
முண்டாசுக் கவி பாரதியின் பிறந்த தினமான டிசம்பர் 11ஆம் தேதி, அவனைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும் ஒரு தருணமாக எனக்கு அமைந்திருந்தது .
மற்ற நாட்களில் அவனை நினைப்பதில்லையா என்றால், அது அவ்வாறல்ல. நமது வாழ்க்கையோடு இயைந்து விட்டதால் சில நேரங்களில் அவனது பெருமையை போற்றாமல் கடந்து சென்றுவிடுகின்றோம்.

ஆங்கிலத்தில் "Out of the box" என்ற அடைமொழியோடு ஒருவர் சிந்தனையை நாம் குறிப்பிட்டு பாராட்டுகின்றோம். அத்தகைய சிந்தனையை சர்வ சாதாரணமாக தனது கவிதைகளில் வெளிப்படுத்தியவன் தான் பாரதி. அவன் வாழ்ந்த கால கட்டமோ, அல்லது சமூகச் சூழலோ அத்தகைய சிந்தனைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கவில்லை.
சிறு காணொளி மூலம் சமூக ஊடகங்களில் பிரபலமாக மாறும் வசதியும் அன்று இல்லை. வியாபார ரீதியாக தனது எழுத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று யோசித்தானா என்றால் அதுவும் இல்லை.
இப்படி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி, தூய்மையான சமூக அக்கறையோடு வாழ்ந்த ஒரு மனிதன் என்பதற்காகவே அவனை நாம் நிதமும் போற்ற கடமைப்பட்டுள்ளோம். இதைத் தொடர்ந்து அவனது கவித்திறன்,சொல்லாட்சி, தமிழ்ப் பற்று, பெண் விடுதலை பற்றிய தீர்க்க தரிசனம், என அவன் பெருமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இவற்றில் குறிப்பாக, தமிழ் மொழி பற்றியும், மகளிர் முன்னேற்றம் பற்றியும் அவன் கண்ட கனவு இன்று நனவாகி இருக்கிறது என்பதை இரண்டு தருணங்களில் நான் உணர்ந்தேன்.
தமிழ் மொழி, கடல் கடந்து உலகமெலாம் சென்றடைய வேண்டும் என்ற தனது விருப்பத்தை,
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்.
என்று தன் பாடலில் வெளிப்படுத்தி இருக்கின்றான்.
அந்தக் கனவு இன்று நனவாகி இருப்பதற்கு சான்று, லண்டனில் வாழும் அம்ரிதா தங்கச்சி.
" பாரதியார் இல்லாமல் தமிழ் இசையை உருவாக்க முடியாது" என்ற கூற்றோடு, "நின்னையே" என்கிற தலைப்பில் தனிப்பாடல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
'நின்னயே ரதியென்று நினைக்கிறேன்' என்ற பாரதியின் காதல் பாடல் இன்று அம்ரிதாவின் குரலில் பலராலும் விரும்பிக் கேட்கப்படும் காணொளியாக அமைந்திருக்கிறது.
அம்ரிதா தனது ஆறு வயது முதல் சங்கீதம் பயின்று வந்துள்ளார்.
பல வித்வான்களிடம் முறையாகக் கற்று, லண்டனில் உள்ள டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் நடத்திய தேர்வில் பங்கு பெற்றுள்ளார் .
கேரளாவில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, லண்டனில் இன்று தமிழ்ப் பாடல்களை, அதுவும் பாரதியின் இந்தப் பாடலை ஒரு புதிய கோணத்தில் இசையமைத்து பாடியிருப்பது வரவேற்புக்குரியது.
மென்மையான குரல், இதமான இசை, கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கையோடு கூடிய காட்சி என இந்தக் காணொளி நம் மனதைத் தொடும் விதத்தில் அமைந்துள்ளது. இந்தப் பாடலை பார்க்கும் கேட்கும் தருணத்தில் பாரதி நம் கண்முன்னே வந்து செல்வான் .
கடந்த ஞாயிறன்று, கலாசாகரா யூ.கே பரத நாட்டிய பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு பெற்ற எனக்கு, பாரதி மீண்டும் ஒரு முறை கண்முன்னே வந்து சென்றான்.
"காக்கை சிறகினிலே" என்ற பாடலுக்கு ஐந்து சிறுமிகள் மிகவும் அருமையாக நடனமாடி காண்போரை மெய்மறக்க செய்தனர். இங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகளாக இருந்தாலும், அதனை உணர்ந்து ஆடிய விதம் மிகவும் அருமை.
இதைப் பற்றி கலாசாகரா பள்ளியின் நிறுவனர், நடன ஆசிரியை திருமதி. உஷா ராகவன் அவர்கள் கூறுகின்றபோது, இந்தக் குழந்தைகள் அனைவருக்கும் தமிழ் எழுதவும், படிக்கவும் தெரியும். இந்தப் பாடலை நடனத்தோடு இவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்கிற எண்ணத்தில் கற்பித்தாகக் கூறினார்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் என்பது, மஹாகவியின் பாடல் மூலமே நிகழ்ந்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.
அதே விழாவில், "பாருக்குள்ளே நல்ல நாடு" என்கிற மற்றொரு பாரதியின் பாடலுக்கு, பதின்ம வயதுப் பெண்கள் உணர்ச்சிபூர்வமாக நடனமாடினார்.
பத்து பெண்களை வைத்து, இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த விதத்திற்கு, உஷா ராகவன் அவர்களுக்கு தனி பாராட்டுகள். இதில் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்லாது, கன்னடம், ஹிந்தி, மலையாளம் பேசும் பெண்களும் பங்கு பெற்றனர். அவர்கள் நடனம் ஆடிய விதம், அந்தப் பாடலின் முழு அர்த்தத்தையும் வெளிக்கொணரும் விதத்தில் அமைந்திருந்தது கூடுதல் சிறப்பு.
இறுதியாக, அந்த விழாவில், நாம ராமாயணம் என்னும் ராமாயண காவியத்தை, கலசாகராவின் மூத்த மாணவிகள் நாட்டிய நாடகமாக அரங்கேற்றினர்.
அந்த மாணவிகள் பெரும்பாலும் வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும், நடனத்தின் மீது இருக்கும் பேரார்வத்தின்னால் தொடர்ந்து நடனம் பயின்று வந்துள்ளனர். அந்த நிமிடம் பாரதி கண்ட புதுமைப் பெண்களாக என் கண்முன்னே அவர்கள் காட்சியளித்தனர்.

தமிழின் மீதும், பெண் விடுதலை மீதும் தீராத தாகம் கொண்ட அந்த மாபெரும் கவிஞனை எவ்வளவு போற்றினாலும் தகும். அதிலும் குறிப்பாக பெண்களை அவன் போற்றியதை போன்று வேறெவரும் கொண்டாடியதில்லை என்பதே என் கருத்து
பெண்ணை பராசக்தியாகவே போற்றிய அந்த மாபெரும் மனிதனை ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்!


Leave a comment
Upload