த உமாவும், லதாவும் தங்கள் அறைகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.